தமிழர்கள் லங்கா மாதாவை தங்கள் தாய்மொழியில் “ஸ்ரீலங்கா தாயே” என வாழ்த்திப் பாடுகிறார்கள்

டி.பி.எஸ்.ஜெயராஜ்

“ஸ்ரீலங்கா தாயே, நம் ஸ்ரீலங்கா நமோ,நமோ, நமோ, தாயே….”
இலங்கை என அறியப்பட்ட ஸ்ரீலங்கா 1948,பெப்ரவரி 4 ல் பிரித்தானியாவிடமிருந்து சுதந்திரம் பெற்றது. அதற்கு ஆறு வருடங்களுக்குப் பின்னர் மே 21,1954 ல் சுதந்திரமடைந்த இலங்கையில் நான் பிறந்தேன். இலங்கை குடியரசாகி தனது பெயரை உத்தியோகபூர்வமாக ஸ்ரீலங்கா என மே 22, 1972ல் மாற்றிக் கொண்டது. பெப்ரவரி 4, 2016 ல் ஸ்ரீலங்கா தனது சுதந்திரம் பெற்ற 68வது ஆண்டு நிறைவைக் கொண்டாடியது. அதன் உத்தியோகபூர்வ நினைவு நிகழ்வு காலி முகத் திடலில் நடந்தேறியது. அன்றைய தினத்தின் சிறப்பம்சமாக எங்கள் நாட்டின் தேசிய கீதம் சிங்களம் மற்றும் தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் பாடப்பட்டது.

68வது சுதந்திரதின நினைவு

68வது சுதந்திரதின நினைவு

கடந்த தசாப்தங்களில் பல உத்தியோகபூர்வ சுதந்திர தின நினைவு நிகழ்வுகள் நடைபெற்றதை நான் கண்டிருக்கிறேன். எனினும் எனது வாழ்க்கையில் முதல் தடவையாக எனது வாழ்ககையில் ஒருபோதும் நடக்க முடியாது என்று நான் எண்ணிய ஒரு காட்சியை இணையத்தின் மூலமாக கண்டதுக்கு இன்று நான் சாட்சியாக உள்ளேன். இளமை ததும்பும் ஆண்களையும் பெண்களையும் கொண்ட ஒரு பாடகர் குழுவொன்று, ஸ்ரீலங்காவின் தேசிய கீதத்தை எனது தாய்மொழியாம் தமிழ்மொழியில் களிப்புடன் பாடி வழங்கியதை நான் கண்ணாரக் கண்டும் காதாரக் கேட்டும் மகிழ்ந்தேன். அதற்கு 2 நிமிடமும் 32 செக்கனும் பிடித்தது. அந்தப் பாடகர்கள் பம்பலப்பிட்டி இராமநாதன் இந்து மகளிர் கல்லூரி மற்றும் கொழும்பு விவேகானந்த கல்லூரி என்பனவற்றை சேர்ந்த மாணவ மாணவிகளாவார். அவர்கள் சுமுகமாக ஒருங்கிணைந்து பாடினார்கள். பல தசாப்தங்களுக்குப் பிறகு உத்தியோகபூர்வ அனுமதியுடன் அரசின் சார்பாக நடத்தப்படும் சுதந்திர தின நினைவு நிகழ்வில் ஸ்ரீலங்காவின் தேசிய கீதம் தமிழ் மொழியில் பாடப்பட்டது.

நான் உணர்ச்சிபூர்வமான பரவச நிலையில் மெய்மறந்து நின்றேன். முன்பு ஸ்ரீலங்காவின் தேசிய கீதம் இசைக்கப் படும்போது செய்யாத ஒன்றை அப்போது நான் செய்தேன். நான் அழுதேன்! அதைச் சொல்வதற்கு நான் வெட்கப்படவில்லை! அந்தக் காட்சியை நான் திரும்பத் திரும்ப ஓடவிட்டுப் பார்த்தேன். எனது கண்கள் பனித்தன மற்றும் கண்ணீர் எனது கன்னங்களின் வழியே உருண்டோடியது.

என்னை அடக்கமாட்டாமல் சில தடவைகள் நான் தேம்பவும் செய்தேன். உணர்ச்;சி வெள்ளத்திலிருந்து என்னைக் கட்டுப்படுத்திக் கொள்வதற்காக நான் பெரும்பாடு பட்டேன். ரூபவாகினியின் புகைப்படக் கருவி அங்கு குழுமியிருந்த பல்வேறுபட்ட பார்வையாளர்களின் பக்கமாகச் சுழன்றபோது, ஸ்ரீலங்கா மாதாவின் மிக முக்கியமான பிள்ளைகள் – அவர்களில் பெரும்பாலானவர்கள் சிங்களவர்கள் – தேசிய கீதத்தின் வார்த்தைகள் தெளிவாக தமிழ் மொழியில் ஒலித்தபோது மரியாதையுடன் விறைப்பாக எழுந்து நின்றதை நான் கண்டேன். உண்மையில் அது ஒரு வரையறுக்கப்பட்ட தருணம்!

நான் பிறந்த மண் ஒரு புதிய அற்புதமான பயணத்தை நோக்கி புறப்பட்டுள்ளது என்பதை நான் உணர்ந்தேன். பிரதானமாக இன – மொழி முரண்பாடுகளால் தசாப்தங்களாக ஊக்குவிக்கப்பட்டு வந்த சுதந்திரத்துக்குப் பின்னான மோதல்களின்; பின்னர், தேசம் பெருமளவில் அதன் பன்முக தேசிய அடையாளத்தை உணர்ந்து அங்கீகரித்துள்ளது. சிங்களவர்கள் தொடர்ந்து அவர்களுக்குரிய சரியான இடத்தை தக்கவைத்து வந்த அதேவேளை, நாடு இப்போது சேர்த்தணைக்கும் பாதையில் முன்னோக்கி நடை போடுகிறது மற்றும் முன்பு தவிர்த்தவைகளை இப்போது சேர்த்துக்கொள்ள தயாராக உள்ளது. 68 வது சுதந்திர தின வைபவம் அதிகாரத்தில் புதிய பகிர்ந்தளிப்பை மேற்கொள்ள எதிர்பார்க்கும் துணிச்சலான புதிய ஸ்ரீலங்காவுக்கு ஒரு நல்ல சகுனம்.

முன்னோக்கிய பெரிய பாய்ச்சல்

அமெரிக்க விண்வெளி வீரர் நீல் ஆம்ஸ்ட்ரோங் தனது சரித்திர புகழ் வாய்ந்த சந்திரனுக்கான பயணத்தின் பின்னர் சந்திரனில் தான் வைத்த முதலடி பற்றிச் சொல்லியது, மனிதனைப் பொறுத்தவரை அது ஒரு சிறிய அடியாக இருந்தாலும் மனித குலத்தை பொறுத்தவரை அது மாபெரும் பாய்ச்சல் என்று. அதேபோல சுதந்திர தின உத்தியோகபூர்வ வைபவத்தில் தேசிய கீதத்தை தமிழில் பாடுவது சரியான திசையில் முன்னோக்கிய பெரும் பாய்ச்சலுக்கான மிகப் பெரும் அடையாள மதிப்பாகும். அது நீண்ட காலமாக அந்நியப் படுத்தப்பட்டு வரும் ஸ்ரீலங்காத் தமிழர்களுக்கு, தனிமைப் படுத்தலின் நின்றும் வெளியே வந்து தேசிய நீரோட்டத்தில் மீண்டும் இணைந்து கொள்வதற்காக விடுக்கப்படும் ஒரு சமிக்ஞை. தமிழ் மொழி அரசியலமைப்பின்படி ஒரு உத்தியோகபூர்வ மொழியாக அங்கீகரிக்கப் பட்டுள்ளது, இப்போது அதற்கு சம அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. தமிழ் மொழியானது ஸ்ரீலங்காத் தமிழர்களால் மட்டும் பேசப்படுவதில்லை, ஆனால் இந்தியத் தமிழர்கள் மற்றும் கணிசமானளவு ஸ்ரீலங்கா முஸ்லிம்களாலும் பேசப்படுகிறது. சனத்தொகையில் கிட்டத்தட்ட 25 வீதமானவர்களால் பேசப்படும் ஒரு மொழிக்கு சுதந்திர தின நிகழ்வில் ஒரு அடையாள அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

பெப்ரவரி 4ல் தேசிய கீதம் தமிழில் பாடப்படப் போகிறது என்கிற அறிவிப்பு முன்னர் வெளிவந்தபோது அதை எதிர்ப்பதற்கான உரத்த ஓலங்களும் வெளிவந்திருந்தன. போலி தேசியவாதிகளின் கலவையான கும்பல் ஒன்று தேசிய கீதம் தமிழில் பாடப்படுவது தேசிய பாதுகாப்புக்கு ஒரு அச்சுறுத்தல் என்று கடுமையான வார்த்தைகளில் கூச்சலிட்டார்கள். ஸ்ரீலங்காத் தாயே எனப் பாடுவதன் மூலம் ஈழவாதிகள் நாட்டை துண்டாட முயற்சிக்கிறார்கள் எனச் சிலர் குற்றம் சுமத்தினார்கள். குடும்ப ஆட்சி மூலம் ஊழல் புரிந்த குடும்பத்தின் தலைவர் நாட்டின் சுதந்திரத்துக்காக முதலைக் கண்ணீர் வடித்தார். தமிழ் ஒரு உத்தியோக மொழி என்பதை வலியுறுத்தும் அரசியலமைப்பு விதிகள் இருந்தும் அது நடைமுறைப் படுத்தப் படுவதில்லை என்பதைக் கண்டுகொள்ளாத சிலர், அரசியலமைப்பு மீறப்படுகிறது என்று வலியுறுத்தி ஒரே இரவில் அரசியலமைப்பு சட்டவாதிகளாக மாறிவிட்டார்கள். வஞ்சகப் பூனையை போன்ற அரசியல்வாதி ஒருவர் இந்த விடயம் தொடர்பாக ஜனாதிபதி சிறிசேன மீது குற்றப் பிரேரணை கொண்டு வரப்படும் என்று எச்சரிக்கையும் விடுத்தார்.

சுதந்திர தினத்தன்று தேசிய கீதம் தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் பாடப்படுவது ஸ்ரீலங்காவுக்கும் அதன் மக்களுக்கும் மிகப் பெரிய பேரிடரை கொண்டு வரலாம் என்கிற ஒரு மாயையை உருவாக்கும் ஒரு திட்டமிட்ட பிரச்சாரம் நடைபெற்று வந்தது. அரசாங்கத்திற்கு உள்ளேயும் மற்றும் வெளியேயும் இந்த விடயம் தொடர்பாக இருந்த ஆழமான பிளவுகள் மற்றும் செல்வாக்குள்ள அரசியல்வாதிகளினால் காட்டப்பட்ட ஆக்ரோஷமான விரோதங்கள் காரணமாக அரசாங்கம் இந்த விடயத்தை கைவிட்டு விடலாம் என நான் நினைத்திருந்தேன். மகிழ்ச்சியான முறையில் எனது அச்சம் பொய்யானது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க மற்றும் “ஸ்ரீலங்கா மாதாவை” தமிழில் பாடுவதை சாத்தியமாக்கிய அரசாங்கத்தின் ஏனைய அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கு நான் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். எதிர்ப்புகளுக்கு முகம் கொடுத்த போதிலும் சரியான விடயத்தை செய்து காட்டிய அவர்களது அரசியல் துணிவிற்கு நான் தலை வணங்குகிறேன்.

தேசிய கீதத்தை தமிழில் பாடிய இந்த விடயம் காரணமாக எனது பரவச உணர்வு அதிகமாகியது அது நான் கடுமையாக கரிசனை காண்பிக்கும் ஒரு விடயம். இது எனக்கு ஒரு பெரிய விடயமாகத் தோன்றாத எனது கடந்த கால மகிழச்சியான பழைய நினைவுகளை எண்ணி நான் ஏக்கப் பெருமூச்சு விட்டேன். கொள்ளுப்பிட்டி புனித தோமஸ் கல்லூரி ஆரம்ப பாடசாலையில், ரி.ஆர். பேரின்பநாயகம் தலைமையாசிரியராக இருந்த காலத்தில் (1959 -64) நான் ஒரு மாணவனாக இருந்தேன், தவணை முடிவுகளில் நடக்கும் கூட்டங்கள் மற்றும் பிற முக்கிய நிகழ்வுகளின் இறுதியில் நாங்கள் தேசிய கீதம் பாடுவது வழக்கம். அங்கு சிங்கள, தமிழ், முஸ்லிம், பறங்கியர், மலாயர் என பல்லினத்தையும் மற்றும் பல்வேறு கலாச்சாரத்தை உடைய, கொழும்பு செட்டி, பரத, சிந்தி, போரா, பார்சி, மலயாளி,மற்றும் தெலுங்கு மாணவர்களும் கல்வி பயின்று வந்தார்கள்( கண்டியின் கடைசி அரசனின் தலைமுறையில் வந்த அவரது கொள்ளுப் பேரனில் ஒருவரும் அந்த மாணவர்களில் ஒருவர்)

உயிரோட்டமுள்ள சந்தப் பாடல்

எங்களுக்கு வழங்கப்படும் ரோணியோ இயந்திரத்தில் அச்சுப் பதிவு செய்யப்பட்ட தாளில் தேசிய கீதத்தின் வார்த்தைகள் சிங்களம்,தமிழ்,மற்றும் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட சிங்களப் பதிப்பு என்று அச்சிடப் பட்டிருக்கும். எங்களுக்கு எந்த மொழியில் வேண்டுமானாலும் பாடலாம் என்ற சுதந்திரம் இருந்தது, ஆனால் பெரும் பாலும் எங்களில் எல்லோருக்குமே ஆங்கிலத்தில் சரளமான புலமை இருந்ததால் நாங்கள் ஆங்கில எழுத்துக்களில் இருந்த சிங்கள வார்த்தைகளைப் பாடுவதையே தெரிவு செய்வோம். ஒரு தமிழன் என்கிற வகையில் அப்போது அதன் அர்த்தம்; எனக்கு முற்றாகப் புரிந்ததாக நான் நினைக்கவில்லை ஆனால் அந்த ஆரம்ப பள்ளிக்கால பருவ வயதில் அது எனக்கு ஒரு பிரச்சினையாகத் தெரியவில்லை. அந்த வார்த்தைகளுக்கு ஒரு சங்கீத நாதம் இருந்தது மற்றும் அந்த நாதம் உயிரோட்டமானதாகவும் மற்றும் சந்தம் உள்ளதாகவும் இருந்தது.

நான் எனது பதின்ம வயதுகளின் மத்தியில் யாழ்ப்பாணத்துக்கு குடிபெயர்ந்த பின்புதான் தேசிய கீதம் தமிழில் பாடப்படுவதை கேட்க ஆரம்பித்தேன். வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியில் படித்த மாணவர்களில் ஒன்றிரண்டு முஸ்லிம் மற்றும் மலயாள இனத்தவர்களை தவிர மற்ற அனைவரும் முற்றிலும் தமிழர்களே.

இந்த நேரத்தில் இனத்தின் அடிப்படையில் ஒருவர் நன்கு அரசியல்மயப் படுத்தப்பட்டிருப்பார். இரண்டாம் நிலை பாடசாலை மாணவர்கள் என்கிற வகையில் எங்களுக்கு அரசியல் ரீதியாக அதிக அறிவு இருந்தது. தவிரவும் 20ம் நூற்றாண்டின் எழுபதுகளின் ஆரம்ப காலம் தரப்படுத்தல் காலகட்டமாக இருந்தபடியால் அது தமிழ் மாணவர்கள் மத்தியில் அதிக எழுச்சியை ஏற்படுத்தியிருந்தது.அப்போது “தமிழ் ஈழ” உணர்வு எங்கள் வாழ்க்கையில் நுழைந்திருக்கவில்லை, ஆனால் நாங்கள் பாரபட்சம் பற்றி கடுமையாக உணர்ந்ததுடன் மற்றும் இன அடக்குமுறையையும் பற்றி உணர்ந்திருந்தோம்.

எனினும் எனது தாய்மொழியான தமிழில் தேசிய கீதம் பாடும்போதோ அல்லது கேட்கும்போதோ அதை நான் உண்மையாகவே உணர்ந்துள்ளேன் மற்றும் எல்லாவற்றுக்கும் மேலாக அதில் என்ன உள்ளது என்பதையும் நான் புரிந்து கொண்டிருந்தேன். அரசியல் ரீதியாக தேசிய கீதத்தின் வார்த்தைகள் இலங்கைத் தாயையும் மற்றும் நாட்டின் நற்பண்புகளையும் பற்றி உள்ளதே தவிர எந்த ஒரு குறிப்பிட்ட இனத்தையும் பற்றி அல்ல என்பதால் அதன் உள்ளடக்கம்; ஆட்சேபணைக்கு உரியதல்ல எனபதை நான் கண்டுகொண்டேன். எனினும் தேசிய கீதத்தை தமிழ்மொழி மூலம் நான் சிறப்பாக அறிந்து கொண்டபோதிலும், அது சிங்களத்தில் பாடப்படுவதையே நான் கேட்க விரும்பினேன் என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும் ஏனெனில் அந்த வார்த்தைகள் மகிழ்ச்சியான மனநிலையை உருவாக்கும் இனிய நாதத்தை கசிந்துருகி வெளித்தள்ளுகின்றன. இந்த தனிப்பட்ட கருத்தை தவிர, தேசிய கீதத்தை எனது தாய்மொழியாம் தமிழ் மொழியில் பாடப்படுவதை விட்டுக் கொடுக்கவோ அல்லது நேசத்துக்குரிய அந்த உரிமை மறுக்கப்படுவதை அனுமதிக்கவோ நான் தயாரில்லை.

இனமோதல் விரிவடைந்ததுடன் எல்லா விடயமும் முற்றாக மாறிவிட்டன மற்றும் சிங்கள, தமிழ் சமூகங்கள் தனித்தனியாக பிளவுபட்டன. குரோதங்கள் பெருகிய நேரத்தில் வடக்கு மற்றும் கிழக்கில் தமிழில் தேசிய கீதம் பாடும் நடைமுறை படிப்படியாக குறைவடைந்தது. 1956க்கு முன்பு அநேகமாக யாழ்ப்பாணத்தில் இருந்த எல்லா பெரிய பாடசாலைகளிலும் சிங்கள ஆசிரியர்கள்; (அவர்களில் அநேகர் பௌத்த பிக்குகள்) மாணவர்களுக்கு சிங்களம் போதிப்பதற்காக இருந்தார்கள். தமிழ் மொழியை நீக்கி சிங்களம் மட்டுமே ஒரே அரச கரும மொழியாக திணிக்கப் பட்டதிலிருந்து இந்த நடைமுறை நிறுத்தப்பட்டு விட்டது. அதேபோல தமிழ் பகுதி பாடசாலைகளில் தமிழில் தேசிய கீதம் பாடுவதும் நடப்பிலிருந்து வெளியேற்றப்பட்டது. இந்த நடைமுறை தென் பகுதியில் உள்ள தமிழ் பாடசாலைகளிலும் ஓரளவு தூரத்துக்கு எதிரொலித்தது என்றாலும், தீவின் பல பகுதிகளிலும் உள்ள அநேகமான தமிழ்மொழி மூல முஸ்லிம் பாடசாலைகள் தமிழ் மூலம் தேசிய கீதம் பாடும் வழக்கம் தொடர்ந்து இருந்து வந்தது.

இனமோதல் புதிய பரிணாம வளர்ச்சியை அடைந்த சூழ்நிலையில், தேசிய கீதம் பாடும் நடைமுறை மூன்று தசாப்தங்களுக்கு மேலாக தமிழ் அரசியலில் வழக்கமில்லாத ஒன்றாகி விட்டது. இலங்கைத் தமிழரசுக்கட்சி(ஐ.ரி.ஏ.கே) மற்றும் பின் தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி(ரி.யு.எல்.எப்) என்பனவற்றின் அரசியல் காலகட்டத்தில் மாற்றீடாக “தமிழ் அரசு” தேசிய கீதங்கள் அரசியல் கூட்டங்களில் பாடப்படும் ஒரு சூழ்நிலை உருவானது. குறைந்தது மூன்று வித்தியாசமான பாடல்கள் அப்போது பயன்படுத்தப் பட்டன.

தமிழ் அரசின் தேசிய கீதங்கள்

தமிழ் அரசின் தேசிய கீதங்களில் ஒன்று பரமஹம்சதாசன் எழுதிய“வாழ்க ஈழத் தமிழகம், வாழ்க என்றும் வாழ்கவே” என்பதாகும். மற்றொன்று, முன்னாள் ரி.என்.ஏ பாராளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு அரியநாயகத்தின் தந்தையும் மற்றும் தற்போதைய அம்பாறை மாவட்ட ரி.என்.ஏ பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரனின் பாட்டனாருமான திருக்கோவில் அரியநாயகம் எழுதிய “எங்கள் ஈழத் தமிழ்திருநாடே, கலைவாழும் பொன்னாடே” என்கிற பாடல். அரியநாயகம் இந்தப் பாடலை திரைப்படப் பாடலாசிரியர் கவிஞர் கண்ணதாசன் “மாலையிட்ட மங்கை” படத்திற்காக எழுதிய “எங்கள் திராவிடப் பொன்னாடு” என்கிற பாடலைத் தழுவி எழுதியிருந்தார்.
மூன்றாவது கீதம் தற்போது சென்னையில் வாழும் ஈழத்து புரட்சிக் கவிஞர் காசி ஆனந்தன் எழுதிய “வாழியவே, வழியவே,வாழியவே, எங்கள் தங்கமாமணித் தமிழ் ஈழம்” எனபதாகும்.

இந்த “தமிழ்ஈழ தேசிய கீதங்களின்” பதிப்புகள் யாவும் கடந்த தசாப்தங்களில் தமிழ் தீவிர தேசியவாதம் மற்றும் பிரிவினைவாதம் என்பன எழுச்சி பெற்றிருந்த காலத்தில் பாடப்பட்டவையாகும். இந்தப் பாடல்கள் யாவம் தமிழ்த் தாயை புகழ்ந்து படும் பாடல்கள் அல்லது தமிழ்த்தாய் வாழ்த்து என்பதிலும் வித்தியாசமானவையாகும். தமிழ் கலாச்சார விழாக்கள் எல்லாவற்றிலும் தமிழ்த்தாயை வாழ்த்திப் பாடுவது கட்டாயமான ஒன்றாகும். தமிழ் மொழியினை தமிழ்த் தாயாக பிரதிநிதித்துவப் படுத்தி வாழ்த்திப் பாடுவது என்பதை தமிழர் அல்லாத ஒருவரால் புரிந்து கொள்வது சற்றுக் கடினம். வழக்கமாக கலாச்சார நிகழ்வுகளில் சுப்பிரமணிய பாரதியின் “வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ்மொழி வாழிய வாழியவே” என்கிற பாடல் அல்லது பாரதிதாசனின் “தமிழுக்கும் அமுதென்று பேர் அந்தத் தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்” போன்ற பாடல்கள்தான் தமிழ் தாயை கௌரவப் படுத்திப் பாடப்படுவதுண்டு.

பொதுவாக தமிழ் போர்க்குணம் உயர்வடைந்தபோது மற்றும் குறிப்பாக தமிழீழ விடுதலைப் புலிகள் ஏற்றம் பெற்ற பின்னர் வடக்கு மற்றும் கிழக்கில் தேசிய கீதத்தை தமிழில் பாடும் பழக்கமும் விரைவாக அற்றுப்போனது. உத்தியோகபூர்வ நிகழ்ச்சிகளில் மிகவும் பொதுவாக இசை மட்டுமே ஒலிக்கப்பட்டு வந்தது. வடக்கு மற்றும் கிழக்கின் குறிப்பிட்ட சில பகுதிகளின் எல்லைக் கட்டுப்பாட்டை எல்.ரீ.ரீ.ஈ ஏற்றெடுத்ததின் பின்னர் அங்கு ஸ்ரீலங்காவின் தேசிய கீதம் கிட்டத்தட்ட கைவிடப்பட்டுவிட்டது.

எல்.ரீ.ரீ.ஈ தேசிய கீதத்துக்கு மாற்றீடாக ஒரு தமிழ் ஈழ தேசிய கீதத்தை கொண்டிருக்கவில்லை. மாறாக அவர்கள் புலிக்கொடியின் பண்புகளை வானளாவப் பாராட்டினார்கள். அவர்களின் புலிக்கொடி தமிழ் ஈழமாக அல்லது தமிழ் தேசியக் கொடியாகச் சித்தரிக்கப் பட்டது. எல்.ரீ.ரீ.ஈயின் கவிஞர் புதுவை இரத்தினதுரை “ஏறுது பார் கொடி ஏறுது பார்” என்கிற பாடலை எழுதினார். எல்.ரீ.ரீ.ஈயின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் நடைபெறும் பெரும்பாலான விழாக்களில் புலிக் கொடியினை எற்றுவது கட்டாயமாக இருந்தது, அப்போது இந்தப் பாடல் பாடப்படுவது வழக்கம்.

ஸ்ரீலங்கா ஆயுதப் படைகள் எல்.ரீ.ரீ.ஈயிடம் இருந்து பிரதேசங்களை மீளக் கைப்பற்ற ஆரம்பித்ததும் கொழும்பின் சட்ட நிருவாகம் அதன் ஆதிக்கம் மற்றும் அதிகாரத்தை திரும்ப பெற்றது. வடக்கு மற்றும் கிழக்கில் இன மோதல் விரிவடைந்ததின் காரணமாக தேசிய கீதம் பாடுவது கணிசமான அளவு குறைவடைந்த போதிலும், மே 2009ல் இராணுவம் எல்.ரீ.ரீ.ஈ யினை தோற்கடித்ததின் பின்னர் திரும்பவும் அந்த நடைமுறை எழுச்சி பெறத் தொடங்கியது. இதன் விளைவாக வடக்கு மற்றும் கிழக்கில் தேசியக் கொடியும் பெருமையுடன் பறக்க விடப்பட்டது கூடவே தேசிய கீதமும் அந்தப் பிரதேசங்களில் இசைக்கப்படத் தொடங்கிற்று. ஒரு அர்த்தத்தில் சுதந்திரம் பெற்ற ஆரம்ப வருடங்களில் நிலவியதை அது புதுப்பித்துக் காட்டுவதைப் போல் இருந்தது.

இலங்கை கந்தர்வ சபை

காலனித்துவ பிடியில் இருந்து 1948, பெப்ரவரி 4 ல் தீவு தேசத்துக்கு சுதந்திரம் கிடைத்தபோது, இப்போது நாம் பாடும் தேசிய கீதம் வழக்கத்தில் இருக்கவில்லை. இலங்கை விடுதலை அடைந்த போதும் பின்னர் முழு சுதந்திர அந்தஸ்தை பெற்றபோதும், அனுமதி பெற்ற ஒரு சுதேச தேசிய கீதம் இருக்கவில்லை. தேசிய கீதம் ஒன்றை உருவாக்கும் பணியினை இலங்கை கந்தர்வ சபை ஏற்றெடுத்தது. அதற்காக ஒரு போட்டி ஏற்பாடு செய்யப்பட்டு பொருத்தமான கீதத்தை தெரிவு செய்யும் கடமையை உறுதிப்படுத்துவதற்காக சபையினால் ஒரு குழுவும் நியமிக்கப்பட்டது.

இந்தக் குழுவில் எஸ்எல்பி ஹப்புக்கொட்டுவ, கலாநிதி ஓஎச்டி விஜேசேகரா, லயனல் எதிரிசிங்ஹ, முதலியார் ஈஏ அபேசேகர, எல்எல்கே குணதுங்க மற்றும் பி.பி.இலங்கசிங்க ஆகியோர் இடம்பெற்றிருந்தார்கள். ஒரு சர்ச்சைக்குரிய முடிவாக குழுவில் இருந்த இருவர் வெற்றியாளர்களாக அறிவிக்கப் பட்டார்கள். பி.பி.இலங்கசிங்கவினால் எழுதப்பட்டு லயனல் எதிரிசிங்காவினால் இசையமைக்கப்பட்ட ஒரு பாடல் புதிய தேசிய கீதமாக அறிவிக்கப்பட்டது. அது ஸ்ரீலங்காமாதாஃபல யச மகிமாஃஜய ஜய என ஆரம்பமாகி ஜய ஜய தாத நங்காஃ ஸ்ரீலங்கா மாதா என முடிவடையும். உண்மையில் தெரிவுக் குழவில் இடம்பெற்றிருந்த இரண்டு அங்கத்தவர்கள் சமர்ப்பித்த பாடல் தேசியப் பாடல் போட்டியில் வெற்றி பெற்றது பரவலான ஆத்திரம் மற்றும் எதிர்ப்பு என்பனவற்றைக் கிளப்பியது. அது அப்பட்டமான ;அநீதியாகக் கருதப்பட்டது.

இலங்கசிங்க – எதிரிசிங்க இரட்டையர்களின் பாடல், சுதந்திர தினத்தன்று காலை தேசியப் பாடல் என்று இலங்கை வானொலி ஊடாக ஒலிபரப்பப்பட்ட போதும், பரவலான எதிர்ப்பு காரணமாக உத்தியோகபூர்வ சுதந்திர தின விழாவில் அது பாடப்படவில்லை. அந்தப் பாடல் குறைபாடற்றதாகவும் மற்றும் பழி கூற முடியாதபடி இருந்த அதேவேளை, அதைப் பின்பற்ற எடுத்த முடிவு பாரபட்சமானது என்கிற உணர்வை ஏற்படுத்தியதால் அது விமர்சனத்தையும் மற்றும் எதிர்ப்பையும் கிளப்பிவிட்டது. அதன்படி தேசியப் பாடல் போட்டியில் வெற்றி பெற்ற பாடல் மக்களைப் பொறுத்தவரை ஏற்றுக்கொள்ள முடியாதது என்று கருதப் பட்டதால் அது நம்பகத்தன்மையை இழக்கத் தொடங்கியது.

இதற்கிடையில் மற்றொரு பாடல் ஒன்று தேசியகீதத்துக்கு சாத்தியமானதைப் போல மெதுவாக மக்களின் உள்ளத்தைக் கவரத் தொடங்கியது. அதுதான் பிரபலமான ஓவியரும் மற்றும் கவிஞருமான ஆனந்த சமரக்கோன் எழுதிய புகழ் பெற்ற பாடலான “நமோ நமோ மாதா” என்கிற பாடல். இந்தப் பாடலும் கூட போட்டிக்கு சமர்ப்பிக்கப் பட்டிருந்தது ஆனால் கவனிக்கப் படவில்லை. தவிரவும் வெற்றி பெற்ற “யச மகிமா” பாடலானது அது வெற்றி பெற்றது என அறிவிக்கப்பட்ட முறை காரணமாக மக்களால் வெறுத்து ஒதுக்கப்பட்டிருந்தது.” நமோ நமோ மாதா” பாடல் எந்தவித உத்தியோகபூர்வ அந்தஸ்தும் இன்றியே பரந்த வெளிப்பாட்டையும் மற்றும் மக்களின் பாராட்டையும் அனுபவிக்கத் தொடங்கியது. சாதாரண மக்களிடையே அது மிகவும் புகழ் பெற்றிருந்ததுடன்” யச மகிமாவை”விட “நமோ நமோ மாதா”வுக்கே பொது மக்களின் கருத்து சாதகமாக இருந்தது. அந்தப் பாடல் வானொலியில் அடிக்கடி ஒலிபரப்பானது. உத்தியோகபூர்வ அங்கீகாரம் இல்லாமலிருந்த போதும் இப்போது “நமோ நமோ மாதா” நடைமுறை தேசிய கீதமாக பிரபலம் பெறத் தொடங்கியது.

சுதந்திரம் பெற்றதின் முதல் வருட நிறைவு பெப்ரவரி 4,1949ல் ரொறிங்டன் சதுக்கத்தில் கொண்டாடப்பட்டது, அங்கு சுதந்திர நினைவு கட்டிடம் வைபவ ரீதியாக பிரதம மந்திரி டி.எஸ்.சேனநாயக்காவினால் திறந்து வைக்கப்பட்டது. தேசியக் கொடி பெருமையுடன் பறக்க விடப்பட்டதுடன் நான்கு இளம் விளையாட்டு வீரர்கள் எரியும் தீச்சுடர்களை ஏந்தியவாறு சதுக்கத்தில் நுழைந்து சுதந்திர மண்டபத்தின் படிகளில் ஓடி ஏறினார்கள். அவர்கள் ஒருமித்து சுதந்திர தீபத்தை ஏற்றினார்கள். அந்த நால்வரும் தீவின் நான்கு பிரதான சமூகங்களான – சிங்கள, தமிழ், முஸ்லிம் மற்றும் பறங்கியர் இனத்தை சேர்ந்தவாகளாக இருந்தார்கள். அங்கீகரிக்கப்பட்ட ஒரு தேசிய கீதம் இல்லாதபடியால் “யச மகிமா” மற்றும் “நமோ நமோ மாதா” ஆகிய இரண்டுமே தேசியப் பாடல்களாக அந்த வைபவத்தில் பாடப்பட்டன. அந்த இரண்டு பாடல்களின் உத்தியோகப் பற்றற்ற தமிழ் பதிப்பும கூட அங்கு பாடப்பட்டது. தேசியப் பாடல் சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளில் பாடப்படும் என்றும் அங்கு அறிவிக்கப்பட்டது. அப்போது சமூகங்களை இணைத்துச் செயற்படும் சூழ்நிலை நிலவியது.

“நமோ நமோ மாதா”

1950 ல் அப்போதைய நிதி அமைச்சராக இருந்த ஜே.ஆர் ஜெயவர்தனா, பரவலான புகழ்பெற்ற ஆனந்த சமரக்கோன் அவர்களால் எழுதப்பட்ட “நமோ நமோ மாதா” என்கிற பாடல் முறைப்படி உத்தியோகபூர்வ தேசிய கீதமாக அங்கீகரிக்கப்பட வேண்டும் என்று ஒரு அமைச்சரவை பத்திரத்தைச் சமர்ப்பித்தார்.

பிரதம மந்திரி டி.எஸ்.சேனநாயக்கா, இந்த விடயத்தில் இறுதி முடிவு செய்வதற்காக ஒரு பாராளுமன்றத் தெரிவுக் குழுவை பொது நிர்வாக மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சர் சேர்.ஈ.ஏ.பி விஜேரட்னவின் தலைமையில் நியமித்தார். விஜேரட்ன தலைமை தாங்கிய குழு “நமோ நமோ மாதா” மற்றும் சில பாடல்களை கருத்தில் எடுத்து ஆராய்ந்த பின்னர் சமரக்கோனின் பாடல்தான் தேசிய கீதமாக இருக்கவேண்டும் என்று முடிவு செய்தது. 1951 ஆகஸ்ட்டில் சேர்.விஜேரட்ன, “நமோ நமோ மாதா” என்கிற பாடல்தான் தேசிய கீதமாக இருக்கவேண்டும் என்கிற அமைச்சரவை பத்திரத்தை அமைச்சரவையில் சமர்ப்பித்தார். அது அமைச்சரவையால் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டு நவம்பர் 22, 1951ல் முறைப்படி பின்பற்றப்பட்டது. பிரதமர் டி.எஸ்.சேனநாயக்க, பொருத்தமான தமிழ் மொழிபெயர்ப்பும் முறைப்படி பின்பற்றப்படும் என அப்போது அறிவித்தார்.

சேர். ஈஏபி விஜேரட்ன தலைமையிலான தெரிவுக்குழு, தேசிய கீதத்திற்கு ஒரு உண்மையான தமிழ் பதிப்பும் இருக்கவேண்டும் என்பதை கொள்கையளவில் ஏற்றுக்கொண்டது. கொழும்பு சஹிராக் கல்லூரியில் ஒரு ஆசிரியராக இருந்த தமிழ் கல்விமானாகிய பண்டிதமணி எம்.நல்லதம்பி அவர்களிடம் இந்தப் பணி ஒப்படைக்கப்பட்டு தெளிவான ஒரு மொழிபெயர்ப்பும் இயற்றப்பட்டது. தமிழ் பதிப்பும் உத்தியோகபூர்வமாக அனுமதிக்கப்பட்டு தமிழ் பேசும் மக்கள் பெரும்பான்மையாக வாழும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நடைபெறும் உத்தியோகபூர்வ நிகழ்வுகளில் விரிவாகப் பயன்படுத்தப்பட்டது.

சுதந்திரம் கிடைத்த நான்கு ஆண்டுகளின் பின்னர் 4 பெப்ரவரி,1952ல் “நமோ நமோ மாதா” பாடல் உத்தியோகபூர்வ தேசிய கீதமாக சுதந்திர தின விழாக்களில் பாடப்பட்டது. அதன் தமிழ் பதிப்பான “நமோ நமோ தாயே” என்பதும் யாழ்ப்பாணம்,வவுனியா,மன்னார்,திருகோணமலை, மற்றும் மட்டக்களப்பு கச்சேரிகளில் சுதந்திர தினம் தொடர்பான நிகழ்வுகளில் பாடப்பட்டது. பொருத்தமான மொழி பெயர்ப்பு கிடைத்திருந்ததால் ஸ்ரீலங்காத் தமிழர்கள் தேசிய கீதத்தை உணர்ச்சிபூர்வமாகவும் மற்றும் உற்சாகத்துடனும் தங்கள் தாய்மொழியில் பாடினார்கள்.

1954ல் பிரதமராக இருந்த சேர்.ஜோண் கொத்தலாவல யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்தபோது பிரதமரை பாராட்டிக் கௌரவிக்கும் விழாவின்போது தேசிய கீதத்தின் தமிழ் பதிப்பு பாடப்பட்டது. மார்ச் 12,1952ல் அரசாங்கம் சிங்கள, தமிழ் மற்றும் ஆங்கிலப் பத்திரிகைகளில் “நமோ நமோ மாதா” தான் தேசிய கீதம் என்று பெரிய அளவில் விளம்பரங்களைப் பிரசுரித்தது. அதன் சிங்கள மற்றும் தமிழ் வார்த்தைகள் முறையே சிங்களம் மற்றும் தமிழ் பத்திரிகைகளில் பிரசுரிக்கப் பட்டிருந்த அதேவேளை ஆங்கிலப் பத்திரிகைகளில் சிங்கள வார்த்தைகள் ஆங்கிலத்தில் எழுதப்பட்டு பிரசுரமாகியிருந்தது.

இப்போது நமோ நமோ மாதா உத்தியோகபூர்வ தேசிய கீதமாகப் பாடப்பட்டு வரும் அதேவேளை அன்று அதன் மெட்டிலோ அல்லது பாடும் விதத்திலோ ஒரு ஒழுங்கு இருக்கவில்லை. பல்வேறு பாடகர் குழுவும் அதைப் பல்வேறு வழிகளில் பாடினார்கள். இது அதிக குழப்பத்தை ஏற்படுத்தியது. எனவே தேசிய கீதத்தை பாடுவதில் ஒரு ஒழுங்கமைப்பை உறுதிப் படுத்துவதற்காக அரசாங்கம் ஒரு குழுவை நியமிக்க முடிவு செய்தது. 1953ல் பதினொரு அங்கத்தவர்களைக் கொண்ட குழுவொன்று இதற்காக நியமிக்கப்பட்டது. இந்தக் குழுவினரிடையே ஆனந்த சமரக்கோன் அவர்களும், தேவர் சூரியசேன மற்றும் ஜேடிஏ பெரேரா ஆகியோரும் இடம் பெற்றிருந்தனர். இந்தக் குழு தேசிய கீதத்தை எப்படி பாடுவது என்பதற்கான வழிகாட்டி நெறிகளை அமைத்ததுடன் மேலும் அதற்கு சரியான ஒரு மெட்டினையும் வரையறை செய்தது. அதற்கான மெல்லிசையானது சமரக்கோன் அவர்களால் இசையமைக்கப்பட்ட அசல் மெட்டில் இருந்து பகுத்தெடுக்கப்பட்டது.

உத்தியோகபூர்வ தமிழ் பதிப்பு

ஜூன் 24,1954ல் சேர் ஜோண் கொத்தலாவலயின் அமைச்சரவை தேசிய கீதத்தின் மெட்டினையும் மற்றும் அது பாடப்படும் முறையினையும் முறைப்படி உறதிப்படுத்தியது. அந்த நாளில் நமோ நமோ மாதா பாடலின் பதிப்புரிமையை அரசாங்கம் முறைப்படி பெற்றுக்கொள்வதற்காக ரூபா 2,500 கொடுப்பனவாக செலுத்தப்பட்டது. அப்போது எச்எம்வி இசைத்தட்டுகளின் முகவராக இருந்த மதிப்பு வாய்ந்த கார்கில்ஸ் நிறுவனத்திடம் தேசிய கீதத்தின் இசைத்தட்டுகளை உருவாக்குவதற்கான கட்டளை வழங்கப்பட்டது.

தேசிய கீதத்தின் தமிழ் பதிப்பைக் கொண்ட தட்டு ஒன்றும் உருவாக்கப்பட்டது. தமிழ் தேசிய கீதத்தின் மெட்டு மற்றும் இசை என்பன ஆனந்த சமரக்கோனின் சிங்களப் பதிப்பில் உள்ளது போலவே இருந்த அதேவேளை தமிழ் வார்த்தைகள் பண்டிதமணி நல்லதம்பி அவர்களால் எழுதப்பட்டிருந்தது, இதை சங்கரி மற்றும் மீனா என்கிற இரண்டு பெண் பாடகிகள் பாடியிருந்தனர். உத்தியோகபூர்வ தமிழ் பதிப்பு இலங்கை வானொலியில் முதலில் ஒலிபரப்பானது 1955 பெப்ரவரி 4ல்.

1956ல் எஸ்.டபிள்யு.ஆர்.டி பண்டாரநாயக்கா சிங்கள தேசியவாத அலைகளின் உச்சத்தில் பிரதம மந்திரியாக பதவியேற்றார்.; “அப்பே ஆண்டுவ” (எங்கள் அரசாங்கம்) என புகழப்பட்ட புதிய அரசாங்கம் விரைவிலேயே தொடர்ச்சியான பல பிரச்சினைகளையும் மற்றும் கஷ்டங்களையும் விரைவிலேயே சந்திக்க நேர்ந்தது. அரசாங்கத்துக்கு எதிரான அரசியல் ஆர்ப்பாட்டங்கள், தொழிலாளர்களின் வேலை நிறுத்தம், வகுப்புவாத வன்முறை மற்றும் வெள்ளம், தீ மற்றும் மண் சரிவு போன்ற இயற்கை அனர்த்தங்களை அரசு எதிர்கொள்ள நேரிட்டது.

இதற்கு பலிகடா ஆக்குவதற்காக ஒன்றைத் தேடிக்கொண்டிருந்த சில குறிப்பிட்ட சக்திகள் ( ஒருவேளை சொந்த நலன்களை கருத்தில் கொண்டவர்கள்) தேசிய கீதத்தின் மீது பாய்ந்தன. பண்டாரநாயக்காவின் அரசாங்கத்தின் கீழ் நாட்டில் ஏற்பட்டுள்ள குழப்பங்கள் யாவற்றுக்கும் காரணகர்த்தா என மூட நம்பிக்கை கொண்டவர்கள் அல்லது பகுத்தறிவற்ற வேகமுள்ளவர்கள் “நமோ நமோ மாதா”வை தனியாக்கி அதன்மீது பழி சுமத்தினார்கள். நமோ நமோ மாதாவுக்கு எதிராக ஒரு நச்சுப் பிரச்சாரம் கிளப்பப்பட்டது.

அதன்மீது சுமத்தப்பட்ட குற்றம், நமோ நமோ மாதாவில் உள்ள குறியீடுகள் அதிர்ஷ்டமற்றவை மற்றும் அவைதான் நாட்டின் தீமைகளுக்கும் மற்றும் துரதிருஷ்டங்களுக்கும் காரணம் என்பதாகும். அதன் ஆரம்ப எழுத்தாகிய “ந” என்பது தீமை அல்லது அழிவை ஏற்படுத்துவது என்று விளக்கப் பட்டது. அசுபமான “கனக” அல்லது “கன” தேசிய கீதத்தின் அரம்பத்தில் வருவது நாட்டுக்கு தீய விளைவுகளை ஏற்படுத்தும் எனவும் குற்றம் சாட்டப்பட்டது. “கன” என்பது பாடலின் முதல் மூன்று அசைகளில் இடம்பெற்றுள்ளது – எவ்வாறு நெடிய மற்றும் குறுகிய அசைகள் இடம் பெறலாம். தேசிய கீதத்தின் ஆரம்பச் சொற்கள் “ந – மோ – ந” அதாவது குறுகிய – நெடிய – குறுகிய என்று அமைந்துள்ளதால் பாடல் ஒரு துரதிருஷ்டமான “கன” எனக் கூறப்பட்டது.

செப்டம்பர் 1959ல் பிரதமர் எஸ்.டபிள்யு.ஆர்.டி. பண்டாரநாயக்கா படுகொலை செய்யப்பட்டார். 1960 மார்ச்சில் நடைபெற்ற தேர்தல்கள் ஒரு தொங்கு பாராளுமன்றம் அமைய வகை செய்தது.

டட்லி சேனநாயக்காவின் குறுகிய ஆயுள் கொண்ட சிறுபான்மை அரசாங்கம் வீழ்ச்சி அடைந்தது. புதிய தேர்தல்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஜூலை 1960 தேர்தல்களில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கம் ஆட்சியைக் கைப்பற்றியது. பண்டாரநாயக்காவின் விதவை ஸ்ரீமாவோ பிரதம மந்திரியானார். புதிய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கம் “நமோ நமோ மாதாவுக்கு” எதிராக தீவிர பிரச்சாரத்தை மேற்கொண்டது. பொது நிர்வாக மற்றும் கலாச்சார அமைச்சர் மைத்திரிபால சேனநாயக்கா இந்தப் பிரச்சினை தொடர்பாக ஆராய்ந்து, நாட்டில் ஏற்படும் பிரச்சினைகளுக்கு தேசிய கீதம்தான் காரணமா என்பதை தீர்மானிப்பதற்கு நிபுணர்கள் குழு ஒன்றை நியமித்தார். அந்தக் குழு “நமோ நமோ மாதா” எனும் சொற்கள் “ஸ்ரீலங்கா மாதா” என மாற்றப்பட வேண்டும் என்று பரிந்துரை செய்தது. அனந்த சமரக்கோன் இதை கடுமையாக எதிர்த்ததுடன் உத்தேச மாற்றத்துக்கும் எதிர்ப்பு தெரிவித்தார். எனினும் அரசாங்கம் முன்னோக்கிச் சென்று ஒருதலைப் பட்சமாக தேசிய கீதத்தில் “நமோ நமோ மாதா” என்பதற்குப் பதிலாக “ஸ்ரீலங்கா மாதா” என பெப்ரவரி 1961ல் மாற்றம் செய்தது. அதற்காக ஆனந்த சமரக்கோனின் ஒப்புதல் பெறப்படவில்லை. தேசிய கீதத்தின் பதிப்புரிமை இப்போது அரசாங்கத்திடம் வழங்கப்பட்டு விட்டதால் இந்த தன்னிச்சையான நடவடிக்கையை தடுப்பதற்கு கவிஞரால் சட்ட நிவாரணம் எதையும் தேட முடியவில்லை.

அரவணைத்துச் செல்லும் போக்கு

தேசிய கீதத்தின் சிங்களப் பதிப்பு கொழும்பில் நடைபெற்ற ஏராளமான உத்தியோகபூர்வ நிகழ்வுகளிலும் மற்றும் பெரும்பான்மை சிங்கள மாகாணங்களிலும் பாடப்பட்ட அதேவேளை, தமிழ் பதிப்பு தமிழர்கள் பெரும்பான்மையாக உள்ள பிரதேசங்களிலும் மற்றும் தமிழ் மொழிமூல பாடசாலைகளிலும் பாடப்பட்டு வந்தது. 1956ல் சிங்களம் மட்டுமே தனி அரச கரும மொழியாக மாற்றப்பட்டு தமிழுக்கு எந்தவித உத்தியோகபூர்வ அந்தஸ்தும் வழங்கப்படாத போதிலும்கூட இந்த அரவணைத்துச் செல்லும் போக்கு காண்பிக்கப் பட்டது. 1978ம் ஆண்டு உருவாக்கப்பட்ட அரசியலமைப்பில் தமிழுக்கு தேசிய மொழி அந்தஸ்து வழங்கப்பட்டது, ஆனால் உத்தியோகபூர்வ மொழி அந்தஸ்து வழங்கப்படவில்லை. அதே அரசியலமைப்பின் ஏழாவது பிரிவின் கீழ் சிங்களத்தில் உள்ள தேசிய கீதத்துக்கு அரசியலமைப்பு அந்தஸ்து வழங்கப் பட்டது. எனினும் தமிழ் மொழிபெயர்ப்புக்கும் அரசியலமைப்பின் ஏழாவது பிரிவிலுள்ள மூன்றாவது அட்டவணைப்படி அரசியலமைப்பு அங்கீகாரம் வழங்கப்பட்டிருந்தது. அரசாங்க வர்த்தமானி மற்றும் அதேபோல, 1978 அரசியலமைப்பின் தமிழில் பிரசுரிக்கப்பட்ட பிரதிகளில் தேசிய கீதத்தின் தமிழ் வார்த்தைகள் இடம்பெற்றுள்ளன.

1987ல் மேற்கொள்ளப்பட்ட அரசியலமைப்பின் 13வது திருத்தத்தின்படி சிங்களத்துடன் சேர்ந்து தமிழும் ஒரு உத்தியோகபூர்வ மொழியாக ஏற்றம் பெற்றது. 1988ல் மேற்கொள்ளப்பட்ட அரசியலமைப்பின் 16வது திருத்தத்தின்படி தமிழ் ஒரு அரச கரும மொழியாக நிருவாக மற்றும் சட்ட கோளங்களிலும் மேலும் விரிவாக்கம் பெற்றது. இதன்படி ஒரு உத்தியோகபூர்வ மொழியாக தமிழ் ஏற்றம் பெற்றுள்ளதினால் தேசிய கீதம் தமிழிலும் பாடப்படுவதற்குரிய கூடுதல் உத்வேகத்தைப் பெற்றுள்ளது.

2009ல் யுத்தம் முடிவடைந்ததுடன் தமிழ் மக்கள் திரும்பவும் மெதுவாக தேசிய நீரோட்டத்தில் இணைய ஆரம்பித்தார்கள்.

இப்போது தமிழ், அரசியலமைப்பு ரீதியாக ஒரு உத்தியோகபூர்வ மொழியாக அங்கீகரிக்கப் பட்டுள்ளதினால் அவர்கள் திரும்பி இணைவதை கொண்டாடுவதற்கு அவர்களின் தாய்மொழியான தமிழில் தேசிய கீதம் பாடுவதைத் தவிர வேறு சிறந்த வழி என்ன இருக்கிறது? அவர்களின் நாட்டை ஒரு தாயாக நினைத்து வாழ்த்திப் பாடுவதற்கு அவர்கள் எண்ணியும் உணாந்தும் செயற்படும் அவர்களின் சொந்த மொழியை பயன்படுத்துவது முக்கியமானது அல்லவா? அவர்களுக்கு அறிவு, உண்மை, பலம், மற்றும் உள் நம்பிக்கை, என்பனவற்றை வழங்கியதுடன் மேலும் தெய்வீக ஒளியையும் மற்றும் புலனறிவாற்றல் மிக்க இருப்பையும் வழங்கியுள்ள ஸ்ரீலங்காத் தாய்க்கு நன்றி செலுத்த வேண்டியது சிறப்பானது அல்லவா? மனவேறுபாடு மற்றும் புண்பட்ட நிலையிலுள்ள மக்கள், தவறான விருப்பம், வெறுப்பு, மற்றும் கலகங்கள் எல்லாவற்றுக்கும் ஒரு முடிவு வேண்டிப் பாடுவதும் மற்றும் திரும்பவும் ஒரு பலமான தேசமாக எல்லோரும் அன்பினால் பிணைக்கப்பட்டு முன்னோக்கி அணிவகுத்துச் செல்வதற்கு வேண்டிப் பாடுவதும் மிகவும் அர்த்தமுள்ள ஒரு செயற்பாடு அல்லவா?

அத்தகைய ஒரு சூழ்நிலையில், 2010ல் ராஜபக்ஸ ஆட்சியினால் தேசிய கீதத்தை தமிழில் பயன்படுத்துவதற்கு எதிராக ஒரு திடீர் தாக்குதலை மேற்கொண்டதைக் காணும்போது உண்மையில் மிகவும் கவலை ஏற்படுகிறது. அரசாங்கத்தின் ஒரு பகுதியினரால் தேசிய கீதத்தின் தமிழ் மொழி பெயர்ப்பை ஒழிப்பதற்காக கடுமையான நகர்வுகள் மேற்கொண்டதுடன் மற்றும் தேசிய கீதம் உத்தியோகபூர்வமாக சிங்கள மொழியில் மட்டுமே பாடவேண்டும் என்கிற விதியும் திணிக்கப்பட்டது. இது தொடர்பாக விவாதிப்பதற்கு 2010 டிசம்பர் 8ல் அரசாங்கத்தால் ஒரு அமைச்சரவைப் பத்திரம் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

அமைச்சரவைப் பத்திரம்

அதேவேளை தவறாக அறிவுறுத்தப்பட்ட விமல் வீரவன்ச அமைச்சரவையில் தேசிய கீதம் சிங்களத்தில் மட்டுமே பாடப்பட வேண்டும் என்று தெரிவித்தார், ஓரளவு விஷய ஞ}னமுள்ள வாசுதேவ நாணயக்கார அதைக் கடுமையாக ஆட்சேபித்தார். இந்த யோசனைக்கு எதிராக பல அமைச்சர்களும் எதிர்ப்பு தெரிவித்ததால், அமைச்சரவையின் மனநிலை மாற்றமடைந்தது.

தேசிய கீதத்தின் தமிழ் மொழிபெயர்ப்பை நீக்கும் தீhமானம் கடுமையான எதிர்ப்பைச் சந்தித்தது என்பது விரைவிலேயே வெளிப்படையாகத் தெரிந்தது. இது தொடர்பாக அமைச்சரவை முக்கியஸ்தர்களுக்கு உள்ளேயே ஆழமான பிளவுகள் ஏற்பட்டிருப்பது தெளிவானது. நிலமையை சரியாக அளவிட்ட அப்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ அமைச்சரவை பத்திரம் பற்றிய முடிவு பிறிதொரு தினத்துக்கு காலவரையின்றி ஒத்தி வைக்கப்படுவதாக அறிவித்து இதுபற்றிய விவாதம் மற்றும் கலந்துரையாடல் என்பனவற்றுக்கு ஒரு முடிவுகட்டினார். இறுதி தீர்மானம் மேற்கொள்ளப் படுவதற்கு முன்னர் தீவிரமான தகவலறிந்த விவாதம் ஒன்று அவசியம் என ஜனாதிபதி தெரிவித்தார். இதற்கிடையில் இதுகாறும் உள்ள நிலை வழக்கம் போலத் தொடரும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
அதன்பின் என்ன நடந்தது என்பது அனைவரும் அறிந்ததே.

அரசாங்க உத்தியோகத்தர்களுக்கும் மற்றும் ஆயுதப்படை அதிகாரிகளுக்கும் தேசிய கீதம் தமிழில் பாடப்படக்கூடாது என்கிற உத்தரவுகள் அமைதியாகப் பிறப்பிக்கப் பட்டன. அதற்காக உத்தியோகபூர்வ ஆணைகள் எதுவும் இல்லை, ஆனால் உத்தியோகபூர்வமற்ற அறிவுறுத்தல்களின் விளைவாக தமிழ் தேசிய கீதம் உத்தியோகபூர்வமாக மௌனமாக்கப்பட்டது. வாசுதேவ நாணயக்காரவினாலோ அல்லது டக்ளஸ் தேவானந்தாவினாலோ இதைத் தடுக்க முடியவில்லை. ராஜபக்ஸ ஆட்சி தமிழ் தேசிய கீதத்தை சட்டபூர்வமாக தடை செய்யவில்லை ஆனால் நாளாந்த விவகாரங்களில் தமிழில் தேசிய கீதம் பாடுவதை தடுக்கும் வகையில் பார்த்துக் கொண்டது. இந்த உபாயம் இதுகாறும் உள்ள நிலயை வெளிப்படையாக பின்பற்றுவது போல இருந்தாலும் களத்தில் தேசிய கீதம் தமிழில் பாடும் நடைமுறை விலக்கப்பட்டது. எந்த மாற்றமும் செய்யப்படவில்லை அரசியலமைப்பு விதிகள் அப்படியே உள்ளன என்று சொல்லப்பட்டது. அதன்படி தேசிய கீதம் பாடுவது நிலவி வரும் ஒரு உரிமை அது நீக்கப்படவில்லை என்றும் சொல்லப்பட்டது.

எனினும் அதிகாரத்தில் உள்ளவர்களால் பிறப்பிக்கப்பட்ட உத்தியோகப் பற்றற்ற ஒரு உத்தரவு பாடசாலைகள், அரசாங்க நிறுவனங்கள் போன்றவற்றில் கடுமையாக அமல்படுத்தப்பட்டதால், தமிழில் தேசிய கீதம் பாடுவதை அது அதைரியப் படுத்தியது. வடக்கு மற்றும் கிழக்கிலுள்ள ஆயுதப் படையினர் தமிழில் தேசிய கீதம் பாடுவதை தடுப்பது அவர்களின் கடமை என்று பணிக்கப் பட்டார்கள்.

விரைவிலேயே அந்தச் செய்தியைப் பெற்றுக்கொண்ட தமிழர்கள், தமிழில் தேசிய கீதம் பாடும் முயற்சியை கைவிட்டார்கள். பாடசாலைப் பிள்ளகள் தமிழில் எழுதப்பட்ட சிங்கள வார்த்தகளப் பாடும்படி கட்டாயப் படுத்தப்பட்டார்கள். விமல் வீரவன்ஸ போன்றவர்கள் தமிழர்கள் சிங்களத்தில்தான் பாடவேண்டும் தமிழில் அல்ல என்று சொல்லுமளவிற்கு சென்றார்கள். அதன்படி தமிழில் தேசிய கீதம் பாடுவது ஒருபுறத்தில் கட்டாயமாக ஒடுக்கப்பட்ட அதேவேளை மறுபுறத்தில் தமிழில் தேசிய கீதம் பாடும் உரிமை இன்னும் எஞ்சியுள்ளது என்று போலியாக வலியுறுத்தப் பட்டது.

அத்தகைய முக்கியமான காலகட்டத்தில் அரசியல் ரீதியாக இப்படியான தொலை நோக்கற்ற நடவடிக்கைள் மேற்கொள்ளப் பட்டது ஒரு வகையில் நம்ப முயாத ஒன்று. பல தசாப்தங்களாக இடம்பெற்ற பிரிவினைவாத மோதல் காரணமாக தனிமைப்படுத்தப் பட்டிருந்த தமிழ் மக்கள் ஐக்கி நாட்டின் பிரதான அரசியல் நீரோட்டத்தில் மீளவும் இணைவதற்காக மௌ;ள மௌ;ளப் போராடிக் கொண்டிருக்கிறார்கள். இப்போது தேசிய கீதத்தை அவர்களின் தாய்மொழியில் பாடும் உரிமையும் மறுக்கப்படுவது ஒரு அடையாள அர்த்தத்தில் சக்தியான ஒரு அடியைக் கொடுப்பது போலுள்ளது.

வெற்றிக்களிப்பின் சின்னம்

இந்த மறுதலிப்பு நடவடிக்கைக்கு எல்.ரீ.ரீ.ஈ மீது சுமத்தப்பட்ட இராணுவத் தோல்வியினைத் தொடர்ந்து வேறு ஒரு அலட்சியபாவ மனோநிலையிலான சித்தாந்தம் காரணமாக இருக்கலாம். அது ஒரு வகையில் வெற்றியின் சின்னத்தை அர்த்தப்படுத்துவதாகவும் இருக்கலாம். தமிழர்கள் வெற்றி கொள்ளப்பட்ட மக்களாகக் கருதப்பட்டு மற்றும் தேசிய கீதத்தை வெற்றியாளரின் மொழியில் பாடுவதற்கு கட்டாயப் படுத்தப்படுகிறார்கள். இத்தகைய ஆழ்ந்த சிந்தனையின் காரணமாக வெளிப்படும் இந்த நகர்வில் ஒரு குரூரமான வஞ்சனை உள்ளது. தமிழுக்கு உத்தியோகபூர்வ அரசியலமைப்பு அந்தஸ்து இல்லாதபோதும் கடந்த காலத்தில் தேசிய கீதத்தை பாடி மகிழ்வதற்கு மட்டுப்படுத்தப்பட்ட உரிமைகளாவது இருந்தது. இப்போது 13வது மற்றும் 16வது அரசியலமைப்பு திருத்தங்களின் உதவியினால் தமிழுக்கு உத்தியோகபூர்வ மொழி அந்தஸ்து கிடைத்துள்ளது. வருத்தப்படும் வகையில் தமிழ் உத்தியோகபூர்வ மொழி அந்தஸ்துக்கு உயர்த்தப் பட்டதின் பின்னரும் தேசிய கீதத்தை தமிழில் பாடுவதை மறுக்கும் வகையில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

போரில் ஈட்டப்படும் இராணுவ வெற்றி தானாகவே நியாயமான ஐக்கியத்தை நிறுவி விடாது. பிரிவினைவாதத்துக்கு எதிரான நீண்ட ஆனால் வெற்றிகரமான யுத்தத்துக்கு பின்னான உடனடிப் பணியாக நாடு எதிர்நோக்குவது போரினால் ஏற்பட்ட காயங்களை குணப்படுத்தி ஒன்றுபட்ட தேசத்தை மேலும் வலுப்படுத்துவதே. ஒரு காலத்தில் தேசிய நல்லிணக்கம் மற்றும் இன ஐக்கிய நகர்வுகள் என்பன முக்கியமாகக் கருதப்பட்டன, ஏற்கனவே தேசிய கீதத்தை தமிழில் பாடுவதற்கு ஏற்றதாக நிலவிய ஏற்பாடுகளின் மீது கை வைத்து தமிழர்களை மேலும் விரக்தி நிலைக்கு தள்ளி விடுவதற்கான திட்டங்கள் இப்போது தீட்டப்படுகிறது.

தமிழில் தேசிய கீதம் பாடுவதற்கு உள்ள தற்போதைய நிலையை தொடர்வதற்கு அனுமதிப்பதற்கான முக்கியமான அழுத்தம் நிறைந்த மற்றொரு காரணமும் உள்ளது. தேசிய கீதத்தை தமிழில் பாட விரும்பும் தமிழர்கள் பிரிவினை வாதிகளோ அல்லது தீவிரவாதிகளோ இல்லை. பிரிவினைவாதிகள் மற்றும் எல்.ரீ.ரீ.ஈ சார்பான புலம்பெயர்ந்தவர்கள் தேசிய கீதம் தமிழில் பாடப்பட வேண்டும் என விரும்புகிறார்கள் என்று பலராலும் வலியுறுத்தப்பட்டு வருகின்றது. இந்த முட்டாள்தனமான வலியுறுத்தல் உண்மையிலிருந்து வெகுதூரம் விலகியுள்ளது.

ஸ்ரீலங்காவில் வாழும் தமிழர்களில் பெரும்பாலானவர்கள் தேசிய கீதம் தமிழில் பாடப்படுவதையே விரும்புகிறார்கள் ஏனெனில் அவர்கள் ஸ்ரீலங்காவுக்கு சொந்தமானவர்களாகவும் மற்றும் ஸ்ரீலங்காவுடன் அடையாளப் படுத்தப்பட வேண்டும் என்றே விரும்புகிறார்கள். இது அவர்கள் கேட்கும் ஒரு புதிய உரிமையல்ல ஆனால் முன்பு இருந்ததின் தொடர்ச்சியைத்தான் அவர்கள் கேட்கிறார்கள். சிங்களத்தில் தேசிய கீதத்துக்கு பெருமையான இடத்தை வழங்கும் அதேவேளை அவர்கள் அதை தமது தாய்மொழியில் எப்போதாவது எங்கெல்லாம் சாத்தியமாகிறதோ அல்லது பொருத்தமாகிறதோ அங்கு பாடவேண்டும் என்றுதான் விரும்புகிறார்கள்.

தூதுவர்கள், கல்வியாளர்கள், ஊடக மற்றும் தொண்டு நிறுவன ஊழியர்கள் போன்ற நடுநிலையான வெளிநாட்டவர்கள் பெரிதும் அதிர்ச்சி அடைந்துள்ளார்கள். இன கலகங்களால் கிழிந்து துண்டாகி மற்றும் இப்போது இன ஒற்றுமை மற்றும் தேசிய ஒருமைப்பாட்டின் பாதையில் நடைபோடும் ஒரு மண்ணில்தான் இது நடக்கிறதா என்பதை அவர்களால் நம்ப முடியவில்லை. ஏன் இத்தகைய சகிப்புத் தன்மையற்ற போக்கு! மேலும் விவேகமும் மற்றும் நல்லறிவும் உள்ள எந்த ஒரு நாட்டிலும் ஒரு பிரச்சினையாக கருதப்படாத ஒரு விடயத்துக்கு ஏன் இத்தகைய விகாரமான பதிலளிப்பு? ஆனால் இவை அனைத்தும் நடப்பது நான் பிறந்து வளர்ந்த ஸ்ரீலங்கா என அழைக்கப்படும் ஒரு அழகிய நாட்டில்தான். இந்து சமுத்திரத்தின் முத்து என வர்ணிக்கப்பட்டு பின்னர் ஆசியாவின் அதிசயமாக மாறிய ஒரு நாட்டில் இப்படியான பல விடயங்கள் நடப்பதை நம்புவது கடினமாக இருக்கலாம். அது முரணிலைகள் உள்ள ஒரு நாடு. நடிகரும் அரசியல்வாதியுமான காமினி பொன்சேகா அடிக்டி கூறும் விளக்கமான “மூன்றாம் தர அரசியல்” என்பதுதான் ஸ்ரீலங்காவிற்கு மரணத்தையும் மற்றும் அழிவையும் ஏற்படுத்துவதாக உள்ளது.

பகுத்தறிவற்ற அரசியல்

இனப் பிளவின் இரு பக்கத்திலுமுள்ள அரசியல்வாதிகள் நேரத்துக்கு நேரம் பகுத்தறிவற்ற அரசியலைப் பின்தொடர்வது மூலமாக வாக்காளர்களின் மூல உணர்வுகளுக்கு அழைப்பு விடுக்கிறார்கள். இந்த அரசியல் சக்திகள் தொடர்ந்து தழைத்தோங்கி வளர்கின்றன, ஏனென்றால் அனத்து வகையான ஸ்ரீலங்கா மக்களும் காலத்துக்கு காலம் தெளிவுபடுத்தி வருவது, தேர்தல்களில் உணர்ச்சிபூர்வமான வெற்றுக் கோஷங்கள் மற்றும் மலிவான அரசியல் வித்தைகள் ஊடாக அவர்களுக்கு எளிதில் ஆவேசமூட்டிவிடலாம் என்று. இதன்படி அது ஒரு பரஸ்பர சார்புள்ள ஒரு தீய வட்டம் அங்கு அவர்களுக்கு தகுதியான தலைவர்களைப் பெறுவதற்காக மக்கள் தொடர்ந்து செயற்படுகிறார்கள்.

மொத்தக் குழப்பங்கள் மற்றும் முழுத் துன்பங்களுக்குள் ஸ்ரீலங்கா அமிழ்ந்து விடாமல் அதைத் தடுப்பது அதன் தலைவர்களில் சிலர் மற்றும் மக்கள் ஆகியோர் முழுச் சேதமும் ஏற்பட்டு விடாதபடிக்கு சில நேரங்களில் சரியான நடவடிக்கைகளை எடுப்பதுடன் மற்றும் சிலவற்றை தவிர்த்தும் விடும் திறனைக் கொண்டிருப்பதுதான்.

இன்னும் அதிகமாகச் சொன்னால் இந்த சரியான நடவடிக்கைகள் ஜனநாயக முறைகளின்படி இயற்றப்பட்டவை. ஸ்ரீலங்காவில் ஜனநாயகம் குறைவாக இருக்கலாம் ஆனால் இருப்பினும் அடிப்படையில் அது ஜனநாயக நாடாக மீந்திருப்பதையிட்டு நாடு பெருமையடைய முடியும். ஒரு தொகுதி வீணர்கள் மற்றொரு தொகுதியினரால் மாற்றீடு செய்யப் படுகிறார்கள் ஆனால் இவையனைத்தும் நடைபெறுவது ஜனநாயகத் தேர்தல் மூலமாகத்தான். வாக்களிப்பதன் ஊடாக சர்வாதிகாரப் போக்குகள் தடுக்கப் படுகின்றன. தீவின் அரசியல் அடிவாரத்தை இருண்ட மேகங்கள் மூடும்போது, இவைதான் நம்பிக்கை ஏற்படுத்தும் வெள்ளி ஒளிக் கீற்றுகளாக ஒளி கொடுக்கின்றன.

அத்தகைய ஒரு வெள்ளி ஒளிக் கீற்றுத்தான் கடந்தவாரம் சுதந்திர தின விழாவில் தேசிய கீதத்தை தமிழில் பாடி நமது கண்களுக்கு காட்சி தந்தது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரசிங்கா ஆகியோரின் தலைமையின் கீழான புதிய பகிர்ந்தளிப்பு, முந்தைய ராஜபக்ஸ ஆட்சியின் கீழ் இழைக்கப்பட்ட சில தவறுகளை திருத்துவதற்கு துணிவுடன் முயற்சிக்கிறது.

The British High Commission marked the International Day of Peace on 21 September 2011 by hosting an Art Festival in Colombo, involving over 50 school children-pic courtesy: UK In Sri Lanka

The British High Commission marked the International Day of Peace on 21 September 2011 by hosting an Art Festival in Colombo, involving over 50 school children-pic courtesy: UK In Sri Lanka

68வது சுதந்திரதின நினைவுக் கொண்டாட்டங்கள் உண்மையில் நெஞ்சை நெகிழ வைத்ததுடன் மற்றும் நம்பிக்கைக்கான முன்னறிவிப்பாகவும் உள்ளது. அது விளக்குவது மைத்திரி, ரணில், சந்திரிகா ஆகியோரின் முக்கூட்டணி இன நீதி, இன ஒற்றுமை, மற்றும் தேசிய நல்லிணக்கம் என்ற சாலையில் மெதுவாக ஆனால் நிதானமாக முன்னேறிச் செல்கிறது என்பதை.
இவை எல்லாவற்றிற்கும் மேலாக சுதந்திர தினத்தன்று நடைபெற்ற நிகழ்வில் தேசிய கீதத்தை தமிழில் பாடியது, தமிழ் பேசும் மக்களுக்கு, அவர்களும் மற்றும் அவர்களின் மொழியும் பரிணாமம் அடைந்து வரும் ஸ்ரீலங்காவின் ஒரு ஒருங்கிணைந்த பகுதியாக உள்ளது என்கிற வலுவான ஒரு அடையாளச் செய்தியைத் தெரிவிக்கிறது. இது ஐக்கியமான பிளவுபடாத ஸ்ரீலங்காவில் சமத்துவத்துடன் வாழ விரும்பும் அனைத்து தமிழர்களையும் மிக, மிக, மிக மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.

ஆங்கிலத்தில் டி.பி.எஸ்.ஜெயராஜ் இனால் எழுதப்பட்ட “Patriotic Tamils Hail Mother Lanka as “Sri Lanka Thaayae” in Their Mother Tongue”கட்டுரையியின் தமிழாக்கம்: தேனீ மொழிபெயர்ப்பு: எஸ்.குமார் ~ நன்றி: தேனீ

Share on FacebookTweet about this on TwitterShare on LinkedInShare on Google+Print this page