2016 பொங்கல் விழா வாழ்த்துக்களும் ஒரு பணிவான வேண்டுகோளும் – அருட்தந்தை எஸ்.ஜே. இம்மானுவேல்.

அன்பான எனது தமிழ் உடன் பிறப்புக்களே,

ன்று உலகம் முழுவதும் பரந்து வாழும் தமிழர்களை நான் எனது உடன் பிறப்புக்கள் என்று அழைத்து பொங்கல் விழா வாழ்த்துக்களை பகிர்ந்து கொள்வதில் பெருமை அடைகின்றேன்.

Pongal FSJE

1. மகிழ்ச்சியடைகின்றேன்

படைக்கப்பட்ட பல்வேறு இனங்களில் ஒன்றாக
தமிழ் இனத்தையூம் படைத்து, அதற்கு பல சிறப்புத் திறமைகளையூம் பண்புகளையும் இனாமாகக் கொடுத்து வளர்த்து வருகின்றார் இறைவன்.
ஆகையினால் உங்களுடன் சேர்ந்து நானும் இந் நாளில் இறைவனுக்கு நன்றி கூறுகின்றேன்.

நான் தொகையில் சிறிய ஒரு ஈழத் தமிழ் சமூகத்தினுள் பிறந்தாலும், உலகம் பரந்து வாழும் தமிழ் மக்கள் எல்லோரும் வளர்த்து வரும் மொழியையும் அதன் அழகிய செல்வ செழிப்பான இலக்கிய, இசை, நாடக கலைகள் அனைத்தையும்
இன்பச் செல்வமாக ஏற்று பெருமையுடன் அனுபவிக்கிறேன்.

ஆகையினால் பொங்கல் விழாவை நன்றி விழாவாகக் கணித்து அனைத்தையும் கொடுத்த இறைவனுக்கும் அவைகளை பேணி வளர்க்க்கும் உங்களுக்கும் நன்றி கூறுகின்றேன்.

2. மனம் வருந்தி மன்னிப்பு வேண்டுகின்றேன்

அதே சமயத்தில் ஈழத் தமிழனாக, நீண்ட காலமாக
எனது மக்கள் விடுதலை பெற்று சமாதானமாக வாழ நடாத்தும் போராட்டத்தில் நானும் எனது பங்கை அளித்து வருகின்றேன்.

இதனூடாக நான் எமது தமிழ் இனத்தைப் பற்றியும்
தமிழ் தனி நபர்களைப் பற்றியும் எமது இன விடுதலைக்கு முற்று முரணான சுய அடிமைத்தனம் எம்மில் வேரூன்றி விருட்சமிட்டிருப்பதை உணர்கிறேன். இதையிட்டு நான் மிக வேதனைப் படுகின்றேன், வெட்கித்து தலை குனிகின்றேன்.
இறைவனிடமும் மனிதரிடமும் மன்னிப்பு வேண்டுகின்றேன்.

3. நிரந்தர அடிமைகளாகாது விடுதலை நோக்கி நடப்போம்

தமிழர்களாகிய நாம் எமது பாரம்பரிய சொத்தையிட்டு
அல்லது எமது உலக சாதனைகளையிட்டு
எவ்வளவு தான் பெருமைப்பட்டாலும் பேரம் பேசினாலும் எம்மில் தனிப்பட்டவராகவோ, குழுமமாகவோ எமது பார்வையிலும், பரஸ்பர கணிப்பிலும், உறவிலும், வேற்றுமைகளும் அடிமைத்தனமும் வேரூன்றி இருக்குமாயின்
நாம் நிரந்தர அடிமைகளாகவே இருக்க நேரிடும்.
எமது விடுதலைத் தாகமும் போராட்டமும் வீணாகிவிடும். உண்மையான விடுதலை என்றும் கனவாகவும் கானல் நீராகவூமே இருக்கும்.

4. சுய மரியாதை சுய விடுதலைக்கு முயற்சிப்போம்.

இதை நன்கு உணர்ந்த ஓர் மாமனிதன் தமிழ் நாட்டில் வாழ்ந்த பெரியார். அவருடைய மையத்திற்கு 2010ம் ஆண்டில் நான் ஒரு முறை சென்றிருந்தேன்.
மனிதர்களை மதிக்காது அடிமைப்படுத்தி வாழ்வு நடாத்திய பிராமண குடும்பத்தில் அவர் தோன்றியிருந்தாலும்,
தமிழ் சமுதாயத்தில் வேரூன்றியிருந்த வேற்றுமை அடிமைத்தனங்களை ஒழிக்க, சென்ற நூற்றாண்டில் புரட்சிப் போராட்டம் நடத்தினார்.
அவர் ஆரம்பித்த சுய மரியாதை போன்ற இயக்கங்களில் பல அரசியல்வாதிகளும் தமது இளமைத் துடிப்புடன் பங்கெடுத்தனர்.
ஆனால் அரசியலில் புகுந்தவூடன் அக் கொள்கைகளை காற்றில் பறக்க விட்டனர்.

ஆகையினால் பொங்கல் விழாவை தமிழர் என்ற பெருமையுடன் கொண்டாடி இறைவனுக்கு நன்றி கூறும் வேளையில்,
எம்முள் வேரூன்றி அல்லது உறைந்திருக்கும்
வேற்றுமை அடிமைத்தன மனப்பான்மைகளையிட்டு
மனம் வருந்தி இறைவனிடமும் மனிதரிடமும் மன்னிப்பு வேண்டி சுய விடுதலைக்ககும் எமது சமூகத்தினுள் விடுதலைக்கும் முயற்சிப்போமாக.

5. சகோதர சமத்துவத்தில் விடுதலைக்காக முயற்சிப்போம்

ஒரே இறைவனின் பிள்ளைகளாக, சகோதரராக, சமத்துவத்துடன் வாழ்வோம்.
ஒரே சூரியன் சகல படைப்புக்களுக்கும், சகல மனிதர்களுக்கும் ஒரே சக்தியை, ஒளியை, வேற்றுமையின்றி கொடுத்து வருவது போல்,
நாமும் எம்மை சூழ்ந்திருக்கும் சகல படைப்புக்களுக்கும், மனிதர்களுக்கும்
மரியாதையை, மதிப்பை, அன்பை, இரக்கத்தை கொடுத்து வாழ்வோமாக.

அன்பானவர்களே, இந்த சுய சமாதானத்தையும், சுய விடுதலையையும்,
சமூக விடுதலையையும்ம் உங்கள் அனைவருக்கும் விரும்புகின்றேன்.

பரம ஈஸ்வரனின் பணியாளனும்
இயேசு கிறீஸ்துவின் சீடனுமான
எஸ். ஜே. இம்மானுவேல்

Share on FacebookTweet about this on TwitterShare on LinkedInShare on Google+Print this page