வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனின் பிரச்சினையை தமிழ் தேசியக் கூட்டமைப்பு எப்படித் தீர்க்கப் போகிறது?

டி.பி.எஸ்.ஜெயராஜ்

“எப்படி நீங்கள் மரியா போன்றவர்களின் பிரச்சினையை தீர்க்கப் போகிறீர்கள்?
எப்படி நீங்கள் ஒரு மேகத்தைப் பிடித்து அதைக் கீழே வர வைப்பீர்கள்?
எப்படி நீங்கள் மரியா என்கிற சொல்லுக்கு அர்த்தம் காண்பீர்கள்?
ஒரு அளவுக்கு மீறி பேசும்! நழுவித் தப்பிக்கும்! ஒரு கோமாளி!”

“உங்களுக்குத் தெரிந்த பல விடயங்களை, அவளுக்கு புரியவைக்க வேண்டிய பல விடயங்களை அவளுக்குச் சொல்ல விரும்புகிறீர்கள், ஆனால் நீங்கள் சொல்வதை எல்லாம் எப்படி அவள் உட்கார்ந்து கேட்கும்படியாக செய்யப் போகிறீர்கள். எப்படி நீங்கள் மணல்மீது ஒரு அலையை வைக்கப் போகிறீர்கள்?” – “சவுண்ட் ஒப் மியுசிக்” இல் ஒஸ்கார் ஹமர்ஸ்டீன்.

PresentationTNA3

பல வருடங்களாக ஸ்ரீலங்காவில் வசித்தவரான மூத்த இந்திய பத்திரிகையாளரான பி.கே. பாலச்சந்திரன்,ஒருகாலத்தில் இந்து மா சமுத்திரத்தின் முத்து என்று வர்ணிக்கப்பட்ட ஸ்ரீலங்காத் தீவின் அரசியல் மற்றும் அரசியல்வாதிகள் பற்றி கடந்த ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க ஒரு நுண்ணறிவைப் பெற்றிருந்தார். பாலா என்று அறியப்படும் அவர் கடந்த வார “ நியு இந்தியன் எக்ஸ்பிரஸ்” பத்திரிகையில் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் பற்றி பகுத்தறியும் திறனுள்ள ஒரு செய்தி அறிக்கையை எழுதியிருந்தார், அந்தக் கட்டுரையில் டிசம்பர் 12, 2015 திகதிய “டெய்லி மிரர்” பத்திரிகையில் இந்தப் பத்தி எழுத்தாளர் எழுதிய கட்டுரையில் உள்ள சில வரிகளும் மேற்கோள் காட்டப்பட்டிருந்தது.

நியு இந்தியன் எக்ஸ்பிரசில் இருந்து அது தொடர்பாக மீள்பதிப்பு செய்யப்பட்ட செய்தி கீழே தரப்பட்டுள்ளது:-

“வல்லரசான அமெரிக்கா அதேபோல பிராந்திய அதிகார சக்தியான இந்தியா ஆகியவற்றில் எதுவும் ஸ்ரீலங்காவின் தமிழர்கள் பெரும்பான்மையாக உள்ள வட மாகாணத்தின் முதலமைச்சரான சி.வி.விக்னேஸ்வரனின் அரசியல் நடவடிக்கைகள் பற்றி அதிகம் மகிழ்ச்சி அடையவில்லை. அமெரிக்க மற்றும் இந்திய தூதுவர்கள், அவரது உதவியற்ற தீவிர நிலைப்பாடான தோற்றம் நீண்டகாலமாக இழுபடும் தமிழர் பிரச்சினைக்கு ஒரு இணக்கமான தீர்வினைக் காண ஸ்ரீலங்கா அரசாங்கம் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு பதிப்பை ஏற்படுத்தலாம் என்கிற தங்கள் கவலைகளை நேரடியாகவே அவரிடம் தெரிவித்துள்ளார்கள்.

கடந்த வியாழனன்று இந்திய உயர் ஸ்தானிகர் வை.கே. சின்கா விக்னேஸ்வரனைச் சந்தித்து மிதவாத தமிழ் தேசியக் கூட்டமைப்பை (ரி.என்.ஏ) பிளவு படுத்த வேண்டாம், ஆனால் அதற்குப் பதிலாக ஆர்.சம்பந்தன், எம்.ஏ.சுமந்திரன், மற்றும் மாவை சேனாதிராஜா போன்ற ரி.என்.ஏ தலைவர்களுடன் ஒத்துழைத்து இருண்ட குகையின் அடுத்த அந்தத்தில் ஒரு நம்பிக்கை ஒளி தெரியும் இந்த வேளையில் தமிழர் பிரச்சினைக்கு ஒரு தீர்வைக்காண அரசாங்கத்துடன் ஒருமித்து செயற்படும்படி வலியுறுத்தியுள்ளார்.

விக்னேஸ்வரன் அதற்கு சின்காவிடம் தெரிவித்தது, ரி.என்.ஏக்குள் உள்ள முரண்பாடுகளை பேச்சு வார்த்தைகள் மூலம் தீhக்கலாம் என்று, ஆனால் இடைவெளியானது இணைக்க முடியாத அளவிற்கு பெரிதாக பரந்து உள்ளதாகத் தெரிகிறது. அவர் சிறிசேன – விக்கிரமசிங்க அரசாங்கத்தின்மீது தனக்குள்ள வெறுப்பையும் மற்றும் ரி.என்.ஏ தலைமை அதன்மீது விசுவாசம் வைத்து பூரிப்படைவதையும் பற்றி கடுமையாக நியாயப்படுத்திப் பேசினார்.

முன்னதாக நவம்பர் 23ல் ஐக்கிய நாடுகளுக்கான அமெரிக்க தூதுவர் சமந்தா பவர், விக்னேஸ்வரனை யாழ்ப்பாணத்தில் சந்தித்தபோது, கொழும்பில் உள்ள புதிய அரசாங்கம் தமிழர்களுக்கு எதுவும் செய்யவில்லை என்று அவர் புரிந்த வாதம் குப்பைக்குள் தள்ளப்பட்டு விட்டது. டி.பி.எஸ் ஜெயராஜ் தெரிவிப்பதின்படி, பவர் 11 அம்ச விளக்கங்கள் மூலம் எதிர்த்து வாதிட்டு அவருடைய வாதத்தை தகர்த்தெறிந்ததால் விக்னேஸ்வரனுக்கு ஒருவழியாக பின்னர் தனது நிலைப்பாட்டை மீளாய்வு செய்யவேண்டியதாகிவிட்டது. அந்த சந்திப்பின் பின் பவர் தனது ட்வீட்டர் பக்கத்தில் “யாழ்ப்பாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை நல்லிணக்கத்துக்கும் மற்றும் மீள் கட்டமானத்துக்கும் உகந்ததாக உருவாகியுள்ள விலைமதிப்பற்ற தருணத்தை வலுப்படுத்த உதவும்படி வலியுறுத்தப்பட்டது” என்றுகுறிப்பிட்டிருந்தார்.

ரி.என்ஏ தலைவர் சம்பந்தனைச் சந்தித்த பின்னர் பவரின் ட்வீட்டர் செய்தி குறிப்பிடத்தக்க விதத்தில் வித்தியாசமாக இருந்தது. “மிதவாத தமிழ் தலைவரின் தமிழர்களின் உரிமைகளைத் தேடும் உணர்ச்சிகரமான குரல் நிச்சயம் தேசிய கருத்தொருமிப்பை உருவாக்கும்” என்று அவர் அதில் விளக்கியிருந்தார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசாங்கத்தின் கீழ் இலங்கையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் அவருக்கு மகிழ்ச்சியளிக்கின்றன. நல்லிணக்கம், ஜனநாயகம், மறுசீரமைப்பு, நீதி என்பனவற்றுக்காக அர்ப்பணிப்புச் செய்துள்ள சிறிசேனவை சந்திப்பது தன்னையும் கௌரவப் படுத்தியுள்ளது என்று பவர் தெரிவித்திருந்தார். உயர் வரிசை அமெரிக்க இராஜதந்திரியான பவர், வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவை ஒரு நண்பர் என்று அழைத்ததோடு ஸ்ரீலங்கா மக்கள், பொறுப்புக்கூறும் அரசாங்கம் மற்றும் மறுசீரமைப்பு என்பனவற்றுக்காக அவர் உறுதியாக குரல் எழுப்புவதாகவும் குறிப்பிட்டார்.”

செல்வாக்குள்ள பகுதிகளில் இருந்து கவலை தரும் வெளிப்பாடுகள் வெளிவந்த போதிலும், விக்னேஸ்வரனால் தனது தீவிரவாத நிலைப்பாட்டை விட்டுக்கொடுக்கும் சாத்தியம் இல்லை ஏனென்றால் மக்கள் மற்றும் எல்.ரீ.ரீ.ஈ சார்பான தமிழ் புலம்பெயர்ந்தவர்கள் ஆதரவு ஆகிவற்றின் உதவியினால் தன்னால் ரி.என்.ஏ யினை கைப்பற்ற வழிவகுக்கும் என அவர் நம்புகிறார். ஸ்ரீலங்கா தமிழர்கள், இந்தியா மற்றும் ஒருவேளை அமெரிக்கா என்பன கூட இல்லாமலே எதையும் செய்ய முடியும் என நம்பும் சக்திகளின் செல்வாக்கின் கீழ் அவர் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.
எனவே விக்னேஸ்வரன் ஒன்றில் முயற்சி செய்து ரி.என்.ஏயினை கைப்பற்றுவார் அல்லது தற்போது நட்பாக உள்ள அமைப்புக்களான தமிழர் விடுதலைக் கூட்டணி (ரி.யு.எல்.எப்) மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி(ரி.என்.பி.எப்) என்பவற்றைப் பின்தொடர்வார்.

ஏப்ரல் 2016 உள்ளுராட்சித் தேர்தல்களுக்கு முன்னர் இதைச் செயற்படுத்துவார் என அரசியல் வட்டாரங்கள் எதிர்பார்க்கின்றன.

எனினும் ரி.என்.ஏ தலைவர்கள் அதையிட்டு கலக்கமடையவில்லை. மட்டக்களப்பு கூட்டத்தில் “கட்சி மற்றும் மக்கள் அதை விரும்பினால், விக்னேஸ்வரனுக்குச் சார்பாக நான் பதவி விலகத் தயார்” என்று சொன்னதின் மூலம் சம்பந்தன் அவருக்கு சவால் விடுத்துள்ளார். சம்பந்தன் விலகப் போவதில்லை. சுமந்திரனின் கூற்றுப்படி, வெகுஜனங்கள் தன்னை பின்தொடர்வதாக விக்னேஸ்வரன் கூறுவது வெறும் வெற்றுவேட்டு. “அவரது உண்மையான பலத்தை ஆகஸ்ட் 17 பாராளுமன்றத் தேர்தல்களில் பார்த்தோம். அவரது ஆதரவு இன்றியே ரி.என்.ஏ வெற்றிவாகை சூடியது. அவர் மறைமுகமாக ஆதரவு தெரிவித்த தமிழ் தேசிய மக்கள் முன்னணி வெறும் கழிவுத் துண்டுகளாக மாறியது” என சுமந்திரன் கணித்துள்ளார்.

பாலச்சந்திரனின் அறிக்கைகள் அதேபோல எனது கடந்தவார பத்தி என்பன கவனத்துக்கு கொண்டு வருவது, ஸ்ரீலங்காவில் தமிழர்களின் முன்னணி அரசியல் அமைப்பான தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஐக்கியத்துக்கு அச்சுறுத்தலாக மாறியுள்ள பிரதான பிரச்சினைகள் எவை என்பதையே. அந்தப் பிரச்சினை, ரி.என்.ஏயின் வேட்பு மனுவின் கீழ் அதன் பிரதான அங்கத்துவ கட்சியான இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வீட்டுச் சின்னத்தின் கீழ் 2013 செப்ரம்பர் 23 ல் நடைபெற்ற மாகாணசபை தேர்தலில் போட்டியிட்டு 132,000 மேலான விருப்புரிமை வாக்குகளால் வெற்றி பெற்று வட மாகாணசபை முதலமைச்சராகத் தெரிவு செய்யப் பட்ட கனகசபாபதி விஸ்வலிங்கம் விக்னேஸ்வரனின் அரசியல் நடத்தையை தவிர வேறொன்றுமில்லை.

பல தசாப்தங்களுக்கு முன்னர் ஸ்ரீலங்கா சிலோன் என அழைக்கப்பட்ட காலத்தில் கொழும்பிலுள்ள கிறீஸ்தவ இளைஞர்கள் சங்கம் (வை.எம்.சி.ஏ) சுதந்திர இலங்கை எதிர்கொள்ளும் பிரச்சினைகள் என்கிற தலைப்பில் ஒரு விரிவுரையை ஏற்பாடு செய்திருந்தது. டி.எஸ். சேனநாயக்காவின் அமைச்சரவையில் அங்கம் வகித்த அமைச்சரான சொலமன் வெஸ்ட் றிட்ஜ்வே டயஸ் பண்டாரநாயக்கா அதிதிப் பேச்சாளராக அழைக்கப் பட்டிருந்தார். அந்த விரிவுரை “வை.எம்.சி.ஏ மன்ற பேச்சாளர்” ஆனந்த திஸ்ஸ டீ அல்விஸ் அவர்களால் பெரிதும் பாராட்டப் பட்டது, அல்விஸ் பின்னாளில் ஸ்ரீலங்காவின் தேசிய அரசுப் பேரவை மற்றும் பாராளுமன்றம் ஆகிய இரண்டிலும் சபாநாயகராக கடமையாற்றினார். தனது பெயர்பெற்ற குறும்பான சொல்நயத்தை கட்டுப்படுத்த முடியாத ஆனந்ததிஸ்ஸ, எஸ்.டபிள்யு.ஆர்.டி யை சபைக்கு அறிமுகம் செய்தபோது “இலங்கை எதிர்நோக்கும் பிரச்சினைகள் பற்றி பேசுவதற்கு மிகவும் பொருத்தமான நபர் இவாதான் ஏனென்றால் இப்போது சுதந்திர இலங்கை எதிர்நோக்கும் மிகப் பெரிய பிரச்சினையாக பலரும் உணர்வது எஸ்.டபிள்யு.ஆர்.டி. பண்டாரநாயக்காவைத்தான்” என்று சொன்னார். எஸ்.டபிள்யு.ஆர்.டி அந்த வேடிக்கையை மகிழ்வாக எடுத்துக் கொள்ளவில்லை.

அதேபோல யாராவது தமிழ் தேசியக் கூட்டமைப்பு எதிர்நோக்கும் பிரச்சினைகள் என்கிற தலைப்பில் யாராவது ஒரு விரிவுரையை ஏற்பாடு செய்தால் அந்த விடயம் பற்றி பேசுவதற்கு மிகவும் பொருத்தமான நபர் கனகசபாபதி விஸ்வலிங்கம் விக்னேஸ்வரன் அவர்கள்தான் ஏனென்றால் இப்போது ரி.என்.ஏ எதிர்நோக்கும் மிகப் பெரிய பிரச்சினை சி.வி விக்னேஸ்வரன் என்றுதான் பலரும் நம்புகிறார்கள். வட மாகாண முதலமைச்சரின் அரசியல் நடவடிக்கைகள், ரி.என்.ஏ யில் உள்ள பலருக்கும் சவுண்ட் ஒப் மியுசிக் படத்தில் வரும் மரியாவை பற்றி அங்குள்ள கன்னியாஸ்திரிகள் விரக்தியில் தங்கள் கைகளை முறுக்கிக் கொண்டு கூக்குரலிடுவதை போல – “எப்படி நீங்கள் விக்னேஸ்வரன் போன்ற பிரச்சினையை தீர்க்க முடியும்” என்று கூக்குரலிடத் தோன்றும்.

முன்னாள் உச்ச நீதிமன்ற நீதியரசர் சி.வி. விக்னேஸ்வரன் 2013ல் நடந்த மாகாணசபை தேர்தலில்; வட மாகாணசபையின் முதலமைச்சர் வேட்பாளராக அந்த நேரம் ஐந்து கட்சிகளைக் கொணடிருந்த ரி.என்.ஏயின் பிரதான அங்கத்துவ கட்சியான இலங்கை தமிழரசுக் கட்சியினால் தேர்வு செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து ரி.என்.ஏயில் அங்கத்துவம் வகித்த இதர உப கட்சிகளும் விக்னேஸ்வரனின் நியமனத்தை அனுமதித்து அவரை ரி.என்.ஏயின் பொது வேட்பாளராக அறிவித்தன. மாகாணசபை தேர்தல்களில் 38 ஆசனங்களில் ரி.என்.ஏ 30 ஆசனங்களை வென்றதுடன் விக்னேஸ்வரன் 132,000 விருப்பு வாக்குகளுடன் முதலிடத்தை பெற்றார். வடக்கு மாகாணசபையின் முதலாவது முதலமைச்சராக சி.வி. விக்னேஸ்வரன் ஒக்ரோபர் 2013ல் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.

புதிய அரசியல் தைரியத்தை விக்னேஸ்வரன் கையகப்படுத்திக் கொண்டார்

எனினும் அதைத் தொடர்ந்து தனது சொந்த நிகழ்ச்சித் திட்டத்தை நிறைவேற்றும் தவறான ஒரு போக்கை விக்னேஸ்வரன் கடைப்பிடிக்கலானார் அது பொதுவாக ரி.என்.ஏக்கும் மற்றும் குறிப்பாக இலங்கை தமிழரசுக்கட்சிக்கும் மாறுபட்டதாக இருந்தது. 2015 ஜனவரி 8 ல் மகிந்த ராஜபக்ஸ ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடைந்த பிறகு, விக்னேஸ்வரன் புதிதாகக் கண்ட அரசியல் தைரியத்தை கையகப் படுத்தியிருப்பதாக அரசியல் அவதானிகள் அதைப்பற்றிக் குறிப்பிட்டுள்ளார்கள். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வட மாகாண ஆளுனராக இருந்த ஜெனரல் சந்திரசிறிக்கு பதிலாக இராஜதந்திரியான எச்.எம்.ஜி.எஸ். பளிகக்காரவை நியமித்தார். முன்னர் முதலமைச்சரும் மற்றும் ஆளுனரும் ஒருவருக்கொருவர் மோதலில் ஈடுபட்டிருந்ததுடன் சந்திரசிறி தன்னை மாகாணத்தை சுதந்திரமாக நிர்வாகிக்க அனுமதிக்கவில்லை என்று விக்னேஸ்வரன் முறையிட்டும் வந்தார்.

சந்திரசிறி நீக்கப்பட்டதின் பின்னர் முதலமைச்சர் ஒரு மாறுபட்ட அரசியல் போக்கில் நடை போடலானார், அதற்கு காரணம் தீவிரவாத சக்திகளான உலகத் தமிழ் புலம்பெயர்ந்தவர்களின் செல்வாக்கு என சந்தேகிக்கப்பட்டது. வட மாகாணசபையில் அரசியல் சர்ச்சைகளை எழுப்பிய இரண்டு தீர்மானங்களை நிறைவேற்றியது மூலம் முதலமைச்சர் இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைமையை மீறி நடந்துள்ளார். ஒன்று ஸ்ரீலங்கா தமிழர்கள்மீது நடத்தப்பட்டதாக குற்றம் சாட்டப்படும் இனப்படுகொலை மீதான ஐநா விசாரணைக்கு அழைப்பு விடுத்தது, மற்றையது கொழும்பு அரசாங்கத்தால் இறுதிக்கட்ட போரின்போது மேற்கொள்ளப்பட்டதாக குற்றம் சாட்டப்படும் யுத்தக் குற்றங்கள் தொடர்பாக உள்ளக விசாரணையை அல்ல, சர்வதேச விசாரணையே தேவை என கோரிக்கை விடுத்தது. இரண்டு தீர்மானங்களும் இலங்கை தமிழரசுக் கட்சி மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமையை பெரிதும் சங்கடத்துக்கு உள்ளாக்கியது.

மேலும் விக்னேஸ்வரன் ரி.என்.ஏ தலைமை மற்றும் சில பாராளுமன்ற உறுப்பினர்கள் பற்றி பகிரங்கமாக விமர்சனக் கருத்துக்களையும் மேற்கொண்டு வருகிறார். பெயர் குறிப்பிடாத ரி.என்.ஏ பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர்மீது ஆதாரமற்ற ஊழல் குற்றச்சாட்டுகளை அவர் சுமத்தியுள்ளார். பாராளுமன்றத் தேர்தல்களில் தான் பக்கச் சார்பற்றவர் எனக்கூறி ரி.என்.ஏக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொள்ள விக்னேஸ்வரன் மறுத்துள்ளார். வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதைப் போல முதலமைச்சர் விக்னேஸ்வரன் மக்கள், தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என்கிற தொனியில் மறைமுகமாக அவமானிக்கும் முறையில் இரண்டு பகிரங்க அறிக்கைகளையும் தேர்தல் காலத்தில் வெளியிட்டார். புலிகள் மற்றும் புலிகள் சார்பு புலம்பெயர் சக்திகளால் தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கு வலிமையான பின்துணை வழங்கப்பட்ட போதிலும் தேர்தல்களில் அது மிகவும் மோசமான பிரதிபலனையே பெற்றது.
விசேடமாக ரி.என்.ஏக்காக பிரச்சாரம் செய்ய வெளிப்படையாக மறுப்பு தெரிவித்ததும் மற்றும் இரகசியமாக தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கு ஆதரவு தெரிவித்ததுமான விக்னேஸ்வரனின் சர்ச்சைக்குரிய நடத்தை பெருமளவிலான ரி.என்.ஏ பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாணசபை உறுப்பினர்களை கோபமடையச் செய்தது. விக்னேஸ்வரனுக்கு எதிராக உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுக்கத் தொடங்கினார்கள். சிலர் முதலமைச்சரை நீக்குவதற்கும் வலியுறுத்தினார்கள். எனினும் ரி.என்.ஏயின் உயர்மட்டம் நடவடிக்கையில் இறங்க மறுத்ததுடன் அந்த சூழ்நிலையை பற்றி ஆழமாக ஆராய்ந்து வந்தது. அதன்பின் முதலமைச்சரின் ஒழுக்க மீறலைச் சமாளித்து விக்னேஸ்வரன் பிரச்சினைக்குத் தீர்வுகாண மூன்று கட்ட திட்டம் ஒன்று தீட்டப்பட்டது.

ரி.என்.ஏ மற்றும் இலங்கை தமிழரசுக் கட்சியினால் முன்மொழியப்பட்ட மூன்று கட்ட அரசியல் மூலோபாயம்
எதிர்க்கட்சித் தலைவரும் மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான சம்பந்தன், இலங்கைத் தமிழரசுக் கட்சித் தலைவரும் மற்றும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா மற்றும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் செயலாளரும் கிழக்கு மாகாணசபை அமைச்சருமான துரைராஜசிங்கம் ஆகிய மூன்று அங்கத்தவர்களைக் கொண்ட தூதுக்குழு முதலமைச்சர் விக்னேஸ்வரனை விரைவில் சந்தித்து அவருடனான வேற்றுமைகளைக் களைவதற்கு திட்டமிட்டுள்ளது.

கருதப்பட்டுள்ள கூட்டம் திட்டமிட்டுள்ள மூன்று கட்ட அரசியல் மூலோபாயத்தின் முதல்படியாகும். இந்தக் கலந்துரையாடல்களின்போது விக்னேஸ்வரன் தனது தவறுகளை உணர்ந்து மனந்திரும்புவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

அது நடந்தால் விக்னேஸ்வரன் மென்மையான அறிவுரைகளுடன் விடப்படுவார். ரி.என்.ஏக்குள் எந்த வேறுபாடுகளும் இல்லை என்றும் கட்சிக்குள் பிளவுகளை ஏற்படுத்த முயன்ற குற்றச்சாட்டு ஊடகங்கள் மற்றும் தமிழ் எதிர்ப்பு துரோகிகள் மேற்கொண்ட பங்களிப்பு எனக்கூறும் அறிக்கை ஒன்று வெளியிடப்படும்.

இந்தக் கலந்துரையாடல்கள் பலனளிக்காது போனால் அல்லது அதைத் தொடர்ந்து விக்னேஸ்வரன் தனது நன்னடத்தை உறுதிமொழியை மீறி நடக்கமுற்பட்டால் மூலோபாயத்தின் இரண்டாவது கட்டம் நடைபெறத் தொடங்கிவிடும். வட மாகாண சபை நிருவாகத்தை மீள்கட்டமைப்பு செய்வது மற்றும் மீள் உற்சாகமூட்டும் திட்டங்கள் வரையப்படும். முதலமைச்சர் தனது பதவியை தானாகவே முன்வந்து இராஜினாமா செய்யும்படி இலங்கைத் தமிழரசுக் கட்சியின் உயர்மட்டத்தினால் கோரப்படுவார்.

விக்னேஸ்வரன் முதலமைச்சராக இரண்டு வருடங்கள் மட்டுமே சேவையாற்ற சம்மதித்ததாகவும் மற்றும் அதனால் அவர் தனது பதவியை விட்டு இப்போது வெளியேறுகிறார் என்று சொல்லப்படும். முன்னாள் நீதியரசர் தனது கௌரவத்தை இழந்துவிடாதபடி விக்னேஸ்வரனுக்கு சிறப்பான ஒரு பிரியாவிடை வழங்கப்பட்டு இனிமையாக ஒய்வு பெற அனுமதிக்கப்படுவார்.

இந்த கௌரவமான கைகுலுக்கலுக்கல் விருப்பத்துக்கு இசைவு தெரிவிக்காவிட்டால் மூலோபாயத்தின் மூன்றாவது கட்டத் தெரிவு நடைமுறைக்கு வரும். அவரை, அவரது பதவியில் இருந்து அகற்றுவதற்கான கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

தனது பதவியை இராஜினாமா செய்யும்படி கோரப்பட்ட முதலமைச்சருக்கு எதிராக மாகாணசபை உறுப்பினர்களால் ஒரு நம்பிக்கையில்லாத் தீர்மானம் நிறைவேற்றப்படும். ஆளுனர் பளிகக்காரவுக்கு முதலமைச்சரை நீக்குவதைப்பற்றிய பரிந்துரை ஒன்றை ஜனாதிபதி சிறிசேனவிடம் சமாப்பிக்கும்படியான ஒரு தீர்மானமும் கொணடுவரப்படும். அதே சமயம் இலங்கைத் தமிழரசுக் கட்சி விக்னேஸ்வரனுக்கு எதிரான ஒரு ஒழுக்காற்று விசாரணையை நடத்தி அவருக்கு எதிரான கண்டனங்களை நிறைவேற்றும்.

முன்னாள் உயர் நீதிமன்ற நீதியரசர் எப்போதும் தனது பதவி நீக்கத்தை எதிர்த்து இலங்கைத் தமிழரசுக் கட்சி உயர்மட்ட வரிசைக்கு எதிராக நீதி மன்றங்களை நாட முடியும் என்றாலும் விக்னேஸ்வரன் இத்தகைய கண்ணியக் குறைவான நடவடிக்கைகள் மற்றும் நீண்ட சட்டவாதங்களில் இறங்கமாட்டார் என்று கருதப்படுகிறது. இப்போது விக்னேஸ்வரன் தனது வழியில் உள்ள தவறுகளை உணருவதற்கான போதிய ஞ}னம் பெற்று தவறுகளை திருத்தும் நடவடிக்கைகளில் ஈடுபடுவார் என்றும் அது பரஸ்பரம் கட்சிக்கும் அதேபோல அவருக்கும் பயனளிக்கும் என கட்சி உயர்மட்டம் நம்பிக்கை கொண்டுள்ளது. எனினும் சில விடயங்கள் நிச்சயமில்லை.

தமிழர் விடுதலைக் கூட்டணி ஆதரவின் கீழ் புதிய அரசியல் கட்டமைப்பு

முதலமைச்சர் மற்றும் இலங்கைத் தமிழரசுக் கட்சி மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைமை என்பனவற்றுக்கு இடையிலான ஒரு சந்திப்புக்கான நிகழ்ச்சித் திட்டம் இருந்த போதும் இது வரை நீண்ட காலமாக திட்டமிட்ட அந்த சந்திப்பு நடைமுறைப் படுத்தப்படவில்லை. இதற்கான ஒரு காரணம் விக்னேஸ்வரனின் திட்டமிட்டதாகச் சந்தேகிக்கப்படும் இரகசிய நிகழ்ச்சிநிரல், இலங்கைத் தமிழரசுக் கட்சித் தலைமையின் மத்தியில் ஏற்படுத்திய அதிர்ச்சியே ஆகும். நிலமையை மேலும் அதிகரிக்கும் வண்ணம் வெளிநாடுகளிலும் மற்றும் இலங்கையிலுமுள்ள தமிழ் ஊடகங்களின் ஒரு பகுதி விக்னேஸ்வரனின் தோற்றத்தை உள்ளதை விட பலமடங்கு ஊதிப் பெருப்பித்து காட்டி வருகின்றன.

இலங்கை தமிழரசுக் கட்சி விக்னேஸ்வரனுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க முயற்சிக்குமானால், முதலமைச்சர் ரி.என்.ஏயை உடைத்துக்கொண்டு வெளியேறி தமிழர் விடுதலைக் கூட்டணியின் (ரியுஎல்எப்) ஆதரவுடன்; அவர்களது கட்சிச் சின்னமான சூரியனின் கீழ் புதியதொரு தமிழ் அரசியல் கட்டமைப்பை உருவாக்குவார் எனச் சந்தேகிக்கப்படுகிறது. ரியுஎல்எப் தலைவர் வீரசிங்கம் ஆனந்தசங்கரி தனது கட்சியையும் மற்றும் சின்னத்தையும் விக்னேஸ்வரனை பொறுப்பேற்றுக் கொள்ளும்படி பகிரங்க அழைப்பு விடுத்திருப்பதை நினைவில் கொள்ள வேண்டும். அதிக எண்ணிக்கையிலான தமிழர்கள் விக்னேஸ்வரனை பின்துணைப்பதாக ஊடகங்களின் ஊடாகச் சித்தரிக்கப் பட்டுள்ளது. இது பாராளுமன்றத் தேர்தல்களின்போது தமிழ் ஊடகங்கள் செய்ததுக்குச் சமமானது. தமிழ் தேசிய மக்கள் முன்னணி பறித்த பள்ளத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வீழ்ந்து நொறுங்கியுள்ளது என்பது போன்ற ஒரு பிரமையை ஊடகங்கள் தோற்றவித்திருந்தன. விக்னேஸ்வரனின் மறைமுக ஆதரவுடன் போட்டியிட்ட தமிழ் தேசிய மக்கள் முன்னணி வடக்கு மற்றும் கிழக்கிலுள்ள அனைத்து மாவட்டங்களிலும் தீர்க்கமான படு தோல்வியைச் சந்தித்தது.

அதற்கு மேலும் ஒரு பிளவு ஏற்பட்டால் ரி.என்.ஏயிலுள்ள பல அங்கத்தவர்கள் விக்னேஸ்வரனின் பக்கம் செல்வார்கள் என்று எண்ணி இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைமை எச்சரிக்கை அடைந்துள்ளது. விக்னேஸ்வரன் சார்பான திட்டங்கள் ஒருபுறம் இருந்த போதிலும் ஊடகங்களின் ஒரு பகுதியினர் மட்டுமே கட்சியில் தவிர்க்க முடியாதபடி ஒரு பிளவு ஏற்படுமானால் சில ரி.என்.ஏ அங்கத்தவர்கள் முன்னாள் நீதியரசரின் பின்னால் செல்வதை தெரிவு செய்வார்கள் என சித்தரிப்பதாக பலரும் உணர்கிறார்கள். பெருப்பிக்கப் பட்டிருக்கும் ஊடக மாயை இருந்தபோதிலும் பெரும்பான்மையான தமிழ் மக்கள் விக்னேஸ்வரனின் தீவிரவாத கொள்கைகளின் பின்னே தங்கள் பங்கைச் செலுத்த மாட்டார்கள் என்றும் பரவலாக நம்பப் படுகிறது.

ஓகஸ்ட் 17 ந்திகதிய பாராளுமன்றத் தேர்தலில் விக்னேஸ்வரன் இரகசியமாக ஆதரவளித்தபோதும் தீவிரவாத கொள்கையுடைய கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பெரும் தோல்வியை சந்தித்தது இந்த எண்ணத்துக்கு அதிக நம்பிக்கையை அளிக்கிறது. கட்சியும் மற்றும் மக்களும் விக்னேஸ்வரன் வேண்டும் என்று விரும்பினால் நான் பதவி விலகத் தயார் என்று ரி.என்.ஏ தலைவர் சம்பந்தனின் மட்டக்களப்பு அறிவிப்பும் இந்த நம்பிக்கைக்கான தெளிவான சாட்சியாகும்.

எனினும் மூத்த தலைவர்களான சம்பந்தன் மற்றும் சேனாதிராஜா ஆகியோர் ஒப்பீட்டளவில் சட்டி பானைக் கடையில் யானை ஓடியது போல சிந்தனையின்றி செயற்படும் விக்னேஸ்வரனைக் காட்டிலும் அதிகம் பொறுப்பைக் கொண்டிருக்கிறார்கள். விக்னேஸ்வரனுடனான அரசியல் மோதலின் இறுதி விளைவை பற்றி அதிக நம்பிக்கை கொண்டிருந்தாலும் ரி.என்.ஏ மற்றும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர்கள் இந்தக் கட்டத்தில் அரசியல் பிளவு ஒரு கட்சி என்கிற வகையில் ரி.என்.ஏக்கும் மற்றும் மக்கள் என்கிற வகையில் தமிழுர்களின் நீண்டகால நலன்களுக்கும் குந்தகம் விளைவிக்கும் என்பதை நடைமுறையில் உணர்ந்தவர்களாக உள்ளார்கள். இந்த மதிப்பீடு இந்தியாவாலும் பகிரப்பட்டுள்ளது, அதனால்தான் இந்தியத் தூதுவர் வைகே.சின்கா ஒற்றுமையை பற்றி யாழ்ப்பாணத்தில் வைத்து விக்னேஸ்வரனிடம் வலியுறுத்தினார். வரப்போகும் வாரங்கள் மற்றும் மாதங்களில் விக்னேஸ்வரன் மற்றும் ரி.என்.ஏஃ இலங்கைத் தமிழரசுக் கட்சி தலைமை இடையே தமிழர் வகையான ஒரு பனிப்போர் இடம்பெறக்கூடிய சாத்தியம் உள்ளது. இந்த அரசியல் போராட்டம்;, வரப்போகும் உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களில் உறுதியான மோதல்களாக மாறப்போவதற்கான சாத்தியம் தெளிவாகத் தெரிகிறது.

ரி.என்.ஏ தலைவர் இராஜவரோதயம் சம்பந்தனால் ஊக்குவிக்கப்பட்டது

இந்த சூழ்நிலையிலுள்ள வஞ்சனை என்னவென்றால் பொதுவாக ஸ்ரீலங்கா தமிழர்கள் முகங்கொடுக்கும் அரசியல் பிரச்சினைகளுக்கும் மற்றும் தமிழ் தேசியக்கூட்டமைப்புக்கும் பொருத்தமான ஒரு சஞ்சீவியாக இருப்பார் என்று ஒரு காலத்தில் விக்னேஸ்வரனை ஊக்குவித்தவர் ரி.என்.ஏ தலைவர் இராஜவரோதயம் சம்பந்தன்தான். ஒரு பெரிய பயன்பாடுள்ள சொத்தாக இருப்பார் என சம்பந்தன் கற்பனை செய்ததுக்கு மாறாக இந்த முன்னாள் உச்ச நீதிமன்ற நீதியரசர் பெரிய விகிதாசாரத்தில் பெரும் கடன்சுமையை ஏற்படுத்துபவராக மாறிவிட்டார். விக்னேஸ்வரனிடம் எதிர்பார்க்கப்பட்டது ஒரு புறம் வட மாகாணசபையை நிருவகிப்பவராகவும் மற்றும் மறுபுறத்தில் சம்பந்தனுக்கு ஒரு திறமையான உதவியாளனாக இருந்து ரி.என்.ஏயினை பலப்படுத்துவார் என்று. மாறாக நடந்தது என்னவென்றால் விக்னேஸ்வரன் ஒருபுறம் வட மாகாணசபையை கிட்டத்தட்ட நடத்த முடியாதபடி குழப்பமும், பெரும் செலவும் ஏற்படுத்தும் வெள்ளை யானையாக மாற்றியதுடன் மறுபுறம் ரி.என்.ஏயின் ஐக்கியத்துக்கும் மற்றும் சம்பந்தனின் தலைமைக்கும் குழிபறிக்கும் வகையில் அச்சுறுத்தல் உண்டாக்கி; அழிவு ஏற்படுத்தும் ஆயுதமாக தன்னை மாற்றியதும் மட்டுமே.

இந்தப் பரிதாபகரமான நிலமைக்கு பல விளக்கங்களும் மற்றும் நியாயப்படுத்தல்களும் ‘விக்னேஸ்வரனிஸ்தாக்களால்’ காட்சிப் படுத்தப்பட்டு வருகிறது. பேச்சளவில் அழகாக இருந்தாலும் உண்மையில் நேர்மையற்றதான மோதலுக்கும் மற்றும் சமரச அணுகலுக்கும்; இடையேயான இந்த உரசலின் வீச்சத்தில் சமரச ஒருமைப்பாட்டை விரும்பும் ஒரு நபர் என்கிற வகையில்; தமிழ் தேசத்தின் நலன்களைப் பாதிக்கும் விடயத்தில் விக்னேஸ்வரனின் நியாயமற்ற இயலாமை கோட்பாடு தெளிவாகிறது. எனினும் இந்த விடயத்தில் உள்ள மையக்கருத்து சி.வி விக்னேஸ்வரன் தற்போது உலகளாவிய தமிழ் புலம் பெயர்ந்தவர்களில் உள்ள தீவிரவாத பிரிவினரின் கைப்பாவையாக ஆட்டிவிக்கப் படுகிறார் எனப் பலரும் உணர்கிறார்கள். அந்த பொம்மலாட்ட கயிறுகளை பிடித்திருப்பவர்கள், தமிழீழ விடுதலைப் புலிகளின்(எல்.ரீ.ரீ.ஈ) சித்தாந்தத்திலும் மற்றும் இலக்குகளிலும் நம்பிக்கை கொண்ட புலம்பெயர் சக்திகள் எனச் சந்தேகிக்கப் படுகிறது. இனப்படுகொலை குற்றத்தை நிரூபித்து வடக்கு மாகாணசபையை சீர் குலைப்பது எல்.ரீ.ரீ.ஈ மற்றும் எல்.ரீ.ரீ.ஈ சார்பு புலம்பெயர் சக்திகளின் இரட்டை இலக்குகளாகும். சமீப காலங்களில் விக்னேஸ்வரன் இனப்படுகொலை என்கிற கூக்குரலை எழுப்பி மாகாணசபைக்கு குழிபறித்து வருகிறார்.

விக்னேஸ்வரன் ஒரு பூனைப் பொம்மையை போல இருந்து வருகிறார் என்கிற இந்த ஊகம் சரியானால், பின்னர் ஏன் மற்றும் எப்படி இந்த திருப்பம் ஏற்பட்டது என்கிற கேள்வி எழுகிறது. யார் அல்லது எது விக்னேஸ்வரனிடம் இந்த மாற்றத்தை கொண்டுவந்தது அல்லது மாற்றியது? எப்படி மற்றும் ஏன் இந்த திடீர் திருப்பம் இடம்பெற்றது? தமிழ் அரசியலில் விக்னேஸ்வரன் நுழைந்தது, மற்றும் 2013 வட மாகாணசபை தேர்தல்களில் அவர் தீயினால் ஞ}னஸ்நானம் பெற்றது பற்றிய ஒரு சுருக்கமான சுற்றுலாதான் இந்த அரசியல் உருமாற்றத்துக்கான அடிக்கல்லை 2013 மாகாணசபை தேர்தல் பிரச்சாரங்களின்போது அவர் நாட்டுவதற்கு அடையாளமாக அமைந்ததாகத் தெரிகிறது. இந்தப் பிரச்சினைகள் மற்றும் அது தொடர்பான மேலதிக விபரங்கள் என்பன எதிர்கால கட்டுரைகளில் ஆராயப்படும்.

ஆங்கிலத்தில் டி.பி.எஸ்.ஜெயராஜ் இனால் எழுதப்பட்ட “How Will The TNA Resolve The Problem Posed By Northern Chief Minister Wigneswaran?”கட்டுரையியின் தமிழாக்கம்: தேனீ மொழிபெயர்ப்பு: எஸ்.குமார் ~ நன்றி: தேனீ

Share on FacebookTweet about this on TwitterShare on LinkedInShare on Google+Print this page