சம்பந்தனால் முதலமைச்சராக ஆக்கப்பட்ட விக்னேஸ்வரன் தனியாகச் செல்ல முயற்சிப்பதால் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள் நெருக்கடி தோன்றியுள்ளது

டி.பி.எஸ்.ஜெயராஜ்

“புரூட்டசைப் பொறுத்தவரை அவன் சீசரின் பிரியமான தேவதூதன் என்பது உங்களுக்குத் தெரியும். தேவர்களே, சீசர் அவனை எவ்வளவு பிரியமாக நேசித்தார்,என்பதை நீங்களே மதிப்பிடுங்கள்! இதுதான் எல்லாவற்றையும் விட கொடூரத்தனமான வெட்டு, உன்னதமான சீசர் அவன் குத்துவதை கண்டபோது, அது நன்றிகெட்ட தனமானதாகவும் துரோகிகளின் கரங்களைவிட மிகவும் வலிமையானதாகவும் இருந்தது, அது அவரை பெருமளவு தோற்கடித்துவிட்டது: அப்போது அவரது பலமான இதயம் வெடித்துச் சிதறியது” – வில்லியம் ஷேக்ஸ்பியர் – “ஜூலியஸ் சீசர்” (காட்சி 2 நடிப்பு 3)

RS CVW TNA

மிழ் தேசியக் கூட்டமைப்புக்குள்(ரி.என்.ஏ) நிலவிய அரசியல் பதட்டங்கள் கடந்தவாரம் ஒரு வியத்தகு உருமாற்றத்தைப் பெற்றிருக்கிறது. ஒரு எதிர்பாராத திருப்பமாக எதிர்க்கட்சித் தலைவரும் மற்றும் ரி.என்.ஏ தலைவருமான, இராஜவரோதயம் சம்பந்தன், மட்டக்களப்பில் அறிவித்தது, கட்சி மற்றும் மக்கள் விரும்பினால் வட மாகாண முதலமைச்சர் கனகசபாபதி விஸ்வலிங்கம் விக்னேஸ்வரனுக்கு சாதகமான முறையில் பதவி விலகத் தயார் என்று. அப்படிச் செய்ததின் மூலம், திருகோணமலையை சேர்ந்த மூத்த அனுபவம் மிக்க தமிழ் அரசியல்வாதியான சம்பந்தன் ரி.என்.ஏக்குள் கொதித்தெழும் உட்கட்சி நெருக்கடியை வெளிக் கொண்டுவந்தது மட்டுமன்றி, ஆனால் சம்பந்தனின் தலைமைக்கு எதிராக பல்வேறு சக்திகள் மூலமாக முன்கொண்டுவரப் பட்டிருக்கும் போட்டியாளரான விக்னேஸ்வரனுக்கு ஒரு மறைமுக சவாலையும் வெளிப்படுத்தியிருக்கிறார்.

ரி.என்.ஏயின் பிரதான அங்கமாக உள்ள இலங்கை தமிழ் அரசுக் கட்சியின்(ஐ.ரி.ஏ.கே) மட்டக்களப்பு அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டம் தொடர்பான விரிவான அறிக்கையை தமிழ் ஊடகங்களின் ஒரு பகுதியினர் கடந்தவாரம் வெளியிட்டிருந்தனர். ஸ்ரீலங்கா தமிழர்களின் பிரதான அரசியல் கட்டமைப்பான ரி.என்.ஏ யில் தற்போது இலங்கை தமிழ் அரசுக் கட்சி(ஐ.ரி.ஏ.கே), தமிழ் ஈழ விடுதலைக் கழகம்(ரெலோ), ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈ.பி.ஆர்.எல்.எப்), மற்றும் தமிழ் ஈழ மக்கள் விடுதலை அமைப்பு(புளொட்) என்பன அங்கம் வகிக்கினறன. முன்னர் தமிழ் கட்சிகளான தமிழர் விடுதலைக் கூட்டணி (ரி.யு.எல்.எப்) மற்றும் அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ்(ஏ.சி.ரி.சி) என்பனவும் கூட ரி.என்.ஏ யில் அங்கத்துவம் பெற்றிருந்தன. ரி.என்.ஏ தன்னை ஒரு அரசியல் கட்சியாக பதிவு செய்யவில்லை. அது தேர்தல்களில் ஐ.ரி.ஏ.கே க்கு ஒதுக்கப்பட்ட சின்னமான வீட்டுச் சின்னத்தின் கீழேயே போட்டியிட்டு வந்தது.

மட்டக்களப்பு ஐ.ரி.ஏ.கே அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின்போது அநேக கட்சி அங்கத்தவர்கள் கேள்விகளை எழுப்பியிருந்தார்கள். கிழக்கின் மூத்த அரசியல்வாதியும் முன்னாள் மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினருமான பொன்.செல்வராஜா சம்பந்தனிடம், வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் ரி.என்.ஏயின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோருக்கு இடையில் சமீபகாலமாக ஏற்பட்டுள்ள மோதல் தொடர்பாக கேட்டதாகச் சொல்லப்படுகிறது. சமீபகாலமாக இடம்பெற்றுவரும் விக்னேஸ்வரனின் சர்ச்சைக்குரிய நடவடிக்கைகள் மற்றும் ஸ்ரீலங்கா தமிழர்களின் தலைமைத்துவத்தில் இருந்து சம்பந்தனை அகற்றிவிட்டு விக்னேஸ்வரனை நியமிக்க முயலும் தீய நோக்குள்ள சதி முயற்சி பற்றியும் அங்கு விமர்சனங்கள் செய்யப்பட்டன. சம்பந்தனுக்குப் பதிலாக விக்னேஸ்வரனை ஸ்ரீலங்காத் தமிழர்களின் தலைவராக மாற்றீடு செய்ய முயலும் சதி முயற்சியையிட்டு ஐ.ரி.ஏ.கேயின் மட்டக்களப்பு அங்கத்தினர்கள் பெரிதும் கோபம் கொண்டுள்ளார்கள். பத்திரிகை அறிக்கைகள் மற்றும் இணையத்தளங்கள் தெரிவிப்பதின்படி அங்கு எழுப்பப்பட்ட கவலைகளுக்கு சம்பந்தன் ஒளிவு மறைவற்ற வகையில் வெளிப்படையாகப் பதிலளித்ததாகச் சொல்லப்படுகிறது.

விக்னேஸ்வரன் மற்றும் சுமந்திரன் இடையே ஒரு முரண்பாடு ஏற்பட்டுள்sumanthiran-1ளதை ஏற்றுக்கொண்ட ரி.என்.ஏ தலைவர், மேலும் தெரிவிக்கையில் ஜனநாயக அரசியற் கட்சிகளில் அத்தகைய உட்கட்சி மோதல்கள் எப்போதும் நிலவும் என்றார். கடந்த பாராளுமன்ற தோதல்களின்போது முதலமைச்சர் தனது முழுதான ஆதரவை கட்சிக்கு வழங்காததினாலேயே சுமந்திரன் மற்றும் விக்னேஸ்வரன் இடையே நிலவும் முரண்பாடு தோன்றியது என சம்பந்தன் மேலும் தெரிவித்தார். விக்னேஸ்வரன் வட மாகாணசபை தேர்தல்களில் ரி.என்.ஏ சார்பாக ஐ.ரி.ஏ.கேயின் சின்னத்திலேயே போட்டியிட்டார். அப்படியுள்ளபோது தேர்தல்களின்போது ரி.என்.ஏக்கு ஆதரவு வழங்க வேண்டியது விக்னேஸ்வரனின் கடமை, ஆனால் அவர் அப்படிச் செய்யவில்லை என சம்பந்தன் தெரிவித்தார்.

மௌனம் மற்றும் ஊமை

விக்னேஸ்வரன் ரி.என்.ஏக்கு ஆதரவளிக்காதது மட்டுமில்லை ஆனால் தான் மௌனத்தை கடைப்பிடிக்கப் போவதாகவும் மற்றும் தேர்தல்களின்போது ஊமையாக இருக்கப் போவதாகவும் மேலும் சொன்னார். இருந்தும் முதலமைச்சர் பின்னர் வெளியிட்ட அறிக்கைகள் சில மற்றொரு அரசியல் கட்சிக்கு ஆதரவளிப்பதைப் போல தோற்றமளித்தன. இதுதான் தற்போது நடைபெற்று வரும் மோதல்களுக்கான அடிப்படை என சம்பந்தன் விளக்கினார்.

சம்பந்தன் தொடர்ந்து சுமந்திரனை கடிந்து கொள்கையில் – “இந்த பிரச்சினையில் விக்னேஸ்வரனுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று சுமந்திரன் தமிழரசுக் கட்சி கூட்டம் ஒன்றில் பிரேரணை ஒன்றை முன்வைத்தார். நாங்கள் விக்னேஸ்வரனுடன் கலந்துரையாடி இந்த விடயத்துக்கு தீர்வு காண்போம் என்று நான் அவருக்குச் சொன்னேன். எனினும் சுமந்திரன் அவுஸ்திரேலியாவுக்குச் சென்றவேளையில் இந்த விடயம் பற்றி ஊடகங்கள் அவரிடம் நேர்காணல்கள் நடத்தின. அதற்குப் பதிலாக சுமந்திரன் தனது நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினார். இது தேவையற்றது. சுமந்திரன் அந்த வகையில் பதிலளித்திருக்க வேண்டியதில்லை. கட்சி இந்தப் பிரச்சினையை தீர்ப்பதாக ஏற்றுக்கொண்ட பிறகு அந்தப் பிரச்சினை பற்றி ஊடகங்களில் குறிப்பிடுவதற்கான அவசியம் சுமந்திரனுக்கு இருக்கவில்லை”

தேவையற்றவிதத்தில் ஊடகங்களிடம் பேசியதற்காக சுமந்திரனை விமர்சித்த பின்னர், தமிழர்கள் தலைமை பற்றிய விடயத்தை நோக்கிச் சம்பந்தன் சென்றார். “விக்னேஸ்வரன் கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொள்ள முடியும். அவர் அதற்கு ஆசைப்பட்டால் அவருக்குள்ள உரிமைகளைப் பயன்படுத்தி அவரால் அதற்கு முயற்சி செய்யலாம். எனினும் இறுதியாக அதை முடிவு செய்யவேண்டியது கட்சியும் மற்றும் மக்களுமே. இந்தப் பிரச்சினை தொடர்பாக இப்போது கொதிப்படைவதில் அர்த்தமில்லை. மக்களால் குப்பைக் கூடைக்குள் தள்ளப்பட்ட ஆனந்தசங்கரி மற்றும் கஜேந்திரக்குமார் பொன்னம்பலம் ஆகியோர் இந்த விடயத்தில் விக்னேஸ்வரனுக்கு ஆதரவளிக்கிறார்கள். எங்களுக்கு இதில் ஆட்சேபணையில்லை” என்றார் அவர்.

தொடர்ந்து பேசுகையில், விக்னேஸ்வரன் அரசியலுக்குள் நுழைந்து முதலமைச்சராக மாறிய சூழ்நிலையை சம்பந்தன் நினைவு கூர்ந்தார். “அவரை முதலமைச்சராக்கியது நான்தான். அவரை முதலமைச்சராகும்படி முதலில் கேட்டது நான். ஆரம்ப கலந்துரையாடல்களில் கட்சிக்குள் விக்னேஸ்வரனுக்கு ஆதரவு இருக்கவில்லை. ஆரம்பத்தில் மாவை சேனாதிராஜா மௌனமாக இருந்தார். அண்ணன் (என்று என்னைக் குறிப்பிட்டு) கொண்டுவரும் தீர்மானத்துக்கு ஒப்புதல் கிடைத்தால் கட்சியின் முடிவுக்கு தான் கட்டுப்படுவதாக இறுதியில் மாவை சேனாதிராஜா தெரிவித்தார். இதற்கு சேனாதிராஜாவின் பெருந்தன்மை காரணமாக இருந்தது. அதன்பின் நாங்கள் அனைவரும் கலந்துபேசி விக்னேஸ்வரனை நியமனம் செய்வது என்று ஒருமனதாகத் தீர்மானித்தோம்.

எப்படி விக்னேஸ்வரன் தனது முயற்சி காரணமாக தெரிவு செய்யப்பட்டு, பதவி வழங்கப்பட்டு, வேட்பாளராகப் பரிந்துரைக்கப்பட்டு பின்னர் முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பதை விளக்கிய சம்பந்தன் இப்படி உறுதியாக வலியுறுத்தினார் – “இப்போது அவர் (விக்னேஸ்வரன்) தனது சொந்தத் தனி வழியில் செல்கிறார். நான் அதைத் தடுக்க முயற்சிக்க மாட்டேன். அதை மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும். நான் இந்தப் பதவியில் தொடர்ந்து இருக்கவேண்டுமா என்பதை மக்களும் எனது கட்சியுமதான்; முடிவு செய்ய வேண்டும். மக்களும் மற்றும் கட்சியும் ‘ஐயா நீங்கள் இப்போது போகலாம். விக்னேஸ்வரனை உங்களுக்காக நாங்கள் மாற்றீடு செய்யப் போகிறோம்’ என்று சொன்னால், அந்த முடிவை நான் உடனே ஏற்றுக்கொண்டு தலைமைப் பொறுப்பிலிருந்து உடனடியாக விலகிவிடுவேன்”.

குண்டுவீச்சு போன்ற சம்பந்தனின் அதிரடி அறிவிப்பு

ரி.என்.ஏ மற்றும் தமிழ் மக்கள் விரும்பினால், விக்னேஸ்வரனுக்கு சாதகமான முறையில் ரி.என்.ஏ தலைமைப் பொறுப்பிலிருந்து விலகுவதற்கு தனக்கு சம்மதம் என்ற சம்பந்தனின் குண்டுத் தாக்குதல் போன்ற அதிரடி அறிவிப்பு அங்கு சமூகமளித்திருந்த கட்சி விசுவாசிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. தலைவர் என்கிற பொறுப்பிலிருந்து சம்பந்தன் கட்டாயமாக ஒருபோதும் விலகக் கூடாது என்கிற மேலாதிக்கமான மனநிலை மற்றும் அபரிமிதமான தாக்கம் அங்கு நிலவியது. எனினும் அங்கு கூடியிருந்தவர்களில் பலரும் இராஜவரோதயம் சம்பந்தன் அரசியல் ரீதியாகவும் மற்றும் தனிப்பட்ட ரீதியிலும் கனகசபாபதி விஸ்வலிங்கம் விக்னேஸ்வரனால் எவ்வளவு தூரம் காயம் பட்டிருக்கிறார் என்பதை உணர்ந்து கொண்டார்கள் அத்துடன் ரி.என்.ஏ தலைவரின் உணர்வுகளை அவர்களும் பகிர்ந்து கொண்டார்கள்.

இலங்கைத் தமிழரசுக் கட்சியில் தீவிர பற்றுக்கொண்ட பல ஆதரவாளர்களுக்கு முன்னாள் உச்ச நீதிமன்ற நீதியரசரின் நடத்தை ரி.என்.ஏ மற்றும் எதிர்க்கட்சி தலைவர் ஆகியோரை காட்டிக்கொடுத்ததுக்கு சமமானது என்றே தோன்றியது. ஷேக்ஸ்பியரின் ஜூலியஸ் சீசரில், சீசர் மீதான புரூட்டசின் நன்றிகெட்ட தனமான வெளிப்படுத்தலை பற்றி மார்க்கஸ் அன்ரோனியஸ் குறிப்பிட்ட “எல்லாவற்றிலும் மேலான கொடூரத்தனம்” என்பதைப் போல.

அவரை முதலமைச்சர் பதவிக்கு உயர்த்திய கட்சியின் நலன்களுக்கு எதிராக வேலை செய்ததாகச் சொல்லப்பட்டதுக்கு அப்பால், தமிழர்களின் தலைமைக்கு மாற்றீடு தேவை என்று சொல்லியதன் மூலம் ரி.என்.ஏ அணியில் உள்ளவர்களிடம் விக்னேஸ்வரன் ஒற்றுமையின்மையையும் உருவாக்கியுள்ளார். சம்பந்தனை தனியாக குறிப்பிடாவிட்டாலும் கூட, ரி.என்.ஏ தலைவர் உயிரோடிருக்கும்போது ஒரு மாற்றுத் தலைமையைப் பற்றிப் பேசுவது சம்பந்தனின் தலைமை பற்றி மறைமுகமாக குற்றம் சாட்டுகிறார் என்பது தெட்டத் தெளிவாக விளங்குகிறது. ரி.என்.ஏக்கு வெளியே உள்ள சில தமிழ் அரசியல்வாதிகள் விக்னேஸ்வரனை தமிழர்களின் தலைவனாக ஏற்றுக்கொள்ள தாங்கள் தயாராக உள்ளதாக ஏற்கனவே வெளிப்படையாக சுட்டிக்காட்டியும் உள்ளார்கள்.

தவிரவும் யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனை இலக்கு வைத்து மேற்கொள்ளப்படும் வக்கிரமான தாக்குதல்கள் கூட சம்பந்தனுக்கு எதிரான பிரச்சாரத்தின் ஒரு பகுதியே ஆகும். சுமந்திரன் சம்பந்தனின் மிகவும் விசுவாசமுள்ள துணையாக கருதப்படுவதால், அவருக்கு எதிரான தாக்குதல்கள் சம்பந்தனின் தலைமைக்கு எதிரான தாக்குதல்களுக்கு சமமாகும்.

அநேகமான தமிழர்களின் கவலைக்குரிய மற்றொரு காரணம் வட மாகாண முதலமைச்சர் என்கிற வகையில் சி.வி. விக்னேஸ்வரனின் சொதப்பலான செயலாற்றல் ஆகும். அவரிடமும் மற்றும் வடக்கு மாகாணசபையிடமும் அதிகம் எதிர்பார்க்கப் பட்டது. அவர் மற்றும் வட மாகாணசபை ஆகிய இரண்டுமே பெரிய ஏமாற்றமாகி விட்டன. இனப்படுகொலை என்று குற்றம்சாட்டப்படும் தீர்மானங்களைப் போன்ற சர்ச்சைக்குரிய தீர்மானங்களை நிறைவேற்றுவதற்கு அப்பால் வடமாகாணசபை வேறு எதையும் வழங்கத் தவறிவிட்டது. கொழும்பு அரசாங்கத்தால் ஒதுக்கப்பட்ட நிதிகூட முறையாகப் பயன்படுத்தப் படவில்லை. வட மாகாணசபையின் எதிர்க்கட்சி தலைவர் சின்னத்துரை தவராஜா ஒதுக்கப்பட்ட நிதி எவ்வாறு குறைவாகப் பயன்படுத்தப்பட்டது மற்றும் அதிகாரப் பகிர்வை உயரிய வினைத்திறனுடன் நடைமுறைப் படுத்துவதற்கு பொருத்தமான சட்டங்களை சபை உருவாக்கத் தவறியதையும் பற்றி பகிரங்கமாக வெளிப்படுத்தியுள்ளார்.

சர்வதேச சமூகம் வடக்கு மாகாணசபைமீது அளவுக்கு அதிகமான கரிசனையை காண்பிக்கிறது. நாட்டுக்கு வருகை தரும் வெளிநாட்டுப் பிரமுகர்கள் அதேபோல கொழும்பில் நிலை கொண்டுள்ள ராஜதந்திரிகள் வட மாகாண முதலமைச்சரைச் சந்திப்பதற்காக சமீப காலங்களில் யாழ்ப்பாணத்துக்கு அடிக்கடி பயணம் செய்துள்ளார்கள். அத்தகைய சந்திப்புக்களின்போது புனர்வாழ்வு மற்றும் அபிவிருத்திகளுக்காக பெரிய உதவிகளைக் கோருவதற்குப் பதிலாக விக்னேஸ்வரன் துயரங்களின் துதிபாடல்களை அவர்கள்மீது வழிந்தோடச் செய்கிறார். விக்னேஸ்வரனின் முறைப்பாடுகள் முன்பு மகிந்த ராஜபக்ஸ ஜனாதிபதியாகவும் மற்றும் ஜெனரல் சந்திரசிறி ஆளுனராகவும் இருந்தபோது ஓரளவுக்கு நம்பகமானவையாகத் தோன்றின. இப்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் ஆளுனர் எச்எம்ஜிஎஸ். பளிகக்கார ஆகியோர்களால் புதிய பகிர்ந்தளிப்பு உருவாகி உள்ளது. மாற்றம் பெற்றுள்ள இந்த புதிய சூழ்நிலைகளின் கீழிலும் அவரைச் சந்திக்க வரும் சிலரிடத்தில் விக்னேஸ்வரன் அரசாங்கத்துக்கு எதிரான தனது பழைய பல்லவியையே பாடியுள்ளார். இதில் சுட்டிக்காட்டத்தக்க ஒரு உதாரணம் ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்கத் தூதர் சமந்தா பவரின் சமீபத்தைய விஜயம்.

சமந்தா பவர் சி.வி. விக்னேஸ்வரனை யாழ்ப்பாணத்தில் சந்தித்தபோது வட மாகாண முதலமைச்சர் அரசாங்கத்துக்கு எதிரான வசைமாரியையே திரும்பத் திரும்ப மொழிந்திருந்தார். திருமதி பவர் புதிய அசாங்கம் உருவாக்கப் பட்டதின் பின் ஏற்பட்டுள்ள நிலமைகளைப் பற்றி அவரிடம் வினாவியபோது விக்னேஸ்வரன் எதுவும் மாறவில்லை மற்றும் முன்னேற்றம் ஏற்படவில்லை என்று கிளிப்பிள்ளை போல சொன்னதையே திரும்பச் சொன்னார். அதனை அமெரிக்கத் தூதர் கடுமையாக மறுத்தபோது, முதலமைச்சர் அதிர்ச்சி அடைந்தார். அப்போது சமந்தாபவர் ஸ்ரீலங்கா தமிழர்களுக்கு கவலை தரக்கூடிய பதினொரு தனித்துவமான பகுதிகளில் சிறிசேன – விக்கிரமசிங்க அரசாங்கம் உருவாக்கப் பட்டதின் பின்னர் நியாயமான அளவு முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதை மேலெழுந்தவாரியாக சுட்டிக்காட்டியுள்ளார். வாயடைத்துப்போய் உண்மையில் அத்தகைய முன்னேற்றங்கள் ஏற்பட்டிருப்பதை ஏற்றுக்கொள்வதை தவிர விக்னேஸ்வரனுக்கு வேறு தெரிவு இருக்கவில்லை. தனது நிலையை பாதுகாப்பதற்காக அப்போது முதலமைச்சர், போதியளவு முன்னேற்றங்கள் ஏற்படவில்லை அல்லது அவற்றின் வேகம் போதாது என்று சமாளிக்க முயன்றார். அப்போது சமந்தா பவர்‘போதியளவு முன்னேற்றம் ஏற்படவில்லை’ என்று சொல்வதற்கும் ‘முன்னேற்றமே ஏற்படவில்லை’ என்று சொல்வதற்கும் இடையே நிறைய வித்தியாசம் உள்ளது என்பதை முதலமைச்சருக்கு சுட்டிக்காட்டினார். எனினும் சமந்தா பவர் தற்போதைய அரசியல் சூழ்நிலைகளில் அவற்றின் வேகம் மெதுவாகவே உள்ளதை புரிந்துகொள்ள முடிகிறது என்பதை ஏற்றுக்கொண்டார்.

“யார் இவரை வட மாகாண முதலமைச்சர் ஆக்கியது?”

விக்னேஸ்வரனின் செயற்பாட்டால் ஏமாற்றமடைந்த ஒருவேளை அதிருப்தியடைந்த அமெரிக்க தூதுவர் பின்னர் எதிர்க்கட்சித் தலைவர் இராஜவரோதயம் சம்பந்தன் தலைமையில் கொழும்பில் அவரைச் சந்தித்த ரி.என்.ஏ தூதுக்குழவினரிடத்தில் முதலமைச்சர் பற்றிய தனது கருத்தைப் பரிமாறத் தவறவில்லை. விக்னேஸ்வரன் உடனான தனது கலந்துரையாடலைப் பற்றியும் மற்றும் முதலமைச்சருக்குத் தான் வலியுறுத்திய பதினொரு விடயங்கள் பற்றியும் விரிவாக விபரித்த சமந்தா பவர், அங்கு “யார் இவரை வட மாகாண முதலமைச்சர் ஆக்கியது?” என்கிற ஒரு கேள்வியையும் முன் வைத்தார் . அதற்கு ரி.என்.ஏ தலைவர் சம்பந்தன் “நான்தான் அவரை முதலமைச்சர் ஆக்கினேன்” எனப் பதிலளித்தார்.

விக்னேஸ்வரனை முதலமைச்சர் ஆக்கியதில் தனக்குள்ள பங்களிப்பை பற்றி இந்த நாட்களில் அசௌகரியமான உணர்வை சம்பந்தன் அனுபவிக்கிறார் என்பதை ஒருவேளை புரிந்து கொண்டதாலோ என்னவோ திருமதி பவர் அந்தப் பாதையில் தனது சம்பாஷணையை மேலும் தொடர முயற்சிக்கவில்லை. எனினும் தனது ட்விற்றரில் சமந்தா பவர் பதிவு செய்துள்ள இரண்டு கருத்துக்கள் சம்பந்தன் மற்றும் விக்னேஸ்வரன் பற்றிய அமெரிக்கத் தூதுவரின் மனநிலையை நன்கு எடுத்துக் காட்டுகின்றன. அதில் ஒன்று, “யாழ்ப்பாண முதலமைச்சர் விக்னேஸ்வரனிடம் வலியுறுத்தியது ஸ்ரீலங்காவின் விலைமதிப்பற்ற நேரத்தை நல்லிணக்கத்தை உறுதிப்படுத்த உதவி, ஸ்ரீலங்காவை மீள் கட்டுமானம் செய்க” என்பது. “எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தனின் தமிழர் உரிமைகளுக்கான உணர்வுபூர்வமான குரலின் விளைவாக தேசியத்தை கட்டியெழுப்பலாம் எனக்கு அதில் ஒருமித்த கருத்து உண்டு” என்பது மற்றையது.

விக்னேஸ்வரனை முதலமைச்சர் ஆக்கியதில் தனது பங்கினைப் பற்றி சம்பந்தன் சமந்தா பவரிடம் வெளிப்படுத்தியது, அதேபோல மட்டக்களப்பில் இலங்கை தமிழரசுக் கட்சி அங்கத்தவர்களிடத்தில் தான் எப்படி விக்னேஸ்வரனை முதலமைச்சர் ஆக்கினேன் என்பதைப் பற்றி அவர் வெளியிட்ட அறிவிப்பும் தற்போதைய நிலமையின்மீது அதிக வெளிச்சத்தைப் பாய்ச்சி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. ரி.என்.ஏ தலைவர் விக்னேஸ்வரனின் நடத்தையால் கொதிப்படைந்துள்ளார் என்பது வெளிப்படையாகத் தெரிகிறது. எனினும் அரசியலில் நன்றிகெட்ட செயல் என்பது பொதுவான ஒரு நிகழ்வு. அது பிரதேசத்துடன் சேர்ந்து செல்லும்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அதன் முதலமைச்சர் வேட்பாளராக விக்னேஸ்வரனை உறுதிப் படுத்துவதற்கும் அதன்பின் தொடர்ந்து வந்த தேர்தலில் அவரை வெற்றி பெறச் செய்து வட மாகாண முதலமைச்சராக ஆக்கியதற்கும் பின்னால் சம்பந்தனின் செயல் திறனுள்ள பங்களிப்பு இருந்ததை நன்கு புரிந்துகொண்ட ரி.என்.ஏ மற்றும் தமிழ் மக்கள் அதனை மிகப் பெரிய அளவில் பாராட்டி வரவேற்றார்கள். 2013 வட மாகாணசபை தேர்தல் வெற்றிக்குப் பிறகு நிலவிய பரவச நிலையின்போது விக்னேஸ்வரன் அதேபோல சம்பந்தன் ஆகிய இருவரையும் வெற்றிக் களிப்பில் மிதந்த ஆதரவாளர்கள் சொல்லாலும் செயலாலும் அவர்களுக்கு முடிசூட்டி மகிழ்ந்தார்கள். அந்த நேரத்தில் அந்த வெற்றியானது அவர்கள் இருவரதும் கூட்டான வெற்றி எனச் சரியாக உணரப்பட்டது

இந்தக் கட்டத்தில் அப்போது நடந்தவைகளையும் மற்றும் கொழும்பில் வாழ்ந்து வந்த சி.வி. விக்னேஸ்வரன் ரி.என்.ஏயின் வட மாகாண முதலமைச்சர் வேட்பாளர் பதவிக்காக எப்படி பரசூட்டில் வந்து இறங்கினார், என்பதைப்பற்றிய நினைவுகளை மீட்டிப் பார்ப்பதுடன் அதைப்பற்றி சுருக்கமாக ஆராய்ந்து பார்ப்பதும் ஏற்புடையதாக இருக்கும். அது மேலும் விக்னேஸ்வரனை முதலமைச்சர் வேட்பாளராக பலத்த உள்ளக எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் நியமிப்பதற்கு சம்பந்தன் செயலாற்றிய முன்மாதிரியான பங்களிப்பையும் மற்றும் முன்னாள் நீதியரசரின் தற்போதைய அரசியல் நடத்தை காரணமாக ஐ.ரி.ஏ.கே மற்றும் ரி.என்.ஏ என்பனவற்றின் அநேக அங்கத்தவர்கள் கடுமையான காட்டிக்கொடுப்பு நடவடிக்கையாக அதை உணர்வதையும் புரிந்து கொள்ள உதவியாக இருக்கும்.

விக்னேஸ்வரன் ஒரு சுயேச்சை வேட்பாளராக ரி.என்.ஏக்கு எதிராகப் போட்டியிட்டிருந்தால், அப்போது தேர்தல்களில் அவரது கதி கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துக்கு ஏற்பட்டதைவிட மிகவும் மோசமாக இருந்திருக்கும். மேலும் இதில் நினைவில் கொள்ளவேண்டியது என்னவென்றால் அந்தக் கட்டத்தில் சம்பந்தன் விக்னேஸ்வரனுக்கு சார்பாக சேனாதிராஜாவுடன் நேருக்கு நேரான ஆக்ரோஷமான மோதலில் ஈடுபட்டார் என்பதை. விக்னேஸ்வரன் தெரிவு செய்யப்படாவிட்டால் சம்பந்தன் கட்சியிலிருந்து வெளியேறவும்கூடத் தயாராக இருந்தார்.

ஒன்றுபட்ட தமிழர்களின் சுதந்திரமான பட்டியல்

இதற்காக விக்னேஸ்வரனை அணுகியபோது தீவிர அரசியலில் ஈடுபடுவதற்கு அவர் தயக்கம் காட்டினார். தேர்தலுக்கு முகம் கொடுப்பதைக் காட்டிலும் ஒரு ஆலோசகராக பின்னணியில் இருந்து செயல்படுவதையே அவர் விரும்பினார். மேலும் அவர் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள் இருக்கும் உள்ளக முரண்பாடுகளைப் பற்றி முற்றாக அறிந்திருந்ததால், இந்த அரசியல் வலையில் சிக்கிக் கொள்வதற்கு அவர் விரும்பவில்லை. அந்த நேரத்தில் ரி.என்.ஏயில் அங்கம் வகித்த ஐந்து கட்சிகளினதும் ஒன்றுபட்ட அழைப்பையே அவர் விரும்பினார். ஒரு அரசியல் கட்சியின் வேட்பாளராக இல்லாமல் ஒன்றுபட்ட தமிழர்களின் சுதந்திரமான பட்டியலுக்கு தான் தலைமை தாங்கும் எண்ணத்தையும் அவர் ஊக்குவித்தார். அப்படியான தெரிவுகள் நிராகரிக்கப் பட்டன, அதனால் விக்னேஸ்வரன் தனக்கு வந்த வாய்ப்பை கௌரவமாக மறுத்துவிட்டார்.

எனினும் சம்பந்தன், விக்னேஸ்வரன் விடயத்தை கைவிட்டு விடவில்லை. ரி.என்.ஏ தலைவர் தொடர்ந்தும் விக்னேஸ்வரன்தான் முதலமைச்சராக வரவேண்டும் என்பதற்காக அவரை இணங்க வைக்கும் முயற்சியில் தொடர்ந்தும் ஈடுபட்டு வந்தார். ரி.என்.ஏ பாராளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான எம்.ஏ சுமந்திரன் இந்த விடயத்தில் சம்பந்தனுக்கு பெருமதிப்பு மிக்க சேவையை ஆற்றிவந்தார். ஸ்ரீலங்காவிலும் மற்றும் வெளிநாட்டிலுமுள்ள முன்னணி தமிழர்கள் அநேகர் ‘ஆம்’ என்று சொல்லும்படி விக்னேஸ்வரனிடம் தொடர்ந்து வேண்டி வந்தார்கள். ரி.என்.ஏ இரட்டையர்களினதும் மற்றவர்களினதும் விடா முயற்சி காரணமாக விக்னேஸ்வரன் இறுதியில் சம்மதம் தெரிவித்தார். விக்னேஸ்வரன் விருப்பம் தெரிவித்துவிட்டார் என்கிற விடயம் சேனாதிராஜாவுக்கு அறிவிக்கப்பட்டது. அது சேனாதிராஜாவுக்கு மகிழ்ச்சியளிக்கவில்லை ஆனாலும் அவர் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.

விக்னேஸ்வரன் போட்டியிட சம்மதித்த பின்பு, இந்த போட்டியில் இருந்து சேனாதிராஜா கௌரவமாக வெளியேறுவதுடன் தனது வேட்பாளர் நியமனத்துக்கான பிரச்சாரங்களை மூட்டை கட்டி வைத்துவிடுவார் என சம்பந்தன் எதிர்பார்த்தார். எந்த வழியிலும் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளாமல் சேனாதிராஜா இந்த விடயத்தில் விவேகமான ஒரு மௌனத்தைக் கடைப்பிடித்தார். தனது கோரிக்கையை சம்பந்தனிடம் வலியுறுத்தவில்லை என்றாலும், அதேவேளை மாவை அதை தான் திரும்பப் பெறுவதாகவும் அறிவிக்கவில்லை.

இந்தப் பின்னணியில்தான் ரி.என்.ஏயின் ஒருங்கிணைப்புக் குழு, பம்பலப்பிட்டியில் உள்ள இலங்கை தமிழரசுக் கட்சி அலுவலகத்தில் முதலமைச்சர் வேட்பாளரை தெரிவு செய்வதற்காக 11 ஜூலை 2013ல் முதன் முதலாகக் கூடியது. அப்போது ரி.என்.ஏயில் அங்கம் வகித்த ஐந்து கட்சிகளினதும் பிரதிநிதிகள் பேச ஆரம்பித்தார்கள். கூட்டத்துக்கு தலைமை தாங்கிய சம்பந்தன் மற்றவர்களை முதலில் பேச விட்டார். ஐ.ரி.ஏ.கே அல்லாத கட்சிகளின் பாத்திரங்களின் சிக்கலான எதிர்மாறாக, பிரதானமாக ஈபிஆர்எல்எப், ரெலோ, புளொட் மற்றும் ரி.யு.எல்.எப் என்பன ஐ.ரி.ஏ.கே யின் மாவை சேனாதிராஜாவின் பெயரைப் முன்மொழிந்ததுடன் அவரது வேட்பாளர் நியமனத்துக்கு ஆதரவு தெரிவித்தன. இன்னும் மேலதிக திருப்பமாக சேனாதிராஜாவிற்கு சொந்தமான ஐ.ரி.ஏ.கே தங்கள் பொதுச் செயலாளருக்கு மாறாக விக்னேஸ்வரனின் பெயரை முன்மொழிந்தது. அதேவேளை ஐ.ரி.ஏ.கே பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வராஜா மற்றும் சுமந்திரன் ஆகியோர் விக்னேஸ்வரனுக்கு சாதகமாக பேசினார்கள். ரி.என்.ஏயில் உள்ள ஐ.ரி.ஏ.கே அல்லாத சகபாடிகள் சேனாதிராஜா சார்பாக அனைத்துப் பேச்சுக்களையும் நடத்துகையில் சேனாதிராஜா அனைவரையும் கவரும் வண்ணம் அமைதி காத்தார்.

வடக்கின் முதலமைச்சராக வருவதற்கான சவால்

கூட்டத்துக்கு தலைமை தாங்கிய சம்பந்தன், இறுதியாக தனது முறை வரும்வரை இடம்பெற்ற நடவடிக்கைகள் அனைத்தையும் பார்த்தபடி அமைதியாக இருந்தார். அதன்பின் சம்பந்தன் விக்னேஸ்வரனுக்கு ஆதரவாக திறம்பட உரையாற்றினார். வெளிப்படையாக சேனாதிராஜாவை விமர்சிப்பதற்குப் பதிலாக சம்பந்தன் விக்னேஸ்வரனின் தகுதிகளை எடுத்துக்கூறுவதை தெரிவு செய்தார் மற்றும் இந்த நெருக்கடியான கட்டத்தில் முன்னாள் நீதியரசர் வடக்கின் முதலமைச்சர் என்கிற சவாலை சந்திப்பதற்கு எப்படி பொருத்தமானவராக இருப்பார் என்பதை நிரூபிக்கவும் செய்தார். சம்பந்தன் சிறிதும் குழப்பமற்ற வகையில் மேலும் தெரிவித்தது, விக்னேஸ்வரன், தான் வடக்கின் முதலமைச்சராக வருவதற்கு விரும்பவில்லை. மற்றும் நான்தான்(சம்பந்தன்) வடக்கு முதலமைச்சராக விக்னேஸ்வரன் வரவேண்டும் என்று விரும்பினேன் என்று. சம்பந்தன் தனது பேச்சை முடித்ததும் ஜூலை 11 ந்திகதிய கூட்டம் முடிவு எதுவும் மேற்கொள்ளாமல் நிறைவடைந்தது. அதன்பின் இந்த விடயத்தை இறுதி செய்வதற்காக மறுநாள் மீண்டும் கூடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

முன்னைய நிலைப்பாட்டில் எந்தவித மாற்றங்களும் இன்றி இரண்டாவது நாளும் சூடான விவாதங்கள் தொடர்ந்தன. ஒரு கட்டத்தில் ஐ.ரி.ஏ.கே யின் சுமந்திரன் சேனாதிராஜாவிடம் நேரடியாக முறையிட்டு, புதிய முதலமைச்சர் எதிர்கொள்ளவேண்டியுள்ள பிரச்சினைகள் பற்றி மூத்த பாராளுமன்ற உறுப்பினரிடம் மதிப்பீடு செய்தார். தற்போதைய சூழ்நிலையில் அத்தகைய சவால்களை எதிர்கொள்வதற்கு சேனாதிராஜாவை விட விக்னேஸ்வரனதான்; சிறப்பாகப் பொருநதுவார் என சமந்திரன் விபரமாக எடுத்துரைத்தார்.

பம்பலப்பிட்டியவில் உள்ள ரி.என்.ஏ அலுவலகத்தில் நடைபெற்ற விவாதங்கள் ஒரு போர்க்களத்தின் தெளிவான எல்லைகளை வரையறை செய்தது. ஈபிஆர்எல்எப், ரெலோ, ரியுஎல்எப், மற்றும் புளொட் என்பன சேனாதிராஜாவின் பெயருக்குத் துணையாக ஒரு பக்கமாக அணிவகுத்து நின்றன. அதேவேளை தனது ஐ.ரி.ஏ.கே சகபாடிகள் நீதியரசர் விக்னேஸ்வரனுக்கு ஆதரவு தெரிவிக்கையில் சேனாதிராஜா தொடர்ந்து அமைதியாகவே இருந்தார். விக்னேஸ்வரனுக்கு சாதகமாக சம்பந்தன் மற்றும் சுமந்திரன் ஆகியோர் புத்திசாலித்தனமான சக்திவாய்ந்த விவாதங்களை நடத்தினாலும் சேனாதிராஜாவின் ஆதரவாளர்கள் அசைந்து கொடுப்பதாக இல்லை. தகுதியை பொருட்படுத்தாமல் முதலமைச்சராக சேனாதிராஜாதான் தெரிவாகவேண்டும் என்று அவர்கள் பிடிவாதமாக இருந்தார்கள்.

சேனாதிராஜாவின் பரப்புரையாளர்கள் நன்கு அமைக்கப்பட்ட திட்டத்தின்படியே வேலை செய்கிறார்கள் என்பது வெளிப்படையாகவே அப்பட்டமாகத் தெரிந்தது. தங்கள் முன்னால் உள்ள பணிக்கு சாத்தியமான சிறந்த வேட்பாளரை தெரிவு செய்வதற்குத் தயாராக திறந்த மனதுடன் அவாகள் இந்தக் கலந்தரையாடலுக்கு வரவில்லை. அவரது பொருத்தத்தையோ அல்லது வேறு எதையோ பொருட்படுத்தாமல் சேனாதிராஜாவை நிலை நிறுத்துவதில் அவாகள் உறுதியாக நின்றார்கள். மாவைக்கு ஆதரவு தெரிவித்த அதேவேளை அவர்கள் எந்த வகையிலும் விக்னேஸ்வரனை விமர்சனம் செய்யவில்லை. அவர்கள் முன்னாள் நீதியரசரரைப் பற்றி மதிப்பாகப் பேசியதுடன் மற்றும் நீதிமன்றில் அவரது சேவையின் வரலாற்றினையும் பாராட்டினார்கள்.

உள் ஆள் சேனாதிராஜா – வெளியாள் விக்னேஸ்வரன்

எப்படியாயினும் அவர்களின் விவாதத்தின் சாரம், விக்னேஸ்வரன் யாழ்ப்பாண வம்சாவழியாக இருந்தபோதிலும் அவர் இப்போது கொழும்பில் பிறந்து வளர்ந்து அங்கேயே வசிக்கும் ஒரு தமிழ் குடியிருப்பாளர். மறுபுறத்தில் சேனாதிராஜா யாழ்ப்பாண மண்ணின் மைந்தர். இன்னும் சொல்வதானால் விக்னேஸ்வரன் தமிழரசுக் கட்சியின் ஒரு அங்கத்தவர் கிடையாது மற்றும் அரசியலில் அவருக்கு முன் அனுபவம் கிடையாது. எனினும் சேனாதிராஜா தனது இளமைக் காலந்தொட்டே தமிழ் அரசியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். அவர் ரி.என்.ஏ யின் ஒரு ஸ்தாபக உறுப்பினர். இரத்தினச் சுருக்கமாகச் சொல்வதானால் அந்த விவாதம் இருவரின் தகுதிகளையும் எடைபோடாமல், உள்ஆளான சேனாதிராஜாவுக்கு வெளிஆளான விக்னேஸ்வரனைக் காட்டிலும் முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்பதாக இருந்தது. வெளியில் இருந்து பரசூட்டில் வந்திறங்கியவர்களைத் தடை செய்யவேண்டும்.

இந்தக் கருத்துக்கள் முன்னாள் ரெலோ பாராளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான என்.சிறிகாந்தாவினால் நன்கு வலியுறுத்தப்பட்டன. அதேவேளை வட மாகாண முதலமைச்சர் ரி.என்.ஏ யின் ஒரு அங்கத்தவராக இருக்க வேண்டுமே தவிர வெளியாளாக இருக்கக்கூடாது என வாதிட்ட சிறிகாந்தா நயமாக தன்னையும் ஒரு சாதகமான போட்டியாளராக உயர்த்திக் கொண்டார். சேனாதிராஜா ஒரு வழக்கறிஞராக இல்லை என்கிற காரணத்தால் பொருத்தமற்றவராக கருதப்பட்டால் அப்போது ரி.என்.ஏ வெளியாட்களை வேட்பாளராக பரிந்துரை செய்வதற்கு முன்பாக கூட்டணியில் உள்ள மற்றவர்கள் பக்கம் திரும்பிப் பார்க்கவேண்டும் என சிறிகாந்தா தெரிவித்தார். அப்போது அவர், நானும் ஆனந்தசங்கரி அவர்களும் கூட வழக்கறிஞர்கள்தானே என்று சுட்டிக்காட்டினார்.

சிறிகாந்தாவின் இந்த வாதம் சம்பந்தனிடமிருந்து ஒரு வலுவான பதிலை வெளிக்கொணர்ந்தது, ரி.என்.ஏயின் கொள்கை வெளியாட்கள் தேவையில்லை என்பதாக இருந்தால் புதிய திறமைகளின் உட்செலுத்துகை இன்றி சதா சர்வகாலமும் ரி.என்.ஏ தேக்க நிலையிலேயே இருக்க வேண்டுமா? என சம்பந்தன் எழுப்பிய கேள்வி எழுப்பினார். இதன் கருத்து கட்சி சாதாரண புதிய அங்கத்தவர்களைக்கூட பதிவு செய்ய முடியாது என்பதாக இருந்தது. சம்பந்தன் மேலும் சுட்டிக்காட்டியது, சிறிகாந்தா மற்றும் சேனாதிராஜா ஆகிய இருவரும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள் ஆனால் ஒருமுறை வேட்பாளர்களாக திருகோணமலைக்கும் மற்றும் அம்பாறை மாவட்டங்களுக்கு பரசூட்டில் வந்து குதித்தார்கள் என்று. தன்னுடைய தெரிவு விக்னேஸ்வரன் மாத்திரமே என்பதை சம்பந்தன் தெட்டத் தெளிவாக மேற்கொண்டிருந்தார். அவர் அதை வெளிப்படையாகத் தெரிவிக்காவிட்டாலும், தன்னுடைய தெரிவு ஏற்றுக்கொள்ளப் படாவிட்டால் மூத்த அரசியல்வாதியான அவர் ரி.என்.ஏ தலைமைப் பொறுப்பிலிருந்து விலகவும் தயாராக இருப்பது போலத் தெரிந்தது.

நேரம் செல்லச் செல்ல ஈபிஆர்எல்எப் சுரேஸ் பிரேமச்சந்திரன், ரெலோ செல்வம் அடைக்கலநாதன் மற்றும் புளொட் சித்தார்த்தன் ஆகியோர் மெதுவாக சம்பந்தனின் கருத்தின் பக்கமாக திசை திரும்பத் தொடங்கினார்கள். வேட்பாளராக விக்னேஸ்வரனின் சாத்தியத்தை பற்றி கவனம் செலுத்தவும் தேவைப்பட்டால் வட மாகாணசபையில் சேனாதிராஜா அவருடன் இணைந்து செயலாற்றுவது பற்றியும் விவாதம் திசை மாறியது.

அப்போதுதான் சேனாதிராஜா தனது மௌனத்தை களைந்து உரத்த குரலில் பேசத் தொடங்கினார். மாவிட்டபுரத்தைச் சேர்ந்த அந்த மனிதர், தான் வேட்பாளர் நியமனத்தைக் கோருவது ஏனென்றால் ஸ்ரீலங்காவிலும் மற்றும் வெளியிலும் உள்ள அநேக மக்கள் போட்டியிடும்படி தனக்கு அழுத்தம் கொடுத்ததினாலேயே தவிர, அதிகாரத்தை பெறவேண்டி பதவியை தேடும் ஆள் நானல்ல என்பதை நிரூபிக்கும் வகையில் பேசினார். “என்னுடன் பேசிய ஒருவர்கூட நான் போட்டியிடக் கூடாது என்று சொல்லவில்லை” என சேனாதிராஜா சொன்னார். அப்போது அவர் சொன்னது தான் விக்னேஸ்வரனை மிகவும் உயர்வாக மதிப்பதாகவும் எதிர்காலத்தில் நாங்கள் இருவரும் இணைந்து பணியாற்றும் சாத்தியம் உள்ளது என அவர் ஆலோசனை தெரிவித்தார். இரண்டாவது நாள் கூட்டம் சேனாதிராஜாவின் சாதகமான இந்தக் குறிப்புடன் நிறைவடைந்தது. இந்தக் கலந்துரையாடலை ஜூலை 13 சனிக்கிழமை பிற்பகலில் மீண்டும் தொடருவது என அங்கு தீர்மானிக்கப் பட்டது.

RS TNA CVW

பல்வேறு மட்டங்களில் அமைதியான கலந்துரையாடல்கள்

சேனாதிராஜாவின் முடிவுரையான கருத்துக்கள் திருப்திகரமான ஒரு சமரசத்தை செய்து முடிக்கலாம் என்கிற நம்பிக்கைக்கு இடம் ஏற்படுத்தியிருந்தது. கூட்டமைப்பின் பல்வேறு மட்டங்களில் உள்ள குழுக்கள் மற்றும் தனிநபர்கள் இடையே ஓரளவு உத்தியோகப் பற்றற்ற கலந்துரையாடல்கள் இடம்பெற ஆரம்பித்தன. ரி.என்.ஏ பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், தவணையின் முதல்பாதி காலத்துக்கு விக்னேஸ்வரன் முதலமைச்சராகவும் இரண்டாவது பகுதிக்கு சேனாதிராஜா முதலமைச்சராக இருப்பது என்கிற ஒரு திட்டத்தைப் பற்றி வேலை செய்ய ஆரம்பித்தார். எனினும் அத்தகைய ஒரு ஏற்பாடு வாக்களார் மத்தியில் முரணான உணர்வுகளை தோற்றுவிக்கும் மற்றும் அது எதிர்விளைவுகளையும் உண்டாக்கும் எனக்கூறி சம்பந்தன் அதற்கு உடன்படவில்லை. அத்தகைய ஒரு உடன்பாட்டை நடைமுறையில் செயல்படுத்துவது கடினமாக இருக்கும் எனத் தெரிவித்து சேனாதிராஜாவும் கூட இந்த யோசனைக்கு அதிக மதிப்பளிக்கவில்லை. சேனாதிராஜா ஒரு பாராளுமன்ற உறுப்பினராக இருப்பதால், மாகாண சபைக்குச் சென்று விக்னேஸ்வரனின் பதவிக்காலம் முடிவடையும் வரை பொறுமையாக காத்திருக்கும் யோசனை அவருக்கு சௌகரியமானதாக இருக்கவில்லை.

உத்தியோகப் பற்றற்ற கலந்துரையாடல்கள் தொடர்ந்தன. விக்னேஸ்வரனின் வேட்பாளர் நியமனத்தை ஊக்குவிப்பதில் சம்பந்தன் மற்றும் சுமந்திரன் ஆகியோர் தங்கள் முயற்சியை நீட்டித்துக் கொண்டிருந்தார்கள். சம்பந்தன் ஈபிஆர்எல்எப் இன் சுரேஸ் பிரேமச்சந்திரன் மற்றும் டெலோவின் அடைக்கலநாதன் ஆகியோருடன் பேசினார். விக்னேஸ்வரன் முதலமைச்சர் வேட்பாளராக வருவதற்கு கொள்கையளவில் இருவரும் சம்மதம் தெரிவித்தனர் ஆனால் அதற்கு சேனாதிராஜா சம்மதிக்கவேண்டும் எனவும் விரும்பினார்கள். இந்த விடயம் தொடர்பாக சுமந்திரன் சேனாதிராஜாவுடன் பேச்சுக்களை நடத்த ஆரம்பித்தார். திரைக்குப் பின்னால் இடம்பெற்ற கலந்தரையாடல்களின் விளைவாக ஒரு புதிய நகர்வுக்கான முயற்சி ஆரம்பித்தது.

சம்பந்தன், சேனாதிராஜா,சுமந்திரன்,சுரேஸ் பிரேமச்சந்திரன் மற்றும் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர், நீதியரசர் விக்னேஸ்வரன் வீட்டுக்கு விஜயம் செய்து வேட்புமனு தொடர்பாக பொருத்மான விடயங்கள் பற்றி கலந்துரையாடுவதற்காக ஒரு சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டது. விக்னேஸ்வரனுடனான சந்திப்பு நன்றாக நடைபெற்றதுடன் பல சந்தேகங்களும் தெளிவு படுத்தப் பட்டன. விக்னேஸ்வரன் தான் ரி.என்.ஏ வேட்பாளராக தமிழரசுக் கட்சியின் சின்னத்தில் போட்டியிடத் தயாராக இருப்பதாகவும் மற்றும் சுயாதீனமான வேட்பாளர் பட்டியலுக்குத் தலைமை தாங்கவில்லை என்பதை வெளிப்படையாகத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்தது, தனது ஒரே வேண்டுகோள் ரி.என்.ஏ யில் அங்கம் வகிக்கும் ஐந்து கட்சிகளும் தனது வேட்பாளர் நியமனத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று. அந்த சந்திப்பின் சிறப்பம்சமாக ஒரு சுமுகமான உறவு சேனாதிராஜா மற்றும் விக்னேஸ்வரன் இடையே ஸ்தாபிக்கப்பட்டது.

மூன்றாவது சுற்றுப் பேச்சு வார்த்தைகளுக்காக திட்டமிடப்பட்டிருந்த ஜூலை 13 ந்திகதி மாலை, ஜூலை 15 திங்கள் காலைக்கு ஒத்தி வைக்கப்பட்டது. இந்த இடைப்பட்ட காலத்தில் மீண்டும் ஒருமுறை உத்தியோகப் பற்றற்ற கலந்துரையாடல்கள் பல்வேறு மட்டங்களில் நடந்தேறியது. திங்கள் காலையளவில் ஊசல் விக்னேஸ்வரன் பக்கம் ஆதரவாகச் சாய்ந்துள்ளது வெளிப்படையாகத் தெரிந்தது, ஆனால் ரி.என்.ஏ அங்கத்தவர்கள் இடையே அந்தச் சாய்வு பற்றி சேனாதிராஜாவிடம் தெரிவிப்பதில் ஒரு தயக்கம் இருந்தது. யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கூட தனது சகபாடிகளிடத்தில் விக்னேஸ்வரனை ரி.என்.ஏ விரும்பினால் தானும் அவரை ஏற்றுக்கொள்ளத் தயார் என்று சொல்ல ஆரம்பித்திருந்தார். ஒருவேளை கௌரவம் காரணமாகவோ என்னவோ சேனாதிராஜா தானாக முன்வந்து அதை வெளிப்படுத்த தயங்கினார்.

கூட்டம் ஆரம்பித்த போது,ஈபிஆர்எல்எப், ரெலோ, ரியுஎல்எப் மற்றும் புளொட் பிரதிநிதிகள் இந்தக் கட்டத்தில் மிகவும் பொருத்தமான வேட்பாளர் விக்னேஸ்வரன்தான் என அவருக்குச் சாதகமாகப் பேசினார்கள். இருந்தாலும் அவர்கள் சேனாதிராஜாவை போட்டியிலிருந்து விலகும்படி கேட்கவில்லை. பேசிய ஒவ்வொருவரும் விக்னேஸ்வரன்தான் மிகவும் பொருத்தமான வேட்பாளர் என்று புகழ்பாடி ஏற்கனவே தெரிவித்ததுக்கு மேலதிகமாக ஒரு குறிப்பையும் சேர்த்தார்கள். விக்னேஸ்வரன்தான் தெரிவாக இருக்கமுடியும் என்கிற குறிப்பு சேனாதிராஜாவை இணங்கிப் போகச் செய்தது.

சேனாதிராஜாவின் பெருந்தன்மையான பின்வாங்கல்

இந்த விவகாரங்கள் நிலையான நிச்சயமற்ற ஒரு சூழ்நிலையை தோற்றுவித்தது. இந்த மாயை போக்குவதற்காக சேனாதிராஜா தானே முறைப்படி பேசத் தொடங்கினார். தான் போட்டியிட விரும்பிய நோக்கத்தின் பின்னால் இருந்த காரணங்களை விளக்கும்போது, தான் அப்படிச் செய்தது மக்களின் வேண்டுகோள்களுக்காக மாத்திரமே என சேனாதிராஜா வலியுறுத்தினார். அப்போது அவர் தனக்காக ஆதரவு வழங்கியதற்காக தனது ரி.என்.ஏ சகபாடிகளுக்கு நன்றி தெரிவித்ததுடன் விக்னேஸ்வரனுக்கு வேண்டி தான் போட்டியிலிருந்து விலகுவதாக அறிவித்தார், ஏனென்றால் தான் கட்சியின் ஒற்றுமையையும் மற்றும் பலத்தையும் குழப்ப விரும்பவில்லை எனவும் அவர் தெரிவித்தார். மேலும் சேனாதிராஜா, விக்னேஸ்வரனைப் புகழந்ததோடு முன்னாள் நீதியரசரின் வேட்பாளர் நியமனத்தை தானும் ஏற்றுக்கொள்வதாகக் கூறினார். சேனாதிராஜாவின் பெருந்தன்மையான பின்வாங்குதலுடன் பிரச்சினை ஒரு முடிவுக்கு வந்தது. விக்னேஸ்வரன் ஏகமனதான தெரிவாக மாறினார்.

அதன்பின் ரி.என்.ஏயின் ஐந்து கட்சிகளின் பிரதிநிதிகளும் சேனாதிராஜாவின் தலைமையில் விக்னேஸ்வரனின் வீட்டுக்குச் சென்று பெரு மகிழ்ச்சியுடன் சந்தோசமான அந்த நற்செய்தியை அவரிடம் தெரிவித்தார்கள். அந்த தெரிவு ஐந்து கட்சிகளாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு அதை முறைப்படி தன்னிடம் அறிவிப்பதற்காக அவர்கள் ஒருமித்து வந்திருப்பதையிட்டு விக்னேஸ்வரன் மகிழ்ச்சியடைந்தார். சேனாதிராஜாவின் பெருந்தன்மையான நடத்தைக்கு தான் குறிப்பாக நன்றி தெரிவிப்பதாகவும் மற்றும் எதிர்காலத்தில் அவரது ஒத்துழைப்பையும் மற்றும் ஆதரவையும் எதிர்பார்ப்பதாகவும் விக்னேஸ்வரன் தெரிவித்தார். பின்னர் அவாகள் அனைவரும் புன்முறவல் பூத்தபடி புகைப்படத்துக்கு காட்சி கொடுத்தார்கள்.

அதன் பின்னர் ரி.என்.ஏ ஒரு சுருக்கமான ஊடகச் செய்தி மூலமாக விக்னேஸ்வரனின் தெரிவை அறிவித்தது. “ வட மாகாணசபைக்காக நடக்கவிருக்கும் மாகாணசபை தேர்தல்களில் முதலமைச்சர் பதவிக்கான வேட்பாளராக ஓய்வு பெற்ற ஸ்ரீலங்கா உச்ச நீதிமன்றின் நீதியரசரான திரு. சி.வி. விக்னேஸ்வரன் அவர்களை நிறுத்துவது என்று ஏகமனதாகத் தீர்மானிக்கப்பட்டுள்ளது ஏனைய வேட்பாளர்களின் நியமனங்கள் ரி.என்.ஏ யினால் உரிய நேரத்தில் இறுதி செய்யப்படும்” என்பதாக அந்தச் செய்தி அமைந்திருந்தது. அதில் மேலும் தெரிவிக்கப் பட்டிருந்தது “திரு.சி.வி. விக்னேஸ்வரன் அவர்கள் மிகவும் மரியாதைக்குரிய பொது பிரமுகராவார் மற்றும் வடமாகாண வாக்காளர்களிடத்தில் ரி.என்.ஏ யின் முதலமைச்சர் வேட்பாளரான திரு. சி.வி. விக்னேஸ்வரன் அவர்களையும் மற்றும் தெரிவு செய்யப்படவுள்ள ஏனைய வேட்பாளர்களையும் முழு மனதுடன் ஆதரிக்கும்படி கேட்டுக் கொள்கிறோம்”.

இது அப்போது எப்படி சுமந்திரனின் உதவியுடன் சம்பந்தன், சேனாதிராஜாவினால் எழுப்பப்பட்ட சவாலை புறந்தள்ளி விக்னேஸ்வரனை ரி.என்.ஏ யின் முதலமைச்சர் வேட்பாளராக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சின்னமான வீட்டு சின்னத்தின் கீழ் போட்டியிடுவதற்காக ஏகமனதாக தெரிவு செய்ய வழி வகுத்தார் என்கிற விபரம். சம்பந்தனது வலுவான வாதாட்டம் இல்லாதிருந்தால் விக்னேஸ்வரன் ஒருபோதுமே ரி.என்.ஏ யின் முதலமைச்சர் வேட்பாளராக தெரிவு செய்யப் பட்டிருக்க மாட்டார். முன்னாள் நீதியரசர் இப்போது தான் எந்தக் கட்சியையும் சேர்ந்தவரில்லை மற்றும் மக்கள்தான் தன்னை தெரிவு செய்தார்கள் என்று சொல்கிற போதிலும், இந்த விஷயத்தில் உள்ள முக்கியமான அம்சம் என்னவென்றால் விக்னேஸ்வரன் ஒரு சுயேச்சை வேட்பாளராக ரி.என்.ஏக்கு எதிராகப் போட்டியிட்டிருந்தால், அப்போது தேர்தல்களில் அவரது கதி கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துக்கு ஏற்பட்டதைவிட மிகவும் மோசமாக இருந்திருக்கும். மேலும் இதில் நினைவில் கொள்ளவேண்டியது என்னவென்றால் அந்தக் கட்டத்தில் சம்பந்தன் விக்னேஸ்வரனுக்கு சார்பாக சேனாதிராஜாவுடன் நேருக்கு நேரான ஆக்ரோஷமான மோதலில் ஈடுபட்டார் என்பதை. விக்னேஸ்வரன் தெரிவு செய்யப்படாவிட்டால் சம்பந்தன் கட்சியிலிருந்து வெளியேறவும்கூடத் தயாராக இருந்தார்.

TNA040313A

விக்னேஸ்வரனின் தற்போதைய அரசியல் நடத்தை

இந்தப் பின்னணியில் விக்னேஸ்வரனின் தற்போதைய அரசியல் நடத்தை கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. தன்னை முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்திய அதே கட்சிக்கும் மற்றும் தலைவருக்கும் எதிராக விக்னேஸ்வரன் வேலை செய்வதாக உணரப்பட்டுள்ளது. மட்டக்களப்பு தமிழரசுக் கட்சி கூட்டத்தில் சம்பந்தன் வெளியிட்டுள்ள கருத்துக்கள் விக்னேஸ்வரன் மற்றும் அவரது அரசியல் தரம் என்பனவற்றை நோக்கி கவனத்தை திருப்பியுள்ளது. விக்னேஸ்வரன் மீதுள்ள பொறுப்பு அவரது தற்போதைய அரசியல் நிலைப்பாட்டை விளக்கி பதிலளிக்க வேண்டியது. ரி.என்.ஏ யினால் நியமிக்கப்பட்ட வட மாகாண முதலமைச்சர் ஏன் இப்போது இந்த வகையான அரசியலில் ஈடுபடுகிறார்? இந்தக் கேள்விக்கும் இது தொடர்பான ஏனைய முன்னேற்றங்களும் இனிவரும் கட்டுரைகளில் விரிவாக ஆராயப்படும்.

ஆங்கிலத்தில் டி.பி.எஸ்.ஜெயராஜ் இனால் எழுதப்பட்ட TNA Leader Sampanthan, Chief Minister Wigneswaran and the Crisis of Tamil Political Leadership கட்டுரையியின் தமிழாக்கம்: தேனீ மொழிபெயர்ப்பு: எஸ்.குமார் ~ நன்றி: தேனீ

Share on FacebookTweet about this on TwitterShare on LinkedInShare on Google+Print this page