வடக்கிலிருந்து எல்.ரீ.ரீ.ஈ யினால் முஸ்லிம்கள் ஒட்டுமொத்தமாக வெளியேற்றப்பட்ட இருபத்தைந்தாவது ஆண்டு நிறைவு

டி.பி.எஸ்.ஜெயராஜ்

க்கிய நாடுகளின் மனித உரிமைகளுக்கான உயர் ஆணையர் அலுவலகத்தால் அணுகப்பட்ட விசாரணையின் அமைப்பு மற்றும் விதிமுறைகளுக்கு ஏற்ப அந்த விசாரணை நடத்தப்பட வேண்டிய காலம் 2002 பெப்ரவரி யுத்த நிறுத்தம் முதல், யுத்தம் முடிவடைந்த காலமான மே 2009 வரையாக இருந்தது, குற்றம் சாட்டியுள்ளபடி ஸ்ரீலங்காவில் நடந்த இறுதிக்கட்ட போரின்போது யுத்தக் குற்றங்கள், மானிடத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றனவா என்பதை உறுதி செய்யவேண்டியது அந்த விசாரணையின் நோக்கமாக இருந்தது. இந்த குறிக்கப்பட்ட காலத்தில் மட்டுமே கவனம் செலுத்தப்பட்ட படியால், 2002க்கு முந்தைய ஆண்டுகளில் நடந்தேறிய ஏனைய பல மோசமான சம்பவங்கள் இயற்கையாகவே கண்காணிக்கப் படாமல் போய்விட்டன. இப்படி நடைபெற்ற பயங்கரங்களில் குறிப்பிடத் தக்கது,தமிழீழ விடுதலைப் புலிகளினால் (எல்.ரீ.ரீ.ஈ) வடக்கிலிருந்து முஸ்லிம்கள் ஒட்டு;மொத்தமாக வெளியேற்றப்பட்ட சம்பவம்.

MQCH

ஸ்ரீலங்காவில் உள்ள தமிழ் – முஸ்லிம் உறவின் வரலாற்றில் இடம்பெற்ற கொடிய மனிதாபிமானமற்ற அத்தியாயத்தின் இருபத்தைந்தாவது ஆண்டு நிறைவு தற்போது நினைவு கூரப்பட்டு வருகிறது. அது 1990 ஒக்ரோபரில் நடைபெற்றது, புலிகள் அமைப்பு வட மாகாணத்தை சேர்ந்த தமிழ் பேசும் முஸ்லிம் மக்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றியது இன அழிப்புக்குச் சமமான ஒரு அட்டூழியமான நடவடிக்கை. ஒரு சில நாட்களுக்குள்ளயே தாங்கள் பலப்பல நூற்றாண்டுகளாக வாழ்ந்திருந்த தாயகத்தை விட்டு முஸ்லிம்கள் விரட்டியடிக்கப் பட்டார்கள்.

1990ல் வடக்கிலிருந்து முஸ்லிம்கள் ஒட்டுமொத்தமாக வெளியேற்றப்பட்டது மனிதாபிமானத்தின் ஒரு பேரழிவு. மக்களை தங்கள் வாழ்விடங்களில் இருந்து துப்பாக்கி முனையில் வேரோடு பிடுங்கிய பின், அவர்களிடமிருந்த பணம் மற்றும் நகைகளை அவர்களுக்கு கிடைக்காமல் செய்த பின்பு, விரட்டியடித்தது வெறுக்கத்தக்கதும் மற்றும் மன்னிக்க முடியாத குற்றமாகும். கடந்த காலங்களில் இந்த துயரச் சம்பவம் பற்றி நான் அடிக்கடி எழுதி வந்துள்ளேன். இப்போது இந்த ஒட்டுமொத்த வெளியேற்ற நிகழ்வின் 25 வது ஆண்டு நிறைவை கவனத்திற்கு கொண்டுவர விரும்புகிறேன். இந்த திரளான வெளியேற்ற நினைவுகளுக்கு உயிரூடடுவதற்காக எனது முந்தைய எழுத்துக்களில் இந்த துயரமான பயங்கரம் தொடர்பாக எழுதப்பட்ட கதைகளில் சிலவற்றை இங்கு சுருக்கமாக மீண்டும் குறிப்பிடுகிறேன். தமிழ் பேசும் முஸ்லிம்கள் அவர்களது சகோதர இனத்தவரின் துப்பாக்கி மொழியினால் விரட்டியடிக்கப்பட்ட இழி செயலுக்கு வழிகோலிய சம்பவங்களையும் கூட நான் கண்டுபிடிக்க விரும்புகிறேன்.

“கறுப்பு ஒக்ரோபர் 1990”

கறுப்பு ஒக்ரோபர் 1990 யாழ்ப்பாணக் குடாநாட்டில் சாவகச்சேரியிலிருந்த முஸ்லிம்களை ஒக்ரோபர் 15ல் வெளியேற்றுவதில் ஆரம்பமாகி ஒக்ரோபர் 30ல் யாழ்ப்பாண நகரத்தில் வாழ்ந்த முஸ்லிம்களை வெளியேற்றியதுடன் முடிவடைந்தது. வடக்கு பெருநிலப் பரப்பிலிருந்த முஸ்லிம்களின் திரளான வெளியேற்றம், யாழ்ப்பாண நகரத்தில் ஆரம்பமாவதற்கு சில நாட்கள் முன்னதாகவே ஆரம்பித்து குடாநாட்டு முஸ்லிம்களை சுத்திகரிப்பு செய்து முடித்த ஒரு சில நாட்களின் பின் முடிவடைந்தது. பின்னர் மன்னார் மாவட்டத்தில் வாழ்ந்த ஒட்டுமொத்த வடக்கு முஸ்லிம்களும் அங்கிருந்து வெளியேற்றப்பட்டார்கள். யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் தவிர முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் வாழ்ந்த முஸ்லிம்களும் வெளியேற்றப் பட்டார்கள். வவுனியாவில் வாழ்ந்த முஸ்லிம்கள் அதிர்ஷ்டக்காரர்களாக இருந்தார்கள் ஏனென்றால் அவர்களின் பெரும்பாலான கிராமங்கள் அரசாங்க கட்டுப்பாட்டு பகுதிக்குள்ளேயே இருந்தன. வடக்கு பெருநிலப்பரப்பிலிருந்து எல்.ரீ.ரீ.ஈ யினால் 50,000 க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டார்கள். குடாநாட்டில் இருந்து விரட்டியடிக்கப்பட்ட முஸ்லிம்களையும் சேர்த்து வட மாகாணத்தில் இருந்து மொத்தமாக வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களின் எண்ணிக்கை 1990ல் சுமார் 75,000 ஆக இருந்தது.

வடபகுதி முஸ்லிம்கள் தங்கள் சக தமிழ் மக்களைப்போலவே அப்போது நடைபெற்ற யுத்தத்தினால் சம அளவான பாதிப்பை அடைந்திருந்தார்கள். தமிழ் குடிமக்களைப் போலவே அவர்களும் தீவிரமான ஷெல் மற்றும் குண்டுத் தாக்கதல்கள் இடம்பெறும்போது காலத்துக்கு காலம் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறிக் கொண்டிருந்தார்கள். சில நாட்களின் பின் அவர்கள் எப்போதும் தங்கள் சொந்த வீடுகளுக்குத் திரும்பி விடுவார்கள். ஆனால் கிழக்கு மாகாண நிலமை ஒரு வித்தியாசமான திருப்பத்தை அடைந்திருந்தது.

தமிழ் – முஸ்லிம் பகையுணர்வு கிழக்கில் அதிகரித்துக் கொண்டிருந்தது. சில முஸ்லிம் அங்கத்தவர்கள் எல்.ரீ.ரீ.ஈ யினை விட்டு விலகியதும் மற்றும் சிலர் எதிரிகள் பக்கம் சென்றதும் கருணா (இராணுவத் தளபதி) மற்றும் கரிகாலன் (அரசியல் பொறுப்பாளர்) ஆகியோரின் கீழியியங்கிய கிழக்கு எல்.ரீ.ரீ.ஈயினை சீற்றம் அடைய வைத்தது. எல்.ரீ.ரீ.ஈயில் இருந்த பல முஸ்லிம் அங்கத்தவர்கள் அதன் தலைமையினால் கொல்லப்பட்டார்கள். எல்.ரீ.ரீ.ஈக்குள் ஒரு முஸ்லிம் எதிர்ப்பு உணர்வு பரவியிருந்தது. மறுபுறத்தில் அப்போது ஆட்சியில் இருந்த ஐதேக அரசாங்கம் இந்த உணர்வை பயன்படுத்தி எல்.ரீ.ரீ.ஈக்கு மேலும் சேதமிழைக்க ஆரம்பித்தது. அநேக முஸ்லிம் சமூக விரோத சக்திகள் உள்ளுர் பாதுகாப்பு சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்டார்கள். இந்தப் பிரிவினர் பாதுகாப்பு படையினருடன் இணைந்து தமிழர் விரோத வன்முறைகளை ஊக்குவித்தார்கள். சில சம்பவங்களில் தமிழ் பொதுமக்களின் படுகொலைகளுக்கு இந்த முஸ்லிம் உள்ளுர் காவல் படையினரே பொறுப்பாக இருந்தார்கள். இந்த முஸ்லிம் காவல்படை தலைமையிலான கும்பல்கள் சில தமிழ் குக்கிராமங்களையும் மற்றும் கிராமங்களையும் அழித்து நாசமாக்கின. அரச பாதுகாப்பு படையினரின் ஒரு பகுதியினரால் அவர்களுக்கு மறைவான பாதுகாப்பு வழங்கப்பட்டது. இதற்குப் பதிலடியாக எல்.ரீ.ரீ.ஈ, முஸ்லிம் பொதுமக்களை கொடூரமான முறையில் கோரமாக படுகொலை செய்தது. சம்மாந்துறை மற்றும் காத்தான்குடி பள்ளிவாசல்கள் மீதான தாக்குதல்கள் மற்றும் பிரார்த்தனை செய்து கொண்டிருந்த முஸ்லிம்களை கொன்றது மற்றும் ஏறாவூர் சதாம் ஹ_சைன் மாதிரிக் கிராம பொதுமக்களை படுகொலை செய்தது என்பன குறிப்பிடத்தக்க உதாரணங்கள்.

இந்த மாதிரியான சம்பவங்களின் கொடூரமான அம்சம் என்னவென்றால் பாதுகாப்பு நிறுவனத்தின் ஒரு பிரிவினரால் தமிழ் – முஸ்லிம் பகைமையை உருவாக்க வேண்டுமென்றே மேற்கொள்ளப்பட்ட முயற்சி இதன் பின்னணியில் இருந்ததுதான். இதில் சுட்டிக்காட்டத்தக்க நிழலான நிகழ்வு “கப்டன் முனாஸ்” சம்பந்தப்பட்டது. இந்த கப்டன் முனாஸின் கட்டளையின் கீழிருந்த ஒரு பிரிவு 1990 ல் தமிழ்களின் பல கொலைகளுக்கும் மற்றும் காணாமற்போதலுக்கும் பொறுப்பாக இருந்தது என்று கூறப்படுகிறது. கப்டன் முனாஸ் என்கிற பெயர் மக்கள் மத்தியில் வெறுப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியது. அவர் ஒரு முஸ்லிம் என்றே ஊகிக்கப்பட்டது. எனினும் பின்னைய வருடங்களில் இடம்பெற்ற சோசா விசாரணை ஆணைக்குழுவினால் இந்த கப்டன் முனாஸ் என்று அழைக்கப் பட்டவர் உண்மையில் றிச்சட் டயஸ் என்கிற பெயரை உடைய ஒரு புலானாய்வு அதிகாரி என்கிற உண்மை வெளிப்படுத்தப்பட்டது.

தமிழ் – முஸ்லிம் உறவு

கிழக்கில் தமிழ் – முஸ்லிம் உறவு மிகவும் கீழ் நிலையில் இருந்த போதிலும் வடக்கிலுளkarikalan்ள நிலமை பெரிதும் வித்தியாசமாக இருந்தது. இரண்டு சமூகங்களும் சமாதானமான முறையில் கூட்டு வாழ்க்கையை தொடர்ந்து கொண்டிருந்தார்கள். முஸ்லிம்கள் சிறியளவு சிறுபான்மையினராக இருந்தபடியால் எந்த வகையிலும் பெரும்பான்மை தமிழர்களுக்கு ஒரு அச்சுறுத்தலை உண்டாக்கவில்லை. வடக்கில் முஸ்லிம்கள் சமாதானமாக வாழ்ந்து கொண்டிருந்த அதேவேளை கிழக்கில் பதற்றம் நிலவி வருவது கிழக்குப் புலிகளால் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாக இருந்தது. அப்போது கிழக்கு அரசியல் துறை பொறுப்பாளராக இருந்த கரிகாலன் தலைமையிலான ஒரு தூதுக்குழு முஸ்லிம்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளுவதற்கு புலிகளின் பெருந்தலைவர் பிரபாகரனை இணங்க வைப்பதற்காக வடக்கு நோக்கி வந்தது. முஸ்லிம்களுக்கு வெளிப்படையாகவே ஒரு பாடம் கற்பிக்க வேண்டும் என்று கரிகாலன் விரும்பினார். இந்த அழுத்தம் புலிகளின் உயர்மட்டத்தின்மீது தாக்கத்தை ஏற்படுத்திக் கொண்டிருந்தபோதுகூட யாழ் குடாநாட்டின் தென்மராட்சி பிரிவான சாவகச்சேரியில் ஒரு சம்பவம் நடைபெற்றது.

1990 செப்டம்பர் 4ல் எல்.ரீ.ரீ.ஈயுடன் உதவியாளர்களாக இணைந்துள்ள தமிழர்கள் குழு ஒன்று சாவகச்சேரி பள்ளிவாசல் அருகில் இருந்த சில முஸ்லிம்களுடன் ஒரு கடுமையான வாய்ச் சணடையில் ஈடுபட்டது. சிலர் பள்ளிவாசல்மீது தாக்குதல் மேற்கொள்ளவும் முயன்றார்கள். முஸ்லிம் சமூகத்தை சேர்ந்த இளைஞர்கள் இதில் தொடர்பு கொண்டிருந்த தமிழர்களைப் பிடித்து அவர்களை எல்.ரீ.ரீ.ஈயிடம் ஒப்படைத்தது. புலிகள் அவர்களை விடுதலை செய்ததுடன் பெரும்பான்மை தமிழர்களை புண்படுத்த வேண்டாம் என்று சிறுபான்மை முஸ்லிம்களை எச்சரிக்கை செய்தது. செப்ரம்பர் 25ல் தான் குடாநாட்டை விட்டு வெளியேறுவதற்கு எல்.ரீ.ரீ.ஈ பாஸ் வழங்க மறுத்ததுக்காக எதிர்ப்பு தெரிவித்த ஒரு முஸ்லிம் இளைஞன் புலிகள் அங்கத்தினர்களால் தாக்கப்பட்டு கைது செய்யப்பட்டான். அதன்பின் அவன் காணாமல் போய்விட்டான்.

சாவகச்சேரியில் வாழந்த முஸ்லிம்களில் பெரும் பகுதியினர் நகரத்தின் டச்சு வீதியிலேயே வாழந்து வந்தார்கள். அதேவேளை முஸ்லிம்கள் இடையேயான உள்ளக வன்முறை சம்பவம் ஒன்றை விசாரணை செய்த எல்.ரீ.ரீ.ஈ இறைச்சி வெட்டுபவர் வீட்டிலிருந்து சில வாள்களை கண்டுபிடித்தது. புலிகள் சொல்லும் விளக்கத்தின்படி இது அவர்களிடையே ஒரு எச்சரிக்கை மணியை அடிக்கச் செய்தது. எல்.ரீ.ரீ.ஈ முஸ்லிம் வீடுகளிலும் மற்றும் வியாபார நிலையங்களிலும் சோதனை நடத்தியதை தொடர்ந்து ஒரு பிரபலமான முஸ்லிம் வியாபாரியின் கடையில் 75 வாள்கள் மறைத்து வைக்கப் பட்டிருந்ததை கண்டுபிடித்தார்கள். இது ஒரு கொடிய சதியின் ஒரு பகுதியாகப் பார்க்கப்பட்டது. இந்த விளக்கம் உண்மையாக இருந்தாலும் கூட 75 வாட்கள் துப்பாக்கி ஏந்திய எல்.ரீ.ரீ.ஈக்கு எதிராக எதாவது அனர்த்தத்தை ஏற்படுத்துவதை யாராலும் காணமுடியாது.

இந்த வாட்கள் கண்டெடுக்கப்பட்ட வியாபார ஸ்தலம் முஸ்லிம் வியாபாரி ஒருவருக்குச் சொந்தமானது அவரது லொறிகள் வர்த்தகத்துக்காக கொழும்புக்கும் மற்றும் யாழ்ப்பாணத்திற்கும் பயணம் செய்து வந்தன. தமது அளவுக்கு மீறிய சித்தப்பிரமைக்கும் அதீத கற்பனைகளுக்கும் பெயர்பெற்ற எல்.ரீ.ரீ.ஈ யின் புலனாய்வு பிரிவினர் இதை ஒரு பாரிய சதியாக சந்தேகிக்கத் தொடங்கினார்கள். அரச பாதுகாப்பு படையினரின் புலனாய்வு உபகரணம் அடிக்கடி கொழும்புக்கு போய்வரும் முஸ்லிம் வர்த்தகரை நாசவேலையில் ஈடுபட அல்லது உளவு பார்ப்பதற்காக பயன் படுத்தியிருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது. இதை முன்கூட்டியே தடுப்பதற்கான செயற்பாடு அவசியம் என்று எல்.ரீ.ரீ.ஈ உணர்ந்தது.

எனவே பிரதானமாக டச்சு வீதியில் செறிந்து வாழும் சாவகச்சேரி முஸ்லிம்கள் ஒக்ரோபர் 15, 1990ல் வெளியேற்றப்பட்டார்கள். கிட்டத்தட்ட 1000 வரையான மக்கள் துப்பாக்கி முனையில் வெளியேறும்படி கட்டாயமாக பணிக்கப்பட்டார்கள். அவர்களிடம் வட மாகாணத்தின் தெற்குப்புற நகரமான வவுனியாவுக்கு அப்பால் செல்லும்படி கூறப்பட்டது. சாவகச்சேரி முஸ்லிம்கள் ஒக்ரோபர் 18, அளவில் வவுனியாவை வந்தடைந்தார்கள். சாவகச்சேரி முஸ்லிம்களை வெளியேறும்படி கட்டளையிடப்பட்டதைத் தொடர்ந்து சங்கிலித் தொடர் போன்ற நிகழ்வு ஆரம்பமாகியது

வெளியேற்றத்தின் சோகம்

இந்த வெளியேற்றத்தில் உள்ள துயரம் என்னவென்றால், முஸ்லிம்கள் தாங்கள் பல தலைமுறைகளாக வாழ்ந்த பூமியை விட்டு ஒரு ஆயுதக் குழுவின் கட்டளைக்கு அடிபணிந்து அங்கிருந்து தப்பியோட தொடங்கியதுதான். அங்கு ஒரு எதிர்ப்போ அல்லது மறுப்போ கிளம்பவில்லை. அதுதான் எல்.ரீ.ரீ.ஈ யின் பயங்கரவாதமும் மற்றும் அதிகாரமும். தவிரவும் முஸ்லிம்கள் எண்ணிக்கையில் சிறிய அளவினராக இருந்தார்கள்.

ஐந்து வருடங்களுக்குப் பின்னர் 1995ல் நடந்த கட்டாய வெளியேற்றத்தின்போது தமிழர்களும் பெரும் எண்ணிக்கையில் யாழ்ப்பாணத்தை விட்டுத் தப்பியோட நிர்ப்பந்திக்கப் பட்டார்கள். பின்னர் 2007 – 2009 காலப்பகுதியில் போர் தீவிரமடைந்தபோது வடக்கு பெருநிலப்பரப்பான வன்னியில் வாழ்ந்த தமிழர்களும் இடத்துக்கு இடம் நகரவேண்டி ஏற்பட்டது. இறுதியாக முல்லைத்தீவு கடற்கரையருகே இருந்த சிறிய பட்டை போன்ற சிறு துண்டு நிலப்பரப்புக்குள் அவர்கள் கட்டுப்படுத்தப் பட்டார்கள். ஒருவேளை இதுதான் செய்த பாவத்திற்கான கர்மவிதி அல்லது தர்மத்தின் உலகளாவிய கொள்கை என்று சிலர் சொல்லக்கூடும்.

பின்னர் எல்.ரீ.ரீ.ஈயினால் வழங்கப்பட்ட விளக்கத்தின்படி, ஒக்ரோபர் மாதம் வடக்கிற்கு வருகை தந்திருந்த கரிகாலனின் கீழிருந்த கிழக்குப் படையணி ஒன்றுதான் இந்த திரளான வெளியேற்றத்துக்கு பெரிதும் பொறுப்பாக இருந்தது என்று கூறப்பட்டது. முக்கியமாக அது கிழக்கு முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்ட எச்சரிக்கையான பதிலடி என்று சித்தரிக்கப் பட்டது. இந்த முடிவு மிகைப்படுத்தப்பட்ட அச்சுறுத்தலுக்கான முன்னுதாரணமாக மேலும் செல்வாக்குச் செலுத்தியது. அப்பட்டமான இனவாத மனநிலையின்படி முஸ்லிம்கள் ஒரு ஐந்தாம் படையினருக்கு ஒப்பாகப் பார்க்கப் பட்டார்கள். இந்த பின்னணியின் கீழ்தான் திரளான வெளியேற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

1981ம் ஆண்டின் குடிசன மதிப்பீட்டின்படி மன்னார் மாவட்டத்தில் உள்ள முஸ்லிம்கள் சனத்தொகை 26 விகிதமாகும். தள்ளாடி கடற்பாதை வழியாக பிரதான நிலப்பரப்புடன் மன்னார் தீவு இணைக்கப்படுகிறது, அங்குள்ள முஸ்லிம்களின் எண்ணிக்கை 46 விகிதமாகும். மன்னார் தீவில் முதன்மையானதும் மற்றும் செல்வச் செழிப்பானதுமான முஸ்லிம் கிராமம் எருக்கலம்பிட்டி என்பதாகும். 1990 ஒக்ரோபர் 21ல் சுமார் 300 வரையான புலி அங்கத்தவர்கள் எருக்கலம்பிட்டியை சுற்றி வளைத்துக் கொண்டார்கள் மற்றும் முஸ்லிம்களின் பணம், நகைகள் மற்றும் பெறுமதியான இலத்திரனியல் உபகரணங்கள் போன்றவற்றை கொள்ளையிடவும் செய்தார்கள். கிட்டத்தட்ட 800 – 850 வீடுகள் இலக்கு வைக்கப்பட்டன.

ஒக்ரோபர் 22ல் மன்னார் – புத்தளம் மாவட்ட எல்லையில் அமைந்துள்ள மறிச்சுக்கட்டி கிராமத்தை சேர்ந்த சில முஸ்லிம்கள் ஆயுதப்படையினருடன் இரகசிய தொடர்புகளை வைத்திருந்ததாக குற்றம் சுமத்தி எல்.ரீ.ரீ.ஈ யினால் கைது செய்யப்பட்டார்கள். ஒக்ரோபர் 23ல் மறிச்சுக்கட்டி கிராமத்தவர்களை அங்கிருந்து வெளியேறும்படி கட்டளை பிறப்பிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து ஒக்ரோபர் 24ல் மறிச்சுக்கட்டி கிராமம் அமைந்துள்ள முசலி உதவி அரசாங்க அதிபர் பிரிவைச் சேர்ந்த ஒட்டுமொத்த முஸ்லிம்களையும் அங்கிருந்து வெளியேறும்படி வெளியேற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதேநேரம் முசலி, முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள ஒரு உதவி அரசாங்க அதிபர் பிரிவு ஆகும்.

மன்னாரில் வெளியேற்ற நடவடிக்கை தொடர்ந்து கொண்டிருந்தது, ஒக்ரோபர் 24ல் மன்னார் தீவில் வாழும் அனைத்து முஸ்லிம்களும் ஒக்ரோபர் 28 க்குள் அங்கிருந்து வெளியேற வேண்டும் மற்றும் இந்த வெளியேற்ற நடவடிக்கையை இறுதி செய்வதற்காக அவர்கள் உள்ளுர் எல்.ரீ.ரீ.ஈ அலுவலகத்துக்கு சமூகமளிக்க வேண்டும் என்று ஒலிபெருக்கிகள் மூலமாக எல்.ரீ.ரீ.ஈ அறிவிப்பு செய்தது. நாதியற்ற முஸ்லிம்கள் அவ்வாறு செய்வதற்கு தயாராகி தங்கள் பொருட்களை பொதி செய்யத் தொடங்கினார்கள். ஒக்ரோபர் 26ல் எல்.ரீ.ரீ.ஈ மீண்டும் எருக்கலம்பிட்டி கிராமத்தை ஆக்கிரமிப்புச் செய்து முஸ்லிம்கள் பொதி செய்து வைத்திருந்த அவர்களது உடமைகள் அனைத்தையும் கைப்பற்றினார்கள். கத்தோலிக்க குருமார்கள் உட்பட மன்னாரில் உள்ள அநேக தமிழர்கள் இந்த வெளியேற்ற உத்தரவை நிறுத்தும்படி எல்.ரீ.ரீ.ஈ யிடம் கோரிக்கை வைத்தார்கள் ஆனால் அதனால் பயன் ஏற்படவில்லை. பின்னர் எல்.ரீ.ரீ.ஈ வெளியேற்றத்துக்கான இறுதி நாளை நவம்பர் 2 வரை நீட்டித்தது.

மன்னார் தீவிலுள்ள முஸ்லிம்கள்

ஒக்ரோபர் 28 மாலை எல்.ரீ.ரீ.ஈ, எருக்கலம்பிட்டி மற்றும் மன்னார் தீவிலுள்ள இதர முஸ்லிம் பிரதேசங்களை மூடி அடைத்துவிட்டது. மன்னார் தீவின் நகரம் மற்றும் எருக்கலம்பிட்டி, தாராபுரம், புதுக்குடியிருப்பு, உப்புக்குளம், கோந்தைப்பிட்டி போன்ற ஏனைய இடங்களிலுள்ள முஸ்லிம்களையும் கடற்கரையின் குறிப்பிட்ட இடங்களில் கூட்டமாக வந்து சேரும்படி வற்புறுத்தப் பட்டார்கள். அவர்கள் அங்கு உணவோ தண்ணீரோ அல்லது சுயபாதுகாப்புக்கு உரிய வசதிகளோ எதுவும் இன்றி வெறுமே விடப்பட்டார்கள். மன்னாரில் உள்ள அக்கறையுள்ள தமிழ் குடிமக்கள் எல்.ரீ.ரீ.ஈ உடன் வாதாடி கடற்கரையில் உள்ள ஆயிரக்கணக்கான மக்களுக்காக பாண் மற்றும் தண்ணீர் போன்றவற்றை ஒருவாறு எடுத்துச் சென்றார்கள்.

அதன்பின் மன்னார் முஸ்லிம்கள் வலுக்கட்டாயமாக 60 மைல்கள் தெற்கிலுள்ள வடமேல் மாகாணத்திலுள்ள கல்பிட்டிக்கு கடல் வழியாக அனுப்பி வைக்கப்பட்டார்கள். மன்னார் மற்றும் புத்தளம் பகுதியை சேர்ந்த முஸ்லிம்களின் படகுகள் இந்த நோக்கத்துக்காகப் பயன்பட்டன. முழு நடவடிக்கையும் முற்றுப்பெற மூன்று நாட்களுக்கு மேலாகியது. குறைந்தது ஒரு குழந்தையாவது தண்ணீரில் விழுந்து இறக்க நேரிட்டது. சில குழந்தைகளும் மற்றும் வயதானவர்களும் கல்பிட்டியை அடைந்த உடனேயே மரணமடைந்தார்கள்.

மன்னார் தீவில் வாழ்ந்த முஸ்லிம்களின் பரிதாபகரமான நிலமை இப்படி இருக்கும்போது, மன்னார் மாவட்டத்தின் பெருநிலப்பரப்பில் உள்ள முஸ்லிம்களின் நிலையும் இதற்கு சமமான துர்ப்பாக்கியமான நிலையிலேயே இருந்தது. முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள முசலி உதவி அரசாங்க அதிபர் பிரிவைச் சேர்ந்த முஸ்லிம்கள், அதேபோல விடத்தல்தீவு, பெரியமடு, சன்னார், முருங்கன், வட்டக்கண்டல், பறப்பான்கண்டல் போன்ற இதர இடங்களில் வாழ்ந்த முஸ்லிம்கள் ஆகியோரிடம் ஒக்ரோபர் 25ல் அவர்களின் வாகனங்கள்,மிதிவண்டிகள்,எண்ணை, மற்றும் இலத்திரனியல் உபகரணங்கள் போன்றவற்றை பள்ளிவாசல் அல்லது உள்ளுர் பாடசாலையில் கொண்டுவந்து ஒப்படைக்கும்படி எல்.ரீ.ரீ.ஈ கட்டளை பிறப்பித்தது.

ஒக்ரோபர் 26ல் மாவட்டத்தை விட்டு எப்படி வெளியேறுவது என்று விளக்கத்தை வழங்குவதற்காக அவர்களை உள்ளுர் எல்.ரீ.ரீ.ஈ அலுவலகத்துக்கு சமூகமளிக்குமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டது. ஒவ்வொரு குடும்பமும் ஐந்து பயணப் பைகள்,2000 ரூபா பணம் மற்றும் ஒரு சவரன் தங்கம் என்பனவற்றையே எடுத்துச் செல்ல அனுமதிக்கப்பட்டது. மடு, பண்டிவிரிச்சான் மற்றும் வவுனியா நகரத்துக்கு அருகில் உள்ள ஒரு இடம் ஆகிய மூன்று இடங்களில் முஸ்லிம்கள் சோதனை செய்யப்பட்டார்கள். மடு மற்றும் பண்டிவிரிச்சான் பகுதிகளில் அவர்களுக்கு அனுமதிக்கப் பட்டதிலும் அதிகமான பொருட்களை கொண்டு சென்றது கண்டுபிடிக்கப் பட்டால் மக்களிடம் இருந்து அவைகள் கைப்பற்றப்பட்டு அதற்காக புலி அங்கத்தினர்களால் ரசீது வழங்கப்பட்டது. ஆனால் வவுனியாவுக்கு அருகில் சுடுநீர் குடுவைகள் உட்பட பல பெருட்கள் தன்னிச்சையாக சூறையாடப்பட்டது. இந்த பிரிவு முஸ்லிம்கள் கால்நடையாகவே வவுனியாவை வந்தடைந்தார்கள்.

வன்னி பெருநிலப்பரப்பின் இதர பகுதிகளிலும் இந்த வெளியேற்ற நடவடிக்கை தொடர்ந்தது. ஒக்ரோபர் 22 காலையில் முல்லைத்தீவு மாவட்டம் நீராவிப்பிட்டியை சோந்த முஸ்லிம்கள் சிலர், ஆயுதப்படையினருக்கு தகவல்கள் வழங்குகிறார்கள் என்கிற சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்டார்கள். அன்று மாலையே முல்லைத்தீவு மாவட்டத்தில் வாழும் முஸ்லிம்கள் அனைவரும் ஒரு வாரத்துக்குள் அங்கிருந்து வெளியேற வேண்டும் என்று கட்டளை பிறப்பிக்கப்பட்டது. அடுத்த நாள் ஒக்ரோபர் 23;ல் கிளிநொச்சி மாவட்டத்தில் வசிக்கும் அனைத்து முஸ்லிம்களையும் ஐந்து நாட்களுக்குள் அங்கிருந்து வெளியேறும்படி கட்டளை பிறந்தது. 1981ம் ஆண்டு குடிசன மதிப்பீட்டின்படி முல்லைத்தீவு மாவட்டத்தில் முஸ்லிம்களின் விகிதாச்சாரம் 4.6 ஆகவும் மற்றும் கிளிநொச்சி மாவட்டத்தில் முஸ்லிம்களின் விகிதம் 1.6 ஆகவும் இருந்தது.

வவுனியா மாவட்டத்தில் உள்ள முஸ்லிம்கள் விகிதம் 1981 குடிசன மதிப்பீட்டின்படி 6.9 விகிதமாகும். இவர்கள் மொத்தமும் அரசாங்க கட்டுப்பாட்டு பகுதிகளிலேயே வசித்து வந்தார்கள். எனினும் ஒரு சில முஸ்லிம்கள் எல்.ரீ.ரீ.ஈ கட்டுப்பாட்டுப் பகுதியில் வசித்து வந்தார்கள் அவர்களையும் நவம்பர் 1, க்குள் வெளியேறும்படி கட்டளை பிறப்பிக்கப்பட்டது.

பாதிப்படையாத யாழ்ப்பாண முஸ்லிம்கள்

வன்னியில் வெளியேற்றம் நடந்து வருகையில் கூட யாழ்ப்பாண முஸ்லிம்கள் பாதிப்புக்கு உள்ளாகவில்லை. 1981 குடிசன மதிப்பீட்டின்படி யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள முஸ்லிம்களின் சனத்தொகை விகிதம் மொத்த சனத்தொகையின் 1.66 விகிதமாக இருந்தது. சாவகச்சேரியில் இருந்த இவர்களில் ஒரு பகுதியினர் ஏற்கனவே விரட்டியடிக்கப்பட்டு விட்டனர். ஆனால் யாழ்ப்பாண யாழ்ப்பாண நகர்ப் பகுதியை சோந்த முஸ்லிம்கள் தங்கள்மீது ஆபத்து எதுவும் தோன்றுவதற்கான அறிகுறிகள் எதையும் காணவில்லை மற்றவர்களுக்கு இது நடப்பது வேறு காரணங்களுக்காக. யாழ்ப்பாண முஸ்லிம்கள் தாங்களை யாழ்ப்பாணத்தின் ஒன்றிணைந்தவர்களாகவே கருதினார்கள். அவர்களின் தமிழ் சகோதரர்களால் அவர்களுக்கு தீங்கு எதுவும் நடக்க முடியாது. ஹிட்லரின் காலத்தில் கூட சில யூத மக்கள் உருவாகிவரும் பேரழிவை அலட்சியம் செய்து தங்கள் இயல்பு வாழ்க்கையை தொடர்ந்தது போலத்தான் இதுவும் என அவர்கள் எண்ணினார்கள். இதுபற்றி பின்னர் மீளாய்வு செய்ததில் எல்.ரீ.ரீ.ஈ மற்றவர்களைக் காட்டிலும் யாழ்ப்பாண முஸ்லிம்களிடத்தில் மிகவும் கடுமையாக நடந்திருப்பதாகத் தோன்றுகிறது. நம்ப முடியாதபடி யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேற அவர்களுக்கு மிகவும் குறுகிய கால அவகாசமே வழங்கப்பட்டது. இதற்கு நவம்பர் மாதமளவில் யாழ்ப்பாணம் முஸ்லிம்கள் இன்றி சுத்தம் செய்யப்பட வேண்டும் என்று எல்.ரீ.ரீ.ஈ முடிவு செய்ததே காரணமாக இருக்கலாம். ஒப்பிட்டு நோக்குகையில் புலிகள் கடைசியாகவே யாழ்ப்பாண முஸ்லிம்களிடத்தில் வந்துள்ளார்கள். எல்.ரீ.ரீ.ஈ அவர்களுக்காக குறிவைத்த நாள் ஒக்ரோபர் 30 ஆக இருந்தது.

யாழ்ப்பாணத்தை சேர்ந்த அநேக முஸ்லிம்கள் அவர்களது பலவந்த வெளியேற்றத்துக்குப் பிறகு ஸ்ரீலங்காவை விட்டு வெளியேறி மேற்கத்தைய நாடுகளில் தஞ்சம் கோரியுள்ளார்கள். சிலர் கனடாவுக்கும் வந்திருந்தார்கள். அப்படியான பலரை நான் ரொன்ரோவில் வைத்து சந்தித்து அவர்களுடன் பழகியிருக்கிறேன், மற்றும் அவர்களில் சிலர் இப்போது என்னுடைய நெருங்கிய நண்பர்களாகவும் உள்ளனர். அந்த கட்டாய வெளியேற்றத்தின் போதும் மற்றும் அதன் பின்னரும் அவர்களுக்கு ஏற்பட்ட பயங்கரமான அனுபவங்கள் பற்றிய மனவேதனை தரும் கதைகளை அவர்களிடமிருந்து கேட்டும் உள்ளேன். அவர்கள் பட்ட அனுபவங்கள் என்னை பெரிதும் வருத்தமடையச் செய்து மன அழுத்தத்துக்கு உள்ளாக்கியிருந்தது.

அப்போது கிட்டத்தட்ட காலை 10.30 மணி இருக்கும் ஒலிபெருக்கிகளுடன் கூடிய எல்.ரீ.ரீ.ஈ வாகனங்கள் முஸ்லிம்கள் வசிக்கும் பிரதேசத்தில் உள்ள வீதிகள் மற்றும் ஒழுங்கைகள் வழியாக பிரயாணிக்க ஆரம்பித்தன. ஒவ்வொரு முஸ்லிம் குடும்பத்தின் பிரதிநிதி ஒருவர் மதியம் 12 மணியளவில் ஒஸ்மானியாக் கல்லூரியின் ஜின்னா மைதானத்திற்கு வருகை தரவேண்டும் என்கிற ஒழுங்கான அறிவிப்பு ஒன்று இடைவிடாமல் ஒலிபரப்பப் பட்டுக்கொண்டேயிருந்தது. ஆயுதம் தாங்கிய புலிகள் வீதிகளில் ரோந்து வர ஆரம்பித்தார்கள். நெருக்கமான சனப்பரம்பல் உள்ள ஒழுங்கைகள் மற்றும் குறுக்கு ஒழுங்கைகளில் வலம்வந்த சிலர் வீட்டுக்கு வீடு அறிவிப்புகளை சொல்ல ஆரம்பித்தார்கள்.

மக்கள் தாங்கள் செய்து கொண்டிருந்த வேலைகளையெல்லாம் அப்படியே விட்டுவிட்டு மைதானத்தை நோக்கி விரைந்தார்கள். 12.30 மணியளவில் மூத்த புலித் தலைவரான ஆஞ்சனேயர் அவர்களுக்கு முன் உரையாற்றத் தொடங்கினார். இந்த ஆஞ்சனேயருக்கு பின்னாளில் இளம்பரிதி என்கிற மற்றொரு பெயர் ஏற்பட்டது. ஆஞ்சனேயர் அல்லது இளம்பரிதி ஒரு சுருக்கமான செய்தியைச் சொன்;னார். பாதுகாப்புக் காரணங்களை கருத்தில் கொண்டு எல்.ரீ.ரீ.ஈ யின் உயர்மட்டம் எல்லா முஸ்லிம்களையும் யாழ்ப்பாணத்தை விட்டு இரண்டு மணித்தியாலங்களுக்குள் வெளியேற வேண்டும் என்று முடிவு செய்துள்ளது. அப்படிச் செய்யத் தவறினால் தண்டனைக்கு ஆளாக நேரிடலாம். மேலதிகமான விளக்கம் எதுவும் கூறப்படவில்லை.

மக்கள் அவரிடம் கேள்விகள் கேட்கத் தொடங்கியதும் இளம்பரிதி தனது நிதான சுபாவத்தை இழந்துவிட்டார். முஸ்லிம்கள் வெறுமே கட்டளைக்கு கீழ்படிய வேண்டும் அல்லது அதற்கான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என அவர் உரக்க குரைக்கத் தொடங்கினார். பின்னர் அவர் தனது துப்பாக்கியால் பலமுறை வானத்தை நோக்கிச் சுட்டார். அவரது மெய்ப்பாதுகாவலர்களில் சிலரும் அதைப் பின்பற்றினார்கள். செய்தி வெகு தெளிவாக இருந்தது. ஆரம்பத்தில் இராணுவம் யாழ்ப்பாணத்தை ஆக்கிரமிக்கப் போகிறது அதனால்தான் எல்.ரீ.ரீ.ஈ ஒவ்வொருவரையும் வெளியேறும்படி கேட்கிறது என மக்கள் நினைத்தார்கள். ஆனால் வெகு தாமதமாகவே முஸ்லிம்களை மட்டும்தான் வெளியேறும்படி கட்டளை பிறப்பிக்கப் பட்டுள்ளது என்பதை அவர்கள் உணர்ந்தார்கள். மேலும் மேலும் ஆயுதம் தாங்கிய புலிகள் அங்கு வரத் தொடங்கியதும் அமைதியற்றிருந்த முஸ்லிம்கள் பொதி செய்ய ஆரம்பித்தார்கள். ஆரம்பத்தில் அவர்கள் கொண்டு செல்லவேண்டிய பொருட்களுக்கு உள்ள கட்டுப்பாடு பற்றி எதுவும் அறிவிக்கப் படவில்லை. அதனால் மக்கள் உடைகள் பெறுமதியான பொருட்கள் நகைகள் மற்றும் பணம் என்பனவற்றை பொதி செய்ய ஆரம்பித்தார்கள். அவர்களை ஏற்றிச் செல்வதற்காக பேருந்துகள், வான்கள், லொறிகள் போன்றவை எல்.ரீ.ரீ.ஈயினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. அநேக முஸ்லிம்கள் தங்கள் தனிப்பட்ட போக்குவரத்து வாகனங்களையும் தயாராக்கி வைத்திருந்தனர்.

ஐந்து முச்சந்தி வரிசை

தங்கள் வீடுகளில் இருந்து பாய்ந்து வெளியேறும் முஸ்லிம்களுக்கு இப்போது புதிதாக மற்றொரு கட்டளை பிறப்பிக்கப் பட்டது. அவர்கள் அனைவரையும் ஐந்து முச்சந்தி என அழைக்கப்படும் சந்தியில் வரிசையாக நிற்கும்படி கூறப்பட்டது. மிகவும் அதிர்ச்சியடைந்திருந்த துரதிருஷ்டசாலிகளான அந்த மக்கள் வரிசையாக நின்றார்கள். ஆண்களும் பெண்களுமான எல்.ரீ.ரீ.ஈ அங்கத்தவர்கள் முஸ்லிம் மக்களிடம் அவர்களது பணம், உடமைகள் மற்றும் நகைகள் முழவதையும் ஒப்படைக்குமாறு கோரிக்கை வைத்தார்கள். ஒவ்வொரு நபருக்கும் தலைக்கு 150 ரூபா மட்டுமே கொண்டு செல்ல அனுமதி வழங்கப்பட்டது. ஒவ்வொரு நபருக்கும் ஒரு செற் உடைகள் மட்டுமே கொண்டு செல்ல அனுமதிக்கப்பட்டது. இதை எதிர்த்து வலுவற்ற சில எதிர்ப்புகள் எழுந்தன. அதி நவீன ஆயுதங்களை சுழற்றிக் காண்பித்ததோடு அடக்கும் தொனியில் எழுப்பப்பட்ட பயமுறுத்தல்கள் முஸ்லிம்களை அமைதியாக்கியது. உடைகள் இருந்த பெட்டிகள் மற்றும் இதர உடமைகள் பறிமுதல் செய்யப்பட்டன. அவைகளைத் திறந்து தெரிவு செய்யப்பட்ட உடைகள் வெளியே எடுக்கப்பட்டன. ஒரு நபர் காற்சட்டை அணிந்திருந்தால் அவருக்கு மற்றொரு செற் காற்சட்டையும் சேட்டும் வழங்கப்பட்டது. ஒரு நபர் சாரம் அணிந்திருந்தால் அவருக்கு மேலதிகமாக ஒரு சாரமும் சேட்டும் வழங்கப்பட்டது. அனைத்து பணம் மற்றும் சொத்துக்களின் தாய் உறுதி,காசோலை புத்தகங்கள்,மற்றும் தேசிய அடையாள அட்டை போன்றவை உட்பட ஆவணங்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டன.

பெண்கள் மற்றும் யுவதிகளிடமிருந்து நகைகள் உருவி எடுக்கப்பட்டன. சில பெண் புலி அங்கத்தவர்கள் மிகவும் அரக்கத்தனமாக நடந்து கொண்டார்கள், காது துளைகளில் இருந்து இரத்தம் வடியும்படி கூடி தோடுகளை இழுத்துப் பறித்தார்கள். குழந்தைகளையும் அவர்கள் விட்டு வைக்கவில்லை. ஒரு கைக்கடிகாரம் கூட மிஞ்சவில்லை. யாழ்ப்பாண முஸ்லிம்கள் பின்னர் தெரிவித்தது, மட்டக்களப்பைச் சேர்ந்த கரிகாலன் இந்த முழுச் செயற்பாட்டையும் மேற்பார்வை செய்து கொண்டிருந்தார் என்று.

குறைந்தது 35 பணக்கார முஸ்லிம் வர்த்தகர்கள் கடத்தப்பட்டார்கள். அவர்கள் எல்.ரீ.ரீ.ஈ யினால் தடுத்து வைக்கப்பட்டார்கள். சில முஸ்லிம் நகைக்கடைக்காரர்கள் மறைத்து வைத்துள்ள நகைகளின் விபரங்களைப் பெறுவதற்காக சித்திரவதை செய்யப்பட்டார்கள். மற்றவர்கள் முன் வைத்து அடித்ததில் ஒரு நகைக்கடைக்காரர் கொல்லப்பட்டார். பின்னர் அவர்களை விடுவிப்பதற்கு பெருந்தொகையான பணம் கப்பமாகக் கோரப்பட்டது. சிலர் 3 மில்லியன் ரூபா வரை செலுத்தியுள்ளார்கள். கடத்தப்பட்ட ஆட்கள் பின்னர் வந்த வருடங்களில் கட்டம்கட்டமாக விடுவிக்கப்பட்டார்கள். எனினும் 13 பேர்கள் திரும்பவேயில்லை மற்றும் அவர்கள் இறந்திருக்கலாம் எனக் ஊகிக்கப்படுகிறது.

யாழ்ப்பாண முஸ்லிம்களை வெளியேற்றியதின் பின்னர் எல்.ரீ.ரீ.ஈ அந்த இடத்தை கயிறுகளால் சுற்றிக்கட்டியிருந்தார்கள். 1990 நவம்பர் 2 ந்திகதிய வீரகேசரியில் பிரசுரித்திருந்தது, முஸ்லிம்கள் திரும்பி வரும்வரை அவர்கள் சொத்துக்களை பாதுகாப்பதற்காகவே இப்படிச் செய்யப்பட்டது என்று. விளக்கமில்லாத சில முஸ்லிம்கள்கூட தங்கள் வெளியேற்றம் தற்காலிகமானது என்றுதான் நினைத்தார்கள். உண்மையான விவகாரங்களின் தன்மையை அவர்கள் விளங்கிக் கொள்வதற்கு சில மாதங்கள் எடுத்தன. காலம் செல்லச்செல்ல ஒரு காலத்தில் செல்வந்தர்களாக இருந்தவர்கள் இப்போது ஓட்டாண்டி ஆனார்கள் – தங்களால் புதிய சூழ்நிலையுடன் ஒத்துப்போக இயலாது என்பதை முஸ்லிம்கள் உணர்ந்தார்கள். வருடங்கள் செல்லச்செல்ல அவர்கள் பெரிதும் சரிவடைந்தார்கள்.

யாழ்ப்பாண முஸ்லிம்களின் விடயத்தில் குறிப்பாக எல்.ரீ.ரீ.ஈ மிகவும் மோசமாக நடந்து கொண்டுள்ளது. யாழ்ப்பாண முஸ்லிம்கள் யாழ் மாநகரசபையின் இரண்டு அல்லது மூன்று நிருவாக வட்டாரங்களில் அடர்த்தியான சனத்தொகையாக செறிந்து வாழ்ந்தார்கள். சோனக தெரு, ஓட்டுமடம் மற்றும் பொம்மைவெளி போன்ற இடங்களே அவர்களது பிரதேசங்களாகும். யாழ்ப்பாண சமூகத்தில் அவர்கள் ஒரு ஒருங்கிணைந்த பகுதி. ஒரு காலத்தில் மேயர் அல்பிரட் துரையப்பா அவர்களால் யாழ்ப்பாண புதிய சந்தைக் கட்டிடம் கட்டப்பட்டபோது அது கணிசமான அளவு முஸ்லிம்களின் ஆதிக்கத்திலேயே இருந்தது. மூன்று தொகுதிகளில் இரண்டு தொகுதிகள் முஸ்லிம்களின் ஏகபோக உரிமையாக இருந்தது. இரும்பு போன்ற வன்பொருட்கள், லொறி போக்கு வரத்து, நகை வியாபாரம் மற்றும் இறைச்சி போன்ற வர்த்தகங்களில் முஸ்லிம்களே ஆதிக்கம் செலுத்தினார்கள். யாழ்ப்பாண முஸ்லிம்கள் யாழ்ப்பாணத் தமிழர்களைப் போலவே பெருமைக்குரிய ஒரு கல்விப் பாரம்பரியத்தை கட்டியெழுப்பியிருந்தார்கள். முன்னாள் நிருவாகசேவை உத்தியோகத்தரும் ஸாகிரா கல்லூரி அதிபருமான ஏ.எம்.ஏ. அசீஸ், உயர் நீதிமன்ற நீதியரசர் அப்துல்காதர், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி எம்.எம்.ஜமீல், கல்விப் பணிப்பாளர் மன்சூர் போன்றவர்கள் யாழ்ப்பாண முஸ்லிம்களில் சில முன்னணி பிரமுகர்கள் ஆவர். பலர் மாநகரசபை அங்கத்தவர்களாக இருந்துள்ளார்கள் மேலும் பஷீர், மற்றும் சுல்தான் ஆகிய இரண்டு மாநகரசபை அங்கத்தவர்கள் யாழ்ப்பாண துணை மேயர் மற்றும் பதில் மேயர் ஆகவும் கடமையாற்றியுள்ளார்கள்.

வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களில் பெரும்பாலானவர்கள் தற்காலிகமாக புத்தளம் மாவட்டத்தில் குடியேறினார்கள். அநேகர் தங்கள் வழிகளை வவுனியா, நீர்கொழும்பு மற்றும் கொழும்பு மாவட்டங்களில் அமைத்துக்கொண்டார்கள். மற்றவர்கள் அனுராதபுரம், குருநாகல் மாத்தளை மற்றும் கண்டி மாவட்டங்களில் குடியேறினார்கள். யாழ்ப்பாண முஸ்லிம்களில் ஓரளவு பேர் வெளிநாடுகளுக்கு அகதிகளாகச் சென்றார்கள்.

கல்பிட்டி மற்றும் புளிச்சகுளம் பகுதிகள்

வடக்கு பெருநிலப் பரப்பில் இருந்து இடம்பெயர்ந்த முஸ்லிம்களில் பெருமளjaவு பகுதியினர் கல்பிட்டி மற்றும் புளிச்சகுளம் பிரதேசங்களில் வாழ்கிறார்கள். யாழ்ப்பாண குடாநாட்டில் இருந்து இடம்பெயாந்தவர்களில் பெருமளவு பகுதியினர் புத்தளம் தில்லையாடி பகுதியில் உள்ளனர். 20,000 க்கும் மேலான முஸ்லிம்கள் இன்னமும் உள்ளக இடம்பெயர்ந்தவர்களுக்காக அமைக்கப்பட்ட முகாம்களிலேயே கிடந்து தவித்து வருகிறார்கள்.

இதற்கிடையில் வெளியேறிய முஸ்லிம்களின் வீடுகளில் அவர்கள் விட்டுச்சென்ற பொருட்களில் கிட்டத்தட்ட எல்லாவற்றையுமே எல்.ரீ.ரீ.ஈ கொள்ளையடித்தது. அநேக வீடுகளில் இருந்து ஓடுகள், மரச் சட்டங்கள், கதவுகள், யன்னல்கள், போன்றவை உருவிச் செல்லப்பட்டன. கொள்ளையடிக்கப் பட்ட தளபாடங்களில் அதிகமானவை மக்கள் கடை எனப்படும் எல்.ரீ.ரீ.ஈயின் கடைகள் மூலம் தமிழர்களுக்கு விறபனை செய்யப்பட்டன. யுத்த நிறுத்தத்துக்கு பின்னர் வடக்குக்கு திரும்பிய முஸ்லிம்கள் சிலர் தங்கள் உடமைகள் மற்றவர்களுடைய வீடுகளிலும் மற்றும் வியாபார ஸ்தலங்களிலும் இருப்பதை அடையாளம் கண்டனர். அநேக முஸ்லிம்களின் வீடுகள், காணிகள், வாகனங்கள் போன்றவை சட்டவிரோதமாக எல்.ரீ.ரீ.ஈயினால் தமிழர்களுக்கு விற்பனை செய்யப்பட்டது.

1995 – 96 ல் யாழ்ப்பாண குடாநாடு திரும்பக் கைப்பற்றப்பட்டது மற்றும் மே 2009ல் இராணுவம் எல்.ரீ.ரீ.ஈ யினை தோற்கடித்த பின்னர் 2009ல் வன்னியை கைப்பற்றியதின் விளைவாக வட மாகாணத்தில் முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் முன்னெடுக்க கூடியதாக இருந்தது. போர் முடிவடைந்த போதிலும் மீள்குடியேற்ற வேகம் இன்னும் அதிகம் முன் செல்லவேண்டியுள்ளது.

1981ம் ஆண்டு சனத்தொகை கணக்கெடுப்பின்படி வட மாகாணத்தில் உள்ள முஸ்லிம்களின் சனத்தொகை 50,991 அல்லது 4.601 விகிதம் ஆகும். முஸ்லிம் சமூகத் தலைவர்கள் சொல்வதின்படி 1990ல் கட்டாய வெளியேற்றம் நடைபெற்றபோது முஸ்லிம்களின் எண்ணிக்கை 81,000 ஆக இருந்ததாம். இதில் அடங்குவது யாழ்ப்பாணத்தில் 20,000, மன்னாரில் 45,000, முல்லைத்தீவில் 7,000, வவுனியாவில் 8,000 மற்றும் கிளிநொச்சியில் கிட்டத்தட்ட 1000 பேர்கள். வவுனியா மற்றும் நயினாதீவு ஆகிய இடங்களில் இருந்து கட்டாயமாக வெளியேற்ற தடை விதிக்கப்பட்டதால் இந்த தொகை கிட்டத்தட்ட 75,000 ஆகிறது. திரளான வெளியேற்றத்தை அடுத்து உடனடியாக உள்ளக இடம்பெயர்ந்தவர்கள் முகாமில் 67,000 முஸ்லிம் மக்கள் தங்களை பதிவு செய்துள்ளார்கள். மீதமுள்ளவர்கள் முகாமுக்கு வெளியே உறவினர்களுடனும் மற்றும் நண்பர்களுடனும் தங்கியிருந்துள்ளார்கள்.

25 வருடங்களின் பின்னர் இயற்கையான அதிகரிப்பின்படி இந்த சனத்தொகை கிட்டத்தட்ட இருமடங்காக அதிகரித்திருக்கலாம் என எதிர்பார்க்கப் படுகிறது. யுத்தம் நிறைவடைந்ததின் பின்னர் கிட்டத்தட்ட 75 விகிதமான வடபகுதி முஸ்லிம்கள் வடக்குக்கு திரும்பிச் சென்று மீள் குடியேறுவதற்கான தங்கள் விருப்பத்தை பதிவு செய்துள்ளார்கள். ஆனால் அவ்வாறு செய்யச் சம்மதித்த போதிலும், 2012 சனத்தொகை கணக்கெடுப்பு அடையாளப் படுத்துவது, ஒரு சிறிய அளவிலான முஸ்லிம்களே தங்கள் தாயகத்துக்கு நிரந்தரமாக திரும்பிச் சென்றுள்ளார்கள் என்று. 2012 சனத்தொகை கணக்கெடுப்பு பிரகாரம் வட மாகாணத்தில் உள்ள முஸ்லிம் சனத்தொகை மற்றும் விகிதம் என்பன மாவட்டங்களின் படி முறையே மன்னார் 16,087 – 16.2மூ, வவுனியா 11,700 – 6.8மூ, யாழ்ப்பாணம் 2139 – 0.4மூ, முல்லைத்தீவு 1760 – 0.6மூ, மற்றம் கிளிநொச்சி 678 – 0.6மூ. 1990 ல் நடந்த வெளியேற்றத்தின்; மதிப்பீட்டுடன் ஒப்பிட்டால், அப்போது முற்றாக பாதிக்கப்படாத வவுனியாவை தவிர ஏனைய மாவட்டங்களில் முஸ்லிம்களின் சனத்தொகை குறிப்பிடத்தக்க அளவு குறைவையே காண்பிக்கிறது. 2012 சனத்தொகை கணக்கெடுப்பின்படி வடமாகாணத்தில் உள்ள முஸ்லிம்களின் சனத்தொகை 32,396 மட்டும் அல்லது 3.061 %

இன்னமும் மிதக்கும் சனத்தொகை

திரும்பிச்சென்ற இடம்பெயர்ந்த முஸ்லிம்களில் அநேகர் இன்னமும் தங்கள் சொந்த இடங்களில் நிலையான வேர்களை உறுதி செய்யவில்லை. அவர்கள் இன்னமும் ஒரு மிதக்கும் சனத்தொகை கணக்கெடுப்பாகவே உள்ளனர். வட பகுதி முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தின் இந்;த மோசமான நிலைக்கு சமூக, கலாச்சார, பொருளாதார மற்றும் அரசியல் என்று பல காரணங்கள் உள்ளன. இந்த சிக்கலான காரணங்கள் ஆய்வு செய்யப்பட்டு எதிர்காலத்தில் ஒரு சந்தர்ப்பத்தில் விரிவாக விளக்கப்பட வேண்டும். இப்போதைக்கு என்னுடைய முந்தைய கட்டுரைகள் பலவற்றில் என்னால் சுட்டிக்காட்டப்பட்ட சில கருத்துக்களை மீளவும் வலியுறுத்தி இதை நிறைவு செய்ய விரும்புகிறேன்.

நான் சந்தித்த சில வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களிடம் நான் கண்ட மிகவும் உயர்ந்த பண்பு தமிழர்கள்மீது கண்ணுக்குத் தெரியும்படியான கசப்புணர்வு எதுவும் அவர்களிடம் இல்லை. தங்களுடைய இக்கட்டான நிலைக்குப் பொறுப்பும் அதற்கான காரணமும் எல்.ரீ.ரீ.ஈ என்பதை அவர்கள் உணர்ந்துள்ளார்கள். சாதாரண தமிழனை அதற்காக அவர்கள் பழிப்பதில்லை. அரசாங்கம் மற்றும் எல்.ரீ.ரீ.ஈ ஆகிய இரண்டு தரப்பினரதும் கரங்களுக்கு இடையில் அகப்பட்டு தடுமாறும் தமிழரின் பரிதாப நிலையை கண்டு அவர்களும் இரக்கப்படுகிறார்கள். இவை அனைத்துக்கும் மேலாக தமிழ் மொழி,இலக்கியம் மற்றும் ஊடகங்கள் மீது அவர்களுக்கு உள்ள விருப்பம் சிறிதும் குறையவில்லை. மேலும் யாழ்ப்பாணம் பற்றிய பசுமையான அவர்களது பழைய நினைவுகளை இன்னமும் மீட்டிக்கொண்டிருக்கிறார்கள் வடக்கும் தங்களது தாயகம் என்று பெருமையுடன் உறுதிப்படுத்த அவர்கள் மறப்பதில்லை. அவர்களுக்கு பாரிய அநீதி இழைக்கப்பட்ட போதும் அவர்கள் காட்டும் இந்தப் பெருந்தன்மை தமிழர் சமூகத்தை பெரிதும் வெட்கித் தலைகுனிய வைக்கிறது. ஒரு சில குரல்களைத் தவிர எல்.ரீ.ரீ.ஈயினால் முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட இந்த அநீதிக்கு எதிராக சக்திவாய்ந்த கூக்குரல் எதுவும் எழவில்லை. வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் அனைவருக்கும் முழு இழப்பீடு வழங்கி அவர்கள் சொத்துக்களை திரும்ப ஒப்படைப்பதுடன் அவர்களது; முந்தைய வீடுகளில் அவர்களை மீளக் குடியேற்றவதுடன் தேவைப்பட்டால் மாற்று ஏற்பாடுகளையம் அவர்களுக்கு வழங்கவேண்டும் என்று தீவிரமான ஒரு பெரிய கோரிக்கை தமிழர்களால் முன்வைக்கப்பட வேண்டும்.

இவ்வாறான ஒரு பின்னணியில், வடக்கிற்கு முஸ்லிம்கள் திரும்பி வந்த மீள்குடியேறுவதற்கு எதிராக தமிழர்களில் ஒரு பகுதியினர் சீற்றமும் பகைமையும் காண்பிப்பது எனக்கு பெரிதும் வேதனை அளிக்கிறது. தமிழ் சமயப் பிரமுகர்கள், அதிகாரிகள், தொழில் நிபணர்கள், வாத்தகர்கள் மற்றும் அரசியல்வாதிகள் போன்றவர்கள், திரும்பி வந்த அவர்களை தொந்தரவு செய்வதினாலும் மற்றும் அவர்கள் நிரந்தரமாக மீள்குடியேறுவதை தடுப்பதற்கு தடைகளை மேற்கொள்வதினாலும் குற்றம் புரிந்தவர்களாகிறார்கள். தசாப்தங்களுக்கு முன்னால் வேரோடு களையப்பட்ட ஒரு அங்கமான மக்கள்,தங்கள் சொந்த வாழ்விடங்களுக்கு திரும்பி வந்து தங்களை மீள நிறுவ முயலும்போது சமூக உளவியல் மற்றும் சமூக பொருளாதார பிரச்சினைகள் எழுவதற்கான சாத்தியங்கள் ஏற்படும் என்பதை ஒருவர் புரிந்துகொள்ள வேண்டும். தாங்கள் கட்டாயமாக வெளியேற்றப்பட்ட இடத்தில் ஒரு புதிய பொருளாதாரம் மற்றும் வாழ்க்கை ஒழுங்கு நிலவும் அதேவேளை, திரும்பி வருபவர்களும் உள்ளக இடம் பெயர்ந்தவர்களாக ஒரு புதிய வாழ்க்கைக்கு தங்களை பழக்கிக் கொண்டுள்ளார்கள். அத்தகைய ஒரு சூழ்நிலையில் எதிர்ப்புகள் தோன்றுவது தவிர்க்க முடியாதது. வர்த்தகப் போட்டிகளும் ஏற்படும், அதிகம் தொழில் முனைவோரான முஸ்லிம்கள் தங்களது சக தமிழர்களுக்கு போட்டியாக தங்கள் வர்த்தகச் செயல்பாடுகளை நிறுவவோ அல்லது விரிவாக்கவோ வழி தேடுவார்கள்.

வடக்கும் எங்களது தாயகம்தான்

நிலமை மேலும் சிக்கலாவதுக்கான காரணம் அநேக முஸ்லிம் குடும்பங்கள் வெளியேற்றப்பட்ட தருணத்தில் ஒற்றை குடும்ப அலகாக இருந்தது, இப்போது பன்மையான குடும்ப அலகாக பெருக்கம் அடைந்துள்ளது. அந்த நேரத்தில் சிறுவர்களாகவோ அல்லது திருமணம் ஆகாதவர்களாகவோ இருந்தவர்கள் இப்போது திருமணம் செய்து தங்களுடைய சொந்தப் பிள்ளைகளையும் கொண்டுள்ளார்கள். ஆரம்பத்தில் ஒரு குடும்பத்தின் வீடாக இருந்தது இப்போது பல குடும்பங்களுக்கு போதுமானதாக இருக்காது. எனவே அதிகம் நிலம் அவசியமாகிறது. அதிகமான அரச காணிகளைக் கையகப்படுத்தி திரும்பி வரும் இடம்பெயர்ந்த முஸ்லிம்களை மீள்குடிN;யற்றம் செய்யும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது எதிர்ப்புக்கள் மற்றும் ஆட்சேபனைகள் எழலாம். என்னை மிகவும் வருத்தமடையச் செய்வது என்னவென்றால், வடக்கிற்கு திரும்பி வர விரும்பும் முஸ்லிம்களின் பரிதாபகரமான நிலமையை பற்றி அநேகமான முன்னணி தமிழர்கள் காட்டவேண்டிய பச்சாத்தாபம் மற்றும் புரிதல் என்பன அவர்களிடம் பற்றாக்குறையாக இருப்பதுதான். கட்டாயமாக வெளியேற்றப்பட்ட வடக்கு முஸ்லிம்கள் தமிழர்களிடம் தொடர்ச்சியாக நினைவுபடுத்துவது “வடக்கு எங்களின் தாயகம் கூட” என்றுதான்.

ஒஸ்மானியா கல்லூரி சிறார்கள் - ஆகஸ்ட் 2014

ஒஸ்மானியா கல்லூரி சிறார்கள் – ஆகஸ்ட் 2014

2013ல் வடக்கு மாகாணசபை தேர்தல்களில் வெற்றிபெற்ற ரி.என்.ஏ வடக்கில் உள்ள முஸ்லிம் மக்கள்மீது தங்களது சாதகமான அணுகுமுறையை வெளிக்காட்டுவதற்காக தங்களது போனஸ் ஆசனம் ஒன்றிற்கு முஸ்லிம் ஒருவரை நியமித்தது. நீட்டப்பட்ட இந்த நட்புக்கரத்தை மேலும் விரிவாக்குவதற்காக, முஸ்லிம்களை வெளியேற்றியதற்காக வருத்தம் தெரிவிப்பதற்கும் அதேபோல வட மாகாணத்தில் வாழும் அனைத்து சமூகங்களினதும் ஐக்கியம் மற்றும் இனங்களுக்கிடையிலான ஒற்றுமை என்பனவற்றை வலியுறுத்துவதற்கு பொருத்தமான வகையில் நினைவுச்சின்னம் ஒன்றை நிறுவ வேண்டும். புதிதாகத் தெரிவு செய்யப்பட்ட ரி.என்.ஏ நிருவாகம் விழ்த்தப்பட்ட புலிகளுக்கு மாத்திரம் யுத்த நினைவுச்சின்னத்தை நிறுவும் பயனற்ற முயற்சிகளில் ஈடுபடுவதைக் காட்டிலும் இதைச் செய்வது சிறந்த ஒரு நடவடிக்கையாக இருக்கும். மிகவும் முக்கியமாக வடக்கு மாகாணசபை மற்றும் வட மாகாண பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் வடக்கில் முஸ்லிம்களை மீள குடியேற்றுவதற்கு மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்கு முழு ஒத்துழைப்பும் மற்றும் உதவிகளும் வழங்கவேண்டும்.

வட மாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் இந்த வருட ஆரம்பத்தில் கடந்த வருடங்களில் ஸ்ரீலங்காவில் தமிழர்கள்மீது மேற்கொள்ளப்பட்டதாக குற்றம் சாட்டப்படும் இன அழிப்பு பற்றி விசாரிக்க சர்வதேச விசாரணைக்கு அழைப்பு விடுத்து தீர்மானம் ஒன்றை வடமாகாணசபையில் அறிமுகம் செய்தார். வட மாகாணசபையால் அது ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. இந்தப் பின்னணிக்கு எதிராக பலராலும் ஒரு கேள்வி எழுப்பப்படுகிறது “ ஏன் வடக்கிலிருந்து திரளான முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டது வடக்கில் இனச்சுத்திகரிப்பு நடந்தது என்று கணக்கு காட்டவில்லையா?”. முதலமைச்சா விக்னேஸ்வரன் மற்றும் அவரது வடக்கு மாகாணசபை என்பன இந்தச் சம்பவத்திற்கு வருத்தம் தெரிவிப்பதுடன் நேர்மையான தமிழ் – முஸ்லிம் நல்லிணக்கத்துக்கு வழி தேடும் வகையில் ஏகமனதாக ஒரு தீர்மானத்தை நிறைவேற்றுமா?

தேசிய ரீதியிலும் மற்றும் உலகளாவிய ரீதியிலும் நல்லிணக்கம் பற்றி பேசப்பட்டு வரும் ஒரு சூழ்நிலையில் வடக்கு தமிழர்கள் மற்றும் முஸ்லிம்கள் இடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டியது அவசரமான தேவையாக உள்ளது. ஒரு வலிமையானதும் உண்மையானதுமான நட்புக்கரம் முஸ்லிம்களை நோக்கி நீட்டப்பட வேண்டும். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கட்டுப்பாட்டில் உள்ள வடக்கு மாகாணசபையால், 25 வருடங்களுக்கு முன்பு எல்.ரீ.ரீ.ஈ யினால் மேற்கொள்ளப்பட்ட ஒரு திரளான வெளியேற்றத்திற்காக முஸ்லிம்களிடம் உண்மையானதும் மற்றும் பணிவானதுமான ஒரு பரந்த மன்னிப்பு கோரப்பட வேண்டும்.

ஆங்கிலத்தில் டி.பி.எஸ்.ஜெயராஜ் இனால் எழுதப்பட்ட
How and Why the LTTE Evicted Muslims from the Northern Province 25 Years ago in “Black October 1990” கட்டுரையியின் தமிழாக்கம்: தேனீ மொழிபெயர்ப்பு: எஸ்.குமார்

நன்றி: தேனீ

டி.பி.எஸ். ஜெயராஜ் உடன் தொடர்பு கொள்ள்வதற்கான மின் அஞ்சல்: dbsjeyaraj@yahoo.com

Share on FacebookTweet about this on TwitterShare on LinkedInShare on Google+Print this page