சிலந்திகளாக புலிகள்! எல்.ரீ.ரீ.ஈ அங்கத்தவர்கள் யாழ்ப்பாணத்தில் சுயேச்சை குழுவாகப் போட்டியிடுகிறார்கள்

டி.பி.எஸ்.ஜெயராஜ்

பதிவு செய்யப்பட்ட 21 அரசியல் கட்சிகள் மற்றும் 201 சுயேச்சைக் குழுக்கள் என்பனவற்றிலிருந்து 6,151 வேட்பாளர்கள் 2015 ஓகஸ்ட் 17 ல் நடைபெறுவதற்கு திட்டமிடப் பட்டுள்ள பாராளுமன்றத் தேர்தல்களில் போட்டியிடுகிறார்கள். இதில் 21 கட்சிகளிலிருந்து 3,653 பேர்களும் மற்றும் சுயேச்சைக் குழுக்களிலிருந்து 2,498 பேர்களும் போட்டியிடுகிறார்கள். எதிர்பார்த்த வகையில் பொதுவான தனிக் கவனம் தேசிய ரீதியிலும் மற்றும் பிராந்திய ரீதியிலும் முக்கியத்துவம் பெற்ற பிரதான அரசியல் கட்சிகள் மீதே செலுத்தப்பட்டுள்ளது. எனினும் வடக்கில் போட்டியிடும் குறிப்பிட்ட சுயேச்சைக் குழு ஒன்று அதிக கவனத்தை ஈர்த்துள்ளது. இது எதனாலென்றால் அந்தக் குழு தமிழீழ விடுதலைப் புலிகளின்(எல்.ரீ.ரீ.ஈ) முன்னாள் உறுப்பினர்களைக் கொண்டுள்ளது.

CFD

பல வகையான முன்னாள் புலிப் போராளிகள் யாழ்ப்பாண மாவட்டத்தில் சுயேச்சைக் குழு இலக்கம் 4 ல் பாராளுமன்றத் தேர்தல்களில் போட்டியிடுகிறார்கள். யாழ்ப்பாண தேர்தல் மாவட்டம் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி நிருவாக மாவட்டங்களைக் கொண்டிருந்தபோதும், அதன் சனத்தொகை குறைவடைந்துள்ளமையினால் அதிலிருந்து இம்முறை ஏழு அங்கத்தவர்கள் மட்டுமே பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட உள்ளார்கள், போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலில் பத்து பேர்கள் உள்ளார்கள். சுயேச்சைக் குழு இலக்கம் 4 க்கு அதன் சின்னமாக சிலந்தி ஒதுக்கப்பட்டுள்ளது. பட்டியலில் உள்ள பத்து பேர்களில் ஒருவர் மட்டும் எல்.ரீ.ரீ.ஈ அங்கத்தவர் இல்லை. அவர் யாழ்ப்பாணம் மற்றும் கொழும்பிலிருந்து பிரசுரமாகும் முறையே உதயன் மற்றும் சுடரொளியின் முன்னாள் ஆசிரியர் நடேசபிள்ளை வித்தியாதரன் ஆவார். வித்தி என்று பிரபலமாக அழைக்கப்படும் வித்தியாதரன் இந்த சுயேச்சைக் குழுவின் அங்கீகரிக்கப்பட்ட தலைவராக உள்ளார்.

அந்தப் பட்டியலில் உள்ள ஏனையவர்கள் வேந்தன் என்கிற சிவநாதன் நவீந்திரன், துளசி என்கிற கணேசலிங்கம் சந்திரலிங்கம், காமினி என்கிற ராசையா தருமகுலசிங்கம், சாள்ஸ் என்கிற காளிக்குட்டி சுப்பிரமணியம், இயல் என்கிற குமாரவேலு அகிலன், கங்கை ஆத்மன் என்கிற தங்கராசா தேவதாஸன், கங்கை அழகன் என்கிற விநாயகசுந்தரம் மோகனசுந்தரம், தனி அரசன் என்கிற வீரன் சக்திவேல் மற்றும் ரவிராஜ் என்கிற சிவகுரு முருகதாஸ் ஆகியோர்கள். இவர்கள் அனைவரும் முன்னாள் எல்.ரீ.ரீ.ஈ அங்கத்தவர்கள் 2009ல் யுத்தம் முடிவடைந்ததும் இவர்கள் அனைவரும் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்கள். புனர்வாழ்வு அளிக்கப்பட்டதின் பின்னர் இவர்கள் விடுவிக்கப் பட்டிருந்தார்கள். அவர்களில் சிலர் கால்களை இழந்து அங்கவீனர்களாக இருந்தபடியால் விடுதலை பெறுவதற்கு முன்னுரிமை வழங்கப்பட்டிருந்தது. புலிச் சின்னத்தில் போட்டியிடுபவர்களில் அநேகர் இன்னமும் தங்கள் உடல்களில் உலோகத் துண்டுகளை காவித் திரிகிறார்கள்.

இந்த வேட்பாளர்களுக்கிடையில் வேந்தன் என்கிற நவீந்திரன் பின்னாளில் பெருமளவு செய்திகளில் அடிபட்டவராவார், அநேக பத்திரிகைகள் இந்த முன்னாள் – புலி எல்.ரீ.ரீ.ஈயின் முன்னாள் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மெயப்பாதுகாவலர்களில் ஒருவர் என்பதை பிரபலப் படுத்தியிருந்தன. யுத்தத்தில் ஒரு காலை இழந்துள்ள வேந்தன் எல்.ரீ.ரீ.ஈ யினரின் வான்புலிகளில் ஒரு அங்கத்தவர் கூட. துளசி என்கிற சந்திரலிங்கம் எல்.ரீ.ரீ.ஈயின் நிருவாகச் செயலகத்தை சேர்ந்தவர். காமினி என்கிற தர்மகுலசிங்கம் எல்.ரீ.ரீ,ஈ யினது சாள்ஸ் அன்ரனி காலாட் படை பிரிவில் பணியாற்றி ஒரு படைப் பிரிவிற்கு தலைமையேற்றவர். சாள்ஸ் என்கிற ச1ுப்பிரமணியம் எல்.ரீ.ரீ.ஈயின் கிட்டு பீரங்கிப் படையணியில் அங்கத்தவராக இருந்தவர். இயல் என்கிற அகிலன் எல்.ரீ.ரீ.ஈயின் கல்வி அபிவிருத்திச் செயலகத்தில் பேபி சுப்பிரமணியத்தின் கீழ் கணணி இயக்குபவராக பணியாற்றியுள்ளார். ஏனையவர்களான கங்கை ஆத்மன் என்கிற தேவதாசன் எல்.ரீ.ரீ.ஈ யின் அச்சமூட்டும் புலனாய்வுப் பிரிவுத் தலைவரான பொட்டு அம்மானின் கீழ் ஒரு புலனாய்வாளராக வேலை செய்துள்ளார். கங்கை அழகன் என்கிற மோகனசுந்தரம் எல்.ரீ.ரீ,ஈ யின் பொலிஸ் பிரிவான காவல்துறையில் அதன் முன்னாள் ஐ.ஜி.பி யாக இருந்து பின்னாளில் எல்.ரீ.ரீ.ஈ யின் அரசியல் பிரிவுத் தலைவராக மாறிய நடேசனின் கீழ் ஒரு அதிகாரியாக கடமையாற்றியுள்ளார். தனி அரசன் என்கிற சக்திவேல் எல்.ரீ.ரீ.ஈ யின் வானொலியான புலிகளின் குரலில் பணியாற்றியுள்ளார். ரவிராஜ் என்கிற முருகதாஸ் ரீடொர் எனப்படும் எல்.ரீ.ரீ.ஈ யின் தமிழீழழ பொருளாதார அபிவிருத்தி பிரிவில் பணியாற்றியவர். முன்பு குறிப்பிட்டது போல தற்பொழுது ‘மலரும்’ எனும் இணையத்தளத்தை நடத்திவரும் ஊடகவியலாளரான வித்தியாதரன் மட்டும் எல்.ரீ.ரீ.ஈ யின் ஒரு அங்கத்தவர் இல்லை. எனினும் வித்தி தன்னை இப்போது ஒரு ஊடகப் போராளி என வர்ணித்து வருகிறார்.

சிலந்திகளாக மாறும் புலிகள்.

சிலந்தி சின்னத்தில் சுயேச்சைகளாக போட்டியிடும் அனைத்து முன்னாள் எல்.ரீ.ரீ.ஈ அங்கத்தவர்களுமே தங்கள் க.பொ.த சாதாரண பரீட்சையில் சித்தியடைந்தவர்கள். அவர்களில் சிலர் உயர் தரத்தினையும் முடித்துள்ளார்கள். யுத்தத்தின் பின்னர் புனர்வாழ்வு பெற்று விடுதலையாகி இருப்பதினால் பெரும்பாலான முன்னாள் – புலிகள் சமூத்துடன் மீள் ஒருங்கிணைவதை கடினமாகக் காண்கிறார்கள். பொருளாதார வாய்ப்புகளும் கூட அரிதாகவே உள்ளன. ஆயுதம் தாங்கிய பல முன்னாள் தோழர்கள் செய்ததைப் போல வெளி நாடுகளுக்குச் செல்லவும் இவர்களுக்கு இயலாமல் உள்ளது. அந்தப் பின்னணியில் தேர்தலில் போட்டியிடும் தறபோதைய நடவடிக்கை ஒரு ஆக்கபூர்வமான சவாலகவே உள்ளது, தவிரவும் முன்னாள் எல்.ரீ.ரீ.ஈ அங்கத்தவர்கள் ஜனநாயகத்தை தழுவியுள்ளார்கள் மற்றும் புலிகள் சிலந்திகளாக மாறுகிறார்கள் என்று உலகத்துக்கு எடுத்துக்காட்டக் கூடியதாகவும் உள்ளது.

முன்னாள் புலிகளின் தேர்தல் திட்டத்தின் பின்னாலுள்ள இயக்கும் சக்தியாக வித்தியாதரன் இருக்கிறார். சுயேச்சைகளாகப் போட்டியிட்டாலும் முன்னாள் எல்.ரீ.ரீ,ஈ அங்கத்தவர்கள் புதிதாக உருவாக்கப்பட்ட அமைப்பான ‘ஜனநாயகத்துக்கான போராளிகள்’ எனும் இயக்கத்தை சேர்ந்தவர்களாக உள்ளனர், எனினும் அந்த அமைப்புடன் தொடர்பு பட்டவர்கள் ஆங்கிலத்தில் அதை ஜனநாயகத்துக்கான புனிதப் போராளிகள் எனும் அர்த்தம் வரும்படி ‘குருசேடர்ஸ் ஒப் டெமோகிரசி’ (சி.எப்.டி) என்றே விளக்குகிறார்கள் பெரும்பாலான ஆங்கில ஊடகங்களும் அதை அப்படியே (சி.எப்.டி என) குறிப்பிடுகின்றன.

இந்த “சொல் விளையாட்டு’ கடந்த காலங்களில் தமிழ் அரசியல்வாதிகளால் நடத்தப்பட்டதை இப்போது நினைவு படுத்துகிறது. எடுத்துக்காட்டாக 1949ல் இலங்கை தமிழரசுக் கட்சி (ஐ.ரி.ஏ.கே) உருவாக்கப் பட்டபோது, அந்தக் கட்சி ஆங்கிலத்தில் பெடரல் கட்சி (எப்.பி) என்றே சித்தரிக்கப் பட்டது. அதன் நேரடி ஆங்கில மொழி பெயர்ப்பை விட வித்தியாசமானதாக இது இருந்தது. இந்த முரண்பாடு சிங்களவர்கள் மத்தியில் அந்தக் கட்சியை சந்தேகத்துக்கு இடமானதாக்க வழி செய்தது, சமஷ்டி என்கிற போர்வையில் அந்தக் கட்சி தனி நாட்டை உருவாக்க விரும்புகிறது என்று சிங்களவர்கள் நினைத்தார்கள். சமஷ்டி பற்றிய இந்த கற்பனையான அச்சம் சில வட்டாரங்களில் இன்னும் உள்ளது.

சி.எப்.டி கட்சியை அமைப்பதைப் பற்றிய அறிவிப்பு ஜூலை மாத ஆரம்பத்தில் யாழ்ப்பாணம் நல்லூரிலுள்ள புகழ்பெற்ற நல்லூர் கந்தசாமி கோவிலுக்கு வெளியில் வைத்து நடத்தப்பட்டது. இதிலும் கூட குறிப்பிடத்தக்க சில சங்கேத அர்த்தங்கள் உள்ளன. நல்லூர் கந்தசாமி கோவில் சுற்றாடலில் வைத்துத்தான் எல்.ரீ.ரீ.ஈயின் முன்னாள் அரசியல் தலைவர் திலீபன் என்கிற இராசையா பார்த்திபன் 1987ல் சாகும்வரையான தனது உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தினார். செப்ரம்பர் 26ல் அவர் அமரரானார். வித்தியாதரனுடன் சோந்து ஏனைய முன்னாள் புலிகள் நல்லூர் கோவில் முன்னுதாரணத்தை அமைத்தது திலீபனையும் மற்றும் சாகும்வரையான அவரது பட்டினிப் போராட்டத்தை நினைவு படுத்துவதற்கே. கோவில் வளாகத்தில் அமைதியான தியானத்தை மேற்கொண்ட பின்னர் சி.எப்.டி பற்றிய முறையான அறிவிப்பு வெளியிடப்பட்டது. கிட்டத்தட்ட 25 முதல் 30 வரையான முன்னாள் போராளிகள் அங்கு சமூகமளித்திருந்தார்கள்.

வெளிப்படையாக முன்னாள் எல்.ரீ.ரீ.ஈ அங்கத்தவர்களின் ஒரு அமைப்பை உருவாக்கும் யோசனை முன்னாள் புலி அங்கத்தவர்களுடன் பல்வேறு இடங்களில் தொடர்ச்சியாக அமைதியான சில கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டதின் பின்னரே உதயமானது. முன்பு குறிப்பிட்டதைப் போல இந்த கலந்துரையாடல்கள் யாவும் வித்தியாதரனின் முயற்சியின் பயனாகவே ஆரம்பிக்கப்பட்டன, சி.எப்.டியின் உருவாக்கத்துக்கு முக்கியமானதும் மற்றும் தீர்க்கமானதுமான ஒரு பங்களிப்பை அவர் ஆற்றியுள்ளார். சுயேச்சைக்குழு 4 இற்கு தலைமை தாங்குவதற்கு அப்பால் இந்த புதிய அமைப்பின் ஒருங்கிணைப்பாளராகவும் வித்தியாதரன் பணியாற்றுகிறார். சி.எப்.டி நன்றாக நிலைபெற்றதும் அதை விட்டு தலைவணங்கி முழுமனதுடன் வித்தியாதரன் வெளியேறுவார் என்று சொல்லப்படுகிறது. சி.எப்.டியின் நிருவாகச் செயலாளரும் மற்றும் தமிழ் மொழியிலான பேச்சாளருமாக இருப்பவர் கதிர் என்கிற ராசையா கிருபாகரன், இவரும் யுத்தத்தில் தனது ஒரு காலை இழந்தவர்.

விடுதலைப் புலிகளின் மக்கள் முன்னணி

1989ல் எல்.ரீ.ரீ.ஈ ஒரு அரசியல் கட்சியை உருவாக்கியது. இது ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸவின் காலத்தில் அரசாங்கத்துக்கும் மற்றும் புலிகளுக்கும் இடையில் பேச்சுக்கள் நடைபெற்றபோது நடந்தது. தாங்கள் அமைதிப் பேச்சுக்களில் உண்மையாக இருப்பதையும் மற்றும் ஜனநாயக நீரோட்டத்திற்கு வருவதற்கு தயாராக இருப்பதையும் விளக்க வேண்டி எல்.ரீ.ரீ.ஈ இந்த அரசியற் கட்சியை ஆரம்பித்தது. அது ஒரு ஏமாற்று நடவடிக்கை. எல்.ரீ.ரீ.ஈ தான் ஜனநாயகத்தை தழுவுவதில் உண்மையாக இருப்பதாக பிரேமதாஸவையும் மற்றும் சமாதானத்துக்கு சாதகமான பரப்புரையாளர்களையும் ஏமாற்றுவதற்காக விடுதலைப் புலிகள் மக்கள் முன்னணி (பி.எப்.எல்.ரி) என்கிற கட்சியை ஆரம்பித்தது.

பி.எப்.எல்.ரி யின் பிறப்பு கொழும்பிலுள்ள கலதாரி மெரிடியன் ஹோட்டலில் வைத்து அறிவிக்கப் பட்டது. எல்.ரீ.ரீ.ஈயின் முன்னாள் உதவித் தலைவர் கோபாலசுவாமி மகேந்திரராஜா என்கிற மாத்தையா தலைவராகவும் புலிகளின் முன்னாள் அரசியல் பிரிவு தலைவர் யோகி என்கிற யோகரட்னம் யோகி பொதுச்செயலாளராகவும் இருந்தனர். மட்டக்களப்பு மாவட்டம் வாகரையில் பி.எப்.எல்.ரி ஒரு மாநாட்டையும் நடத்தியது. அனைத்துக் கட்சிகள் மாநாட்டில் அதற்கு பார்வையாளர் அந்தஸ்தும் கிடைத்தது. ஜூன் 1990 ல் அரசாங்கத்துக்கும் எல்.ரீ.ரீ.ஈக்கும் இடையில் போர் மூண்டது. சில வருடங்களின் பின்னர் புலிகளின் பெருந்தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் கட்டளைப்படி பி.எப்.எல்.ரி கலைக்கப்பட்டது. பி.எப்.எல்.ரி யின் தலைவர் மாத்தையா கட்சிக்கு துரோகமிழைத்த குற்றச்சாட்டின்கீழ் தடுத்து வைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டு பின்னர் கொல்லப்பட்டார். பி.எப்.எல்.ரி யின் செயலாளர் யோகியும் நீண்ட காலம் தடுத்து வைக்கப்பட்டு மற்றும் அதைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட தீவிர விசாரணைக்குப் பின்னர் விடுதலை செய்யப்பட்டார். இதுதான் எல்.ரீ.ரீ.ஈயின் அரசியல் கட்சியின் துயரக் கதை.

ஜனநாயகத்துக்கான வீரர்கள் அல்லது அறப்போராளிகள் தாங்கள் எல்.ரீ.ரீ.ஈக்கோ அல்லது பி.எப்.எல்.ரிக்கோ புத்துயிர் அல்லது மறுமலர்ச்சி அளிப்பதற்கு எந்த வகையிலும் முயற்சிக்கவில்லை என்பதை வலியுறுத்த பெரும் பாடுபட்டார்கள். தாங்கள் இப்போது ஜனநாயகத்தை கையில் எடுத்திருப்பதால் எல்.ரீ.ரீ.ஈயின் கடந்த காலத்துக்கான கதவுகளை மூடிவிட்டிருப்பதாக சி.எப்.டி சொல்கிறது. தங்கள் கட்சி எல்.ரீ.ரீ.ஈயுடன் ஒரு கரிமத் தொடர்பைக் கொண்டிருப்பதாகவும், மற்றும் தாங்கள் மேற்கொள்ளும் அரசியல், ஆயுதமற்ற எல்.ரீ.ரீ.ஈ அரசியலின் ஒரு விரிவாக்கம் மட்டுமே என தமிழ் மக்கள் நம்பவேண்டும் என்று சி.எப்.டி விரும்புகிறது. அதே நேரத்தில் ஸ்ரீலங்காவின் ஏனைய பகுதிகளுக்கும் மற்றும் உலகத்துக்கும் தாங்கள் எல்.ரீ.ரீ.ஈ யின் வன்முறையான கடந்தகாலத்தினை முற்றாகத் துடைத்தெறிந்து விட்டதாகவும் மற்றும் மாமிச உண்ணிகளான உறுமும் புலிகளில் இருந்து தாவர உண்ணிகளான மெல்லிய ஒலி எழுப்பும் பூனைகளைப் போல மாறிவிட்டதாகவும் சி.எப்.டி யினர் சொல்கிறார்கள்.

சி.எப்.டி தனது புலித் தோற்றத்தை வலியுறுத்த விரும்புகிறது, ஏனெனில் அதிகம் தமிழ் வாக்குகளை அது பெற்றுத் தர உதவும் என அது எண்ணுகிறது, ஆனால் அதேநேரம் அது பழைய எல்.ரீ.ரீ.ஈயின் ஒரு புதிய அவதாரத்தை எடுக்கவும் விரும்பவில்லை. அவர்கள் எதிர்கொள்ளும் இந்த மாயை தமிழில் அவர்கள் வீரர்கள் அல்லது போராளிகள் என்கிற பதத்தையும் ஆங்கிலத்தில் அறப்போர் நடத்துபவர்கள் என்கிற பதத்தையும் தெரிவு செய்திருப்பதிலிருந்தே நன்கு விளங்குகிறது. இருந்தும் சி.எப்.டி யிடம் அரசியல் நோக்கங்களுக்காக எங்கெல்லாம் அல்லது எப்போதெல்லாம் சாத்தியப் படுகிறதோ அந்த இடத்தில் புலிகளின் மரபை இழுக்கும் போக்கு காணப்படுகிறது. சி.எப்.டி தனது உருவாக்கத்தை நல்லூர் கந்தசாமி வளாகத்தில் வைத்து கடந்த ஜூலையில் அறிவித்ததும், அதன் தேர்தல் விஞ்ஞ}பனத்தை ஆகஸ்ட் 4ல் சுதுமலை அம்மன் கோவிலில் வைத்து வெளியிட்டதும் இதற்கு நல்ல உதாரணங்கள்.

திரும்பவும் இந்த நகர்வில் ஒரு சங்கேத முறை தெரிகிறது. இந்திய – இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்தானது ஜூலை 29, 1987ல். அதில் எல்.ரீ.ரீ.ஈ உட்பட்ட தமிழ் போராளிக் குழுக்கள் தங்கள் ஆயுதங்களுக்கு பிரியாவிடை வழங்கவேண்டும் என்கிற ஒரு நியமம் இருந்தது. 1987 ஓகஸ்ட் 4ல் எல்.ரீ.ரீ.ஈ தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன், எல்.ரீ.ரீ.ஈ தனது ஆயுதப் போராட்டத்துக்கு முடிவு கட்டுகிறது என ஒரு பொதுக்கூட்டத்தில் அறிவித்தார். அந்த நிகழ்வு இடம்பெற்றது சுதுமலை அம்மன் கோவில் முன்றலில். சி.எப்.டி ஓரளவு கடந்த கால எல்.ரீ.ரீ.ஈ நினைவுகளை மீண்டும் எழுப்புவதற்காக, திட்டமிட்டு சுதுமலை அம்மன் கோவில் சுற்றாடலில் ஒரு பொதுக் கூட்டத்தை நடத்தி அதன் தேர்தல் விஞ்ஞ}பனத்தை வெளியிட்டுவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டது. தேர்தல் சட்டங்களின்படி அரசியல் கூட்டங்கள் ஒரு சமய அல்லது வணக்க ஸ்தலங்களில் நடத்தக்கூடாது என்பதால் மானிப்பாய் பிரதேச காவல்துறையினர் அந்தப் பேரணிக்கான அனுமதியை மறுத்துவிட்டார்கள். எனவே சி.எப்.டி யினர் சுதுமலை அம்மன் கோவில் வளாகத்தில் வெறுமே முக்கியத்துவம் குறைந்த ஒரு நிகழ்வில் வைத்து தங்கள் தேர்தல் அறிக்கையினை வெளியிட்டார்கள்

புலிமுகச் சிலந்தி

புலிகளின் மரபை இழுத்து நம்பகத் தன்மையை பெறவேண்டும் என்பதற்காக சி.எப்.டி யினர் மேற்கொள்ளும் சில முயற்சிகள் வேடிக்கையானவையாகவும் மற்றும் அற்பத்தனமானவை யாகவும் உள்ளன. சி.எப்.டி தங்கள் தேர்தல் சின்னமாக சிலந்தியை தேர்வு செய்த பின்னர் தமிழர்களின் அங்கீகாரத்துக்காக ஒரு திருப்பத்தை சேர்த்துக் கொண்டார்கள். தாங்கள் ஒரு புலி முகச் சிலந்தியை தேர்தல் சின்னமாகப் பெற்றிருப்பதாக அவர்கள் தமிழில் அறிவித்தார்கள். புலி முகச் சிலந்தி என வர்ணிக்கப்படும் உயிரினம் பெரிய சிலந்தி வகையை தவிர வேறில்லை. சினிமா பார்ப்பவர்கள் ஜேம்ஸ் பொண்டின் திகில் படமான “டொக்டர் நோ” படத்தில் வில்லன்கள்;, வியர்வையில நனைந்துள்ள சீன் கொனறி மீது ஊர்ந்து செல்வதற்காக ஒரு பெரிய சிலந்தியை அனுப்புவதை நினைவு படுத்திக் கொள்ளலாம். இந்தச் சிலந்தியின் மீதுள்ள வரிவரியான கோடுகளுக்காக தமிழில் அது புலி முகச் சிலந்தி என குறிப்பிடப் படுகிறது.

ஸ்ரீலங்காவில் ஏழு வகையான சிலந்திகள் உள்ளன. அவற்றில் ஒன்று வட மாகாணத்தில் உள்ள மாங்குளத்தில் 2012ம் ஆண்டு ரணில் நாணயக்கார என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது. அதற்கு ‘மாங்குளம் இளஞ்சிவப்பு பட்டை உள்ள அலங்கார பெரும் சிலந்தி’ என பெயர் சூட்டப்பட்டது. இதில் சுவராஸ்யமானது என்னவென்றால் தேர்தல் திணைக்களத்தால் சி.எப்.டி க்கு ஒதுக்கப்பட்ட சின்னம் பெருஞ் சிலந்தி அல்ல, ஆனால் சாதாரண சிலந்தியே. சி.எப்.டிக்கு சாதாரண சிறு சிலந்தியே ஒதுக்கப்பட்டுள்ளது. எனினும் முன்னாள் புலி அமைப்பு தமிழ் வெகு ஜனங்களைக் கவருவதற்காக ஒரு குழந்தைத் தனமான முயற்சியை மேற்கொண்டு தங்களது சின்னம் புலி முகம் கொண்ட புலிமுகச் சிலந்தி என்று சொல்லி வருகிறார்கள்.

இந்த வகையான அரசியல் தந்திரம் தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியினரால் (ரி.யு.எல்.எப்) 1977ல் மேற்கொள்ளப்பட்டது. புதிதாக அமைக்கப்பட்ட ரி.யு.எல்.எப், சூரியன் சின்னத்தைக் கேட்டுப் பெற்றுக் கொண்டது. இந்தச் சின்னம் 1965ல் சிபி.டீ சில்வா தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திர சோஷலிசக் கட்சிக்கு (எஸ்.எல்.எஸ்.பி) வழங்கப் பட்டிருந்தது. எனினும் ரி.யு.எல்.எப் தனக்கு வழங்கப்பட்டது சூரியன் என்று சொல்வதற்கு மாறாக உதய சூரியன் சின்னமே வழங்கப்பட்டதாகச் சொல்லி வந்தது. இது எதனாலென்றால் தமிழ் நாட்டு திராவிட முன்னேற்ற கழகம் தனது சின்னமாக உதய சூரியனைக் கொண்டிருந்தது, மற்றும் உதய சூரியன் சின்னமுள்ள கட்சியை புகழந்து ஏராளமான தமிழ் பாடல்களும் வெளி வந்திருந்தன. அந்தப் பெருமையை ரி.யு.எல்.எப் விற்க முயன்று மிகச் சிறப்பான வெற்றியையும் பெற்றது. ஒருவேளை சி.எப்.டியும், ரி.யு.எல்.எப்பை பின்பற்றி தன்னை புலி என்று அடையாளப்படுத்தும் முகமாக தனது சிலந்தி சின்னத்தை, புலி முகமாக அழைக்க முயற்சிககிறது போலத் தெரிகிறது.

மற்றொரு வித்தையாக சி.எப்.டி தன்னை எல்.ரீ.ரீ.ஈயின் பிரபாகரனுடன் மறைமுகமாக அடையாளப் படுத்துவதற்காக யாழ்ப்பாண நகர, வண்ணார்பண்ணையில் உள்ள யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிக்கு அருகில் அமைந்துள்ள தனது பிரதான காரியாலயத்துக்கு மேலதிகமாக கரையோர நகரமான வல்வெட்டித்துறையிலும் ஒரு கட்சி அலுவலகத்தை திறந்துள்ளது. வல்வெட்டித்துறை புலிகளின் பெருந்தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் சொந்த ஊராகும். பிரபாகரனின் மூதாதையரின் உறைவிடத்துக்கு வெகு அருகிலேயே சி.எப்.டியின் அலுவலகம் அமைந்துள்ளது. அந்த வீடு இப்பொழுது உடைக்கப்பட்டு அதன் வளவு முழுவதும் புதர்களும் காட்டுப் புற்களும் மண்டிக் கிடக்கின்றன. திரும்பவும், வல்வெட்டித்துறையில் தேசியத் தலைவரின் இருப்பிடம் அருகே ஒரு அலுவலகம் திறக்கப்பட்டதில் சில சங்கேத ஒற்றுமைகள் காணப்படுகின்றன.

சி.எப்.டி யின் தேர்தல் பிரச்சாரம் இப்பொழுது யாழ்ப்பாணத்தில் நடைபெற்று வருகிறது. நிதியை கேட்டுப் பெற்றுக் கொள்ளலாமா என்கிற ஒரு உணர்வு வேட்பாளர்களிடையே கசிந்து வருகிறது. சி.எப்.டி யின் பிரச்சார விதம் மற்றும் முறை என்பன ஏனைய கட்சிகளின் நன்கு வசதியான பிரச்சார முறைக்கு முற்றிலும் முரண்பட்டதாகவே உள்ளன. சி.எப்.டி வேட்பாளர்கள் மற்றும் பிரதானமாக முன்னாள் எல்.ரீ.ரீ.ஈ அங்கத்தவர்களைக் கொண்ட அவர்களது ஆதரவாளர்கள் ஆகியோர் பிரதானமாக வீட்டுக்கு வீடு மேற்கொள்ளும் பிரச்சாரத்திலேயே தங்கியுள்ளார்கள். அவர்கள் வீடுகள் தோறும் துண்டுப் பிரசுரங்களை பகிர்ந்தளிப்பதுடன் குடும்ப அங்கத்தவர்களுடன் உரையாடல்களில் ஈடுபட்டும் வருகிறார்கள். அவர்கள் நடேசபிள்ளை வித்தியாதரன் எழுதிய புத்தகங்கங்களை விற்பதுடன் அதில் கிடைக்கும் வருமானம் சி.எப்.டி யின் பிரச்சாரத்துக்கு என்றும் கூறி வருகிறார்கள்

எனது ஆயுதம் எனது பேனா

வித்தியாதரனின் ஊடகவியல் 1979 முதல் இடம்பெற்று வருகிறது. ஒரு ஊடகவியலாளனாக தனது அனுபவத்தை தமிழ் மொழியில் “என் எழுத்தாயுதம்” என்கிற பெயரில் ஒரு புத்தகமாக வெளியிட்டுள்ளார். அதில் எழுத்தாளர் தனது பேனாதான் தனது ஆயுதம் என்று குறிப்பிடுகிறார். அந்த நூல் 2014 நவம்பரில் கொழும்பில் வெளியிடப்பட்டது, அந்த நிகழ்வில் பேசியவர்களில் அப்போதைய எதிர்க்கட்சி மற்றும் ஐதேக என்பனவற்றின் தலைவரான ரணில் விக்கிரமசிங்கா, ரி.என்.ஏ தலைவர் இராஜவரோதயம் சம்பந்தர் மற்றும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் மற்றும் அப்போதைய நீதி அமைச்சராக இருந்த ரவுப் ஹக்கீம் என்பவர்கள் அடங்குவார்கள்.

இந்த வருடம் பெப்ரவரியில் அந்த நூல் ஒஸ்லோவிலும் வெளியிடப்பட்டது. இந்த நிகழ்வில் பேசும்போதுதான் வித்தியாதரன், முதல்தடவையாக முன்னாள் எல்.ரீ.ரீ.ஈ அங்கத்தவர்களைக் கொண்டு ஒரு ஜனநாயக அரசியல் அமைப்பு உருவாக்கப்பட இருப்பதை வெளிப்படுத்தினார். வித்தியாதரன் ஸ்ரீலங்காவுக்கு திரும்பிய பின்னர், இந்த வருட ஜூலை ஆரம்பம் வரை அந்த விடயம் தொடர்பாக எந்த விதமான முன்னோக்கிய நகர்வுகளும் இருப்பதாகத் தென்படவில்லை. அதன்பின்னர் தான் சி.எப்.டி யின் உருவாக்கம் பற்றி உலகத்துக்கு அறிவிக்கப் பட்டது.

யாழப்பாணத்தில் உள்ள சில குடியிருப்பாளர்கள் சொல்வதின்படி சி.எப்.டி யின் பாணியிலான பிரச்சாரம் மக்களிடையே அதிகம் அனுதாபத்தை ஏற்படுத்தி உள்ளது. அங்க அவயங்களை இழந்தவர்கள் உட்பட சிறிய குழுக்களான எல்.ரீ.ரீ.ஈ அங்கத்தவர்கள் வீடுகளுக்கு நடந்து சென்று அளவுக்கு மீறிய பணிவுடன் தமிழில் பேசுகிறார்கள். தமிழ் மக்களின் அரசியல் விடுதலைக்காக எப்படி தாங்கள் எல்லாவற்றையும் தியாகம் செய்தார்கள் மற்றும் எப்படி அனைத்து நம்பிக்கைகளும் சிதறடிக்கப் பட்டன என்பதைப் பற்றிப் பேசுகிறார்கள். வன்முறை பலன் தராது என்பதை கடின பாதையின் மூலம் தாங்கள் கற்றுக்கொண்டதாக அவர்கள் சொல்கிறார்கள் பொதுவாக இந்த இலக்குகளை அடைவதற்காக தமிழ் மக்களுக்குச் சாதகமாகவும் மற்றும் குறிப்பாக துன்பப்படும் முன்னாள் போராளிகளுக்காகவும் ஏதாவது செய்ய வேண்டும் என்று இன்னும் அவர்களது இலட்சிய உணர்வு மீந்திருப்பதாக அவர்கள் கூறுகிறார்கள். இந்த இலட்சியங்களை அடைவதற்காகவும் மற்றும் வன்முறைகளைக் களைந்து ஜனநாயகத்துக்கு துணைபோவதற்கான அவர்களது நேர்மையான விருப்பத்தையும் விளக்குவதற்காகவுமே தாங்கள் தேர்தலில் போட்டியிடுவதாகவும் அவர்கள் கூறுகிறார்கள்.

அநேகமான தமிழ் மக்கள் எல்.ரீ.ரீ.ஈயினரது ஆணவத்தையும் மற்றும் அவர்களது அதிகாரக் காட்சியையும் கண்டு வெறுப்படைந்த ஒரு காலம் இருந்தது. அவர்களிடம் நியாயமான பேச்சுக்கள் கிட்டத்தட்டக சாத்தியமற்றதாக இருந்ததுடன் மற்றும் எல்.ரீ.ரீ.ஈ தன்னிச்சையான பேச்சுக்களையே நடத்தியது. ஆனால் இப்போது நிலமை வித்தியாசமானது. யுத்தத்தின் முடிவும் ஜனநாயகத்தின் எழுச்சியும் சாதாரண தமிழ் மக்களுக்கு அதிகாரத்தை வழங்கியுள்ளது. எனவே உரையாடல்கள் மற்றும் விவாதங்கள் நடத்தும் பாத்திரங்கள் ஒருவகையில் தலைகீழாக மாற்றம் பெற்றுள்ளன.

முன்னாள் புலிகளின் அவல நிலையும் கூட அனுதாபத்தை தூண்டுகிறது. பெரும்பாலானவர்கள் அவலட்சணமான உடைகளுடனும் எல்.ரீ.ரீ.ஈயின் ஆட்சி உச்சத்தில் நிலவிய நாட்களில் பராமரிக்கப்பட்ட சீரான தன்மைக்கு முற்றிலும் மாறான விதத்;திலும் காட்சியளிக்கிறார்கள். முன்னாள் போராளிகள்;, மக்கள் உணவு மற்றும் குளிர்பானங்களை வழங்கி அவர்கள்மீது சொரியும் விருந்தோம்பலுக்கு சற்றும் தயாரில்லாத எதிர்பாராத நிலையில் உள்ளார்கள். சில சந்தர்ப்பங்களில் உடைகள் கூட அவர்களுக்கு பரிசாக வழங்கப்படுகிறது. தேவையான சமயத்தில் சிலர் அவர்களுக்கு போக்குவரத்து வசதிகளையும் வழங்குகிறார்கள்.

ஜனநாயகத்துக்கான அறப்போராளிகள் (CFD)

சி.எப்.டி (CFD) சுயேச்சைகள் யாழ்ப்பாண சமூகத்தின் நிறமாலையை பிரதிபலிக்கத் தக்கதாக பல்வேறு சமூகப் பின்னணியை கொண்ட வேட்பாளர்களை நிறுத்தியுள்ளார்கள். அவர்கள் எல்.ரீ.ரீ.ஈ யில் இருந்த வேளையில் இந்த வேட்பாளர்களில் எவரும் குறிப்பிடத் தக்கவர்களாகவோ நன்கு அறிமுகமானவர்களாகவோ இருக்கவில்லை. மொத்த வேட்பாளர்களும் வடமராட்சி பிரதேசத்தை சேர்ந்தவர்கள். அவர்கள் தமது முப்பதாம் வயதுகளிலோ அல்லது இருபதுகளின் பிற்பகுதிகளிலோ இருக்கிறார்கள். கிட்டத்தட்ட 50 முதல் 60 வரையான முன்னாள் புலிகள் இந்த சுயேச்சைக் குழுவுக்காக முழு நேரமும் பணியாற்றி வருகிறார்கள். அவர்களுக்கு உணவும் சிறிய ஒரு தொகை, கொடுப்பனவாகவும் வழங்கப் படுகிறது. போக்கு வரத்து தான் அவர்கள் எதிர்நோக்கும் பெரிய பிரச்சினையாகப் உள்ளது. ஒரு சில வாகனங்கள் மட்டுமே அவர்களது பயன்பாட்டுக்காக உள்ளது. பொதுமக்களைச் சேர்ந்தவர்கள்தான் பல சந்தர்ப்பங்களில் ஆதரவு வழங்கி உதவுவதாக சி.எப்.டி கூறுகிறது. பணம் வகையிலான நன்கொடைகளும் பொது மக்களிடம் இருந்து பெரிய அளவில் கிடைத்து வருகிறது என்றும் சி.எப்.டி தெரிவித்தது. வாகனங்களும் கடன் கொடுத்து உதவப் படுகிறது.

சி.எப்.டி உடன் தொடர்புள்ள வட்டாரங்கள், அவர்களது முதன்மை நிதி வழங்குனர் பிரித்தானியாவை சோந்த ஒரு தமிழ் தொழிலதிபர் என்று வெளிப்படுத்தின. அவரது உண்மையான பெயர் நெருக்கமான ஒரு இரகசியமாகப் பேணப்படுகிறது அவரை தமிழ் சி.என்.என். கண்ணன் என அழைக்கிறார்கள், ஏனென்றால் லண்டனில் அந்தப் பெயரினை புனை பெயராகக் கொண்டு அவர் ஒரு இணையத் தளத்தை நடத்தினாராம். இப்போது அது வேறு சிலரால் நடத்தப்பட்டு வருகிறது. கண்ணனின் குடும்பத்தினர் ஐக்கிய இராச்சியத்தில் உள்ளனர், அவர் பிரித்தானியா எங்கும் பல்வேறு வர்த்தக நிறுவனங்களை நடத்தி வருகிறார். தற்போது அவர் லண்டனில் உள்ள தனது வர்த்தக நிலையங்களில் பெரும்பாலானவற்றை மூடி விட்டு சில வருடங்களுக்கு முன்னர் ஸ்ரீலங்காவுக்கு குடிபெயர்ந்துள்ளாராம்.

கண்ணன் யாழ்ப்பாணக் குடாநாட்டின் கரவெட்டியிலுள்ள இரும்புமதவடியை சேர்ந்தவர், நாட்டுக்கு திரும்பியதின் பின்னர் வடக்கில் பல வியாபார நிறுவனங்களை நடத்தி வருகிறார். அவற்றில் முக்கியமானது ஒரு கட்டிட மற்றும் போக்கு வரத்து நிறுவனமாகும். கண்ணன் இதன் பின்னணியில் உள்ள அதேவேளை, அவர் சார்பாக முன்னின்று வியாபாரத்தை நடத்துவது அவரது உறவினரான யாதவன் சோமசுந்தரம், செல்வா என்கிற பெயரால் அவர் பகிரங்கமாக அறியப்பட்டவர். யாதவன் கரவெட்டி மாலுசந்தியில் வசிப்பவர், அவர் ஒரு பி.எஸ்சி பட்டதாரியாக இருந்தபோதும் வியாபாரத்துறையை பின்தொடர்ந்து வருகிறார்.

கண்ணன் – செல்வா இணை ஸ்ரீலங்காவிலுள்ள பாதுகாப்பு நிறுவனங்களுடன் மிகச் சிறந்த உறவைக் கொண்டுள்ளார்கள். இந்த செல்வாக்குத்தான் கண்ணன் – செல்வா இணையினர் நெய்தல் என்ற பெயர் கொண்ட நிறுவனத்தினூடாக, வல்லிபுரம் – மணல்பிட்டி பிரதேசத்தில் பெருந்தொகையான மண் அகழ்வு செய்வதற்கு துணையாக உள்ளது. ஈபிடிபி தலைவர் ராஜபக்ஸ காலத்தில் அவரது மகேஸ்வரி நிதியம் என்கிற அமைப்பின் ஊடாக மணல் அகழ்வில் ஏகபோகம் செலுத்தி வந்தார். இருந்தும் கண்ணன் – செல்வா இணை தேவானந்தாவை மணல் வியாபாரத்தில் எதிர்த்து நின்றது, பாதுகாப்பு நிறுவனத்தில் அவர்களுக்கு இருந்த பெரும் செல்வாக்கு காரணமாகத்தான். அந்த இரட்டையர்கள் இன நல்லிணக்கத்தையும் மற்றும் சமாதானத்தையும் முன்னேற்றுவதற்காக யாழ்ப்பாணத்தில் ஒரு நல்லிணக்க மையத்தையும் நடத்தி வருகிறார்கள். இந்த நல்லிணக்க மையம் அரசாங்கத் துறைகளில் வேலை வாய்ப்பை தேடுவதற்கான விண்ணப்ப படிவங்களையும் விநியோகித்திருந்தது.

கண்ணன் – செல்வா இணை

வெளிப்படையாக கண்ணன் செல்வா இணை ஜனநாயகத்துக்கான போராளிகள் அமைப்புக்கு இதுவரை இரண்டு பெரிய நிதி உபகாரத்தை வழங்கியதின் மூலம் மதிப்பு மிக்க வேவையை வழங்கியுள்ளனர். தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிப்பதின்படி, முதல் தவணையில் 15 லட்சம் ரூபாவும் இரண்டாவது தவணையில் 10 வட்சம் ரூபாவும் வழங்கியுள்ளார்கள். இரண்டு வாகனங்கள் கூட வழங்கப்பட்டுள்ளதாம். அவர்களின் வழக்கப்படி கண்ணன் பின்னணியில் இருக்கும் அதேவேளை செல்வா முன்னிலை வகித்து அவர்களின் வியாபார ஒப்பந்தங்களை நடத்துகிறார். எனினும் இந்த தடவை கண்ணன் மற்றும் செல்வா ஆகிய இருவரும் சிலந்திகளாகப் போட்டியிடும் புலிகள் விடயத்தில் தங்கள் தொடர்பு பகிரங்கப் பட்டுவிடக் கூடாது என்பதில் மிகவும் கவனமாக உள்ளனர்.

மற்றைய சுவராஸ்யமான விடயம் இந்தச் செயற்பாடுகளில் ஊடகவியலாளர் வித்தியாதரனின் தொடர்பு பற்றியதாகும். ஏன், ஒரு முன்னாள் தமிழ் பத்திரிகையின் ஆசிரியர் தேர்தலில் போட்டியிடும் முன்னாள் எல்.ரீ.ரீ.ஈ அங்கத்தவர்களின் ஒரு குழுவுக்கு ஞ}னத் தந்தையாக மாறியுள்ளார்? 56 வயதான வித்தியாதரன் சர்ச்சைக்குரிய ஒரு ஊடகவியலாளராகவே இருந்துள்ளார், யாழ்ப்பாணத்தை தளமாகக் கொண்ட உதயன் மற்றும் கொழும்பிலிருந்து வெளியாகும் சுடர் ஒளி ஆகிய பத்திரிகைகளின் ஆசிரியர் என்கிற தனது பதவியை பயன்படுத்தி அவர் எல்.ரீ.ரீ.ஈ உடனும் அரசாங்கம் மற்றும் பாதுகாப்பு வட்டாரங்கள் என்பனவற்றுடனும் மிகவும் நெருக்கமாகப் பழகி வந்துள்ளார். அந்த இரண்டு பத்திரிகைகளும் அவரது மைத்துனரும் மற்றும் நிருவாக இயக்குனருமான ஈஸ்வரபாதம் சரவணபவானுக்குச் சொந்தமானது. வித்தி மேலும் கொழும்பிலுள்ள பல்வேறுநாட்டு இராஜ தந்திரிகளுடனும் தொடர்புகளைப் பேணி வந்துள்ளார்.

பரந்துபட்ட வட்டாரங்களுடன் தொடர்புகளைப் பேணுவதும் மற்றும் சுமுகமான உறவகளைப் பேணுவதும் ஒரு ஊடகவியலாளனுக்கு மிகவும் அவசியமானதாகும். சில ஊடகவியலாளர்கள் தாங்கள் ஒரு தொழில்முறை ஊடகவியலாளர்கள் என்கிற கடமையின் நிலைக்கு அப்பால் சென்று சில சமயங்களில் மேலதிக – ஊடகவியல் பயணங்களிலும் ஈடுபடுகிறார்கள். தேசிய நலன்களுக்காக இது அவர்களால் செய்யப்படுவதாக அவர்கள் அதை நியாயப் படுத்துகிறார்கள். வித்தியாதரன் கூட அத்தகைய மேலதிக ஊடகவியல் பயணங்களில் ஈடுபட்டுள்ளார் மற்றும் அடிக்கடி வௌ;வேறு கட்சிகளிடையே ஒரு தூதுவர் பாத்திரத்தையும் அவர் பின்பற்றி வந்துள்ளார். இந்த நடவடிக்கைகள் யாவற்றையும் உயர் மட்டத்திலுள்ள சிலர் மட்டுமே அறிவார்கள் மற்றவர்கள் அனைவரும் இதைப்பற்றி அறியாமல் இருட்டிலேயே இருந்தார்கள். வித்தியாதரன் தான் எழுதியுள்ள நூலில் தனது இந்த மேலதிக – ஊடகவியல் பயணங்கள் சிலவற்றைப் பற்றி வெளிப்படுத்தியுள்ளார்.

வித்தியாதரன்

வித்தியாதரன்

பெப்ரவரி 26, 2009ல் கல்கிஸ்சையில் ஒரு மரணச்சடங்கில் கலந்து கொண்டிருந்தபோது வித்தியாதரன் வெள்ளை வான் மூலம் கடத்தப்பட்டார். ஆரம்பத்தில் காவல்துறைப் பேச்சாளர் அது இனந் தெரியாதவர்களால் மேற்கொள்ளப்பட்ட கடத்தல் என்று குறிப்பிட்டார், ஆனால் பின்னர் அது வித்தியாதரன் கடத்தப் படவில்லை அவர் கைது செய்யப்பட்டுள்ளார் என மாற்றிச் சொல்லப்பட்டது. அவர் தெமட்டகொடவில் உள்ள குற்றவியல் தடுப்புக்காவல் அலுவலகத்தில் இரண்டு மாதங்களாக தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டார். அவரைப் பார்ப்பதற்கு அவரது மனைவி அனுமதிக்கப் பட்டதுடன் வீட்டிலிருந்து சமைத்துக் கொண்டுவரும் உணவை தொடர்ந்து வழங்கவும் அனுமதிக்கப் பட்டிருந்தது. எல்.ரீ.ரீ.ஈ உடன் அவருக்கிருந்த சந்தேகத்துக்கிடமான தொடர்புகள் மற்றும் புலிகளின் வான்படை கொழும்பை சுற்றி நடத்திய தாக்குதல்களில் அவரது ஒருங்கிணைப்பு இருந்ததாக சாட்டப்படும் குற்றங்கள் என்பன பற்றியே அவரிடம் விசாரணைகள் நடத்தப்பட்டதாகச் சொல்லப்பட்டது.

முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோட்டபாய ராஜபக்ஸ, வித்தியாதரன் ஒரு பயங்கரவாதி மற்றும் பெப்ரவரி 20, 2008ல் கொழும்பின் மீது எல்.ரீ.ரீ.ஈ நடத்திய வான் தாக்குதல்களில் ஒருங்கிணைப்பு செய்து அவர் ஒரு பங்கு வகித்துள்ளார் என அப்போது சொல்லியிருந்தார். ஒரு அவுஸ்திரேலிய பத்திரிகையாளர் அவரிடம் இந்த விடயம் பற்றி கேள்வி எழுப்பியபோது, யாராவது வித்தியாதரன் சார்பாக பேசுவார்களேயானால் அவர்கள் கரங்களிலும் இரத்தம் படிந்துள்ளது என்று கோட்டபாயா அவருக்குப் பதிலளித்திருந்தார். அந்தப் பின்னணியில் வித்தியாதரன் நீண்ட காலம் சிறை வைக்கப்படுவார் எனப் பலரும் நினைத்தார்கள், ஆனால் இரண்டு மாதங்களின் பின் அவர் விடுதலை செய்யப்பட்டார்.

கொழும்பு நீதவான் நீதிமன்றம்

வித்தியாதரன் ஏப்ரல் 24, 2009ல் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப் படுத்தப்பட்டார், அப்போது அவருக்கு எதிராக வழக்கு எதுவுமில்லை என்று காவல்துறையினர் தெரிவித்தார்கள். வித்தியாதரன் விடுதலை செய்யப்பட்டு ஒரு சுதந்திர மனிதராக வெளியே நடந்தார். இந்த விடயத்தில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ தானே நேரடியாகத் தலையிட்டு, தனது சகோதரனின் எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல் வித்தியாதரனை விடுவித்ததாக அப்போது பேசப்பட்டது. பின்னர் மே 2, 2009ல் வித்தியாதரன் தனது கைது தொடர்பாக கோட்டபாய ராஜபக்ஸ மற்றும் வேறு ஐவர் மீது தனது கைது மற்றும் தடுத்து வைத்தல் என்பனவற்றுக்கு எதிராக அடிப்படை உரிமை மனு ஒன்றை தாக்கல் செய்தார். எனினும் நிகழ்வுகள் வேகமாக நடந்து முடிந்தன மற்றும் மே, 2009ன் நடுப்பகுதியில் இராணுவ ரீதியாக எல்.ரீ.ரீ.ஈ தோற்கடிக்கப் பட்டது. நாட்டின் சூழ்நிலைகள் கடுமையாக மாற்றம் பெற்றன. இந்த மாற்றமடைந்த சூழ்நிலையில் வித்தியாதரன் தனது அடிப்படை உரிமை மனுவை மேற்கொண்டு தொடராமல் அந்த விடயத்தை கைவிட்டு விட்டார்.

எல்.ரீ.ரீ.ஈ தோல்வியடைந்ததின் பின்னர் வித்தியாதரன் தன்னை பொதுவாக தமிழ் தேசியக் கூட்டமைப்புடனும்( ரி.என்.ஏ) மற்றும் குறிப்பாக இலங்கைத் தமிழரசுக் கட்சியுடனும் தன்னை அடையாளம் காட்ட ஆரம்பித்தார். 2010ல் பாராளுமன்றத் தேர்தல்கள் நடைபெற்றபோது அவர் ரி.என்.ஏ சார்பில் யாழ்ப்பாணத்தில் போட்டியிடுவதற்காக வேட்புமனுவை கோரியிருந்தார். முதலில் வித்தியாதரனுக்கு வேட்பாளர் நியமனம் வழங்குவதாக வாக்களித்த போதும் அவரது மைத்துனர் சரவணபவான், சடுதியாக ஏற்பட்ட அரசியல் திருப்பத்தால் ரி.என்.ஏ வேட்பாளர் பட்டியலில் அவருக்கு மாற்றீடாக மாறினார். இது வித்தியாதரன் மற்றும் சரவணபவான் இடையில் பகைமையை ஏற்படுத்தியதால் வித்தியாதரன் இரண்டு பத்திரிகைகளினதும் ஆசிரியர் பதவியில் இருந்தும் விலகுவதற்கு வழியேற்பட்டது. 2010ல் சரவணபவான் பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவானார்.

வித்தியாதரன் இன்னமும் ரி.என்.ஏ உடன் வேலை செய்தபடி கட்சிக்கு அதன் ஊடக வேலைகளில் உதவி வந்தார். அநேக ரி.என்.ஏ தலைவர்களுக்கு வித்தியாதரன் உரைகளை எழுதுபவராக இருந்துள்ளார். மட்டக்களப்பில் நடந்த இலங்கை தமிழரசுக் கட்சியின் மாநாட்டில சம்பந்தனுக்கான உரையை எழுதியதின் பெருமை தனக்கே உரியது என வித்தி கோரியுள்ளார். சம்பந்தனின் உரை தெற்கில் பெரிதும் விமர்சிக்கப்பட்டது, அதன்பின் வித்தியாதரன் உரை எழுதுவது சற்றுக் குறைவடைந்தது. அதன்பின் அவர் ரி.என்.ஏ யின் கொழும்புக் கிளை ஒன்றை உருவாக்கி அதன் செயலாளராக மாறினார்.

வட மாகாணசபை தேர்தல்கள் அரசியல் அடிவாரத்தில் பெரிதாக நெய்யப் பட்டுக் கொண்டிருந்தபோது, ரி.என்.ஏ முதலமைச்சர் வேட்பாளராக நியனம் பெறுவதற்கு வித்தியாதரன் முயற்சிக்கத் தொடங்கினார். புது தில்லி தன்னைத்தான் வடக்கு முதலமைச்சராக்குவதற்கு விரும்புகிறது என்றும் அவர் கோரிக்கையும் விடுத்தார். திரும்பவும் வித்தியாதரன் ஏமாற்றத்திற்கு உள்ளானார். வித்தியை முதலமைச்சராக்குவதற்கு மட்டுமன்றி அந்த தேர்தலில் ஒரு சாதாரண வேட்பாளராக போட்டியிடுவதற்கு கூட அவருக்கு நியமனம் மறுக்கப்பட்டது. முன்னாள் உயர் நீதிமன்ற நீதியரசர் சிவி. விக்னேஸ்வரன் ரி.என்.ஏ முதலமைச்சரானார்.

இப்போது வித்தியாதரன் “மலரும்” என்கிற பெயரில் ஒரு இணையத் தளத்தை நடத்த ஆரம்பித்துள்ளார். அவர் வழக்கமாக ரி.என்.ஏ யில் உள்ள சில பேருக்கு குழி பறிப்பதுடன் சிலரை முன்னேற்றியும் வருகிறார். வித்தியாதரன் தனது பள்ளித் தோழரும் மற்றும் இலக்கியப் பேரறிஞருமான கம்பவாரிதி ஜெயராஜினை கைதேர்ந்த வகையில் பயன்படுத்தி அவரைக் கொண்டு சிவி. விக்னேஸ்வரனையும் மற்றும் முதலமைச்சராக அவரது மோசமான செயற்பாட்டையும் பற்றி விமர்சனக் கட்டுரைகளை எழுத வைத்துள்ளார்.

விரைவிலேயே வித்தியாதரனுக்கு அவரது இணையத் தளத்தின் மீதான ஆர்வம் குறையத் தொடங்கியதும் முன்னாள் எல்.ரீ.ரீ.ஈ அங்கத்தவர்களுக்குள் அரசியல் ரீதியாக ஊடுருவத் தொடங்கினார். அவர் மேலும் தனது நூலையும் எழுதி வெளியிட்டார். முன்னாள் எல்.ரீ.ரீ.ஈ அங்கத்தவர்களைக் கொண்டு ஒரு கட்சி அமைக்கும் யோசனையை வித்தியாதரன் பரப்பி விட்டதுடன் மற்றும் அதற்கு உறுதியான ஆதரவை வழங்க ஆரம்பித்தார். இந்த வருட ஆரம்பத்திலேயே அந்த அமைப்பு தேர்தலில் போட்டியிடும் என பிரகடனப் படுத்தப்பட்ட போதிலும் இந்த வருட நடுப்பகுதி வரை பயனுள்ளதாக எதுவும் நடைபெறவில்லை.

ஜனநாயகத்துக்கான போர் வீரர்கள்

ஜனநாயகத்துக்கான போராளிகள் அமைப்பினை உருவாக்கிய பின்னர் வித்தியாதரன் முன்னாள் எல்.ரீ.ரீ.ஈ அங்கத்தவர்களுக்கு ரி.என்.ஏ யின் வேட்பாளர் பட்டியலில் நியமனம் கோரி ரி.என்.ஏ யினை அணுகினார். தலா இரண்டு முன்னாள் எல்.ரீ.ரீ.ஈ அங்கத்தவர்களை ரி.என்.ஏயின் யாழ்ப்பாணம், வன்னி, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை தேர்தல் மாவட்ட வேட்பாளர் பட்டியல்களில் உட்படுத்த வேண்டும் என அவர் விரும்பினார். ரி.என்.ஏ உயர்மட்டம் அதற்கு உடன்பட மறுத்தது. அதன்பின் வித்தியாதரன் இந்தக் கூட்டணி வாக்குகளை அறுவடை செய்வதற்காக புலிகளின் தோற்றத்தை பயன்படுத்துகிறது, ஆனால் முன்னாள் எல்.ரீ.ரீ.ஈ அங்கத்தவர்கள் பிரதான அரசியல் நீரோட்டத்துக்கு ஜனநாயக ரீதியில் மீள் வரவு செய்வதை ஏற்றுக்கொள்ள மறுக்கிறது என்று ரி.என்.ஏயினை விமர்சிக்கத் தொடங்கினார். அவர் சி.எப்.டி சுயேச்சையாகப் போட்டியிடும் என்று சொன்னார்.

ரி.என்.ஏ உடன் மோதல் போக்கை கடைப்பிடிக்கும் தமிழர் விடுதலைக் கூட்டணி (ரி.யு.எல்.எப்)vithiy தலவர் வீரசிங்கம் ஆனந்தசங்கரி இதைக் கேள்விப்; பட்டதும் தனது கட்சிப் பட்டியலில் சி.எப்.டிக்கு வேட்பு மனு வழங்க முன்வந்தார். சங்கரியின் சலுகையை சி.எப்.டி ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டது. யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் மட்டும் சி.எப்.டி சுயேச்சை குழுவாக வேட்பு மனுவை தாக்கல் செய்தது. தமிழ் வாக்குகளைப் பிரித்து தமிழரின் பிரதிநிதித்துவத்தை நீர்த்துப் போகும்படி செய்ய விரும்பாததால் தாங்கள் வேறு மாவட்டங்களில் போட்டியிடவில்லை என வித்தியாதரன் தெரிவித்தார் சுவராஸ்யமான விடயமாக சி.எப்.டி, அகில இலங்கை தமிழ் காங்கிரசின் (ஏசிரிசி) சைக்கிள் சின்னத்தில் போட்டியிடும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் வேட்பாளர் பட்டியலில் தங்களை உட்படுத்துமாறு கேட்கவில்லை. கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்தேசிய மக்கள் முன்னணி – அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் வடக்கு மற்றும் கிழக்கிலுள்ள அனைத்து மாவட்டங்களிலும் புலம்பெயர் தமிழர்களிடையே உள்ள எல்.ரீ.ரீ.ஈ மற்றும் எல்.ரீ.ரீ.ஈ சார்பு சக்திகளின் பின்துணையுடன் போட்டியிடுகிறது.

புலம்பெயர்ந்தவர்களிடையே உள்ள புலிகளின் கட்டுப்பாட்டிலுள்ள ஊடக ஊதுகுழல்கள் சி.எப்.டி யினை விமர்சிப்பதையும் இங்கு குறிப்பிடுவது அவசியமாகிறது. முன்னாள் தமிழ் போராளிகள், தமிழ் தேசிய மக்கள் முன்னணி – அகில இலங்கை தமிழ் காங்கிரசுக்கு கிடைக்க இருக்கும் சாத்தியமான வாக்குகளைக் குறைப்பதற்கான உள்நோக்கத்தோடு தேர்தலில் போட்டியிடுகிறது என அவை குற்றம்சாட்டும் அதேநேரம் முன்னாள் எல்.ரீ.ரீ.ஈ அங்கத்தவர்களுக்கு தங்களது பட்டியலில் இடம் கொடுக்கவில்லை என்று ரி.என்.ஏ மீதும் குற்றம் சாட்டுகின்றன. சிலந்தி வேட்பாளர்களைப் பொறுத்தமட்டில் அவர்களும்கூட ரி.என்.ஏ தங்களுக்கு இடம்தராதது காட்டிக் கொடுப்பு எனவும், அந்த நோக்கத்தின் காரணமாகத்தான் தாங்கள் சுயேச்சைகளாகப் போட்டியிட வேண்டியுள்ளது எனச் சொல்லி, ரி.என்.ஏ யினை மட்டுமே கண்டிக்கிறார்கள். அவர்களது அரசியல் பிரச்சாரத்தில் இதுவரை தமிழ் தேசிய மக்கள் முன்னணி – அகில இலங்கை தமிழ் காங்கிரசு பற்றி இதுவரை எந்த பேச்சும் குறிப்பிடப் படவில்லை.

வித்தியாதரனின் சோதனை அரசியல் மற்றும் ஜனநாயகத்துக்கான போராளிகள் அமைப்பை உருவாக்குவதில் முக்கியமான பாத்திரத்தை வகிக்கவேண்டிய சூழ்நிலைக்கு வழிவகுத்தது போன்றவற்றை பார்க்கும்போது, மூத்த ஊடகவியலாளரான அவர் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு எதிரான தனது சொந்தப் பகை உணர்ச்சியை தீர்த்துக்கொள்ள முயற்சிக்கிறரா என்கிற சந்தேகம் வலுப்படுகிறது. 2010 தேர்தலில் தன்னை ஒரு வேட்பாளராக நியமிப்பதாக வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றாததையிட்டு ரி.என்.ஏ க்கு எதிரான வன் சீற்றத்தை அவர் தன்னுள் அடக்கி வைத்திருக்கிறார் என்று நம்பப்படுகிறது.

பாராளுமன்ற உறப்பினராக பெரிய அண்ணன் வித்தி

அவர் இப்போது முன்னாள் புலி அங்கத்தவர்களைச் சுரண்டி மற்றும் அவர்களைப் பயன்படுத்தி தனது தேர்தல் இலட்சியங்களை முன்னேற்றுகிறார் என நம்பப்படுகிறது. ஒரு பாராளுமன்ற உறுப்பினரைப் பெறுவதற்கு போதுமான வாக்குகளை இந்த சுயேச்சைக் குழு பெறுமானால், வித்தியாதரன் பாராளுமன்ற உறுப்பினராக வருவதற்கு மிக அதிக சாத்தியம் உள்ளது. ஏனைய அங்கத்தவர்கள் அதிகம் விருப்பு வாக்குகளைப் பெற்றாலும் கூட அவர்கள் பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்யாமல் விலகி இருந்து வித்தி அண்ணாவுக்கு பாராளுமன்ற உறுப்பினருக்கான வழியை அமைத்துக் கொடுப்பதற்கான வாய்ப்பும் காணப்படுகிறது.

ஆகவே இந்தப் பின்னணியில்தான் முன்னாள் புலிகள் யாழ்ப்பாணத்தில் சுயேச்சையாகப் போட்டியிடுகிறார்கள். அவர்களது வீட்டுக்கு வீடு பிரச்சாரத்தின்போது, சாத்தியமான வாக்காளப் பெருமக்களால் அவர்கள் நன்கு உபசரிக்கப்பட்டு வருகிறார்கள். எனினும் காண்பிக்கப்படும் இந்த விருந்தோம்பல் பண்பாடு தேர்தல் நாளன்று உண்மையான வாக்குகளாக மாற்றப்படுமா என்பது விவாதத்துக்கு உரிய ஒரு கருத்தாகவே உள்ளது. சுயேச்சைப் புலிகளாகப் போட்டியிடும் முன்னாள் புலிகள், ஓகஸ்ட் 17ந் திகதி நடேசபிள்ளை வித்தியாதரனைப் பாராளுமன்றத்துக்கு அனுப்புவதற்கு அனுப்புவதற்கு போதுமான வாக்குகளை அறுவடை செய்வார்களா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

ஆங்கிலத்தில் டி.பி.எஸ்.ஜெயராஜ் இனால் எழுதப்பட்ட
Tigers as Spiders! Ex – LTTE Cadres Contesting as Independent Group in Jaffna” கட்டுரையியின் தமிழாக்கம்: தேனீ மொழிபெயர்ப்பு: எஸ்.குமார்

நன்றி: தேனீ

டி.பி.எஸ். ஜெயராஜ் உடன் தொடர்பு கொள்ள்வதற்கான மின் அஞ்சல்: dbsjeyaraj@yahoo.com

DBSJeyaraj.com on Facebook

Share on FacebookTweet about this on TwitterShare on LinkedInShare on Google+Print this page