வெளிநாட்டு பயங்கரவாதிகளாக பட்டியல் இடப்பட்டுள்ள சில தமிழ் புலம்பெயர் அமைப்புகள் மீதான தடையை நீக்குதல்

டி.பி.எஸ்.ஜெயராஜ்

ஸ்ரீலங்காவின் ஆற்றலும் உற்சாகமும் மிக்க வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தற்சமயம் சில குறிப்பிட்ட ஸ்ரீலங்கா தமிழ் புலம்பெயர் அமைப்புகள் மற்றும் தனிநபர்களை ஐக்கிய நாடுகள் சபையின் 1968 ஆண்டின் சட்டம் இல.45ன்படி பயங்கரவாதிகளாக நியமிக்கப் பட்டிருப்பதை மீளாய்வு செய்து மற்றும் அவற்றின் மீது விதிக்கப்பட்டுள்ள தடையை அகற்றுவதற்கான சாத்தியமான நகர்வு ஒன்றை மேற்கொள்ளுவதற்காக முன்னணியில் நிற்கிறார். வெளிநாட்டு மண்ணில் இயங்கிவரும் தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் (எல்.ரீ.ரீ.ஈ) மற்றும் வேறு 15 அமைப்புகள் என்பன வெளிநாட்டு பயங்கரவாத அமைப்புகள் என்று 2014 மார்ச்சில் வெளியான அதி விசேட வர்த்தமானி 1856ஃ41 யின்படி தடை செய்யப்பட்டுள்ளன. இந்த 16 அமைப்புக்களைத் தவிர, எல்.ரீ.ரீ.ஈ தொடர்புகள் உள்ளதாக சந்தேகிக்கப்படும் ஸ்ரீலங்கா உட்பட 19 நாடுகளில் வசிக்கும் மேலும் 424 பேரும் கூட இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளார்கள்.

MS12812

வர்த்தமானி பிரகடனத்திலுள்ள பட்டியலில் உள்ள நபர்கள், குழுக்கள், மற்றும் அமைப்புகள் என்பனவற்றை நியமித்திருப்பது, 2012ம் ஆண்டின் ஐக்கிய நாடுகள் ஒழுங்கு விதிகள் இல. 1, பந்தி (4) ன் உப பந்தி (2) ன்படி பிரசுரிக்கப்பட்ட, 2012, மே 15 திகதிய அதி விசேட வர்த்தமானி இல.1758ஃ19 க்கு அமையவே. இயற்கையான நபர்கள், சட்ட, நபர்கள், குழுக்கள் மற்றும் அமைப்புகள் தொடர்பாக இந்த பட்டியலை நிறுவவும் மற்றும் பராமரிக்கவும் தகுதிவாய்ந்த அதிகாரியாக நியமிக்கப் பட்டிருப்பவர், அப்போது பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளராக இருந்த திரு. கோட்டபாய ராஜபக்ஸ ஆவார்.

இந்த கட்டளை, பயங்கரவாதத்தை எதிர்க்கவும் மற்றும் பயங்கரவாதத்துக்கு நிதி வழங்குவதையும் கட்டுப்படுத்துவது போன்ற உத்திகளை அமைப்பதற்காக ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையல் மேற்கொள்ளப்பட்ட பிரேரணை 1373 படி ஏற்படுத்தப் பட்டதாகும் இதில் அப்போது வெளிவிவகார அமைச்சராக இருந்த பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் கையெழுத்திட்டிருந்தார். ஐநா பாதுகாப்புச் சபை தீர்மானம் 1373 கொண்டு வரப்பட்டது செப்ரம்பர் 28, 2001ல், அது 2001 செப்ரம்பர் 11ல் நியுயார்க் வர்த்தக மையத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின் எழுச்சியினால் மேற்கொள்ளப்பட்டது.

பத்திரிகை அறிவிப்பு

ஸ்ரீலங்கா வெளிவிவகார அமைச்சு இந்த தடையை அறிவிக்கும் முகமாக கடந்த வருடம் பத்திரிகை அறிவிப்பு ஒன்றைச் செய்திருந்தது. அது பின் வருமாறு குறிப்பிடுகிறது :-

“ ஒரு கட்டளை, வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் கையெழுத்திட்டுள்ள ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபை தீர்மானம் 1373ன் விதிகளின்படி பயங்கரவாதத்தை எதிர்ப்பதற்கும் மற்றும் பயங்கரவாதத்துக்கு பணம் வழங்குவதை கட்டுப் படுத்தவும் வேண்டி ஆட்களையும் மற்றும் அமைப்புகளையும் பயங்கரவாதிகளாக நியமிக்க முடியும் மற்றும் இது வெகு விரைவில் அரசாங்க வர்த்தமானியில் பிரசுரிக்கப்படும்”.

இந்த உத்தரவு, நபர்கள், குழுக்கள், மற்றும் அமைப்புகள் நியாயமான அடிப்படையில் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு ஊக்குவிப்புச் செய்வது, செய்ய முயற்சிப்பது, உதவி செய்வது அல்லது பங்குபற்றுவது போன்றவற்றை மேற்கொள்வதாக நம்பப்படும் பட்சத்தில் அது தொடர்பானவர்களை இனங்காண்பதற்கு பொறுப்பான தகுதியான அதிகாரியான பாதுகாப்பு அமைச்சு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளரின் பரிந்துரையை அடிப்படையாகக் கொண்டது”.

“இந்த ஒழுங்குவிதிகளின் கீழ் கணிசமான தாக்கம் உள்ள ஒரு உத்தரவின்படி நியமிக்கப்பட்ட நபர்கள், அல்லது அமைப்புகளின் அனைத்து நிதிகள், சொத்துக்கள்,மற்றும் பொருளாதார வளங்கள் யாவும் அவர்கள் நியமிக்கப்பட்ட பட்டியலில் இருந்து நீக்கப்படும் வரை முடக்கப்படும்”.

“தகுதி வாய்ந்த அதிகாரியின் அனுமதியின்றி முடக்கப்பட்ட சொத்துக்களை மாற்றுவது அல்லது கையாளுவது தடை செய்யப்பட்டுள்ளது. அந்த ஒழுங்கு விதியில் உள்ளதின்படி முடக்கப்பட்ட சொத்துக்களைப் பற்றிய கட்டளைக்கு இணங்கத் தவறும் எந்த நபரும் கடும் தண்டனைக்கு உள்ளாவார்கள்”.

எனவே புலம்பெயர் அமைப்புகளைத் தடை செய்யும் நடவடிக்கை தொழில்நுட்ப ரீதியாக வெளிவிவகார அல்லது வெளிநாட்டு அமைச்சின் வரம்பின் கீழ்தான் வருகிறது என்பதைக் காணக்கூடியதாக உள்ளது. எனவே இது வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர இந்த விடயத்தில் இப்போது நடவடிக்கைகளை ஆரம்பிக்க வேண்டியது அவரின் தலையீட்டு உரிமை. மேலும் இதில் கவனிக்க வேண்டியது என்னவென்றால் இந்த தடைகளைப் பற்றி அவ்வப்போது மீள்பரிசீலனை செய்ய வேண்டியது அந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாகும், இதற்கான விதியும் உள்ளது.

மங்கள சமரவீர

மார்ச் 2015ல் பாராளுமன்றத்தில் பேசும்போது வெளிவிவகார அமைச்சர் சமரவீர சில புலம்பெயர் அமைப்புகள் மற்றும் தனிநபர்கள் மீதான தடையை மீளாய்வு செய்வதற்கு அழைப்பு விடுத்தார். ஒரு மாதத்துக்குப் பின்னர் ஏப்ரலில் 16 அமைப்புகள் மற்றும் 424 தனி நபர்கள் மீதான மீளாய்வு நடவடிக்கை இப்போது செயற்பாட்டில் இருப்பதாக அமைச்சர் பாராளுமன்றத்தில் அறிவித்தார். இந்த வருடம் ஜூன் ஆரம்பத்தில் மங்கள சமரவீர தடை செய்யப்பட்ட உலகத் தமிழர் பேரவை (ஜி.ரி.எப்) பிரதிநிதிகளுடன் லண்டனில் பேச்சுக்களை நடத்தினார். இந்த வாரம் கொழும்பில் பத்திரிகையாளர் மாநாட்டில் பேசும்போது, அமைச்சர் சமரவீர தான் நல்லிணக்க நடவடிக்கையின் ஒரு பகுதியாக ஸ்ரீலங்கா தமிழ் புலம்பெயர்ந்தவர்களுடன் தொடர்பு கொள்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு இருந்ததாகச் சொன்னார். சிறிசேன – விக்கிரமசிங்க அரசாங்கம் தனது முயற்சிக்கு உறுதியான பின்துணை வழங்குவதாக மங்கள வலியுறுத்தினார்.

“தனது இதயத்தை சரியான இடத்தில் வைத்திருக்கும் ஒரு மனிதர்” என நண்பர்களும் மற்றும் எதிரிகளும் ஒன்றுபோல வர்ணிக்கும் ஒரு மனிதர் மங்கள சமரவீர. இந்த எழுத்தாளர், குழப்பமான இனப் பிரச்சினையில் ஞர்னமும் முற்போக்கான எண்ணமும் கொண்ட தொலைநோக்கம் உள்ள றுகுணுவின் மைந்தன் என்று மங்களமீது தனிப்பட்ட மதிப்பு நிறைய வைத்துள்ளார். இந்த ஆற்றல் மிக்க தென்பகுதி மாத்தறையை சேர்ந்த அரசியல்வாதி பல சந்தர்ப்பங்களில் ஸ்ரீலங்காவில் உள்ள சிறுபான்மைச் சமூகங்களுக்குத் தான் ஓரு உண்மையான நண்பன் என்பதை நிரூபித்துக் காட்டியுள்ளார். இன ஒடுக்குமுறை பற்றி துணிச்சலாக பேசுவதற்கு அவர் ஒருபோதும் தயங்கியதில்லை.

எனினும் சரியானதை செய்யவேண்டும் என்கிற அவா மற்றும் ஆர்வம் காரணமாக மங்கள சமரவீர அடிக்கடி பிரச்சினைகளில் மாட்டிக் கொள்வதுண்டு. தவறுகளைத் திருத்தி அதற்கான பரிகார நடவடிக்கையை உடனடியாகச் செய்ய வேண்டும் என்கிற உந்துதல் காரணமாக அடிக்கடி மங்கள ஏனைய அரசியல்வாதிகள் அடியெடுத்து வைக்க அஞ்சும் பிரதேசங்களுக்கும் வேகமாக விரைவதுண்டு. புலம்பெயர்ந்தவர்களை அணுகும் மங்கள சமரவீரவின் பாராட்டத்தக்க தற்போதைய திட்டம் கூட மகாநாம சமரவீரவின் மகன் மிகவும் எச்சரிக்கையாக அடியெடுத்து வைத்தால் சிறப்பாக மாறக்கூடிய ஒரு பிரதேசமாகும்.

மூன்று ஆலோசனைகள்

இந்த எழுத்தாளர் அமைச்சருக்கும் மற்றும் அவரது அரசாங்கத்துக்கும் மூன்று ஆலோசனைகளை முன்வைக்க விரும்புகிறார்.

முதலாவதாக – வெளிநாட்டில் வசிப்பவர்களிடம் செல்வதற்கு முன்பு உள்நாட்டில் வாழும் தமிழர்களிடம் செல்லுங்கள். ஸ்ரீலங்காவில் வாழுபவர்கள்தான் அதிகம் பாதிப்புக்கு உள்ளானவர்கள் மற்றும் உதவி தேவைப்படுபவர்கள். புலம்பெயர்ந்தவர்களுக்கு முன் அவர்களுக்கு முன்னுரிமை வழங்குங்கள். புலம்பெயர்ந்தவர்கள் மீது கவனம் சொரியப்படும் அதேவேளை அது ஸ்ரீலங்காவில் எஞ்சியிருப்பவர்களிடம் சீற்றத்தை ஏற்படுத்தும். புலம்பெயர்ந்தவர்களின் திறமைகளைப் பயன்படுத்த முயற்சிப்பதற்கு முன்னர் ஸ்ரீலங்காவிலுள்ள திறமையான ஆட்களுக்கு ஒரு நியாயமான ஒப்பந்தம் வழங்கப்பட வேண்டும். ஸ்ரீலங்காவிலுள்ள சாதாரண மக்கள் மத்தியில் புலம்பெயர்ந்தவர்கள் மற்றும் அவர்களது பண மூட்டை என்பனவற்றின் மீது கொதிப்பும் சீற்றமும் உள்ளது.

இரண்டாவதாக – எல்.ரீ.ரீ.ஈ தொடர்புகள் மற்றும் அனுதாபம் உள்ள தமிழ் அரசியல் அமைப்புகளை அணுகுவதற்கு மாறாக சாதாரண தமிழ் மக்களை அணுக வேண்டும். தமிழ் புலம்பெயர்ந்தவர்களில் உள்ள பெரும்பான்மையானவர்கள் தவறாக நம்பப் படுவதைப்போல எல்.ரீ.ரீ.ஈ யினாலோ அல்லது எல்.ரீ.ரீ.ஈ சார்பு அமைப்புக்களாலோ கட்டுப்படுத்தப் படுபவர்கள் அல்ல. ஒரு சிறுபான்மைப் புலிகள் குழு, தான் அவர்களைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது போன்ற உணர்வை வெளிப்படுத்தினாலும் யதார்த்தம் வித்தியாசமானது. அரசியல் அமைப்புக்களை கவர்ந்திழுப்பதுக்குப் பதிலாக, பழைய மாணவர் சங்கம், கிராம நலன்புரி சங்கங்கள், மத நிறுவனங்கள் மற்றும் வர்த்தக சபை போன்ற புலம்பெயர் நிறுவனங்களை அணுக வேண்டும்.

மூன்றாவதாக – அதற்குள் மூழ்குவதற்கு முன்னர் தமிழ் புலம்பெயர்ந்தவர்களின் அரசியலை நன்கு கற்றுக்கொள்ள வேண்டும். தமிழ் புலம்பெயர்ந்தவர்கள் பிரச்சினையானது ஆழமான விளைவுகளால் உந்தப்பெற்ற சிக்கலான ஒன்று. இந்தப் பிரச்சினையில் தமிழ் அரசியல்வாதிகள் மற்றும் ஸ்ரீலங்காவிலுள்ள தொண்டு நிறுவன நபர்கள் அல்லது வெளிநாட்டிலுள்ள புலம்பெயர்ந்தவர்களின் பிரதிநிதிகள் வழங்கும் தரவுகளில் மட்டும் முற்றாகத் தங்கியிருக்கக் கூடாது. இந்தக் கூறுகள் இந்த விடயத்தில் தங்கள் தனிப்பட்ட நலன்களை கொண்டுள்ளன. புலிகள் சார்பான புலம்பெயர்ந்த அமைப்புகள் பேசும் “சமாதானம் மற்றும் நல்லிணக்கம் போன்ற வார்த்தைகளில் ஏமாந்து விடவேண்டாம். புலம்பெயர்ந்த அமைப்புகளின் உண்மையான பலம் மற்றும் செல்வாக்கை மதிப்பிட வேண்டும். மேலும் அமைப்புகளை ஆய்வு செய்து அந்த அமைப்பின் பெயரளவு தலைமைப் பொறுப்பில் உள்ள நபர்கள் தவிர்க்கமுடியாத பின்னடைவுகளை தாங்கக் கூடியவர்களா என்பதைக் கண்டறிய வேண்டும். சடுதியாக எழும் கட்டுப்பாடற்ற நிலைக்கு ஏற்ப செயற்படாமல் அறிவின் ஒளியுடன் சிந்தித்து செயற்பட வேண்டும்.

நான் ஏன் இதைச் சொல்கிறேன் என்றால் சமரவீரவின் பேச்சு என்னை ஆச்சரியப்பட வைத்தது, புலம்பெயர் அமைப்புக்களை தடைசெய்வது தொடர்பான உண்மைகளை அவர் முற்றாக ஆராய்ந்து பார்த்துள்ளாரா என்பதுதான் அதற்கான காரணம். உதாரணமாக மார்ச் 2015ல் பாராளுமன்றத்தில் தமிழ் புலம்பெயர்ந்த அமைப்புகள் மீதான தடையை மீளாய்வு செய்வது தொடர்பாக பேசியபோது மங்கள சமரவீர பேசியதாகச் சொல்லப்படுவது, “இந்த பட்டியல் மேற்கொள்ளப்பட்டது, ஜனாதிபதி தேர்தலை இயக்குவதற்காக எல்.ரீ.ரீ.ஈ மீள் இணைவது என்கிற வெறித்தனமான கதைக்கு பலம் சோப்பதற்காக” என்று. மங்களவின் இந்த வலியுறுத்தல் முற்றிலும் தவறானது. ஒரு பத்திரிகையாளன் என்ற வகையில் தமிழ் புலம்பெயர்ந்த அமைப்புகளையும் மற்றும் தனி நபர்களையும் தடைசெய்வது பற்றி நெருக்கமாக பின்தொடர்ந்து அதுபற்றி மார்ச் 2014ல் எழுதியும் உள்ளேன். “ஜனாதிபதி தேர்தலை இயக்குவதற்காக எல்.ரீ.ரீ,ஈ மீள் இணைகிறது என்கிற வெறித்தனமான கதைக்கு பலம் சேர்ப்பதற்காககத்தான் இந்த தடை மேற்கொள்ளப்பட்டது” என்கிற சமரவீரவின் கருத்துக்கு நான் ஆதரவு தெரிவிக்க மாட்டேன். நான் அறிந்த வரையில் மார்ச் 2014ல் வெளியான இறுதி வர்த்தமானி அறிவித்தல், அதிகாரத்துவ தள்ளிப் போடுதலுக்காக பெரிய அளவில் தாமதிக்கப்பட்ட ஒரு மிக நீண்ட செயல்முறையின் இறுதி விளைவாகும்.

ஐநா பாதுகாப்புச் சபையின் தீர்மானம்.

வெளிநாட்டு பயங்கரவாத அமைப்புகளை பட்டியலிடுவது ஐநா பாதுகாப்பு சபை தீர்மானம் 1373 மற்றும் 1267 என்பனவற்றின் அடிப்படையில் ஏற்பட்டது. புலம்பெயர் அமைப்புகள் மற்றும் எல்.ரீ.ரீ.ஈ க்கு பொருட்கள் வகையில் உதவி வழங்கி பயங்கரவாதத்தை விரிவாக்குவதாகச் சொல்லப்படும் தனிநபர்கள் தொடர்பான தடை நடவடிக்கைகள் 2008ல் ஆரம்பித்தது. அதை ஸ்ரீலங்கா மத்திய வங்கியின் பொருளாதார புலனாய்வுப் பிரிவினர் (எப்.ஐ.யு) சர்வதேச நாணய நிதியத்தின்(ஐ.எம்.யு) உதவியுடன் ஆரம்பித்தார்கள். அதன் பின்னர் இந்த நடவடிக்கை வெளிவிவகார அமைச்சினால் தொடரப்பட்டது, சட்டமா அதிபர் திணைக்களம், மற்றும் சட்ட வரைஞர் திணைக்களம் என்பன எப்.ஐ.யு வின் முயற்சியில் வௌ;வேறு கட்டங்களில் இணைந்து கொண்டன. பாதுகாப்பு அமைச்சு இந்த நடவடிக்கையில் 2011ல் நுழைந்தது.

இந்த தடை நடவடிக்கையுடன் தொடர்புடையதான ஒரு தொடாச்சியான இடைவிடாத வர்த்தமானி அறிவித்தல்களும் வெளிவர ஆரம்பித்தன. ஐநா பாதுகாப்புச் சபை தீர்மானம் 1373 பற்றிய வர்த்தமானி அறிவித்தல் அதி விசேட வர்த்தமானி அறிவித்தலாக 15 மே 2012ல் வெளிவந்தது. அதேபோல ஐநா பாதுகாப்புச் சபை தீர்மானம் 1267 பற்றிய வர்த்தமானி அறிவித்தல் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலாக 31, மே 2012 ல் வெளிவந்தது. அதன் பின் இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல்கள் 11, ஜூன் 2013, 16, ஆகஸ்ட் 2013, மற்றும் 23, ஜனவரி 2014, மற்றும் 13 பெப்ரவரி 2014 என தொடர்ந்து கொண்டே போனது. இறுதியான முடிவு வர்த்தமானி அறிவித்தலாக 21,மார்ச் 2014ல் வெளியானது.

எனவே இந்த தடை நடவடிக்கை நீண்ட காலம் இழுபட்ட நடவடிக்கையாக இருக்கிறதே அன்றி மங்களவினால் குற்றம் சாட்டப்பட்படி 2015 ஜனாதிபதி தேர்தலை இயக்குவதற்கான வெறிபிடித்த நடவடிக்கைக்கு பலம் சேர்ப்பதற்காக குறுகிய கால அறிவிப்பில் மேற்கொள்ளப்பட்ட ஒன்றல்ல என்பதைக் காணக்கூடியதாக உள்ளது. இந்த நடவடிக்கையின் முறையற்ற தாமதம் 2008ல் ஆரம்பித்து 2014 ல் முடிவடைந்தது, இதற்கு அதிகாரத்திலுள்ளவர்களின் வழமையான சோம்பலே காரணம். இது பற்றி அமைச்சர் சமரவீரவுக்கு ஒன்றில் தவறான தகவல்கள் வழங்கப்பட்டிருக்க வேண்டும் அல்லது வேண்டுமென்றே இந்த நோக்கம் தவறாகச் சொல்லப்பட்டுள்ளது, எனத் தெரிகிறது.

இந்தக் கட்டத்தில் வர்த்தமானி அறிவித்தலின்படி தடைசெய்யப்பட்ட 16 அமைப்புகள் மற்றும் 424 தனிப்பட்டவர்களில் அடங்கும் ஒரு சிலரது பின்னணியை சுருக்கமாக ஆராய்வது பொருத்தமாக இருக்கும்.

பட்டியலிடப்பட்ட தனிநபர்கள்

பட்டியலில் உள்ள 424 தனி நபர்களில் ஆண்களும் மற்றும் பெண்களும் Prabhakaran_with_Rudrakumaran.அடங்குவார்கள், அவாகளைப் பற்றி விசேடமாகக் குறிப்பிடுவதற்கு அந்த எண்ணிக்கை மிகவும் அதிகம். இந்த நபர்களில் கிட்டத்தட்ட 30 பேர் பெண்கள் அவர்கள் அவுஸ்திரேலியா, பெல்ஜியம், கனடா, டென்மார்க், பின்லாந்து, பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி, இந்தியா, மலேசியா, நெதர்லாந்து, நியுசிலாந்து, நோர்வே, ஸ்ரீலங்கா, சுவீடன் சுவிட்சலாந்து, தாய்லாந்து, ஐக்கிய இராச்சியம் மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் வசிப்பதாகச் சொல்லப்படுகிறது.

தடை செய்யப்பட்டதாய் நியமனம் செய்து பட்டியலிடப்பட்டவர்கள் இடையே நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் சுய பாணி பிரதமரான விசுவநாதன் உருத்திரகுமாரன், உலகத் தமிழர் பேரவை தலைவர் வண.பிதா சீமான்பிள்ளை ஜோசப் இமானுவேல், எல்.ரீ.ரீ.ஈயின் சர்வதேசச் செயலகத்தின் தலைவர் நெடியவன் என்கிற பேரின்பநாயகம் சிவபரன் மற்றும் எல்.ரீ.ரீ.ஈ தலைமையகத்தின் தலைவர் சேகரம்பிள்ளை விநாயகமூர்த்தி என்கிற விநாயகம் ஆகியோர் உள்ளனர்.

இந்த நான்கு பேர்களைத் தவிர நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தற்போதைய மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் பட்டியலில் உள்ளனர். இவர்களில் முன்னாள் மட்டக்களப்பு தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினரும் தற்போது பிரித்தானியாவில் வசிப்பவருமான சேனாதிராஜா ஜெயானந்தமூர்த்தியும் உள்ளார். மேலும் எல்.ரீ.ரீ.ஈ யின் முக்கிய செயற்பாட்டாளர்களான பல ஐரோப்பிய நாடுகளின், தற்போதைய மற்றும் முன்னாள் நாட்டுத் தலைவர்கள் உட்பட பலர் இந்தப் பட்டியலில் உள்ளனர். எல்.ரீ.ரீ.ஈயின் இரண்டு முக்கிய நபர்களான, ஸ்ரீலங்காவின் முன்னாள் தமிழர் புனர்வாழ்வு இயக்கத்தின் (ரி.ஆர்.ஓ) தலைவரான கேபி றெஜி மற்றும் யாழ்ப்பாணம் மற்றும் வன்னியில் உள்ள எல்.ரீ.ரீ.ஈயின் பொருளாதாரப் பிரிவான ரீடோருக்கு தலைவரான றூட் ரவி ஆகியோரே அந்த இருவர். தற்போது லண்டனில் உள்ள றூட் ரவி, பிரித்தானிய தமிழர் பேரவைக்கு பின்னாலிருக்கும் கட்டுப்பாட்டு சக்தியாகக் கருதப்படுகிறார், கேபி றெஜி ரி.ஆர். ஓ வின் நிதிமூலம் கொள்வனவு செய்யப்பட்ட பல்வேறு வருமானம் தரும் சொத்துக்களை மேற்பார்வை செய்தவாறு லண்டனுக்கும் மற்றும் ltte supportsநோர்வேக்குமாகப் பறந்து கொண்டிரக்கிறார்.

ஸ்ரீலங்கா அதிகாரிகளின் உத்தரவின் பேரில் இன்ரர்போல் முன்னர் சிவப்பு எச்சரிக்கை விடுத்திருந்த அநேக நபர்கள் கூட வர்த்தமானி அறிவித்தல்படி நியமிக்கப்பட்ட படடியலில் உள்ளனர். இதில் ஆயுதக் கொள்வனவு செய்யும் நோக்கத்தோடு, எல்.ரீ.ரீ.ஈ யின் பெருந்தொகைப் பணத்தை தன்வசம் வைத்திருப்பதாகச் சந்தேகிக்கப்படும் பொன்னையா ஆனந்தராஜா என்கிற ஐயா என்பவரும் அடங்குவார். ஐயா ஒரு அமெரிக்கப் பிரஜை, அமெரிக்காவின் மத்திய – மேற்கு மாநிலம் ஒன்றில் வசிப்பதாகச் சொல்லப்படுகிறது.

தடை செய்யப்பட்ட அமைப்புகள்

தடை செய்யப்பட்ட பதினாறு அமைப்புகளும் கீழே பட்டியல் இடப்பட்டுள்ளது:

01.தமிழீழ விடுதலைப் புலிகள் என்கிற எல்.ரீ.ரீ.ஈ என்கிற தமிழ் புலிகள்.
02.தமிழர் புனர்வாழ்வு இயக்கம் என்கிற ரி.ஆர்.ஓ
03.தமிழர் ஒருங்கிணைப்பு குழு என்கிற ரி.சி.சி
04.பிரித்தானிய தமிழர் பேரவை என்கிற பி.ரி.எப்
05.உலகத் தமிழர் இயக்கம் என்கிற டபிள்யு.ரி.எம்
06.கனடிய தமிழ் காங்கிரஸ் என்கிற சி.ரி.சி
07.அவுஸ்திரேலிய தமிழ் காங்கிரஸ் என்கிற ஏ.ரி.சி
08.உலகத் தமிழர் பேரவை என்கிற ஜி.ரி.எப்
09.கனடிய தமிழர் தேசிய சபை என்கிற என்.சி.சி.ரி என்கிற மக்கள் அவை
10.தமிழர் தேசிய சபை என்கிற ரி.என்.சி
11.தமிழ் இழையோர் அமைப்பு என்கிற ரி.வை.ஓ
12.உலகத் தமிழர் ஒருங்கிணைப்பு குழு என்கிற டபிள்யு.ரி.சி.சி
13.தமிழீழ நாடுகடந்த அரசாங்கம் என்கிற ரி.ஜி.ரி.ஈ
14.தமிழ் ஈழ மக்கள் மனறம் என்கிற ரி.ஈ.பி.ஏ
15.உலகத் தமிழர் நிவாரண நிதியம் என்கிற டபிள்யு.ரி.ஆர்.எப்
16.தலைமையகக் குழு என்கிற ஹெட் குவார்ட்டஸ் குரூப்

01.LIBERATION TIGERS OF TAMIL EELAM a.k.a LTTE a.k.a TAMIL TIGERS.
02. TAMIL REHABILITATION ORGANIZATION a.k.a TRO.
03. TAMIL COORDINATING COMMITTEE a.k.a TCC
04. BRITISH TAMIL FORUM a.k.a BTF
05. WORLD TAMIL MOVEMENT a.k.a WTM
06. CANADIAN TAMIL CONGRESS a.k.a CTC
07. AUSTRALIAN TAMIL CONGRESS a.k.a ATC
08. GLOBAL TAMIL FORUM a.k.a GTF
09. NATIONAL COUNCIL OF CANADIAN TAMILS a.k.a NCCT a.k.a Makkal Avai
10. TAMIL NATIONAL COUNCIL a.k.a TNC
11. TAMIL YOUTH ORGANIZATION a.k.a TYO
12. WORLD TAMIL COORDINATING COMMITTEE a.k.a WTCC.
13. TRANSNATIONAL GOVERNMENT OF TAMIL EELAM a.k.a TGTE
14. TAMIL EELAM PEOPLES ASSEMBLY a.k.a TEPA
15. WORLD TAMIL RELIEF FUND a.k.a WTRF
16. HEADQUARTERS GROUP a.k.a Head Quarters Group

சட்டப்படி தடை செய்யப்பட்ட இந்த அமைப்புக்களில் சில ஒரு ஒற்றை நாட்டில் மட்டுமே செயற்படுகிறது எனச் சொல்லப்படும் அதேவேளை ஏனையவற்றுக்குப் பல்வேறு நாடுகளிலும் கிளைகள் உள்ளன. அமெரிக்கா, கனடா, பிரித்தானியா, இத்தாலி, சுவிட்சலாந்து, பிரான்ஸ் மற்றும் அவுஸ்திரேலியா என்பன இந்த நாடுகளில் உட்படும்.

தடை செய்யப்பட்ட அமைப்புக்களில் குறிப்பிடத் தக்கவை விசுவநாதன் உருத்திரகுமாரன் தலைமையிலான நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்(ரி.ஜி.ரி.ஈ), கத்தோலிக்க மதகுருவான பிதா எஸ்.ஜே. இமானுவல் தலைமையிலான உலகத் தமிழர் பேரவை, மற்றும் நெடியவன் என்கிற பேரின்பநாயகம் சிவபரன் தலைமையிலான எல்.ரீ.ரீ.ஈ குழு மற்றும் அதனுடன் இணைந்த அமைப்புகள். மற்றும் விநாயகம் என்கிற சேகரப்பிள்ளை விநாயகமூர்த்தி தலைமையிலான புலிகள் குழு ( தலைமையகக் குழு) என்பன.

தடை செய்யப்பட்ட அந்த நேரத்தில் ஸ்ரீலங்கா பாதுகாப்பு வட்டாரங்கள் இந்த அமைப்புகள் யாவும் நான்கு பரந்த குழுக்களின் கீழ் வகைப்படுத்தப்பட்டு அவை நான்கு பிரதான நபர்களான உருத்திரகுமாரன், பிதா இமானுவல், நெடியவன் மற்றும் விநாயகம் என்பவர்களின் கீழ் ஒன்றில் கட்டுப் படுத்தப்படும் அல்லது செல்லாக்கு செலுத்தும் என நம்பின. ஸ்ரீலங்கா அராங்கம் இந்த நான்கு குழுக்களையும் ஒன்றாகச் சேர்த்து பயங்கரவாத அமைப்பு என்று கூறுவதை தேர்வு செய்தாலும்கூட, ஒருபுறம் உருத்திரகுமாரன் மற்றும் பிதா இமானுவல் தலைமை தாங்கும் இயக்கங்களுக்கும் மற்றும் மறுபுறம் நெடியவன் மற்றும் விநாயகம் தலைமை தாங்கும் இயக்கங்கள் இடைய மிகவும் முக்கியமான வேறுபாடுகள் இருந்தன. நான்கு முக்கிய நபர்களிடத்தும் மற்றும் அவர்கள் தலைமை தாங்கிய நிறுவனங்கள் இடையேயும் பாரிய வித்தியாசங்கள் இருந்தன.

உருத்திரகுமாரன் தலைமையிலான நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் மற்றும் வண. பிதா இமானுவல் தலைமையிலானா உலகத் தமிழர் பேரவை என்பன – எல்.ரீ.ரீ.ஈ உடன் தொடர்புகள் இருப்பதாகச் சொல்லப்படுவதை தவிர – உலகின் பல பாகங்களிலும் வெளிப்படையாக செயலாற்றி வருகின்றன. நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் மற்றும் உலகத் தமிழர் பேரவை என்பன பொதுவாக புலப்படும் தன்மை உள்ளதாகவும் மற்றும் வெளிப்படைத் தன்மையுடன் செயல்படுவதுடன் சில குறிப்பிட்ட அம்சங்களில் பொறுப்புக்கூறலை பெயரளவிற்கேனும் பதிவு செய்கின்றன. நெடியவன் மற்றும் விநாயகத்தின் கீழுள்ள எல்.ரீ.ரீ.ஈ பிரிவுகள் அடிப்படையில் நிழலான அமைப்புகள். அமைப்பு என்கிற முகப்பின் கீழ் இரகசியமாகச் செயலாற்றுகினறன.

GTFTGTE030414

விசுவநாதன் உருத்திரகுமாரன்

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் சுயபாணி பிரதம மந்திரியான விசுவநாதன் உருத்திரகுமாரன் நியுயார்க்கை தளமாகக் கொண்ட ஒரு வழக்கறிஞர். அவர் முன்னாள் யாழ்ப்பாண மேயராக இருந்த தமிழர் விடுதலைக் கூட்டணியை (ரி.யு.எல்.எப்) சேர்ந்த இராசையா விசுவநாதனின் மகன். நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர், யாழ்ப்பாணத்தில் 1957 ஜூலை 6ல் பிறந்தவர். யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் பழைய மாணவரான உருத்திரகுமாரன் ஸ்ரீலங்கா சட்டக் கல்லூரியில் படித்து ஒரு சட்டத்தரணியாக சித்தி பெற்றார். பின்னர் அவர் ரெக்ஸாஸ் பல்கலைக் கழகத்தில் சட்டத்துறையில் முதுமாணி பட்டம் பெற்றார். உருத்திரகுமாரன் தனது முனைவர் பட்டத்துக்காக ஹவார்ட் பல்கலைக்கழகத்திலும் பயின்றுள்ளார்.

பொதுவாக ருத்ரா என்று குறிப்பிடப்படும் உருத்திரகுமாரன் முன்னர் எல்.ரீ.ரீ.ஈ யின் சர்வதேச சட்ட ஆலோசகராக சேவையாற்றியுள்ளார். ஸ்ரீலங்கா அரசாங்கத்துக்கும் மற்றும் எல்.ரீ.ரீ.ஈ க்கும் இடையில் ஒஸ்லோவின் அனுசரணையுடன் நடைபெற்ற பேச்சுக்களில் புலிகளின் தூதுக்குழுவில் ஒரு முக்கிய ஆளாக அவர் பங்குபற்றியிருந்தார். இந்த எல்.ரீ.ரீ.ஈ தொடர்புகளின் விளைவாக உருத்திரகுமாரனை ஒரு பயங்கரவாதம் எனும் முப்பட்டைக் கண்ணாடி வழியாக பார்த்ததுடன் மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் மற்றும் கனடா என்பனவற்றில் இவரை வரவேற்கத் தகாத ஒரு நபராகவும் கணித்தனர். நாடு கடந்த அரசாங்கம் ஒன்றின் பிரதமருக்கு நாடு கடந்த எல்லைகளை கடக்க முடியாமல் இருப்பது உண்மையில் ஆச்சரியப்படத்தக்க ஒரு முரண்பாடு.

எல்.ரீ.ரீ.ஈ இராணுவ ரீதியாக மே, 2009ல் தோல்வியடைந்த பின்னர் உலகத் தமிழ் புலம்பெயர்ந்தவர்கள் ஒன்றுகூடி, நாடு கடந்த அரசாங்கம் என்று குறிப்பிடப்படும் ஒன்றை நிறுவினர். நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் (ரி.ஜி.ரி.ஈ) வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் உள்ள நகரங்களில நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பகிரங்க மாநாடுகளை நடத்தியுள்ளது. அது தெரிவு செய்யப்பட்ட 135 அங்கத்தவர்களைக் கொண்ட ஒரு பாராளுமன்றம், சபாநாயகர். துணை சபாநாயகர், பிரதம மந்திரி, மூன்று துணை பிரதமர்கள் ஏழு அமைச்சரவை அமைச்சர்கள் மற்றும் பத்து துணை அமைச்சர்கள் என்பனவற்றைக் கொண்ட ஒரு நிருவாகக் கட்டமைப்பு ஆகும். பிரதிநிதிகளைக் கொண்ட ஒரு இரண்டாவது சபையும் கூட அமைக்கப் பட்டுள்ளது. தவிரவும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் வெளியிடப்படும் அறிக்கைகள் மற்றும் பத்திரிகைச் செய்திகள் என்பன கிட்டத்தட்ட அதன் குறிக்கோளுக்கு கணிசமான அளவு எதுவும் செய்வதாகத் தெரியவில்லை.

எனினும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் நெடியவன் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள பிரிவினரால் கடும் அழுத்தத்துக்கு உட்பட்டுள்ளது. இதன் காரணமாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தில் பாரிய பிளவு உண்டானது, நெடியவனுக்கு விசுவாசமான பிரிவினர்கள் அதிலிருந்து கிளர்ச்சி பண்ணிப் பிரிந்து தனியான ஒரு அமைப்பை உருவாக்கினார்கள். நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் முதலாவது தேர்தல் புலம் பெயர்ந்தவர்களிடையே குறிப்பிடத்தக்க ஆர்வத்தை கிளறியது, அநேக வேட்பாளர்கள் போட்டியிட்டதுடன் தேர்தலுக்காக பெருமளவு பணத்தையும் கூடச் செலவு செய்தார்கள். இரண்டாவது நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்திற்கான தேர்தல் சிறிதளவு உற்சாகத்துடனேயே நடைபெற்றது. பெரும்பாலான பிரதிநிதிகள் போட்டியின்றியே தெரிவு செய்யப் பட்டார்கள். ருத்ரா திரும்பவும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமராகத் தெரிவானார்.

வண. கலாநிதி. எஸ்.ஜே. இம்மானுவல்

உலகத் தமிழர் பேரவை(ஜி.ரி.எப்) ஒரு குடை வலையமைப்பு அதன் தலைவர். வண. கலாநிதி. சீமாம்பிள்ளை ஜோசப் இமானுவல் (பிதா.எஸ்.ஜே.இமானுவல்). 1934ல் பிறந்த பிதா.எஸ்.ஜே.இமானுவல் யாழ்ப்பாணம் கோவில் வீதியை சேர்ந்தவர். தனது வாழ்க்கையின் ஆரம்பக் கட்டத்தில் பிதா.இமானுவல் துறவறத்துக்குள் நுழையவில்லை. அவர் 1958ல் முதலில் பௌதீக விஞ்ஞானத்தில் தனது பி.எஸ்சி பட்டத்தை பெற்று ஒரு ஆசிரியராகவும் மற்றும் பத்திரிகையாளராகவும் கடமை புரிந்தார். அவர் கத்தோலிக்க மத குருவாக மாறியது, முந்தைய நூற்றாண்டின் அறுபதுகளில். பிதா.இமானுவல் தனது பட்டப் பின்படிப்பை றோமில் உள்ள எபெனியா அவையின் பல்கலைக் கழகத்தில் மெய்யியல் மற்றும் இறையியலில் மேற்கொண்டு பட்டம் பெற்றார்.

பிதா.இமானுவல் யாழப்பாணம் அல்லது மன்னார் மாவட்டங்களில் ஆயராவார் எனக் கருதப்பட்டது ஆனால் இரண்டு சந்தர்ப்பங்களிலும் அவர் தெரிவு செய்யப்படவில்லை. முறையே தோமஸ் சவுந்தரநாயகம் மற்றும் ஜோசப் ராயப்பு ஆகியோர் யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் ஆயர்களாக இரண்டு வௌ;வேறு சந்தர்ப்பங்களில் திருநிலைப் படுத்தப்பட்டார்கள். பிதா.இமானுவல் யாழ்ப்பாண மாவட்டத்தின் துணை ஆயர் நிலையிலுள்ள தலைமைப் போதகராகவும் மற்றும் யாழ்ப்பாணத்தில் உள்ள புனித பிரான்சிஸ் சேவியர் பிரதான குருத்துவக் கல்லூரி அதிபராகவும் சேவையாற்றி வந்தார். அவர் ஆசிய ஆயர் மாநாட்டின் ஆலோசகராக எட்டு ஆண்டுகளாக இருந்திருப்பதுடன் மற்றும் யாழ்ப்பாணத்திலுள்ள நற் சமூக மையத்தின் நிறுவன பணிப்பாளராகவும் இருந்துள்ளார்.

இராணுவம் 1995 – 96 ல்; யாழ்ப்பாணத்தை மீளக் கைப்பற்றியதுடன் எஸ்.ஜே இமானுவல் ஸ்ரீலங்காவை விட்டு வெளியேறினார். லண்டனில் சிறிது காலத்தைச் செலவிட்டதின் பின்னர், பிதா.இமானுவல 1996ல் ஜேர்மனியில் குடியேறினார். மேற்கில் உள்ள தமிழ் அமைப்புகளுடன் தொடர்பு கொள்வதற்காக அவர் பரவலாக பயணங்களை மேற்கொண்டார். அவர் 2009ல் எல்.ரீ.ரீ.ஈ யின் வீழ்ச்சிக்குப் பின்னர் உலகத் தமிழர் பேரவையை ஸ்தாபித்தார். உலகத் தமிழர் பேரவை, அது நிறுவப்பட்ட தருணத்தில் பதினாலு வௌ;வேறு அமைப்புக்களைக் கொண்டிருந்தது. இன்று அது ஐந்தாகச் சுருங்கியுள்ளது. ஆரம்பத்தில் உலகத் தமிழர் பேரவையின் உயிர் நாடியாக இருந்தது பிரித்தானிய தமிழர் பேரவையே. பிரித்தானிய தமிழர் பேரவையின் நன்றி மிக்க உதவியினால் உலகத் தமிழர் பேரவை லண்டனில் ஒரு செயலகத்தை அமைத்துக் கொண்டது. பின்னர் பிரித்தானிய தமிழர் பேரவைக்கும் மற்றும் உலகத் தமிழர் பேரவைக்கும் இடையில் ஒரு பிளவு தோன்றியது, அதன் பின் பிரித்தானிய தமிழர் பேரவை தனியாகச் செயல்படுகிறது. இது உலகத் தமிழர் பேரவையின் நிதி வளம் வரட்சியடைய வழி வகுத்தது.

உலகத் தமிழர் பேரவை

பிரதானமாக பிதா.இமானுவலின் தலைமைத்துவம் மற்றும் வழிகாட்டுதல் காரணமாக உலகத் தமிழர் பேரவை பெரிய அளவிலான அங்கீகாரம் மற்றும் செல்வாக்கு என்பனவற்றை பல மேற்கத்தைய நாடுகளுக்கிடையில் பெற்றிருந்தது. உலகத் தமிழர் பேரவை, பல மேற்கு நாடுகளின் அரசாங்க அமைச்சர்கள், பாராளுமன்ற அங்கத்தவர்கள், உயர் மட்ட நிருவாகத்தவர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் போன்றவர்களுடன் பேச்சு வார்த்தைகளை நடத்தியுள்ளது. ஏற்றுக் கொள்ளத்தக்க அரசியல் தீர்வை காண்பதற்காக கொழும்பு அரசாங்கத்தின் மீது சர்வதேச அழுத்தங்களை பிரயோகிக்க உதவுவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளும் அதேவேளை, ஸ்ரீலங்காவில் மேற்கொள்ளப்பட்டதாக குற்றம் சாட்டப்படும் யுத்தக் குற்றங்களுக்கு ராஜபக்ஸ ஆட்சியினரை பொறுப்பு கூற வைப்பதற்காக மேற்கொள்ளப்படும் சர்வதேச முயற்சிகளுக்கும் ஒத்துழைப்பு வழங்குவதாக உலகத் தமிழர் பேரவை அறிவித்துள்ளது.

பிதா இமானுவல் மற்றும் உலகத் தமிழர் பேரவையின் அங்கீகரிக்கப்பட்ட பேச்சாளரான சுரேன் சுரேந்திரன் ஆகியோர் றொபேட் ஓ பிளேக், தெற்காசிய நாடுகளுக்கான அமெரிக்க உதவிச் செயலாளராக இருந்தபோது, வாஷிங்டனில் வைத்து அவரைச் சந்தித்துள்ளார்கள், அதுபற்றிய புகைப்படங்கள் ஊடகங்களில் வெளிவந்துள்ளன. ஸ்ரீலங்காவின் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் (ரி.என்.ஏ) உலகத் தமிழர் பேரவை மிகவும் சுமுக உறவை பேணி வருகிறது மற்றும் அதனுடன் இணைந்து தென்னாபிரிக்க தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளுடன் பேச்சுக்களை நடத்த துணை செய்து வருகிறது. ரி.என்.ஏ மற்றும் ஜி.ரி.எப் ஆகிய இரண்டும் சேர்ந்து ஜெனிவாவில் உள்ள ஐநா சபையில் பரப்புரையில் ஈடுபட்டுள்ளன. கடந்த வருடம் கூட்டுச் சேரா நாடுகளின் தலைவர்களின் மாநாடு ஸ்ரீலங்காவில் நடந்தபோது, பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் ஸ்ரீலங்காவுக்கு வருகை தருவதற்கு முன்பு உலகத் தமிழர் பேரவை அவரை ஆறுமுறை சந்தித்துள்ளது. கொழும்பினை நோக்கி கமரூன் ஒரு பகைமையான நிலைப்பாட்டை எடுப்பதற்காக அவரை மாற்றவதற்கு உலகத் தமிழர் பேரவை ஒரு பெரிய கருவியாக இருநதுள்ளது.

ஒரு கட்டத்தில் உலகத் தமிழர் பேரவை மீதான நல்லெண்ணம் மிகவும் உயர்வாக இருந்தது அந்த அமைப்பின் மீதான தனது நிலைப்பாட்டை இந்தியா கூட தணித்துக் கொண்டது. பிதா.இமானுவலுக்கு இந்தியாவுக்கு பலதடவை வருகை தருவதற்காக பல் நுழைவு விசா கூட வழங்கப்பட்டிருந்தது. பிதா.இமானுவல் இந்தியாவுக்கு சென்று அங்கு தொடர்ச்சியாக பல கூட்டங்களை நடத்தினார். இவற்றில் சில கூட்டங்கள் தமிழ் நாட்டில் உள்ள எல்.ரீ.ரீ.ஈ சார்பு சக்திகளுடன் இடம்பெற்றது, இது இந்திய அதிகாரிகளுக்கு சந்தேகத்தையும் மற்றும் கடுங் கோபத்தையும் கிளப்பியது. இரண்டாவது முறை பிதா.இமானுவல் இந்தியா சென்றபோது சென்னையிலுள்ள மீனம்பாக்கம் விமானநிலையம் வழியாக தமிழ் நாட்டுக்குள் நுழைய அவர் அனுமதிக்கப் படவில்லை. அவர் திரும்பிச் செல்லும்படி கட்டாயப் படுத்தப்பட்டார், அதுமுதல் அவர் இந்தியாவுக்குச் சென்றதில்லை. புதுதில்லி உலகத் தமிழர் பேரவையை ஒரு பசுத்தோல் போர்த்திய புலியாகவே கருதுகிறது.

நெடியவன் வலையமைப்பு

ஸ்ரீலங்கா பாதுகாப்பு தரப்பு வலிமைமிக்க எதிரிகளாகக் கருதும் நான்கு முக்கிய நபர்களுள் மூன்றாவதும் விவாதிக்கத் தக்க வகையில் மிகவும் முக்கியமானவராகவும் கருதப்படுபவர் நெடியவன் அல்லது நெடியோன் ஆவார். இவரது வலையமைப்பு பிரதானமாக ஒரு காலத்தில் எல்.ரீ.ரீ.ஈ யின் கிளைகளையும் மற்றும் முன்னணி அமைப்புகளையும் கொண்டிருந்த காரணத்தால், இது நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் மற்றும் உலகத் தமிழர் பேரவை என்பனவற்றிலிருந்து ஒருவகையில் வித்தியாசமானது. எல்.ரீ.ரீ.ஈ ஒரு வெளிநாட்டு பயங்கரவாத அமைப்பு என்று தடை செய்யப்பட்டதால், பெரும்பாலான மேற்கத்தைய நாடுகளில் அடையாளம் தெரிந்த பல புலிக் கிளைகளும் ஒன்று இயங்காமல் உறைநிலையில் இருந்தன அல்லது புதிய அமைப்புகளாக மாற்றம் பெற்றன. புதிய முன்னணிகளும் நிறுவப்பட்டன.

உருத்திரகுமாரனனின் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நாடுகள் தழுவிய அடிப்படைக்கு ஒரளவு எதிராக நெடியவனின் குழுவும் வௌ;வெறு நாடுகளில் வாழும் தமிழ் புலம்பெயர்ந்தவர்கள் மத்தியில் இருந்து தேர்வு செய்யப்பட்ட நிறுவன வலையமைப்பு ஒன்றை நிறுவியுள்ளது. ஒவ்வொரு நாட்டிலுமுள்ள இந்த அமைப்பு மக்கள் பேரவை அல்லது தேசியப் பேரவை என அழைக்கப்படுகிறது. இந்த அமைப்புகள் ஒரு மட்டத்தில் தங்களை ஜனநாயக அரசியல் செயற்பாட்டாளர்கள் என காட்டிக்கொள்ள முயன்றாலும் மற்றைய மட்டத்தில் அவர்கள் நிழலான செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளார்கள். இது எதனாலென்றால் இந்த அமைப்புகள் அடிப்படையில் எல்.ரீ.ரீ.ஈ கிளைகள் சட்டபூர்வமான அரசியல் அமைப்புகளைப் போல பாசாங்கு செய்கின்றன.

இதன்படி அதன் பாசாங்குத் தன்மையை தவிர நெடியவன் வலையமைப்பு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் மற்றும் உலகத் தமிழர் பேரவை என்பனவற்றுடன் ஒப்பிடுகையில் முரண்பாடாக வெளிப்படையானதோ அல்லது பொறுப்பானதோ அல்ல. அதன் ஜனநாயக நல்லெண்ணம் பெரிய அளவு நம்பிக்கையளிக்கவில்லை. நெடியவனின் பின் தொடர்பாளர்களில் அநேகர் அகிம்சையை கடைப்பிடிப்பதில்லை. அதற்கு மேலும் நெடியவன் வலையமைப்பின் பல செயற்பாடுகள் நிழலான சர்ச்சைக்குரிய கடந்தகால செயற்பாடுகளைக் கொண்டிருப்பதால் அது தெளிவின்மையால் மறைக்கப்பட்டுள்ளது. பல்வேறுநாடுகளிலுமுள்ள அதன் முக்கிய அலுவலக பொறுப்பாளர்கள் எல்.ரீ.ரீ.ஈயின் முன்னாள் அங்கத்தவர்கள் மற்றும் ஆயுதப் பயிற்சி மற்றும் போர்க்கள அனுபவம் உடையவர்கள்.

பேரின்பநாயகம் சிவபரன்

39 வயதான பேரின்பநாயகம் சிவபரன் யாழ்ப்பாணம் வலிகாமம் மேற்கு வட்டுக்கோட்டை சித்தங்கேணியை சோந்தவர். இவரது இயக்கப் பெயர் நெடியவன். தனக்கு 18 வயதாக இருக்கும்போது 1994ல் நெடியவன் எல்.ரீ.ரீ.ஈ யில் இணைந்தார். இவர் எல்.ரீ.ரீ.ஈயினால் உயர்கல்வி மேற்கொள்ள ரஷ்யாவுக்கு அனுப்பப்பட்டார். அங்கு அரசியல் விஞ்ஞான கற்கையை மேற்கொண்டிருந்தபோதும் சிவபரன் மாஸ்கோவில் தனது பட்டப்படிப்பை பூர்த்தி செய்யவில்லை.

நெடியவன் எல்.ரீ.ரீ.ஈயின் அரசியல் பிரிவில் கடமையாற்றியதுடன் எல்.ரீ.ரீ.ஈயின் அரசியல் பொறுப்பாளர் சுப்பையா பரமு தமிழ்செல்வனுடன் இணைந்து 2002 – 2003ல் நடந்த சில சுற்று சமாதான பேச்சு வார்த்தைகளில் கலந்து கொண்டிருந்தார். பின்னர் இவர் வீரகத்தி மணிவண்ணன் என்கிற கஸ்ட்ரோவின் கீழுள்ள வெளிநாட்டு எல்.ரீ.ரீ.ஈ நிருவாகப் பிரிவிற்கு மாற்றப்பட்டார். நெடியவன் கஸ்ட்ரோவின் பொதுசனத் தொடர்பு பிரிவிற்கு பொறுப்பாக இருந்தார் மற்றும் சமாதான நடவடிக்கை சமயத்தில் வன்னிக்கு விஜயம் மேற்கொண்ட அநேக வெளிநாட்டு செயற்பாட்டாளர்களுக்கு இணைப்பாளராகவும் பணியாற்றினார்.

அப்போதுதான் நெடியவன் என்கிற சிவபரன் தனது எதிர்கால மனைவியாகிய சிவகொளரி சாந்தமோகன் என்பவரைச் சந்தித்தார். அவர் ஒரு நோர்வே பிரஜை. அவரது தந்தையின் சகோதரர் ரஞ்சன் லாலா என்கிற ஞ}னேந்திரமோகன், எல்.ரீ.ரீ.ஈயின் முன்னோடி உறுப்பினரும் பிரபாகரனின் நம்பிக்கைக்கு பாத்திரமானவரும் ஆவார். ரஞ்சன் லாலா ஒரு உந்துருளியில் பயணிக்கும்போது யாழ்ப்பாணத்தில் வைத்து இராணுவத்தால் சுடப்பட்டார். சிவபரனும் சிவகௌரியும் காதல் வயப்பட்டனர். ரஞ்சன் லாலா மீது மிகவும் பிரியம் கொண்டிருந்த பிரபாகரன் இந்த இணைப்புக்கு உதவினார்.

இருவரும் திருமணம் செய்த பின்னர் சிவபரன் 2006ல் நோர்வேக்குச் சென்றார். இந்த வருடங்களில் சில எண்ணிக்கையான செயற்பாட்டாளர்களை எல்.ரீ.ரீ.ஈ வெளிநாடுகளுக்கு அனுப்பியது. இந்த அங்கத்தவர்கள் எல்.ரீ.ரீ.ஈ யின் பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்கள், புதிய நாடுகளில் புலிகளின் செயற்பாட்டாளர்களாக இவர்கள் செயற்பட ஆரம்பித்தார்கள். இந்த அங்கத்தவர்களில் பெரும்பாலானவர்கள் அரசியல் மற்றும் புலனாய்வுப் பிரிவைச் சோந்தவர்கள்.

நெடியவன் நோர்வேயில் தனது வீட்டை அமைத்துக் கொண்டார். சிவகௌரி உடனான திருமண பந்தம் எல்.ரீ.ரீ.ஈயில் நெடியவனின் செல்வாக்கை மேலும் அதிகரித்தது. வெளிநாட்டில் உள்ள செயற்பாட்டாளர்களுடன் தொடர்பாடல்களை மேற்கொள்வதற்காக கஸ்ட்ரோ அவரைப் பயன்படுத்தினார். யுத்தம் விரிவடைந்ததால் வன்னிக்கும் மற்றும் வெளிநாட்டிலுள்ள புலிகளுக்கும் இடையிலான தொடர்புகள் சிரமத்துக்குள்ளாகி இருந்தது. எனவே தனது சார்பாக நெடியவனை கஸ்ட்ரோ எல்.ரீ.ரீ.ஈயின் சர்வதேச பிரதிநிதியாக நியமித்தார். எல்.ரீ.ரீ.ஈயின் வெளிநாட்டு கிளைகள் அனைத்துக்கும் ஒட்டுமொத்த பொறுப்பாளராக நியமிக்கப்பட்டவர் நெடியவனைத் தவிர வேறு யாருமில்லை.

சேகரம்பிள்ளை விநாயகமூர்த்தி

மே 2009ல் இராணுவத் தோல்வியினால் எல்.ரீ.ரீ.ஈ பாதிப்படைந்த பின்னரும்கூட, நெடியவன் எல்.ரீ.ரீ.ஈயின் வெளிநாட்டுக் கிளைகளின் நிருவாகத்துக்கு பொறுப்பாக இருந்தார். செல்வராசா பத்மநாதன் என்கிற கேபி, மலேசியாவில் கைது செய்யப்பட்டு ஸ்ரீலங்காவுக்கு கொண்டு செல்லப்பட்ட பின்னர் வெளிநாட்டு எல்.ரீ.ரீ.ஈ கட்டமைப்புகள் அனைத்திலும் தனது தனி அதிகாரத்தை நெடியவன் மீள் வலியுறுத்திக் கொண்டார். ஆனால் விரைவிலேயே அதற்கு ஒரு புதிய போட்டியாளர் முளைத்தார். அது விநாயகம் என்கிற சேகரம்பிள்ளை விநாயகமூர்த்தி, எல்.ரீ.ரீ.ஈயின் புலனாய்வுப் பிரிவின் மூத்த அங்கத்தவர். ஸ்ரீலங்கா அதிகாரிகள் அவரை உலகத் தமிழ் புலம்பெயர்ந்தவர்களில் உள்ள நாலாவது முக்கிய எதிரியாகக் கருதுகிறார்கள்.

50 வயதான விநாயகம் என்கிற சேகரம்பிள்ளை விநாயகமூர்த்தி, 1964 நவம்பர் 10ல் பிறந்தவர். அவரது குடும்பம் தென்மராட்சி பிரிவு, வரணிப் பகுதியின் இடைக்குறிச்சியை சேர்ந்தது. எனினும் அந்தக் குடும்பம் சில வருடங்களாக சாவகச்சேரியிலேயே வாழ்ந்து வந்தது. விநாயகமூர்த்தி எல்.ரீ.ரீ.ஈ யில் முறைப்படி இணைந்தது. 1985ல் தனது 20 ம் வயதில். முன்னர் அவர் பள்ளி மாணவனாக இருந்தபொழுது எல்.ரீ.ரீ.ஈயில் உதவியாளனாக இருந்துள்ளார். புலிகள் அமைப்பின் பாதுகாப்பு புலனாய்வு சேவை என்கிற (ரி.ஓ.எஸ்.ஐ.எஸ்) என்று அழைக்கப்படும் பொட்டு அம்மான் தலமையிலான எல்.ரீ.ரீ.ஈயின் புலனாய்வுப் பிரிவுக்குள் விநாயகமூர்த்தி உள்வாங்கப்பட்டார். பின்னர் அது தேசிய புலனாய்வு பிரிவு என பெயர்மாற்றம் பெற்றது.

ஒஸ்லோ அனுசரணையுடனான யுத்தநிறுத்தம் 2002ல் உருவானபோது எல்.ரீ.ரீ.ஈ யின் புலனாய்வு பிரிவு ,வன்னிக்கு வெளியில் ஸ்ரீலங்காவின் பல்வேறு பகுதிகளிலும் அதேபோல ஸ்ரீலங்காவுக்கு வெளியிலும் மற்றும் வெளிநாட்டிலும் செயற்படுபவர்கள் தொடர்பான வெளிநாட்டு விவகாரங்களை கவனிக்க ஒரு விசேட பிரிவினை நிறுவியது. இந்த விசேட புலனாய்வு பிரிவு “வெளியக மற்றும் உள்ளக புலனாய்வு விவகாரப் பிரிவு” என அழைக்கப்பட்டது.

விநாயகமூர்த்தி இந்த விசேட பிரிவுக்கு தலைவராக 2002ல் நியமிக்கப்பட்டார். மே 2009ல் எல்.ரீ.ரீ.ஈ தோல்வி அடைவதற்கு சில மாதங்கள் முன்பாக அவர் இந்தியாவுக்கு போனார். அங்கிருந்து அவர் 2009 ஒக்ரோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் ஐரோப்பாவுக்குச் சென்றார். அவர் பரிசில் அரசியல் தஞ்சம் பெற்றுள்ளார்.

ஐரோப்பாவில் இருந்தபோது பல்வேறு புலிகள் புலனாய்வு பிரிவு செயற்பாட்டாளர்களையும் விநாயகம் நெருக்கமாக ஒன்றிணைத்துப் பின்னி அதன் முழுப்பொறுப்பையும் தான் ஏற்றுக்கொண்டார். ஒரு குறுகிய காலம் நெடியவன் மற்றும் விநாயகம் இடையே ஒரு வேலை உறவுமுறை இருந்தது, இருவரும் ஒரு மூலோபாய பங்காளிகளாக வர முயன்றனர். எனினும் இது நீண்டகாலம் நிலைக்கவில்லை மற்றும் விரைவிலேயே இருவரும் ஒருவருக்கொருவர் முட்டுக்கட்டை போட முயன்றனர். நெடியவன் தனது அதிகாரத்தை விட்டுக்கொடுக்க விரும்பாத அதேவேளை விநாயகம் அதிகாரத்தை கைப்பற்ற விரும்பினார். இந்த அதிகாரப் போராட்டத்தின் இதயமாக இருந்தது பணம்.

முரண்பாடான அறிக்கைகள்

இரண்டு பிரிவினரும் தாங்கள்தான் உண்மையான எல்.ரீ.ரீ.ஈ என முக்கியமான சந்தர்ப்பங்களில் முரண்பாடான அறிக்கைகளை தமிழில் வெளியிட்டார்கள். நெடியவன் குழுவினரது அறிக்கைகள் தன்னை அனைத்துலக செயலகம் என அழைத்துக்கொள்ளும் எல்.ரீ.ரீ.ஈ காரியாலயத்தால் வெளியிடப்பட்டது. விநாயகம் பிரிவினர் தலைமைச் செயலகம் என அழைக்கப்படும் அதன் அலுவலகத்தில் இருந்து அறிக்கைகளை வெளியிட்டனர். இரு பிரிவினருக்கும் இடையே வன்முறைகளும் ஏற்பட்டன. உடல் தாக்குதல்கள் மட்டுமன்றி ஒரு கொலையும் கூட இடம்பெற்றது.

இதற்கிடையில் ஸ்ரீலங்கா அதிகாரிகள் நெடியவனை தங்களிடம் ஒப்படைக்கும்படி நோர்வேயிடம் வேண்டுகோள் விடுத்தார்கள். ஒஸ்லோ அதற்கு உடன்படவில்லை ஆனால் நோர்வே அதிகாரிகள் நெடியவனிடம் விசாரணை செய்து நோர்வே மண்ணில் வசிக்கும் காலத்தில் வன்முறைகளில் ஈடுபடவோ அல்லது அதை முன்னேற்றவோ கூடாது என நெடியவனை எச்சரிக்கை செய்தார்கள். அதன் பின் நெடியவன் ஒஸ்லோவில் இருந்து 150 மைல் தொலைவில் உள்ள வேறு இடத்துக்கு குடியெர்ந்தார். அவர் தன்னைப் பற்றிய சுயவிபரங்கள் வெளிவருவதை குறைத்துக் கொண்டார் மற்றும் பொதுவாக அவரை தொடர்பு கொள்ள முடியாது. எனினும் நம்பிக்கையான காவிகள் மூலமாக அவர் தொடர்ந்தும் தனது முக்கிய உதவியாளர்களுடன் வாய்மொழி மூலமாக தொடர்பாடல்களைப் பேணி வருவதாக நம்பப்படுகிறது.

பரிசில் குடியிருக்கும் விநாயகமும் கூட சமீப காலமாக தன்னைப்பற்றி குறைந்த சுயவிபரத்தையே வெளிப்படுத்தி வருகிறார். விநாயகத்தின் மந்தமான செயல்பாட்டிற்கான காரணம் ஸ்ரீலங்காவின் வேண்டுகோளின்படி இன்ரர்போல் அவருக்கு எச்சரிக்கை அறிவிப்பு விடுத்திருப்பதுதான். அதையும்விட மிகவும் முக்கியமான காரணம் பரிசில் எல்.ரீ.ரீ.ஈ தலைவராக இருந்த நடராஜா மதீந்திரன் என்கிற பரிதி அல்லது றீகனின் கொலையும் ஆகும். இந்தக் கொலைக்காக விநாயகம் பிரிவினர், சந்தேகிக்கப் படுகிறார்கள் ஏனென்றால் பரிதி, நெடியவன் குழுவை சேர்ந்தவர். இதற்காக விநாயகத்தையே தடுத்து வைத்து விசாரணை செய்தபின் விடுவித்துள்ளார்கள். இந்தச் சம்பவத்தின் பின் விநாயகம் அமைதியாகி விட்டார்.

2009ல் எல்.ரீ.ரீ.ஈ வீழ்ச்சியடைந்த பின்னர் நெடியவன் மற்றும் விநாயகம் ஆகிய இருவரது குழுக்களும் ஸ்ரீலங்காவின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் வன்முறை ஏற்படுத்த முயன்றுள்ளன. அவர்களது நோக்கம் எல்.ரீ.ரீ.ஈயின் ஒரு புத்துயிர்ப்பை தாய் மண்ணில் கொண்டு வருவதுதான். இந்த முயற்சிகள் யாவும் புலனாய்வு பிரிவினர், காவல்துறையினர் மற்றும் பாதுகாப்பு படையினரின் விழிப்புணர்வான எச்சரிக்கை காரணமாக முறியடிக்கப் பட்டுள்ளன. இது தொடர்பான மிகப்பெரிய அச்சுறுத்தல் எல்.ரீ.ரீ.ஈயின் புத்துயிர்ப்பு முயற்சி தீவகன் – கோபி – அப்பன் மூவரணியினால் கடந்த வருடம் மேற்கொள்ளப்பட்டு நசுக்கப்பட்டது. சுவராஸ்யமாக நெடியவன் மற்றும் விநாயகம் ஆகிய இரு பிரிவினருமே ஒருவருக்கொருவர் கூட்டாக ஒத்துழைத்து இந்த மூவரினால் மேற்கொள்ளப்பட்ட புத்துயிர் முயற்சிக்கு நிதி மற்றும் ஏனைய உதவிகளைச் செய்துள்ளார்கள்.

இரண்டு பிரிவுகளுமே தமிழ் தேசியக் கூட்டமைப்பை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர அல்லது தேவைப்பட்டால் அந்தக் கூட்டணியை துண்டாட முயற்சிக்கின்றன. இதற்காக சில ரி.என்.ஏ தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளுடன் இரகசியத் தொடர்புகளைப் பேணி வருகின்றன. இரண்டு குழுக்களுமே தமிழ் தேசிய மக்கள் முன்னணி, ஸ்ரீலங்காவில் தமிழ் மக்களின் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதியாக வருவதை விரும்புகின்றன. இந்த தமிழ் தேசிய மக்கள் முன்னணி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் செல்வராஜா கஜேந்திரனின் தலைமயில் இயங்கி வருகிறது.

மேற்கத்தைய நகரங்களில் இந்த சக்திகளால் புலம்பெயர் வட்டாரங்களில் உள்ளக தமிழ் வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்படுவதற்கான தனித்துவமான வாய்ப்பு உள்ளது, அதன் காரணமாக ஸ்ரீலங்காவுடன் பாலம் அமைக்க முயற்சிக்கும் தமிழ் புலம்பெயர் அமைப்புகள் மற்றும் தனிநபர்கள் துரோகிகள் அல்லது கூட்டுச் சதிகாரர்களாக இலக்கு வைக்கப் படலாம்.

வெளிநாட்டு பயங்கரவாத அமைப்புகள்.
ஸ்ரீலங்கா அரசாங்கம் மார்ச் 2014ல் உலகத் தமிழர் பேரவை மற்றும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் ஆகிய இரண்டையும் எல்.ரீ.ரீ.ஈ யின் நெடியவன் மற்றும் விநாயகம் குழுவினருடன் சேர்ந்து வெளிநாட்டு பங்கரவாத அமைப்பாக பட்டியலிட்டுள்ளது. அனைத்து நாலு குழுக்களும் சோந்து அந்த நேரம் விமர்சனத்துக்கு உள்ளாகியிருந்தன. உலகத் தமிழர் பேரவை மற்றும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் ஆகிய இரண்டும் எல்.ரீ.ரீ.ஈ சார்பான மற்றும் பிரிவினைவாத போக்குடையவை – உலகத் தமிழர் பேரவை பெடரல் அமைப்பு தனக்கு சம்மதம் என்று சொன்னாலும் – ஆனால் அது விவாதத்துக்கு உரியது, அவர்களது அந்த சார்பு நிலை அவர்களை பயங்கரவாதிகள் அல்லது பயங்கரவாதத்தை மேற்கொள்பவர்கள் என்று கருதுவதற்கு போதுமானதா என்பதுதான் விவாதத்துக்குரிய விடயம். புரவலர் நாடுகளான பிரித்தானியா, அவுஸ்திரேலியா, அல்லது கனடா போன்றவை உலகத் தமிழர் பேரவை மற்றும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் ஆகிய இரண்டுக்கும் மற்றம் வேறு சில நாடு சார்ந்த சமூக அமைப்புகளுக்கும் எதிராக பயங்கரவாத எதிர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமாயின், ஸ்ரீலங்கா அதிகாரிகள் நம்பிக்கையான ஆதாரங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

எந்த அமைப்பாவது ஸ்ரீலங்காவில் பிரிவினைவாதத்தை ஏற்றுக் கொள்கிறதோ அல்லது பிரிவினைவாதத்தை நிராகரிக்கவில்லையோ, என்கிற நிலைப்பாட்டை பின்பற்றும்போது பயங்கரவாத சித்தாந்தத்தை ஆதரிப்பது என்பது ஒரு பெறுமதி மிக்க வாதமாகத் தோன்றவில்லை. பிரிவினைவாதத்துக்கு எதிரான மற்றும் பயங்கரவாதத்துக்கு எதிரான சட்டங்கள் ஸ்ரீலங்காவில் உள்ளன. அரசியலமைப்பின் ஆறாவது திருத்தம், பிரிவினைவாதிகளுக்கு எதிரானது, அதேவேளை பயங்கரவாத தடைச்சட்டம் பயங்கரவதிகளுக்கு எதிரானது. ஒரு பிரிவினைவாதி பயங்கரவாதியாக மாறுவது, பிரிவினைவாதத்தை பின்பற்றும் அவனோ அல்லது அவளோ பயங்கரவாதியாக விளக்கப்படும் நடவடிக்கையில் ஈடுபடும்போதுதான். எல்.ரீ.ரீ.ஈயானது ஒரு தனிநாடு மற்றும் ஆயுதப் போராட்டம் ஆகிய இரண்டையும் ஆதரித்தது. எல்.ரீ.ரீ.ஈயின் ஆயுதப் போராட்டம் ஸ்ரீலங்கா அரசாங்கத்துக்கு எதிரான பயங்கரவாதம். “ஒரு மனிதனால் பயங்கரவாதியாக கருதப்படுபவன் இன்னொரு மனிதனுக்கு விடுதலைப் போராளியாக கருதப்படுகிறான்” என்று ஒரு பிரபலமான சொல்வழக்கு உள்ளது. வன்முறைகளில் ஈடுபடாமல் பிரிவினைவாதம் பற்றி வாதிடுவதை பயங்கரவாதமாகக் கருதுவது பயங்கரவாதி தொடர்பான வாதத்துக்கு பொருத்தமற்றது. இந்த முக்கிய கருத்து மகிந்த ராஜபக்ஸ அரசாங்கம் பல்வேறு வகையான 16 அமைப்புக்களை பயங்கரவாதிகள் என்கிற முத்திரையின் கீழ் ஒன்றாகத் தடை செய்தபோது அதன் பார்வையில் படவில்லை.

தற்சமயம் மைத்திரிபால சிறிசேனவின் அரசாங்கம் அதன் முன்னோடிகளை விட வித்தியாசமான அணுகுமுறைகளை பின்பற்றி வருகிறது. தடை செய்யப்பட்ட அமைப்புகளின் மத்தியில் உள்ள தனித்துவமான வித்தியாசங்களை அது அளவெடுத்து வருகிறது. வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர பட்டியலிடப்பட்டுள்ள உலகத் தமிழர் பேரவையின் முக்கிய செயற்பாட்டாளர்கள் ஆகிய பிதா. இமானுவல் மற்றும் சுரேந்திரன் போன்ற பிரதிநிதிகளுடன் தனிப்பட்ட முறையில் தொடர்பு கொண்டு வருகிறார். உலகத் தமிழர் பேரவையும் கூட கொழும்பினால் பட்டியலில் இருந்து அகற்றப்படுவதற்கு உகந்த வகையில் பொருத்தமாக குரலெழுப்பி வருகிறது. மேடையானது உலகத் தமிழர் பேரவைக்கு ஏற்றதாகவும் மற்றும் அதன் செயற்பாட்டாளர்கள் எதிர்காலத்தில் பட்டியலில் இருந்து அகற்றப் படுவார்கள் போலவும் தோன்றுகிறது. ருத்ராவின் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் புலிகளுடனான அதன் வெளிப்டையான அடையாளம் தமிழ் ஈழத்துக்கான அதன் வெளிப்படையான ஆதரவு என்பன காரணமாக தவிர்த்து ஒதுக்கப்படலாம் என்று தெரிகிறது.

தடை நீக்கத்துக்கான நகர்வுகள்

எதிர்பார்க்கும் இந்த முன்னேற்றங்களின் விளைவாக ஏனைய தமிழ் புலம்பெயர் அமைப்புகளில் இருந்து ஒரு பின்னடைவு தோன்றலாம். உலகத் தமிழர் பேரவை தன்னை விற்றுவிட்டது என்று ஒரு பெரிய விமர்சனத்துக்கும் ஆளாகலாம். வெப்பம் அதிகரிப்பதால் உலகத் தமிழர் பேரவை தொடர்ந்தும் சமையலறைக்குள்ளேயே தங்கிவிடுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். மறுபுறத்தில் மங்கள சமரவீர தலைமையேற்றுள்ள இந்த தடை நீக்க முயற்சியானது, மகிந்தவை மீண்டும் கொண்டு வருவதற்காக கூக்குரலிடும் சக்திகளுக்கு தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று குற்றம் சாட்டுவதற்கு ஏற்ற ஒரு ஆயுதமாகவும் மாறலாம். இந்த விடயங்கள் யாவும் எதிர்காலத்தில் வரக்கூடிய கட்டுரைகளில் மேலும் ஆய்வு செய்யப்படுவது அவசியம்.

ஆங்கிலத்தில் டி.பி.எஸ்.ஜெயராஜ் இனால் எழுதப்பட்ட
Removing the Ban on Some Tamil Diaspora Organizations Listed as “Foreign Terrorist” கட்டுரையியின் தமிழாக்கம்: தேனீ மொழிபெயர்ப்பு: எஸ்.குமார்

நன்றி: தேனீ

Share on FacebookTweet about this on TwitterShare on LinkedInShare on Google+Print this page