ஜாக் ஓடியாவின் பிரான்ஸில் உள்ள மூன்று தமிழ் அகதிகளைப் பற்றிய “தீபன்” என்கிற படம் கேன் பட விழாவில் தங்கப்பனை விருதினை வென்றுள்ளது

– டி.பி.எஸ்.ஜெயராஜ்

பிரான்சின் தென்கிழக்குப் பகுதியில் மெதித்ரேனியன் கடற்கரையோரமாக உள்ள அழகியதும் மற்றும் இதமான காலநிலையை கொண்ட பிரெஞ்சுப் பகுதியில் உள்ள நகரம் கேன். பிரெஞ் நகரமான அது கிட்டத்தட்ட ஒரு மாநகராட்சிக்குச் சமமான நிருவாகப் பிரிவாக வகைப் படுத்தப் பட்டுள்ளது.

சமகாலப் பகுதியில் கேனின் பெருமையை வெளிப்படுத்தும் விதமாக வருடாந்த சர்வதேச திரைப்பட விழா அந்த நகரில் நடைபெற்று வருகிறது. ஆங்கிலத்தில் கேன்ஸ் திரைப்பட விழா என அறியப்பட்ட அந்த விழா உலகின் மிகவும் கௌரவம் பெற்ற திரைப்பட விழாவாக மதிக்கப்படுகிறது. கேனில் போட்டி போடுவது மட்டுமன்றி ஒரு பரிசினை தட்டிச் செல்வதும் ஒரு திரைப்படத்தை உருவாக்குபவருக்கு அவரின் தலையில் ஒரு மகுடத்தை சூட்டியது போன்ற பெருமையை தரக்கூடிய விஷயமாகும்.

அந்தோனிதாசன் ஜேசுதாசன் (ஷோபாசக்தி), காளீஸ்வரி சிறினிவாசன், கிளோடின் வினாசித்தம்பி மற்றும் ஜாக்ஸ் ஓடியாட்

அந்தோனிதாசன் ஜேசுதாசன் (ஷோபாசக்தி), காளீஸ்வரி சிறினிவாசன், கிளோடின் வினாசித்தம்பி மற்றும் ஜாக் ஓடியா

68வது கேன் திரைப்பட விழா இந்த வருடம் மே 13 முதல் 24 வரை நடைபெற்றது. கேன்ஸில் ஒரு படத்துக்கு வழங்கப்படும் மிகவும் உயர்வான பரிசு “பல்ம் தி ஓர்” என அழைக்கப்படும் தங்கப் பனை விருதாகும், இந்த வருடம் இந்த விருதினை பெயர் பெற்ற பிரெஞ் திரைப்பட இயக்குனரான ஜாக் ஓடியாவிற்கு அவரது படமான “தீபனுக்கு” வழங்கியுள்ளார்கள்.

கேன் திரைப்பட விழாவின் உயர்ந்த கௌரவம் “தீபனுக்குச்” சென்றிருப்பது, அந்தப் படம் மூன்று ஸ்ரீலங்கா தமிழ் அகதிகளின் கதையை சொல்வதினால் ஸ்ரீலங்காவில் பலத்த ஆர்வத்தை கிளப்பியுள்ளது. இந்த மூவரும் குறிப்பாக பிரதான கதாபாத்திரமான தீபன் எதிர்கொள்ளும் கடின பிரயாசை மற்றும் துயரங்கள் அந்தப் படத்தின் சாரம்சமாக விளங்குகிறது.

இந்த மூன்று பிரதான பாத்திரங்களையும் ஸ்ரீலங்கா மற்றும் இந்திய வம்சாவழியினரான தமிழ் நடிகர்களே நடித்துள்ளார்கள். படத்தின் பெரும்பகுதி திரைக்கதை பிரான்சில் நடப்பதாக அமைக்கப் பட்டிருந்த போதிலும், படத்தில் பேசப்படும் 85 விகிதமான வார்த்தைகளும் தமிழ் மொழியிலேயே அமைந்துள்ளன, மூவருக்கும் இடையிலும் மற்றும் ஏனைய தமிழ் கதாபாத்திரங்களுக்கும் இடையே நடைபெறும் உரையாடல்கள் அவர்களின் தாய்மொழியில் நடப்பதாக காட்டப்பட்டுள்ளது.

கதையம்சம்

படத்தின் பிரதான கதாபாத்திரமான தீபனின் பெயர்தான் படத்தின் தலைப்பாகவும் இடம்பெற்றுள்ளது. படத்தின் விவரணம் ஸ்ரீலங்காவில் யுத்தம் முடிவடைந்ததில் இருந்து ஆரம்பமாகிறது. உயிர்பிழைத்தவர்கள் தப்பி ஓடுகிறார்கள் அல்லது ஓட முயலுகிறார்கள். அப்படியான ஒருவர், அவர் சார்ந்திருந்த இயக்கத்தின் (தமிழீழ விடுதலைப் புலிகள்) இயக்கப் பெயராக சிவதாசன் என்கிற பெயரைக் கொண்டவர், முள்ளிவாய்க்காலில் மரணமடைந்த அவரது சக போராளிகளை தகனம் செய்யும்போது தனது இராணுவ சீருடையையும் தீயில் எரிக்கிறார்.

இதனிடையே கதை வெளிப்படுத்துவதிலிருந்து சிவதாசன் தனது மனைவியையும் பிள்ளையையும் போரில் பறிகொடுத்துவிட்டு தனி ஆளாக நிற்பதை நாங்கள் அறிய முடிகிறது. அவர் பொதுமகனின் ஆடையில் இடம் பெயாந்த சாதாரண பொதுமக்களுடன் கலந்து புதிய வாழ்க்கை ஒன்றை வெளிநாட்டில் ஆரம்பிப்பதற்காக தப்பிச் செல்ல வழி தேடுகிறார்.

அகதி முகாமில் வைத்து தீபன் என்கிற பெயரின் கீழ் அவர் ஒரு கடவுச்சீட்டை பெற்றுக் கொள்கிறார் மற்றும் குடும்பம் ஒன்று இருக்குமானால் வெளிநாட்டில் அகதியாக ஏற்றுக் கொள்ளப் படுவதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கும் என அவர் உணர்கிறார். யுத்தத்தில் தனது பெற்றோரை இழந்த ஒரு சட்டத்துறை மாணவி தீபனின் மனைவி யாழினியாக மாறுகிறார். ஒரு அனாதைக் குழந்தை அவர்களின் ஒன்பது வயது மகள் இளையாளின் பாத்திரத்துக்காக கண்டுபிடிக்கப் படுகிறாள். தந்தை, தாய் மற்றும் மகள் என்பவர்களைக் கொண்ட போலிக் குடும்பம் உண்மையில் மொத்தமாக ஒருவருக்கொருவர் உறவுமுறை இல்லாதவர்கள், இவர்கள் கடல் வழியாக பிரான்சை நோக்கிப் பயணத்தை ஆரம்பிக்கிறார்கள்.

பிரான்சில் அவர்கள் ஒரு குடிவரவு விசாரணையை எதிர்கொள்ளும்போது அவர்களின் கடந்தகாலத்தைப் பற்றி பொருத்தமில்லாத ஒரு கதையை சொல்கிறார்கள். நட்புறவான தமிழ் மொழிபெயர்ப்பாளர்கள் அவர்களின் கூற்றை அதிகாரிகள் சம்மதித்து நம்பத்தக்க விதமாக மாற்றிச் சொல்கிறார்கள். தீபன் குடும்பத்துக்கு தற்காலிக விசா வழங்கப்பட்டு பரிசின் வடகிழக்கு புற நகர் பகுதியான ‘ல பிரி – செயின்ட் – ஜெர்வயிஸ்’ இல் உள்ள குடியிருப்பு தொகுதியில் சமீபத்தில் கைவிடப்பட்ட ஒரு அடுக்கு மாடி குடியிருப்பு அவர்களின் புதிய வீடாக வழங்கப்படுகிறது.

உயிர்வாழும் பொருளாதார தேவைகளுக்காக பரீஸ் வீதிகளில் ஒளிரும் முயல் காதுகள் போன்ற அற்பமான பொருட்களை விற்பனை செய்து பிழைப்பு நடத்தியதன் பின்னர் கணவர் தீபன் ஒரு குடியிருப்பு காவலராக வேலை பெறுகிறர். மனைவி யாழினி ஒரு வீட்டு சுகாதார உதவியாளராக நோய்வாய்ப் பட்டுள்ள ஹபீப் என்கிற மூத்த குடிமகனை கவனிக்கும் பொறுப்பை ஏற்றுக் கொள்கிறாள், ஹபிப் டிமென்ஷியா என்கிற முதுமை மறதி நோயுள்ளவர். மகள் இளையாள் விசேட கவனிப்பு உள்ளவர்களுக்கான பாடசாலையில் சேர்ந்து பிரெஞ் மொழி கற்கிறாள்.

வெளிப்படையாக யதார்த்தமாக நடித்து சமாளிக்க முயன்றாலும் இந்த பdeepan-3ோலிக் குடும்பத்துக்கு உள்ளுக்குள் அடக்கமுடியாத பதற்றம் நிலவுகிறது. முற்றிலும் அந்நியர்களாக இருந்தபடியால் ஒரு குடும்பமாக காட்டிக்கொண்டு நியாயமாக ஒருவருக்கொருவர் உறவு உள்ளது போல நடிப்பதில் அதிக கஷ்டம் இருப்பதை அவர்கள் உணர்கிறார்கள். அநாதை குழந்தையான இளையாள் ஒரு குடியேற்றக் குழந்தையாக இருந்தபடியால் பாடசாலையில் பிரச்சினைகளைச் சந்திக்கிறாள். இறந்துபோன தனது பெற்றோரின் அன்பை இழந்து தவிப்பதுடன் அதை அவளுடைய புதிய தாய் தந்தையரிடம் அவளால் காண முடியாததாக இருக்கிறது.

யாழினிக்கு பிரெஞ்ச் வாழ்க்கை பிடிக்கவில்லை மற்றும் இங்கிலாந்தில் உள்ள அவளது ஒன்று விட்ட சகோதரருடன் இணையும் நேரத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கிறாள். அவளது புதிய அவதாரங்களான மனைவி மற்றும் தாய் என்பனவற்றுடன் அவளால் ஒத்துழைக்க முடியவில்லை. போரில் தனது நிஜ மனைவியையும் குழந்தையையும் இழந்த தீபனாலும் தான் தத்து எடுத்த செயற்கை மனைவி மற்றும் மகளுடன் ஒத்துப்போவது அவனுக்கு பிரச்சினையானதாக இருக்கிறது.

ஒரு குடியேற்றக் குடும்பத்துக்கு ஒரு அந்நியமானதும் அநேகமாக விரோதமானதுமான சூழலில் வாழும்போது வெளியிலிருந்து பிரச்சனைகள் ஏற்படுவதுண்டு. ஒரு போதை மருந்து விற்கும் கும்பல் யாழினி வேலைக்கு செல்லும் குடியிருப்பு வளாகத்தை ஆக்கிரமித்து அங்கு ஒரு கட்டிடத் தொகுதியை கைப்பற்றிக் கொள்கிறார்கள். எல்.ரீ.ரீ.ஈயின் முன்னாள் கேணல் ஒருவர் தீபனை அணுகி அழைப்பு விடுத்து அழுத்தங்கள் பிரயோகிக்கிறார். அதேவேளை தீபன் மற்றும் யாழினி ஆகியோர் இளையாளின் பெற்றாரின் வேடத்தில் நடிக்கும் கட்டாயத்திலும் இருக்கிறார்கள், யாழினியின் விடயத்தில் தீபன் இளக ஆரம்பிக்கிறான். எனினும் அவள் எப்படியோ போதை மருந்து கும்பலின் தலைவன் இப்ராகிமினால் ஈர்க்கப்படுகிறாள். இது மறுபக்கத்தில் தீபனிடம் சினத்தை ஏற்படுத்துகிறது, அவன் இப்போது தான் தனது குடும்பத்தை பாதுகாக்க வேண்டும் என எண்ணுகிறான்.

தீபன் தனது குடியிருப்பின் முன்னால் ஒரு வெள்ளைக் கோட்டை வரைந்து அந்த பிரதேசத்தை தாக்குதலற்ற வலயம் என அறிவிக்கிறான். எனினும் பெருகிய பதற்றம் வெடித்து கும்பல் கலவரமாக மாறுகிறது. தன்னையும் தனது குடும்பத்தையும் பாதுகாப்பதற்காக தீபன் மீண்டும் வன்முறையை கட்டாயமாக ஏற்கவேண்டி நேருகிறது. தனது கடந்தகாலத்துக்கு திரும்பி ஒரு கெரில்லா போராளியாக தான் பயின்ற போர் நுட்பங்களைப் பயன்படுத்தி அந்த கும்பலுடன் அவன் போரிடுகிறான்.

சார்லஸ் புரொண்சனின் பல்வேறு விதமான “திரை எச்சரிக்கைகளில்” ஈடுபட்ட பின்னர், தீபன் யாழினி மற்றும் இளையாளுடன் சேர்ந்து பிரான்சை விட்டு பிரித்தானியாவுக்கு செல்கிறான். முந்திய தடவை வெளியேறியபோது அவர்கள் யாரிடமும் ஒருவர் மற்றொருவரைப் பற்றிய நியாயமான உணர்வகள் இருக்கவில்லை, அந்த மூவரும் இப்போது நெருங்கி வந்துள்ளதுடன் தங்களுக்கிடையில் ஒரு புதிய நெருங்கிய உறவை பகிர்ந்து கொள்கிறார்கள். ஒரு துயரத்துடனும் சோகத்துடனும் ஆரம்பிக்கும் படம் முடிவடையும் போது ஒரு மொட்டவிழும் காதலுணர்வுடனும் மற்றும் சாதகமான நன்நம்பிக்கையுடனும் முடிவடைகிறது.

அந்தனிதாசன் ஜேசுதாசன்

தீபன் எனும் பிரதான கதாபாத்திரத்தை தற்போது பிரான்சில் வசிக்கும் 47 வயதான அந்தனிதாசன் ஜேசுதாசன் எனும் ஸ்ரீலங்காத் தமிழர் நடித்துள்ளார். இது ஒருவேளை வாழ்க்கையே ஒரு நடிப்புக்கலை என்பதற்கு சுவராஸ்யமான ஒரு எடுத்துக்காட்டாக இருக்கிறது, அந்தனிதாசன் தானே – தீபனைப்போல – ஒரு முன்னாள் தமிழ் போராளி பிரான்சில் அகதியாக மாறியுள்ளார். கான்ஸில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் தீபனின் கதை 50 வீதம் தனது உண்மையான வாழ்க்கையை பிரதிபலிக்கிறது என்று அவர் சொல்லியுள்ளார்.

படத்தில் வரும் தீபனைப் போல இல்லாமல், நிஜ வாழ்க்கையில் அந்தனிதாசன் மதிப்பு வாய்ந்த ஒரு தமிழ் எழுத்தாளர். அவர் ஷோபா சக்தி என்கிற புனைபெயரின் கீழ் எழுதி வருகிறார். யுத்தத்தையும் மற்றும் வன்முறையையும் கண்டிக்கும் அவர் ஸ்ரீலங்கா அரசாங்கத்தையும் மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகளையும் கடுமையாக விமர்சிக்கிறார்.

இப்போது ஷோபா சக்தி எனப் புகழப்படும் அந்தனிதாசன் ஜேசுதாசன் வடபகுதி தீவகமான அல்லைப்பிட்டியை சேர்ந்தவர். 1967ல் பிறந்த அவர், 1983 ல் நடந்த தமிழர் எதிர்ப்பு கலவரத்தின் பின் எல்.ரீ.ரீ.ஈ இல் ஒரு உதவியாளராகச் சேர்ந்தார். அவர் அப்போது 16 வயதான ஒரு பள்ளி மாணவர். 1984 ல் அவர் முழுநேர அங்கத்தவராக இணைந்து உள்ளுரில் பயிற்சி பெற்றார். எல்.ரீ.ரீ.ஈ யில் அவரை தாசன் மற்றும் பக்கிள் என அழைத்தார்கள். அந்தனிதாசன் கலையில் அதிக ஈடுபாடு கொண்டவராக இருந்தபடியால், அவரது திறமைக்கு ஏற்றபடி எல்.ரீ.ரீ.ஈ அவரைப் பயன்படுத்தியது. 1985ல் எல்.ரீ.ரீ.ஈ யினால் தயாரிக்கப்பட்ட யுத்தக்கலை எனும் புகழ்பெற்ற தெரு நாடகத்தில் அவர் நடித்துள்ளார்.

யுத்தத்தினால் ஏற்படும் மனக்குழப்பத்தினால் அந்தனிதாசன் பாதிப்படைவது அதிகரித்த படியால் அவர் 1986 டிசம்பரில் புலிகளை விட்டு விலகினார். இயக்கத்தை விட்டு விலகியதற்காக வழங்கப்படும் வழக்கமான தண்டனையை எல்.ரீ.ரீ.ஈயினால் அனுபவித்த பின்னர், 1987 ஜூலையில் இந்திய – இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட வேளையில், அவர் கொழும்புக்கு நகர்ந்தார். எனினும் விரைவிலேயே எல்.ரீ.ரீ.ஈக்கும் மற்றும் இந்திய இராணுவத்துக்கும் போர் மூண்டது. அந்தனிதாசன் ஒரு புலி என கொழும்பில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டார். எல்.ரீ.ரீ.ஈ முன்னாள் ஜனாதிபதி பிரேமதாசவுடன் பேச்சுக்களை அரம்பித்தபோது அவர் விடுதலை செய்யப்பட்டார்.

பின்னர் அவர் ஸ்ரீலங்காவிலிருந்து தாய்லாந்துக்கு தப்பியோடி, பாங்கொக்கில் தன்னை ஒரு அகதியாக யு.என்.எச்.சி.ஆரில் பதிவு செய்து கொண்டார். பின்னர் தொடர்ந்து பலமுறை பிரித்தானியாவுக்கும் மற்றும் கனடாவுக்கும் செல்லும் முயற்சிகளில் ஈடுபட்டு இறுதியில் பிரான்சில் அகதி அந்தஸ்து கோரும் ஒருவராக அவரது நிலை முடிவுற்றது. பிரான்சில் அவர் பல வேலைகளைச் செய்துள்ளார், தட்டுக்கள் கழுவுவது முதல் பரீஸ் வீதிகளில் சுற்றித் திரிந்து பொருட்கள் விற்பனை செய்வது வரையான தொழில்கள் அதில் அடக்கம். அந்தனிதாசன் ஷோபாசக்தி என்கிற புனைபெயரில் தமிழில் எழுதத் தொடங்கினார். அல்லைப்பிட்டியில் வளர்ந்தது, ஒரு விடுதலைப் புலி அங்கத்தவராக இருந்தது மற்றும் பிரான்சில் ஒரு அகதியாக இருந்தது போன்ற தனது சொந்த அனுபவங்களை பெருமளவு அடிப்படையாகக் கொண்டு பல சிறுகதைகளையும் மற்றும் நாவல்களையும் எழுதியுள்ளார். ஷோபா சக்தி தனது படைப்புகளை இலக்கிய ரீதியில் விமர்சனம் செய்யும் ஒரு கற்பனையான சுயசரிதையை போலவே எழுதி வந்தார்.

ஷோபாசக்தியின் எழுத்துக்கள் இருண்ட நகைச்சுவையின் குறும்பான உணர்வுகளையே வெளிக்காட்டின. அவரது ஆக்கபூர்வமான எழுத்துக்கள் அதேபோல ஏனைய கட்டுரைகள் மற்றும் நேர்காணல்கள் என்பன தமிழீழ விடுதலைப் புலிகள் மற்றும் ஸ்ரீலங்கா அரசாங்கம் என்பனவற்றை கடுமையாக விமர்சிக்கின்றன. இவை தமிழ் இலக்கிய உலகில் மிகப் பெரிய சர்ச்சைகளை கிளப்பி வந்துள்ளன. கெரில்லா மற்றும் துரோகி எனும் தலைப்புக்களிலான அவரது இரண்டு நாவல்கள் அமெரிக்காவை தளமாக கொண்ட இந்திய கல்வியாளரான பேராசிரியர் அனுஷியா இராமசாமியினால் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. ஷோபாசக்தி, லீனா மணிமேகலை இயக்கிய தமிழ் திரைப்படமான செங்கடலில் நடித்ததுடன் அதன் அதன் திரைக்கதைக்கு உதவி எழுத்தாளராகவும் பணியாற்றியுள்ளார்.

காளீஸ்வரி சிறினிவாசன்

யாழினி கதாபாத்திரம் ஒரு ஸ்ரீலங்கா தமிழ் பெண்ணைப் பற்றியது, ஆனால் படத்தில் அந்தப் பாத்திரத்தில் நடித்திருப்பவர் இந்தியாவை சேர்ந்த தமிழ் நடிகையான காளீஸ்வரி சிறினிவாசன். அவர் முக்கியமாக ஒரு நாடக நடிகை அவரது முதல் திரைப்பட அறிமுகத்தின் பங்களிப்பாக தீபன் படம் அமைந்துள்ளது. காளீஸ்வரி ஓய்வு பெற்ற ஒரு இராணுவ அதிகாரியின் மகள். அவரது சொந்த இடம் காஞ்சிபுரத்துக்கு அடுத்துள்ள சதுரங்கப்பட்டினமாக இருந்த போதிலும் காளீஸ்வரி வளாந்தது தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் படித்தது ஒரு கான்ட்வென்ட்டில். அவர் கதை நாடகங்கள் மற்றும் வீதி அரங்க நாடகங்களில் நடித்துள்ளதுடன் பாடசாலைகளில் நாடகங்களை கற்பித்தும் வந்துள்ளார். காளீஸ்வரி “குற்றம ;கடிதல்” என்கிற குறும்படம் உட்பட இரண்டு குறும்படங்களில் நடித்துள்ளார், சில வாரங்களுக்கு முன்னர், மிகவும் பாராட்டுதல்களைப் பெற்ற திரைப்படமான மெட்ராஸ் படத்தில் மாரி என்கிற வில்லன் வேடத்தில் நடித்திருக்கும் நடிகரான பி. வினோத்தினை திருமணம் செய்துகொண்டார்.

கிளவுடின் வினாசித்தம்பி

ஒன்பது வயதான மகள் இளையாளின் பாத்திரத்தில் பரிசில் ஒரு மாணவியாக இருக்கும் 10 வயதான கிளவுடின் வினாசித்தம்பி நடித்துள்ளாள். அவளுடைய பெற்றோர் இருவரும் ஸ்ரீலங்கா தமிழர்கள்.அவளுடைய தந்தை யாழ்ப்பாணம் தென்மராட்சி பகுதியான கைதடியை சேர்ந்த இந்து மதத்தவர். அவளது தாய் யாழ்ப்பாணம் வடமராட்சி பகுதியான கரவெட்டியை சேர்ந்த கத்தோலிக்கர். மிகவும் சுவராஸ்யமான விடயமாக இளம் கிளவுடினது வீட்டுச் செல்லப்பெயர் தீபன் படத்தில் அவளுடைய பெயராக இருந்த இளையாள் என்பதே.

நடிகர்களை தேர்வு செய்தது

இந்த மூவரும் எப்படி இயக்குனர் ஜக்ஸ் ஓடியாட்டினால் இந்தப் படத்தில் நடிப்பதற்காக தேர்வு செய்யப்பட்டார்கள் என்பதே ஒரு சுவராஸ்யமான அனுபவம். ஜக்ஸ் ஓடியாட் தனது நடிகர்களை இயக்கும் இயக்குனர்களான பிலிப் எல்க்யோபி மற்றும் முகமட் பெல்கமர் ஆகியோருடன் சேர்ந்து முதலில் நடிகர்களுக்கான தேர்வு ஒத்திகையை ஆரம்பித்தது பிரான்சில் உள்ள ஸ்ரீலங்கா புலம்பெயர்ந்தவர்களிடையேதான். பின்னர் அவர்கள் தேர்வு ஒத்திகையை லண்டன் மற்றும இந்திய நகரங்களான சென்னை மற்றும் பெங்களுருவில் நடத்தினார்கள். திறமையான நடிகர்கள் 2,000 பேர் வரைக்கும் தேர்வு ஒத்திகை நடத்தி இந்த மூன்று பேரும் தெரிவு செய்யப்பட்டார்கள். ஒப்பீட்டளவில் புதிய நடிகர்களை தெரிவு செய்வது என்று தீர்மானிப்பதற்கு முதல் முன்னணி தமிழ் நாட்டு நடிகர்களான தனுஷ், விஜய் சேதுபதி, மற்றும் பசுபதி போன்றவர்களை கருத்தில் எடுத்திருப்பதாக கோலிவூட்டில் கிசுகிசுக்கள் வெளிவந்திருந்தன.

தீபன் கதாபாத்திரத்துக்கு ஷோபாசக்தி என்கிற அந்தனிதாசன் ஜேசுதாசனின் பெயரை நடிப்பு இயக்குனர் பிலிப் எல்க்யோபிற்கு பரிந்துரை செய்தவர் இந்தியாவின் புதுச்சேரியை சேர்ந்த நாடக மற்றும் அரங்க இயக்குனரான குமரன் வள்ளுவன் ஆவார். வள்ளுவன் ஷோபாசக்தி மற்றும் பிலிப் ஆகிய இருவருக்குமே நண்பராவார். இயக்குனர்கள் பின்னர் பரிசுக்கு திரும்பியதும் அந்தனிதாசனை நேர்காணல் செய்தபோது அந்தப் பாத்திரத்துக்கு அவர் மிகவும் கச்சிதமாக பொருந்துவதைக் கண்டார்கள். பின்னர் ஓடியாட் ஒரு நேர்காணலில் பேசும்போது, அந்தனிதாசன் நடப்பதையும் மற்றும் பேசுவதையும் பார்த்த உடனேயே தீபன் பாத்திரத்துக்கு ஏற்ற நபர் நிச்சயமாக கிடைத்து விட்டதாக தான் முடிவு செய்துவிட்டதாகச் சொல்லியிருந்தார். கடவளின் உதவியினால்தான் அந்தனிதாசன் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் அவர் மேலும் விளக்கியிருந்தார்.

தீபனாக அந்தனிதாசன் தனது திரைக் கதா பாத்திரத்துக்கு வெகு கச்சிதமாக பொருந்துவதுடன் மிகவும் சக்திவாய்ந்த நடிப்பையும் வெளிப்படுத்தியிருந்தார். கேன்சில் ஊடகங்களுடன் பேசிய அந்தனிதாசன் தான் தீபன் பாத்திரத்தை ஏற்பதற்கு முன்பே ஜக்ஸ் ஓடியாட்டின் படங்களைப் பற்றி ஏற்கனவே அறிந்திருந்ததை வெளிப்படுத்தியிருந்தார். அவர் மேலும் சொன்னது “ நடிப்பு என்று வந்துவிட்டால் அது மிகவும் கடினமானது, ஆனால் அது ஒரு மகிழ்ச்சியான விடயம்தான்” என்று.

யாழினி பாத்திரம் ஏற்ற காளீஸ்வரி சிறினிவாசன் சென்னையில் நடைபெற்ற ஒரு தேர்வு ஒத்திகையின் பின் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஷோபாசக்தியை தீபன் பாத்திரத்துக்கு பரிந்துரை செய்த நாடக இயக்குனரான குமரன் வள்ளுவன்தான் இந்தப் பாத்திரத்துக்கு காளீஸ்வரியை முயற்சி செய்து பார்க்கும்படி பரிந்துரைத்திருந்தார். மற்றொரு நடிகையான சீமாவும் அவரது நடிப்பாற்றலைப் பற்றிச் சொல்லியிருந்தார். ஒரு ஸ்ரீலங்கா பெண்ணாக இல்லாமலிருந்த போதும் காளீஸ்வரி தேர்வு செய்யப்பட்டார். கிளவுடின் வினாசித்தம்பி பரிசில் நடத்தப்பட்ட ஒரு தேர்வு ஒத்திகையின் பின் தேர்வு செய்யப்பட்டார்.

தேர்வு செய்யப்பட்ட பின்பு நடிகர்கள் ஒரு தயாரிப்பு பயிற்சியில் பரிசில் ஒரு மாதமாக ஈடுபட்டு வந்தார்கள். ஸ்ரீலங்கா தமிழர்களின் தனித்துவமான உச்சரிப்பை காளீஸ்வரி படிக்க வேண்டியிருந்தது. இது தொடர்பாக அந்தனிதாசன் மிகவும் பயனுள்ளவராக இருந்தார். காளீஸ்வரி சரியான ஸ்ரீலங்கா தமிழ் உச்சரிப்பு மற்றும் பேச்சு வழக்கை பெற்றுக்கொண்டு தனது பாத்திரத்தை அசல் இலங்கைத் தமிழ் பெண் என்பதை மெய்பிப்பது போல, நடித்திருந்தார். சிறியவளான கிளவுடினும் பிரான்சில் வளர்ந்திருந்தாலும் தனது கதாபாத்திரமான இளையவளை மிகவும் நன்றாகச் செய்திருந்தாள். அவளது உச்சரிப்பும் பரிசில் வளரும் ஒரு பிள்ளையின் ஐரோப்பியமயமான தமிழ் உச்சரிப்பாக இல்லாமல், இயற்கையாகவே ஸ்ரீலங்காவின் வட பகுதியில் வளரும் ஒரு பிள்ளையினுடையதைப் போல இருந்தது.

ஷோபாசக்தி என்கிற அந்தனிதாசன் படத்தின் திரைக்கதைக்கு எதுவும் செய்யாத போதிலும், அசலாக பிரெஞ்சு மொழியில் எழுதப்பட்டிருந்த படத்தின் உரையாடல்களை தமிழில் மொழி பெயர்ப்பதற்கு அவர் உதவி செய்தார். இதில் முக்கியமாக குறிப்பிட வேண்டியது என்னவென்றால் ஆரம்பத்தில் அந்தனிதாசன் தெரிவு செய்யப்பட்டபோது, இயக்குனர் அவரது எல்.ரீ.ரீ.ஈ உடனான தொடர்பு பற்றியோ அல்லது அவரது எழுத்துத் திறமை பற்றியோ எதுவும் அறிந்திருக்கவில்லை. அவர் ஒரு நடிகராகவே தோந்தெடுக்கப் பட்டிருந்தார்.பின்னர்தான் இயக்குனர் அவரது பின்னணியை கண்டு பிடித்தார்.

இதற்கிடையில் படம் தயாரிக்கப் பட்டுக்கொண்டிருந்த வேளையில்தான் அந்தனிதாசனின் தனிப்பட்ட வரலாறு மற்றும் எழுத்தாற்றல் என்பன இயக்குனா ஜக்ஸ் ஓடியாட்டுக்கு தெரியவந்ததும் அவர் அந்தனிதாசனை ஒரு உத்தியோகபூர்வமற்ற வளமாக பயன்படுத்திக் கொண்டார். படத்தின் உரையாடல்களில் தமிழ், பிரெஞ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகள் பயன்படுத்தப் பட்டிருந்தன இவற்றில் தமிழ் பேசும் சொற்கள் கிட்டத்தட்ட 80 முதல் 90 விகிதம் வரை உள்ளன. அசல் திரைக்கதை வடிவம் இயக்குனர் ஜக்ஸ் ஓடியாட் மற்றும் அவரது வழமையான உதவியாளர்களான தோமஸ் பிட்கெயின் மற்றும் நோ டெப்ரே ஆகியோருடன் இணைந்து எழுதப்பட்ட கூட்டு முயற்சியாகும்.

பிரதான பாத்திரங்களான தீபன், யாழினி மற்றும் இளையாள் ஆகியோரைத் தவிர அநேக சிறு தமிழ் கதா பாத்திரங்கள் கூட படத்தில் உள்ளன. பரிசில் தீபன் மீது அழுத்தம் பிரயோகிக்கும் முன்னாள் புலிகளின் கேணல் போன்ற அத்தகைய ஒரு பாத்திரமும் உள்ளது. அந்தப் பாத்திரத்தை தமிழ் நாட்டைச் சேர்ந்த அரங்க நடிகரான வசந்த் என்பவர் நடித்திருந்தார். பின்னர் அந்த மூவரையும் பிரான்சில் ஏற்றுக் கொள்ளுவதற்காக அவர்களின் கதையை அதிகாரிகள் ஏற்றுக்கொள்ளத் தக்க விதத்தில் மாற்றிச் சொல்லும் தமிழ் மொழி பெயர்ப்பாளர் கதாபாத்திரம் உள்ளது. அந்தப் பாத்திரத்தை பிரான்சில் வாழும் ஸ்ரீலங்கா தமிழ் குடியிருப்பாளரான ஈழநாதன் என்பவர் நடித்தார். அதேபோல அநேக துணை நடிக கதாபாத்திரங்களை பிரான்சில் உள்ள தமிழ் குடியிருப்பாளர்கள் நடித்துக் கொடுத்திருந்தனர். ஓசை மனோ, மன்மதன் பாஸ்கி, அங்கிள் சிறீ, பொலிஸ் அருணகிரி, சதா, பிரணவன், கேசவன், வேலணை பிரபா மற்றும் சுதா ஆகியோர் பிரான்சில் வாழும் தமிழ் அகதிகளாக நடித்திருந்தார்கள்.

பிரான்சில் உள்ள சில ஸ்ரீலங்கா தமிழர்களும் இந்த படத் தயாரிப்பில் சம்பந்தப் பட்டிருந்தார்கள். தகவல் தொழில் நுட்பத்தில் அறிவுள்ள விபின் இந்த படத்தின் பின் தயாரிப்பு வேலைகளில் தொழில்நுட்பவியலாளராக பணியாற்றியிருந்தார். பரிசில் உள்ள தமிழ் பெண்ணான பிரவீணா இந்தப் படத்தின் நடிப்பு உதவியாளராக பணியாற்றியிருந்தார். மற்றொரு பரிஸ் வாழ் தமிழ் பெண்ணான ஓவியா இளங்கோவன் படத்தொகுப்பு பகுதியில் பணியாற்றி இருந்தார். ஓவியா கொழம்பு பல்கலைக்கழக சட்டபீட பீடாதிபதியான பேராசிரியர் வி.ரி. தமிழ்மாறனின் மருமகளாவார்.

தமிழர்கள் அல்லாத கதாபாத்திரங்களில் நடித்தவர்களில் இரண்டு நடிகர்களின் நடிப்பு குறிப்பிட்டுச் செல்லும்படியாக அமைந்திருந்தது. ஒன்று பிராகிம் பாத்திரத்தில் நடித்த பிரெஞ்சு நடிகர் வின்சன்ட் ரொட்டியர்ஸ் உடைய நடிப்பு. 29 வயதான ரொட்டியர்ஸ் 2002ல் ஆரம்பித்த தனது திரைப்பட வாழ்க்கையில் 30 படங்களுக்கு மேலாக நடித்துள்ளார். யாழினியாக நடித்த காளீஸ்வரி ஓரளவு மோகம் கொள்ளும் வன்முறைக் கும்பல் தலைவனின் பாத்திரத்தில் ரொட்டியர்ஸ் நடித்திருந்தார். மற்றைய பாத்திரமான யூசுப்பை 31 வயதான மார்க் சிங்கா நடித்திருந்தார். யூசுப் சமூகத் தொடர்பு அதிகாரி, அவர் பரிசுக்கு புதிதாக வரும் ஸ்ரீலங்கா தமிழர்களுக்கு வீடுகளைக் கண்டுபிப்பதற்கு வழிகாட்டியாகஉள்ளார். சிங்கா பெல்ஜியத்தின் கொங்கோலஸ் நடிக பாரம்பரியத்தை சேர்ந்தவர்.

புதுமுக நடிகர்களுக்கு அப்பால் திரைப்படங்களின் இசை மற்றும் புகைப்படக் கருவியின் கோளத்தில் குறிப்பிடத் தக்க இரண்டு புதியவர்கள் உள்ளனர். அமெரிக்க – சிலியன் இசையமைப்பாளரான நிக்கலஸ் ஜார், தீபன் படத்தின் பின்னணி இசை மற்றும் ஒலிப் பதிவுகளை கையாண்டிருந்தார். ஒளிப்பதிவாளராக கடமையாற்றியவர் எப்பொனின் மொமன்சேயு என்கிற பெண். அவளுக்கு தீபன் படத்துக்கு முன்னதாக எந்த திரைப்பட அனுபவமும் கிடையாது, ஒரு சில குறும்படங்கள் மற்றும் ஆவணப்படங்களில் மட்டுமே பணியாற்றியுள்ளாள்.

தீபன் படத்தின் படத்தொகுப்பினை ஜக்ஸ் ஓடியாட்டின் பழைய நம்பிக்கையான ஜூலியற் வெல்பிங் செய்திருந்தார் 2007ல் ஒஸ்கார் விருதுக்காக அவர் பரிந்துரை செய்யப்பட்டிருந்தார். ஓடியாட்டின் படங்களுக்காக ஜூலியற் நான்கு தடவைகள் சீசர் விருது வென்றிருக்கிறார். தீபன் படத்தின் சர்;வதேச வெளியீடு இந்த வருடம் ஓகஸ்ட் 26ல் நடத்த திட்டமிடப் பட்டுள்ளது. பிரான்சின் வை நொட் புரொடக்ஷன் சார்பாக பஸ்கால் கவுச்சற்றோ இந்த படத்தை தயாரித்துள்ளார்.

படப்பிடிப்பு ஸ்தலங்கள்

தீபன் படத்தின் படப்பிடிப்பு 2014ல் ஆரம்பமாகி இந்த வருடம் வரை தொடர்ந்தது. ஆரம்பத்தில் ஸ்ரீலங்காவிலும் சில காட்சிகளைப் படமாக்கும் நோக்கம் இருந்தது. கடந்த வருடம், ஸ்ரீலங்காவுக்கு ஒரு விஜயம் மேற்கொண்டதின் பின்னர் படத் தயாரிப்பாளர்கள் அப்போது நிலவிய அரசியல் சூழ்நிலையை கருத்தில் கொண்டு தீவில் படப்பிடிப்பை நடத்துவது மிகவும் ஆபத்தானதாக இருக்கும் என முடிவு செய்தார்கள். எனவே படக் குழுவினர் தென் தமிழ் நாட்டின் இராமேஸ்வரத்தில் படப்பிடிப்பை ஆரம்பித்தார்கள், இராமேஸ்வரத்தில் உள்ள மண்டபத்தில் ஸ்ரீலங்கா தமிழ் அகதிகளுக்கான மிகப் பெரிய முகாம் அமைந்துள்ளது.

ஸ்ரீலங்கா தமிழர்களின் பிரச்சினைகளை கையாளும் செங்கடல், கன்னத்தில் முத்தமிட்டால், காற்றுக்கென்ன வேலி, இராமேஸ்வரம் போன்ற அநேகமான படங்கள் மண்டபம் – இராமேஸ்வரம் ஆகிய இடங்களில் தான் படமாக்கப்பட்டன. தீபன் விடயத்தில் சென்னையில் உள்ள வைட் ஏஞ்சல் கிரியேஷன்ஸ் உடன் கூட்டு மேற்கொள்ளப்பட்டது.

இந்த நிறுவனம் சுரேஸ் பாலாஜி மற்றும் ஜோர்ஜ் பயஸ் ஆகியோரால் நடத்தப்பட்டு வருகின்றது. சுரேஸ் நடிகராக இருந்து தயாரிப்பாளராக மாறிய கே.பாலாஜியின் மகனும் மலையாள சுப்பர் ஸ்டார் மோகன் லாலின் மைத்துனரும் ஆவார். சுரேஸின் தந்தை பாலாஜி தனது படமான தீ யின் பெரும்பகுதியை 1980 களில் ஸ்ரீலங்காவில்தான் படம் பிடித்தார். அந்தப் படத்தில் ரஜினி காந்த் மற்றும் ஸ்ரீலங்கா அழகுராணியான தமரா சுப்பிரமணியம் ஆகியோர் நடித்திருந்தார்கள். தமரா அந்தப் படத்தில் தமிழ் சுப்பர் ஸ்டாருடன் ஜோடி சேர்ந்திருந்தார்.

வைட் ஏஞ்சல் கிரியேஷன்ஸ் மண்டபத்தில் மிகப் பெரிய அகதி முகாம் போன்ற அரங்கம் ஒன்றை அமைத்து ஏராளமான துணை நடிகர்களை அகதிகளாக நடிக்க வைத்திருந்தார்கள். இந்த துணை நடிகர்களில் பெரும்பாலானவர்கள் உண்மையான ஸ்ரீலங்கா தமிழ் அகதிகள். முள்ளிவாய்க்காலும் கூட இராமேஸ்வரத்தில் மீள நிர்மாணிக்கப் பட்டது. அந்த நிறுவனமே படப்பிடிப்புக்கான தொழில்நுட்ப குழுவையும் வழங்கியிருந்தது. இந்தியாவில் படப்பிடிப்பு டிசம்பர் 2014 முதல் ஜனவரி 2015 வரை ஏழு முதல் எட்டு நாட்கள் வரையில் நடைபெற்றது.

சில காட்சிகள் ஊட்டி என அழைக்கப்படும் உதகமண்டல மலைப் பகுதிகளில் படம் பிடிக்கப் பட்டன. மிகவும் பிரசித்தி பெற்ற மலைப் பிரதேசமான ஊட்டி, அதன் காலனித்துவ பாரம்பரியத்தில் ஸ்ரீலங்காவின் நுவரெலியாவை போன்றது, பல வழிகளிலும் அது ஒரு குட்டி இங்கிலாந்து போன்றது. தீபன் படத் தயாரிப்பாளர்கள் ஊட்டியின் விநோதமான பழைய ஆங்கில மாதிரி வீடுகளை பிரித்தானியாவை சித்தரிப்பதற்காக பயன்படுத்திக் கொண்டார்கள்.

படத்தின் மீதமான அனைத்துக் காட்சிகளும் பரிஸ் மற்றும் அதன் புற நகர் பகுதிகளில் படமாக்கப் பட்டன. பிரான்சில் படப்பிடிப்பு கட்டம் கட்டமாக 60 நாட்கள் வரை நடைபெற்றது. அதற்கு மேலதிகமாக இந்தியாவில் சுமார் 10 நாட்களும் மற்றும் ஐக்கிய இராச்சியத்தில் சுமார் மூன்று நாட்களும் நடைபெற்றன. படப் பிடிப்புகள் முடிவடைந்ததின் பின்னர், படம் கேன்ஸ் திரைப்பட விழாவில் பங்கு பற்ற வேண்டும் என்பதற்காக படத்தின் பிற்பகுதி தயாரிப்பு வேலைகள் வெகு விரைவாக நடத்தப்பட்டன. நுட்பமான புரிந்துணர்வு உள்ளவர்கள் ஓடியாட்டின் படங்களில் வழக்கமாக உள்ள மெருகேற்றத்திற்குப் பதிலாக இதில் சில குறிப்பிட்ட கடினத்தன்மை இருப்பதை உணர்வார்கள், இது படத்தின் பிற்பகுதி தயாரிப்பில் உள்ள அவசரம் காரணமாக ஏற்பட்டது. எனினும் இந்த அவசர உணர்வு மிகவும் பெறுமதியானது என்பதை எடுத்துக் காட்டும் விதமாக தங்கப்பனை விருது அவர்களுக்கு கிடைத்து விட்டது.

கேன் ஜூரிகள்

கேன் பட விழாவில் வெற்றியாளர்களை தீர்மானிக்கும் ஜூரி சபைக்கு அமெரிக்க படத்தயாரிப்பு சகோதரர்கள் எற்ஹல் மற்றும் ஜோயல் கோன் ஆகியோர் தலைமை தாங்கினார்கள். கோன் சகோதரர்களைத் தவிர ஜூரி சபையின் ஏனைய அங்கத்தவர்களாக ஸபானிஸ் நடிகை ரோஸி டீ பல்மா, பிரெஞ்சு நடிகை சோபி மார்சோ, ஆங்கில நடிகை சியன்னா மில்லர், மாலியை சேர்ந்த இசையமைப்பாளர் றொக்கியா ரெரோர், மெக்சிக்கன் திரைப்பட இயக்குனர் குலர்மோ டெல் ரோரோ, கனடிய நடிகரும் மற்றும் இயக்கனருமான சேவியர் டோலன் மற்றும் அமெரிக்க நடிகர் ஜேக் கிலன்ஹால் ஆகியோர் கலந்து கொண்டிருந்தார்கள்.

விருது தீபனுக்கு வழங்கப்படுகிறது என்பதை பத்திரிகைகளுக்கு கேன்ஸ் ஜூரி சபையின் இணைத் தலைவர் எற்ஹல் கோன் தெரிவித்தபோது, “தங்கப் பனை விருதை தீபன் படத்துக்கு வழங்குவது என்று முடிவெடுப்பதற்கு நீண்ட நேரம் எடுக்கவில்லை, ஏனென்றால் மற்றப் படங்கள் உண்மையில் ஜூரி சபை அங்கத்தவர்களை கவர்ந்திழுத்த போதிலும் இந்தப் படம் மிகவும் சிறப்பானது என நாங்கள் நினைத்தோம். நாங்கள் தனித்தனியாக தெரிவு செய்யக்கூடிய படங்கள் அனைத்தையும் கௌரவிக்கக் கூடிய வகையில் வழங்குவதற்கு போதுமான பரிசுகள் எங்களிடம் இல்லை. இதற்கான விதிகள் அப்படிச் செய்வதற்கு எங்களை அனுமதிக்கவும் இல்லை” என்றார். அவரது சகோதரரும் இணைத் தலைவருமான ஜோயல் கோன், விருது வழங்கும் விழா முடிவடைந்ததும் சக ஜூரிமாரான குலர்மோ டெல் ரோரோ மற்றும் ஜேக் கிலன்ஹால் ஆகியோர் அருகிலிருக்கும் போது, நிருபர்களிடம் சொன்னது: “வேலையை தேடும் கலைஞர்களுக்காக உள்ள ஜூரி சபை இது” என்று.

ஜூரி குலர்மோ டெல் ரோரோ தீபன் படத்தை உயர் விருதுக்காக தெரிவு செய்வதில் அரசியல் திட்டம் உள்ளது என்கிற ஆலோசனையை உதறித் தள்ளியபடி சொன்னது: “உள்ளபடியே நாம் விவாதித்த ஒரு விஷயம் குடியேற்றம் பற்றிய பிரச்சினை அல்ல” என்று. ஆனால் ஸ்பானிஸ் நடிகையும் சக ஜூரியுமான றோசி டீ பல்மா படத்தையும் வீதியில் நீங்கள் கண்டு இவர்கள் எங்கிருந்து வந்தவர்கள் என ஆச்சரியப்படும் மனிதர்களையும் ஒப்பிட்டுப் பேசினார். மக்கள் கடினமானதும் மற்றும் ஆபத்தான சூழ்நிலையிலும் வாழ்கிறார்கள் என்று அவர் தெரிவித்தார். ”தீபன் ஒரு யதார்த்தமான படம் மற்றும் மெதித்ரேனியனில் என்ன நடக்கிறது என்கிற ஆழமான கவலை எங்களுக்குள் எழுகிறது” என றோசி சொன்னார்.

ஊடக அறிக்கைகள் தெரிவிப்பது, கேன்ஸ் திரைப்பட விழா மேடையில் ஜக்ஸ் ஓடியாட் மேடையில் கனிவாகப் பேசியதுடன் மிகுந்த நன்றியுடன் ஜூரிகளுக்கு சிரம் தாழ்த்தி வணங்கி விருதினை ஏற்றுக் கொண்டார். படத்தில் தற்காலிக பெற்றோர்களாக நடித்த காளீஸ்வரி சிறினிவாசன் மற்றும் அந்தனிதாசன் ஜேசுதாசன் ஆகியோருடன் அவர் இணைந்து கொண்டார். “கோன் சகோதரர்களிடமிருந்து இந்தப் பரிசினைப் பெறுவது விதிவிலக்கான ஒன்று” என்று கூறிய ஓடியாட், பெல்ஜியம் திரைப்பட தயாரிப்பு சகோதரர்களான லுக் மற்றும் ஜீன் – பியே டார்டின் ஆகியோரிடமிருந்து பெறும் பரிசுக்கு மட்டுமே இதை ஒப்பிட முடியும் என மேலும் தெரிவித்தார்.

ஜாக் ஓடியா

பிரான்சின் புகழ்பெற்ற பெயரான “சிடுமூஞ்சிக் காதல்” என்கிற பெயரால் தன்னை விளக்கப் படுத்திக் கொள்ளும் ஜக்ஸ் ஓடியாட் பிரெஞ்சு சினிமாவில், ஜீன் – பியே மெல்வில், ஜீன் லுக் கொடாட், லூக் பெசோன் மற்றும் மத்தியு கசோவிற்ஸ் ஆகியோருடன் சேர்த்து ஒரு சிறப்பான அடையாளமாக அறியப்படுகிறார். 63 வயதான பட இயக்குனர் மற்றும் திரைக்கதை எழுத்தாளர், பிரபல பிரெஞ் பட இயக்குனர் மற்றும் எழுத்தாளருமான மிஷேல் ஓடியாட்டின் மகனாவார்.

ஜாக் ஓடியா 1952ல் பரிசில் பிறந்தார், தனது தொழிலை ஒரு பயிற்சி படத் தொகுப்பாளராக அவர் ஆரம்பித்தார். பின்னர் அவர் தனது 22வது வயதில் திரைக்கதை வசனகர்த்தாவாக மாறினார். கதாசிரியராக உருவான அவரது முதல் படம் “திங்கள் வரைக்கும் ஸ. முத்தங்கள்” என்பதாகும். அது 1974ல் வெளியானது. பல படங்களுக்கு திரைக்கதையும் மற்றும் வசனமும் எழுதிய பின்னர் ஓடியாட் இயக்;குனராக மாறியது இரண்டு தசாப்தங்களுக்கு பிறகுதான்.

ஜாக் ஓடியா இயக்குனராக மாறியபின் வெளிவந்த அவரது முதல்படம் 1994ல் வெளியான “ பார் அவர்கள் எப்படி விழுகிறார்கள்” என்பதாகும். ஒரு இயக்குனரின் சிறந்த முதல்படம் என்கிற வகையில் அது பிரான்சில் சீசர் விருதினை வென்றது. பிரான்சில் படங்களுக்கு வழங்கப்படும் மிகவும் உயரிய தேசிய விருது சீசர் விருது ஆகும், இது அமெரிக்காவின் ஒஸ்கார் விருதுக்குச் சமமான பிரெஞ்சு விருது ஆகும். இரண்டு வருடங்கள் கழித்து 1996ல் ஓடியாட் இணை எழுத்தாளராகவும் இயக்குனராகவும் இருந்து உருவாக்கிய படமான “தானே உருவாக்கிய ஹீரோ” வெளியானது. ஓடியாட் அந்த வருட கேன் திரைப்பட விழாவில் இந்தப் படத்தின் சிறந்த திரைக்கதைக்கான விருதை அலென் லா ஹென்றியுடன் இணைந்து கூட்டாகவென்றார். இதே படத்திற்காக அவர் சிறந்த இயக்குனருக்கான விருதுக்கான தேர்வுக்கு பரிந்துரைக்கப் பட்டிருந்தாலும் வெற்றி பெறத் தவறிவிட்டார்.

அவரது மூன்றாவது படமான “எனது உதடுகளை வாசி” என்கிற படத்தை ஜாக் ஓடியா 2001ல் உருவாக்கியிருந்தார். அதன் கதையை எழுதியதற்காக ஓடியாட்டுக்கும் மற்றும் அவரது இணை கதாசிரியரான ரொரினோ பெனாசிகியுஸ்ராவுக்கும் சீசர் விருது கிடைத்திருந்தது. அந்தப் படம் அமெரிக்காவின் நியுபோர்ட் திரைப்பட விழாவில் திரையிடப் பட்டபோது ஓடியாட்டுக்கு சிறந்த இயக்குனருக்கான விருது வழங்கப்பட்டது. 2005ல் வெளியான அவரது அடுத்த படமான “எனது இதயம் துடிப்பதின் அடி” என்கிற படம் ஓடியாட்டுக்கு இரண்டு சீசர் விருதுகளை பெற்றுக் கொடுத்ததுடன் அதற்கு மேலாக அந்தப் படத்தின ஏனைய கலைஞர்களுக்கும் வேறு பல விருதுகளையும் பெற்றுக் கொடுத்தது. ஓடியாட் சிறந்த இயக்குனருக்கான விருதை வென்றதோடு, நன்றாக பின்பற்றப்பட்ட திரைக்கதை என்பதற்கான மற்றொரு விருதை ரொரினோ பெனாசிகியுஸ்ராவுடன் பகிர்ந்து கொண்டார். அந்தப்படம் பிரித்தானியாவின் பீஏஎப்ரிஏ விருதினை ஆங்கில மொழியில் அல்லாத வேற்று மொழி சிறந்த படம் என்கிற பிரிவின் கீழும் வென்றது.

“ஒரு தீர்க்கதரிசி” என்கிற அவரது படம் 2009ல் வெளியானது. தீபன் படம் வெளியாவது வரை ஓடியாட்டால் உருவாக்கப் பட்ட சிறந்த படமாக அது கருதப்பட்டது. தோமஸ் பிட்கெயின், அப்துல் றவுப் டப்ரி மற்றும் நிக்கலஸ் பியுபெயிலற்றுடன் இணைந்து இதன் திரைக் கதையினை ஓடியாட் எழுதியிருந்தார். 2010ல் மிகப் பெரும் சாதனையாக அந்தப்படம் 13 சீசர் விருதுகளுக்காக பரிந்துரைக்கப் பட்டிருந்தது, அதில் சிறந்த படம் மற்றும் சிறந்த இயக்குனர் விருதுகள் உட்பட ஒன்பது விருதுகளை அது தட்டிச் சென்றது. ஒரு தீர்க்கதரிசி என்ற படம் கேன்ஸ் திரைப்பட விழாவில் “கிறான்ட் பிரி” விருதினையும் வென்றது. கிறான்ட் பிரி ஜூரி விருது சிறந்த கேன்சின் திரைப்பட வகையில் இரண்டாவது சிறந்த பரிசாக மதிக்கப்படுகிறது. ஒஸ்கார் அகாதமியின் ஆங்கிலம் அல்லாத சிறந்த வேற்று மொழிப் படத்துக்கான விருதுக்காக பரிந்துரைக்கப் பட்டிருந்த ஐந்து படங்களில் இதுவும் ஒன்றாக இருந்தது. பிரித்தானிய திரைப்பட அகாதமியின் பிஏஎப்ரிஏ யின் ஆங்கிலம் அல்லாத சிறந்த வேற்று மொழி படத்துக்கான விருதினையும் ஒரு தீர்க்கதரிசி எனும் படம் வென்றிருந்தது.

ஜாக் ஓடியா 2012ல் துரு மற்றும் எலும்பு எனும் படத்தை உருவாக்கியிருந்தார். தேசிய மற்றும் சர்வதேச அளவில் பல்வேறு பிரிவுகளின் கீழும் பல விருதுகளுக்காக இந்தப் படமும் பரிந்துரைக்கப் பட்டிருந்தது. அது நன்றாக பின்பற்றப்பட்ட திரைக்கதை என்கிற பிரிவின் கீழ் ஓடியாட் மற்றும் பிறிட்ஜென் ஆகியோருக்கு ஒரு சீசர் விருது உட்பட வேறு பல விருதுகளையும் அது பெற்றுக் கொடுத்திருந்தது. அந்தப் படமும் அதன் இயக்குனரும் கேன்ஸ் விருதுகளுக்காக பரிந்துரைக்கப் பட்டபோதும் அவற்றில் எதையும் வெல்லவில்லை. அந்தப் படத்தின் நட்சத்திரமாக புகழ் பெற்றவர் கொலைகார திமிலங்களின் பயிற்சியாளராக நடித்த நடிகை மரியான் கோட்டிலாட். படத்தில் அவரின் அதிர வைக்கும் நடிப்பின் விளைவாக புகழ் மற்றும் பரிசு மழையில் அவர் நனைந்து திக்கு முக்காடினார்.

துரு மற்றும் எலும்பு படம் வெளியாகி மூன்று வருடங்களுக்கப் பின்னர் ஓடியாட் தனது ஏழாவது படமாக தீபனை உருவாக்கியுள்ளார், அந்தப் படம் அவருக்கு கேன்சில் முதலாவது தங்கப் பனை விருதினை பெற்றுக் கொடுத்துள்ளது.

ஏனையவர்களின் கருத்துக்கள்

தங்கப் பனை விருதினை வென்றுள்ளதின் பின்னணியில் பலராலும் கேட்கப்படும் தங்கமான கேள்வி: “பிரான்சில் உள்ள மூன்று ஸ்ரீலங்கா தமிழ் அகதிகளின் துயரத்தினை வெளிக்காட்டும் இந்த தீபன் படத்தினை ஜக்ஸ் ஓடியாட் உருவாக்குவதற்கான நோக்கம் என்ன?”

அதற்கான சிறந்த பதிலை கேன்சில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் வைத்து இயக்குனரே சொல்லியுள்ளார். அவர் முன்பாக இந்த கேள்வி கேட்கப்பட்டதும் “ இந்த படத்தினூடாக நான் மற்றவர்களைப் பற்றி ஆர்வம் காட்டியுள்ளேன், மற்றவர்களின் கருத்துக்களை மற்றும் நோக்கங்களை நாங்கள் அறிய முயல்வதில்லை, மாடியில் வைத்து எங்களிடம் ரோஜாக்களை விற்பவர்கள் போன்றவர்களைப் பற்றி நாங்கள் எதுவும் அறியமாட்டோம். அது ஓரளவு நாகரிகமானதுதான் ஆனால் அது எப்படி நடக்கும்” என்று ஓடியாட் பதிலளித்தார்.

கேனில் வைத்து பத்திரிகையாளர்களிடம் பேசுகையில் ஓடியாட் குறிப்பிட்டது ‘தீபன் என்று பெயரிடப்பட்ட அதன் கதாநாயகன் வேடத்தை ஜேசுதாசன் நடித்திருந்தார். அது ஒரு பிரெஞ்சு மொழி படம் ஆனால் அதில் உள்ளவர்கள் தமிழில் உரையாடுகிறார்கள்’. ஓடியாட் மேலும் தெரிவிக்கையில் “ அதன் திரைக்கதை ஒரு விழிப்புணர்வான கதை, மற்றும் அதில் ஒரு சிறந்த படம் உள்ளிருந்தாலும் அது நான் செய்ய விரும்பிய படம் அல்லஸ எனக்கு இந்த யோசனை தோன்றிய சமயம் அந்தப் படம் ஒரு காதல் படமாக இருந்து, இந்த மனிதன் காதலுக்காக தனது குடும்பத்துக்காக எதையும் செய்யக் கூடியவனாக இருந்தான்” எனத் தெரிவித்தார்.

ஸ்ரீலங்காவிலிருந்து வந்த அகதிகளின் கதாபாத்திரங்களை உருவாக்கும்போது, படிப்படியாக சில விடயங்கள் தோன்றின. “இந்த மக்கள் ஒரு துயரத்தில் இருந்து ஓடுவதால், அது காலனித்துவத்துக்கு பின்னான பிரான்சுக்கு எதுவும் செய்வதை நான் விரும்பவில்லை. ஸ்ரீலங்கா பூமியின் முடிவாக எனக்குத் தோன்றியது, இந்த திட்டத்தில் ஈடுபடுவதற்கு முன்னால் அதை ஒரு வரைபடத்தில் வடிப்பதற்கு என்னால் முடியவில்லை” என ஓடியாட் சொன்னார். “இந்த மக்கள் மீது எனக்கு அதிகம் பச்சாத்தாபம் மற்றும் இரக்கம் ஏற்படுகிறது ஏனெனில் அந்த வரம்புகளில் இருந்து உங்கள் வாழ்க்கையை மாற்றியமைப்பதற்காக மேற்கொள்ளக் கூடிய மிக நீண்ட பயணத்தை அவர்கள் மேற்கொண்டுள்ளார்கள். பிரெஞ்சு நடிகர்களை அதிக அளவு நான் நேசிப்பதால் இந்தக் கதை அவர்களை மையப்படுத்தியதாக இருந்திருக்குமானால் நான் அதைச் செய்திருக்க மாட்டேன்”.

என்னுடைய பிரதான நடிகர்களை தமிழ் பேசுவதாகச் செய்வதற்கு பல கஷ்டங்கள் இருந்தன ஆனால் பிரெஞ்சு பேசாத நடிகர்களை கொண்டு வேலை செய்விப்பது விசேடமாக அத்தனை கடினமானது இல்லை. “ ஒவ்வொரு நடிகரும் எப்பொழுதும் அந்நிய மொழியை பேசுவார்கள். ஒரு இயக்குனர் என்ற வகையில் ஒவ்வொருவருடைய மொழியையும் கற்றிருக்க வேண்டும்” என்று ஓடியா சொன்னார்.

ஊடக அறிக்கைகளின்படி தீபன் கதைக்கரு உள்வாங்கப்பட்டது, குடியேற்றம், அகதிகள் என்கிற யோசனைகளின் அடிப்படையில்தான் மற்றும் குடும்பம் ஒரு இரண்டாவது தன்மைதான். “அது ஒரு இலக்கு அல்ல, ஒவ்வொரு நாளும் காலையில் எழுந்திருந்ததும் அதற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்பதைப் போல. அநேகமாக அது எனது மனதின் ஒரு பகுதியாக இருந்தது. ஓடியாட்டை கவர்ந்தது என்னவென்றால் தீபன் அதன் கதாபாத்திரங்கள் மூலமான வியக்கத் தக்க ஒரு சுடர் அல்ல, எங்கள் கண்களுக்கு முன்பாக கட்டப்பட்ட ஒரு அன்பு வரலாறு. ஆரம்பத்தில் அது ஒரு பொய், ஒரு கற்பனை ஆனால் அந்த பொய்யின் வழியாக செல்லும்போது அவர்கள் செய்யும் பாசாங்கு உண்மையாக மாறிவிடுகிறது.

ஜாக் ஓடியா, தீபனின் தோற்றம் பற்றி ‘பிரெஞ் ரூ பேபியன் லா மேர்சீ’எனும் ஐரோப்பிய சஞ்சிகைக்கு வழங்கிய நேர்காணலில் விபரித்துள்ளார். ஆரம்பத்தில் அவரும் அவரது இணை எழுத்;தாளர்களும் சாம் பெக்கின்பா வின் டஸ்ரின் ஹொஃப்மான் நடிப்பில் உருவான வைக்கோல் மனிதன் எனும் படத்தை மீள உருமாற்றம் செய்யலாமா என யோசித்தார்களாம். அதன் பிரெஞ்சு பதிப்புக்கு “சியான் டி பயில்” என பெயரும் வைத்தார்கள். அதன் திரைக்கதையை எழுதும் போது அது எச்சரிக்கையாக இருப்பதிலிருந்து காதலுக்கு மாறியது. மொன்ட்டஸ்கியோவின் ‘பேர்சியன் லெற்றர்ஸ்’ படமும் திரைக்கதையில் செல்வாக்குச் செலுத்தியது. அந்தக் கரு பேர்சியன் என்றால் என்ன? என்பதாக இருந்தது.

ஜாக் ஓடியா தனது படமான தீபனை இப்படித்தான் அந்த நேர்காணலில் தொடர்பு படுத்தினார்: “பிரான்சில் ஒரு பிரெஞ்சு படத்தை தயாரிப்பது, அதில் உள்ள கதா பாத்திரங்கள் தமிழ் பேசுவது, என்பன ஆரம்பத்தில் கிறுக்குத் தனமான விடயமாகத்தான் தோன்றியது. நான் சாதாரணமாக அந்நிய மொழி நடிகர்களை எடுத்து விடயங்களை என்னால் இயன்றவரை முன்னுக்குத் தள்ளினேன். நான் ஸ்ரீலங்காவின் உள்நாட்டு போரை வைத்து ஒரு ஆவணப் படத்தையோ அல்லது ஒரு சமூகத்தை பற்றிய ஆவணப் படத்தையோ எடுக்க முயற்சிக்கவில்லை, ஆனால் இந்தக் நிகழ்வுகளையும் மற்றும் சூழ்நிலைகளையும் ஒரு சுவர் சித்திர வடிவில் காட்சிப்படுத்த விரும்பினேன் அது உண்மையில் நீங்கள் விளக்குவதற்கான அமைப்பின் ஒரு பகுதி மட்டுமே. உண்மையில் அதை என்னால் முற்றாக விளக்க முடியவில்லை.

டி.பி.எஸ். ஜெயராஜ் உடன் தொடர்பு கொள்ள்வதற்கான மின் அஞ்சல்: dbsjeyaraj@yahoo.com

[ஆங்கிலத்தில் டி.பி.எஸ்.ஜெயராஜ் இனால் எழுதப்பட்ட “Jacques Audiard’s Film “Dheepan” About Three Tamil Refugees in France Wins Golden Palm at Cannes” கட்டுரையியின் தமிழாக்கம்: தேனீ மொழிபெயர்ப்பு: எஸ்.குமார் ]

(இக் கட்டுரை இங்கையில் இருந்து வெளிவரும் DailyFT பத்திரிகையில் – ஜூன் 6ஆம் திகதி பிரசுரிக்கப்பட்டது.)

Share on FacebookTweet about this on TwitterShare on LinkedInShare on Google+Print this page