எல்.ரீ.ரீ.ஈ யின் இராணுவ தோல்வி மற்றும் மே 2009ல் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மறைவு

எல்.ரீ.ரீ.ஈ யின் இராணுவ தோல்வி மற்றும் மே 2009ல் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மறைவு

– டி.பி.எஸ் ஜெயராஜ்

பகுதி – 1

“நகரும் விரல் எழுதுகிறது, மற்றும் அது எழுதும் வார்த்தைகளும்
நகர்ந்து செல்கிறது, உங்கள் பக்தி அனைத்துக்கும் அல்லது புத்திக்கு
அதன் அரை வரியையாவது மறைத்திடும் வசீகரம் உள்ளதா, அல்லது
உங்கள் அனைவரின் கண்ணீருக்கும் அதில் ஒரு வார்த்தையையாவது அழித்திட முடிகிறதா”

-(உமர் கயாமின் கவிதை சர் எட்வட் பிட்ஸ் ஜெரால்ட்டினால் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப் பட்டுள்ளது)

வே. பிரபாகரன் - யாழ்ப்பாணம், 1987

வே. பிரபாகரன் – யாழ்ப்பாணம், 1987

ஸ்ரீலங்கா தமிழ் பிரிவினைவாதிகள் மற்றும் ஆயுதப் போராட்ட வரலாற்றில் மே மாதம் முக்கியமானதாகும். மே 5, 1976ல் ஸ்ரீலங்கா தமிழ் இளைஞர்களின் போராளிப் பிரிவின் ஒரு பகுதியினர் தமிழீழ விடுதலைப் புலிகள்(எல்.ரீ.ரீ.ஈ) என்கிற பெயருடைய ஒரு அமைப்பின் கீழ் தங்களை மீளமைத்துக் கொண்டனர், அதன் அடிப்படை நோக்கம் ஆயுதப் போராட்டம் மூலமாக தீவுக்குள் தனியான தமிழ் தேசம் ஒன்றை நிறுவுவதாகும். மே 14,1976ல் ஸ்ரீலங்கா தமிழர்களின் பிரதான அரசியல் கட்டமைப்பு தனக்கு தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி (ரி.யு.எல்.எப்) என மறு பெயர் சூட்டிக் கொண்டதுடன் தீவின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை ஒன்றிணைத்து தமிழ் ஈழம் எனும் தமிழ் மாநிலத்தை உருவாக்குவாதற்கான ஒரு பிரேரணையை நிறைவேற்றியது. மே 2009 ல் தமிழீழ விடுதலைப் புலிகள் ஸ்ரீலங்காவின் ஆயுதப் படைகளின் கைகளில் ஒரு மொத்த இராணுவத் தோல்வியை ஸ்ரீலங்காவின் வட மாகாணமாகிய முல்லைத் தீவில் சந்தித்தது. மே மாதத்தில் வரும் நான்கு நாட்களான மே 15 முதல் மே 18 வரையான நாட்களில்தான் இது தொடர்பான முக்கியமான நிகழ்வுகள் இடம்பெற்றன. மே 19,2009ல் எல்.ரீ.ரீ.ஈ யின் தலைவர் திருவேங்கடம் வேலுப்பிள்ளை பிரபாகரன் இறந்துவிட்டார் என்கிற உத்தியோகபூர்வ அறிவிப்புடன் தெற்காசியாவின் மிக நீண்ட போர் ஒரு முடிவுக்கு வந்தது. அவரது உடல் நந்திக்கடல் என அழைக்கப்படும் முல்லைத்தீவு வாவிக்கரையில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டது.

எனவே இதிலிருந்து காணக்கூடியது மே மாதத்தின் முதல் அரைவாசிப் பகுதியும் புலிகள் என அழைக்கப்படும் எல்.ரீ.ரீ.ஈயின் தலைமையின் கீழ் தமிழ் ஈழத்துக்காக நடத்தப்பட்ட தமிழ் ஆயுதப் போராட்டத்தில் மிகவும் முக்கியமான பகுதி என்று நிரூபிக்கப் பட்டுள்ளதை. இந்த பின்னணியில் இந்தப் பத்தி மே மாதத்தின் இந்த வாரத்தில் கடந்த காலத்தில் எழுதப்பட்ட எனது முந்தைய எழுத்துக்களுக்கு மறு விஜயம் செய்து எல்.ரீ.ரீ.ஈயின் எழுச்சியையும் மற்றும் வீழ்ச்சியையும் அத்துடன் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மரணத்தைப் பற்றியும் கவனத்தில் கொண்டு வருகிறது.

தனிப்பட்ட குறிப்பு

ஒரு தனிப்பட்ட குறிப்புடன் இதை ஆரம்பிக்க விரும்புகிறேன். ஒருவர் நிகழ்காலத்தை புரிந்து கொள்வதற்கும் மற்றும் எதிர்காலத்தை எதிர்கொள்வதற்கும் உதவியாக உள்ள பாடங்களை கடந்த காலத்திலிருந்து கற்றுக்கௌ;ள விரும்பினால் அல்லாது கடந்த காலத்தைப் பற்றி வெறுமே பேசுவது பயனற்றது. இருந்தும் நான் அதைச் செய்வது ஏனென்றால் குறைந்தபட்சம் சிலராவது பொறுப்புணர்வுடன் கடந்த காலத்தை பிரதிபலிப்பதுடன் கடந்த காலத்தில் மேற்கொண்ட தவறுகளை எதிர்காலத்தில் செய்யாது தவிர்பபார்கள் என்கிற நம்பிக்கையில்தான்.

இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக ஸ்ரீலங்காவின் அரசியல் போக்கை தீர்மானிக்கும் சக்திகளாக இருந்த எல்.ரீ.ரீ.ஈ இப்போது செயல்பாடுள்ள ஒரு அமைப்பாக இருந்திருந்தால், தனது 39வது பிறந்த நாளை மே 5ல் கொண்டாடியிருக்கும். எல்.ரீ.ரீ.ஈ இறுதியாக ஸ்ரீலங்கா ஆயுதப் படைகளை தோற்கடித்து சுதந்திர நாடாம் தமிழ் ஈழத்தை ஒரு தட்டில் வைத்து தரப்போகிறது என்று பலரும் நினைத்திருந்தார்கள்.

அவர்கள் எல்.ரீ.ரீ.ஈ நடத்திய மனித உரிமை மீறல்களை காணமல் விட்டுவிட, புறக்கணிக்க, பூசி மெழுக அல்லது அப்பட்டமாக மறுதலிக்க விரும்பினார்கள் ஏனென்றால் விடுதலைப் பாதையில் இவையாவும் அவசியமான தீமைகள் என அவர்கள் எண்ணினார்கள். எனினும் யாராவது ஆக்கபூர்வமான விமர்சனம் வெளியிட்டால், அவர்கள்மீது அவதூறு அள்ளி வீசப்பட்டு துரோகி எனும் கண்டனத்துக்கும் ஆளானார்கள். எல்.ரீ.ரீ.ஈயினால் பின்பற்றப்படும் செயல்பாட்டு முறைகள் வெற்றியை தராது மற்றும் தீர்க்கமான தோல்வி நிச்சயம் என்று சுட்டிக்காட்டியபோது அத்தகைய அறிவுரைகள் புலிகள் மற்றும் அவர்களது சக பயணிகளால் நிராகரிக்கப் பட்டதுடன் தொடர்ந்து மறுக்கப்பட்டும் வந்தன. புலிகள் வட்டாரத்தில் இராணுவவாத சிந்தனைகள் மற்றும் இராணுவ வெற்றி மட்டுமே ஒரே தீர்வு என்கிற நம்பிக்கை, நல்ல கருத்துள்ள ஆலோசனைகளை அவர்கள் புறக்கணிக்கும்படி செய்தது.

அவர்கள் நிச்சயித்த இலக்கை அடைவதில் அவர்கள் வெற்றி பெறப் போவதில்லை என்று புலிகளை எச்சரிக்கை செயயத் துணிந்தமையினால்,எல்.ரீ.ரீ.ஈயினர் மற்றும் அவர்களது கைக்கூலிகளின் கைகளினால் கொடுமையான மற்றும் கீழ்த்தரமான உபசரிப்புகளைப் பெற்ற தனிப்பட்ட அனுபவம் எனக்கு உண்டு. புலிகளினால் மேற்கொள்ளப்பட்ட மோசமான தவறுகளைச் சுட்டிக்காட்டி உடனடி நடவடிக்கையாக அவற்றை திருத்தும்படி நான் பல தடவைகள் சொன்னதுண்டு. நான் விரும்பியதெல்லாம் எல்.ரீ.ரீ.ஈ தன்னை மாற்றிக்கொள்ள வேண்டும் என்பதுதான் ஆனால் தன்னைத்தானே ஏமாற்றிக் கொள்ளும் மாய உலகத்தில் வாழ்பவர்களால் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

IMG_2187 - Copy

மீண்டும் முந்தையதை போல ஒருபோதும் ஆகாது

இன்று எல்.ரீ.ரீ.ஈ ஸ்ரீலங்காவில் ஒரு செயல்பாட்டு அமைப்பாக இல்லை. எண்ணிக்கையற்ற மரணங்களுக்கு, அளவிடமுடியாத அழிவுகளுக்கு மற்றும் மிகப் பெரிய இடப்பெயர்வுகளுக்கு வழியமைத்த தமிழ் ஆயுதப் போராட்டம் ஒரு கசப்பான நினைவு மட்டுமே. அடித்து துவைக்கப் பட்ட ஸ்ரீலங்கா தமிழர்கள் உடைந்து நொருங்கிய துண்டுகளை எடுத்து அதைக்கொண்டு தங்கள் வாழ்க்கையை ஒட்டிச் செல்ல, மெல்ல மெல்ல போராடி வருகிறார்கள். எனினும் ஆழமாகச் சிந்திக்கும் தமிழர்கள் பலருக்கும் தங்கள் வாழ்க்கை மீண்டும் ஒருபோதும் பழையது போல ஆகாது என்பது நன்கு தெரியும்.

கடந்த காலத்தில் எல்.ரீ.ரீ.ஈயினை விமர்சித்ததுக்காக என்னை காட்டுமிராண்டித்தனமாக விமர்சித்த பலர் இந்த நிகழ்வுகளின் மாற்றத்தால் ஒருவகை குழப்பத்திலும் அதிர்ச்சியிலும் ஆழ்ந்துள்ளார்கள். எல்.ரீ.ரீ.ஈயின் தோல்வியை அடுத்து உடனடியாக வாசகர்களிடமிருந்து எனக்கு வந்த தனிப்பட்ட மின்னஞ்சல்களின் தொகையினைக் கண்டு நான் ஆச்சரியம் அடைந்தேன்; அநேகர் எனது முந்தைய கட்டுரைகளை குறிப்பாக பாராட்டியதுடன் பட்டபின் வருகின்ற ஞ}னம் அவர்களது முந்தைய கண்ணோட்டத்தை மாற்றியிருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்கள். எல்.ரீ.ரீ.ஈ மற்றும் பிரபாகரன் ஆகியோருக்கு தமிழர்களின் தேசிய பிரச்சினைக்கு ஒரு திருப்தியான முடிவை கொண்டு வருவதற்கான சக்தி மற்றும் தகுதி இருந்தபோதும் அவர்கள் அதில் தோல்வியுற்றதுடன் இறுதி ஆய்வு தமிழ் மக்களை காட்டிக்கொடுத்து விட்டது என்றும் சிலர் குறிப்பிட்டிருந்தார்கள். தற்சமயம் தமிழ் மக்கள் நடைமுறைக்கேற்ற, சுயநலமற்ற தலைவர் இல்லாத நிலையில் தலையறுபட்ட கோழிக் குஞ்சினைப் போல வெறிபிடித்து ஓடியபடி வெற்று வாய்வீச்சு முழக்கங்களைக் கேட்டபடி மற்றும் காலப்போக்கில் நிண்ட தோல்வியை ஏற்படுத்தக்கூடிய நடைமுறைக்கு ஒவ்வாத செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.

எல்.ரீ.ரீ.ஈ நல்ல நம்பிக்கையுடன் பேச்சு வார்த்தைகளுக்குச் சென்று மற்றும் தமிழர்கள் ஐக்கியமான ஸ்ரீலங்காவுக்குள் சமத்துவமாக வாழ்வதை உறுதி செய்யும் பேச்சு வார்த்தை தீர்வு ஒன்றை கொழும்புடன் ஏற்படுத்தி இருந்தால் எப்படி இருந்திருக்கும் என்கிற பிரதிபலிப்புகள் என்னுள் சிலநேரங்களில் ஏற்பட்டு சோகமான உணர்வுகளை என்னுள் ஏற்படுத்துவதுண்டு. நான் அனுபவிக்கும் அந்த துயரம் சாகும்வரை என்னைவிட்டு மறையாது என்பது எனக்குத் தெரியும். தமிழ் மக்கள் ஸ்ரீலங்காவில் படிப்படியாக குறைந்து முற்றாக அழிந்து போவதைக் காண நான் சாட்சியாக இருக்கிறேன் என்பதை எண்ணும் போது அது மேலும் மேலும் அதிகரிக்க மட்டுமே செய்கிறது. ஆனால் அப்போது நான் “றுபையாட்டில்” உமர்கயாம் எழுதியுள்ள கவிதையை சேர். எட்வட் பிற்ஜெரால்ட் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ள மறக்கமுடியாத வரிகளை தத்துவ ரீதியாக எண்ணிப்பார்த்து என்னை நானே தேற்றிக் கொள்வதுண்டு – அந்த வரிகளை கட்டுரையின் ஆரம்பத்தில் நான் குறிப்பிட்டுள்ளேன்.

ஸ்ரீலங்காவில் தமிழ் ஈழத்தை அடையவேண்டும் என்கிற இலக்குடன் மேற்கொள்ளப்பட்ட ஆயுதப் போராட்டத்தின் பரிணாம வளர்ச்சி, அரசியல் – இராணுவ அடிவானத்தில் பல தமிழ் போராளிக் குழுக்களை உதயமாக்கியதை காண முடிந்தது. ஒரு சமயத்தில் பெரிதும் சிறிதுமாக கிட்டத்தட்ட 34 அமைப்புகள் இருந்தன. இவை அனைத்திலும் தமிழ் ஆயுதப் போராட்டத்தை உயிரோட்டமுள்ளதாக வைத்திருந்த ஒரு ஒற்றை அமைப்பு வேலுப்பிள்ளை பிரபாகரன் தலைமையிலான எல்.ரீ.ரீ.ஈ யைத் தவிர வேறு எதுவுமில்லை. பிரபாகரனின் கீழிருந்த எல்.ரீ.ரீ.ஈ அதன் சபதமெடுத்திருந்த இலக்கான தனியான தமிழ் நாட்டை அடைவதை நோக்கி இறுதிவரை சளைக்காது போராடியது.

திருமேனி குடும்பம்

பிரபாகரன் 1954,நவம்பர் 26ல் பிறந்தார். இரண்டு ஆண்களும் மற்றும் இரண்டு பெண்களும் உள்ள குடும்பத்தில் அவர் கடைசிப் பிள்ளையாக இருந்தார். எல்லோரிலும் இளையவராக இருந்தபடியால் பிரபாகரனின் செல்லப்பெயர் தம்பி என்பதாக இருந்தது. அவரது தந்தை வீராசாமி திருவேங்கடம் வேலுப்பிள்ளை. தாயாரின் பெயர் பார்வதிப்பிள்ளை. பிரபாகரனின் சொந்த ஊர் விவிரி என பொதுவாக அழைக்கப்படும் கரையோர நகரமாகிய வல்வெட்டித்துறை. வல்வெட்டித்துறையில் பிரபாகரன் குடும்பம் மரியாதையான வம்சாவளியினைச் சேர்ந்ததாக இருந்தது. அவர்கள் திருமேனி குடும்பத்தை சேர்ந்தவர்கள் என அழைக்;கப்பட்டார்கள். வல்வெட்டித்துறையில் புகழ்பெற்ற சிவாலயத்தை பிரபாகரன் குடும்பத்தின் முன்னோர்களே கட்டினார்கள்.

பள்ளிச் சிறுவனாக இருந்தபோது அவரது வயதையொத்த ஏனைய இளையவர்களைப் போல பிரபாகரனும் மிதிவண்டி ஓட்டுவதிலும் கரபந்தாட்டம் மற்றும் உதைபந்தாட்டத்திலும் ஆர்வமுள்ளவராக இருந்தார். ஆனால் அவர் ஒரு விளையாட்டு வீரராக இருக்கவில்லை மற்றும் வாசிப்பது அல்லது சண்டைப் படங்களை பார்ப்பதை அவர் பெரிதும் விரும்பினார். அவரது மற்றொரு பிள்ளைப்பருவ நடவடிக்கை அணில்கள், பல்லிகள், ஓணான்கள் மற்றும் சிறிய பறவைகளை கவண் மூலமாக குறி வைத்து அடிப்பது. ஒரு சிறுவனான பிரபா அடர்ந்த தாவரங்கள் இருந்த பகுதியில் தனது இரைக்கான தேடலுக்காக சுற்றித் திரியலானார். அவரது ஞ}பகசக்தி மிகவும் புகழ் பெற்றது. பிரபாகரனால் ஆட்களின் முகங்களையும் பெயர்களையும் மற்றும் பல வருடங்களுக்கு முன்பு சந்தித்தவர்களையும் கூட சுலபமாக நினைவில் வைத்திருக்க முடியும். அவரது கண்கள் மிகவும் கூர்மையானது மற்றும் எப்போதும் சுற்றாடலை நோட்டம் விட்டபடி எச்சரிக்கையாகவே இருக்கும். அவருடைய கண்கள் பெரிதாகவும் தாக்கும் நோட்டமுடையதாகவும் இருந்ததால் பிரபாகரனை முழியன் என்று கேலி செய்தார்கள்.

சமகால நிகழ்வுகள் மற்றும் சூழலின்படியே பிரபாகரனின் பழக்க வழக்கங்களும் மற்றும் அரசியல் சிந்தனைகளும் உருவம் பெற்றன. நான்கு வயதுப் பிள்ளையாக அவர் இருந்தபோது 1958 இனக் கலவரத்தை பற்றி அவர் கேட்ட மோசமான கதைகள் அவருள் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தின. ஒருநாள் பிரபாகரனின் வீட்டுக்கு ஒரு பெண் விருந்தாளி வந்திருந்தார் அவரது கால்களில் எரி காயங்களின் தழும்புகள் இருந்தன. அதைப்பற்றி விசாரித்ததில் அந்தப் பெண்ணின் வீடு சிங்கள காடையர் கும்பலினால் தீயிட்டு கொளுத்தப்பட்டது என்று அந்தச் சிறுவனுக்குச் சொல்லப்பட்டது. அவள் எரிகாயங்களுடன் தப்பினாள். பாணந்துறையில் இருந்த பிராமண பூசாரி எரித்துக் கொல்லப்பட்டது மற்றும் பச்சிளம் குழந்தையை தார் பீப்பாய்க்குள் எறிந்தது போன்ற பிரபலமான கதைகளையும் இளம் பிரபா கேள்விப்பட்டிருந்தார். இந்தக் கதைகள் யாவும் அவருள் அழிக்க முடியாத பாதிப்பை ஏற்படுத்தியிருந்தன.

வல்வெட்டித்துறையை சொந்த ஊராக கொண்டிருந்ததும் பிரபாகரனுள் ஒரு போர்க்குணத்தை பொங்கியெழ வைக்கும் மற்றொரு காரணியாக இருந்தது. கள்ளக்கடத்தலுக்கு பேர்பெற்ற ஊராக வல்வெட்டித்துறை திகழ்ந்தது மற்றும் கடத்தல் அதன் துணை கலாச்சாரமாகவும் இருந்தது. ஸ்ரீலங்கா சுதந்திரம் பெற்றபின்னர் சட்டவிரோத குடியேற்றக்காரர்களையும் மற்றும் கள்ளக்கடத்தலையும் கண்காணித்து தடுப்பதற்கு “ஒப்பறேசன் மொன்ட்டி” எனும் நடவடிக்கை ஆயுதப் படைகளினால் முன்னெடுக்கப் பட்டது. இதன்காரணமாக முந்தைய நூற்றாண்டின் ஐம்பதுகளின் ஆரம்ப காலங்களில் பாதுகாப்பு படை முகாம்களை வல்வெட்டித்துறையில் அமைப்பதற்கான அவசியம் ஏற்பட்டது. இந்த இராணுவ பிரசன்னத்தின் விளைவாக அங்கு பாரிய எதிர்ப்புகள் தோன்றியிருந்தன. இதன் காரணமாக எழுபதுகளில் அரசியல் மோதல்கள் தோன்றுவதற்கு வெகு காலத்துக்கு முன்னரே மக்களுக்கும் மற்றும் ஆயுதப்படையினருக்கும் இடையில் மோதல் மனநிலை இங்கு நிலவிவந்தது. இத்தகைய ஒரு சூழலில்தான் பிரபாகரனும் மற்றும் வல்வெட்டித்துறையில் பிறந்த ஏனைய இளைஞர்களும்; வல்வெட்டித்துறையில் ஆயுதப் படையினருக்கு எதிரான சினம் மற்றும் கோபத்துடன் வளர்ந்தார்கள் மற்றும் கொழும்பிலிருந்த அரசாங்கம் இந்த விரிவாக்கத்துக்கு பொறுப்பாக இருந்தது.

வேணுகோபால் மாஸ்ரர்

இந்தச் சூழலில் வளர்ந்த பிரபாகரன் முந்தைய நூற்றாண்டின் அறுபதுகளின் பிற்பகுதி மற்றும் எழுபதுகளின் ஆரம்பத்தில் அரசியல் நோக்கத்தால் தூண்டப்பட்டார். இது நடந்தபோது முன்னாள் ஊர்காவற்றுறை பாராளுமன்ற உறுப்பினர் வி.நவரத்தினம், ஆங்கிலத்தில் பெடரல் கட்சி என அழைக்கப்படும் இலங்கைத் தமிழரசுக் கட்சியில் இருந்து பிரிந்திருந்தார். பெடரல் கட்சியின் தங்க மூளை என ஒருகாலத்தில் அழைக்கப்பட்ட நவரத்தினம் 1968ல் தமிழர் சுயாட்சிக் கழகத்தை நிறுவினார். பெடரல் கோரிக்கை மிகவும் சிறியது மற்றும் மிகவும் தாமதமானது என அதை நிராகரித்த நவரட்னம் அதற்கு மாறாக சுயாட்சி எனும் தனிநாட்டு கோரிக்கையை முன்வைத்தார். வேணுகோபால் மாஸ்ரர் எனும் உபாத்தியாயர் ஒருவர் அங்கு இருந்தார், பிரபாகரன் அவர்மீது அளவற்ற மதிப்பும் மரியாதையும் வைத்திருந்தார். வேணுகோபால் மாஸ்ரர் நவரட்னத்தின் தீவிர ஆதரவாளராக மாறியிருந்தார். பிரபாகரன் உட்பட ஏராளமான மாணவர்கள் அவரைப் பின்பற்றுபவர்களாக மாறியதுடன் தமிழர் சுயாட்சி மீது தீவிர பக்தி கொண்டவர்களாகவும் மாறியிருந்தார்கள்.

சுயாட்சிக் கழகம் விடுதலை எனும் செய்தி பத்திரிகையையும் ஆரம்பித்தது. அதில் புகழ்பெற்ற நாவலாசிரியரான லியோன் யூரிஸ் அவர்கள் எழுதிய எக்ஸோடஸ் எனும் நாவலை நவரட்னம் அவர்களே மொழி மாற்றம் செய்து தொடராக வெளியிட்டு வந்தார். அதன் தமிழ் பெயர் “நமக்கென்று ஒரு நாடு” என்பதாகும். இளம் பிரபாகரன் அதை ஆவலுடன் உள்வாங்கியதுடன் தமிழர்களுக்கு சொந்தமாக ஒரு நாடு எனும் கனவில் மிதந்தார். 1970 தேர்தல்களில் தமிழர் சுயாட்சிக் கழகம் தோல்வியடைந்தது. நவரட்னம் உட்பட எந்த ஒரு வேட்பாளரும் வெற்றி பெறவில்லை. அந்த தேர்தல் பிரச்சாரத்தில் விதைக்கப்பட்ட சுயாட்சி எனும் விதைகள் பிரபாகரனின் இதயத்திலும் மனதிலும் உறுதியான வேர்களை விட்டிருந்தன.

1970 களில் தரப்படுத்தல் முறை அறிமுகப் படுத்தப்பட்டதோடு யாழ்ப்பாணத்தில் இருந்த மாணவர் சமுதாயம் தீவிரவாதம் அடைய ஆரம்பித்திருந்தது. தமிழ் மாணவர் பேரவை மற்றும் தமிழ் இளைஞர் பேரவை என்பன ஆரம்பிக்கப்பட்டன. தொடர்ச்சியான கூட்டங்கள், ஊர்வலங்கள் மற்றும் பேரணிகள் இடம் பெறலாயின. பிரபாகரன் தானே இவ்வாறான சில செயற்பாடுகளில் பங்கெடுக்க ஆரம்பித்திருந்தார். மேலும் பிரபாகரன் பெரும்பாலான தமிழ் மாணவர்கள் மற்றும் இளைஞர் ஆர்வலர்கள் கூட்டங்களிலும் கலந்து கொண்டார். விரைவிலேயே அவருக்கு கூட்டங்கள் மற்றும் அகிம்சை வழி போராட்டங்களில் ஆர்வம் குறையத் தொடங்கியது. இவைகள் அவருக்கு மிகவும் இயல்பானவையாகத் தோன்றின. இஸ்ராயேலின் ஹகன்னா மற்றும் இர்குன் கதைகளால் பெருமளவு ஈர்க்கப்பட்ட பிரபாகரன், நடைபெறும் ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் ஒடுக்குமுறைகளை பலாத்காரத்தால்; மட்டுமே தடுக்க முடியும் என உறுதியாக நம்பத் தொடங்கினார்.

அப்போதுதான் பிரபாகரன் ஒரு துப்பாக்கியை வாங்கி சுடுவதற்கு பயிற்சி பெற விரும்பினார். அப்போது பருத்தித்துறையில் சம்பந்தன் எனும் பெயர்கொண்ட பேர்பெற்ற சண்டியன் ஒருவன் இருந்தான். அவன் சட்ட விரோதமாக துப்பாக்கிகளை விற்றுவந்தான். ஒரு துப்பாக்கிக்கு வேண்டி பிரபாகரன் அவனை அணுகியபோது, அவன் ஒரு பழைய கைத்துப்பாக்கிக்கு 150 ரூபா விலை சொன்னான். பிரபாகரன் மற்றும் அவரைப் போன்ற குணமுடைய சில இளைஞர்கள் தங்களுடைய வளங்களை எல்லாம் ஒன்று சேர்த்து பார்த்தபோதும் அது வெறும் 40 ரூபா மட்டுமே தேறியது. தனது முயற்சியில் மனந்தளராத பிரபாகரன் தான் அணிந்திருந்த தங்க மோதிரத்தை விற்றார். அதை அவருக்கு அவரது மூத்த மைத்துனர் திருமணத்தின்போது கொடுத்திருந்தார். திருமண வழக்கத்தின்படி மணமகளின் இளைய சகோதரனான பிரபாகரன், மணமகன் மணமகளின் வீட்டுக்கு வந்தபோது அவரது கால்களுக்கு தண்ணீர் ஊற்றியதினால் அவருக்கு பரிசாக வழங்கப்பட்டது. இப்படித்தான் அவர் தனது முதல் துப்பாக்கியை பெற்றுக் கொண்டார்.

பின்னர் பிரபாகரன் இரகசியமாக பயிற்சியை ஆரம்பித்தார். அப்போது அவர் மணியம் மற்றும் மணி எனும் பெயர்களை பயன்படுத்தினார். ஒரு ஓய்வுபெற்ற படை வீரர் அவருக்கு பயிற்சி அளித்து உதவி செய்தார். இந்த காலகட்டத்தில் இளைஞர்கள் காவல்துறையினரின் கவனத்தில் பட ஆரம்பித்து விட்டார்கள். காவல்துறையினர் மணி என்கிற ஒருவனைப் பற்றி விசாரணை செய்ய ஆரம்பித்ததும் பிரபாகரன் அதன் உள்ளடக்கம் என்னவாக இருக்கும் என்பதை புரிந்து கொண்டார். ஒருநாள் தனது உறுதியான தொழிலை நிறைவேற்றுவதற்காக அவர் வீட்டை விட்டு வெளியேறினார். வெளியேறுவதற்கு முன்னதாக எதிர்காலத்தில் வரக்கூடிய பிரச்சினைகளை எதிர்பார்த்து, வீட்டில் தன்னுடைய உருவம் இடம்பெற்றிருந்த புகைப்படங்கள் அனைத்தையும் அழித்துவிட்டார். அவர் தப்பியோடியதன் பின்னர் அவரது வீட்டை சோதனையிட்ட காவல்துறையினரால் அவரது சரியான புகைப்படம் எதையும் பெற்றுக்கொள்ள முடியவில்லை, பிரபாகரன் பரீட்சைகளுக்கு தோற்றுவதற்காக பெற்றுக்கொண்ட தபால் அடையாள அட்டை புகைப்படத்தை மட்டுமே பின்னர் அவர்கள் பயன்படுத்த வேண்டியதாயிற்று.

தமிழ் புதிய புலிகள்

பிரபாகரன் மற்றும் சிலருடன் குழுவாக இணைந்து தமிழ் புதிய புலிகள் எனும் அமைப்பை ஆரம்பித்தார். வெளிப்படையாக இலங்கை தமிழரசுக் கட்சியை சேர்ந்த நுணாவில் ராஜரட்னம் போன்ற சில தமிழ் தீவிரவாதிகள் ஒன்று சோந்து தமிழர்களின் உரிமைகளுக்காக போராடுவதற்காக அறுபதுகளின் ஆரம்பத்தில் புலிகள் என்றொரு குழுவை ஆரம்பித்து இருந்தார்கள். அது ஒருபோதும் நிலத்தை விட்டுக் கிளம்பவேயில்லை. பிரபாகரன் ராஜரட்னத்துடன் பழக ஆரம்பித்ததும் புதிய இயக்கம் அதன் ஒரு வகையான மறுமலர்ச்சியாக இருக்கவேண்டும் என நினைத்தார். அதனால் அதற்கு தமிழ் புதிய புலிகள் (ரி.என்.ரி) எனும் பெயரை வைத்தார். ரினிற்றோதொலுயீன் எனும் வெடி மருந்துக் கலவையையும் சுருக்கமாக ரி.என்.ரி என குறிப்பிடுவது உண்டு.

கல்வியங்காட்டை சேர்ந்த செட்டி எனும் தனபாலசிங்கத்தின் தலைமையின் கீழ் ரி.என்.ரி இயங்கியது. காவல்துறை தேடுதல் வேட்டை நடத்தி முக்கியமான இளைஞர் ஆர்வலர்களை கைது செய்யத் தொடங்கியதும் பிரபாகரன் அதிலிருந்து நழுவி கடல்கடந்து தமிழ் நாட்டுக்குச் சென்றுவிட்டார். எழுபதுகளில் அவர் இப்படி வருவதும் போவதுமாக இருந்தார். ஸ்ரீலங்காவில் பிரபாகரன் ஒருபோதும் கைது செய்யப்படவில்லை. வேறு சில இளைஞர் குழுக்களும் தோன்றி வன்முறை நடவடிக்கைகளில் ஈடுபடலாயின.

1975 ஜூலையில் முன்னாள் யாழ்ப்பாண பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் மேயரான அல்பிரட் துரையப்பா பொன்னாலை வரதராஜ பெருமாள் கோவிலில் வழிபாடு செய்ய போகும்போது அவரைக் கொலை செய்து ரி.என்.ரி தனது முத்திரையை பதித்தது. பிரபாகரன் உட்பட நான்கு இளைஞர்கள் இந்தக் கொலையில் சம்பந்தப்பட்டு உள்ளார்கள். பின்னாளில் பிரபாகரன் தனது சாதனைகளைப் பற்றிக் குறிப்பிடுகையில் இந்தக் கொலைதான் தனது முதலாவது இராணுவ செயற்பாடு எனக் குறிப்பிட்டுள்ளார்.

ரி.என்.ரி மே 5, 1976ல் தமிழீழ விடுதலைப் புலிகள் (எல்.ரீ.ரீ.ஈ) என உருமாற்றம் பெற்றது. அன்றைய தினத்தில் கிட்டத்தட்ட 40 – 50 தமிழ் இளைஞர்கள் யாழ்ப்பாணத்தில் உள்ள ஒரு இரகசிய இடத்தில் இரசியமாகச் சந்தித்து எல்.ரீ.ரீ.ஈ இனை உருவாக்கினார்கள். உமாமகேஸ்வரன் அதற்கு தலைவரானார். பிரபாகரன் இராணுவ தளபதியாக நியமிக்கப்பட்டார். இந்த புதிய அமைப்பை ஒருங்கிணைத்து கட்டுப்படுத்த ஐந்து அங்கத்தவர்களைக் கொண்ட குழு ஒன்று நியமிக்கப்பட்டது. உமாமகேஸ்வரன் மற்றும் பிரபாகரன் ஆகிய இருவரும் இந்த குழுவின் அங்கத்தவர்கள். அவர்களின் இலக்கு சந்தேகத்துக்கு இடமற்ற வகையில் தெளிவாக இருந்துது எல்.ரீ.ரீ.ஈயின் இலக்கானது ஸ்ரீலங்காவின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தமிழ் ஈழம் எனப்படும் சுயாதீன நாட்டை உருவாக்குவது. அதற்காக ஒரு புரட்சிகர ஆயுதப் போராட்டத்தில தங்கியுள்ள கெரில்லா யுத்தமுறையிலான போர் உத்தியை பயன்படுத்தி, சிங்கள ஆதிக்கத்திலுள்ள ஸ்ரீலங்கா அரசுக்கு எதிராக போராடுதல்.

ஒன்பது நாட்களுக்குப் பிறகு மே 14ல் புதிதாக உருவாக்கப்பட்ட தமிழர்: ஐக்கிய விடுதலை முன்னணி (ரி.யு.எல்.எப்) வட்டுக்கோட்டையில் வைத்து ஸ்ரீலங்காவில் உள்ள தமிழர்களுக்கு தமிழ் ஈழம் எனும் தனி நாட்டை கோரி தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியது. ஜூலை 77ல் பாராளுமன்றத் தேர்தல்களில் பிரிவினைவாதத்தின் அடிப்படையில் ரி.யு.எல்.எப் போட்டியிடடது. ரி.யு.எல்.எப் தனது தேர்தல் அறிக்கையில் கூறியிருந்து, கட்சியானது தமிழ் ஈழத்துக்கான ஒரு ஆணையை கோரி நடத்தப்படும் ஒரு சர்வசன வாக்கெடுப்பாக இந்த தேர்தலை கருதுகிறது என்று. வடக்கு மற்றும் கிழக்கில் தமிழர் பெரும்பான்மையாக உள்ள அனைத்து தொகுதிகளிலும் ரி.யு.எல்.எப் வெற்றி வாகை சூடி 18 ஆசனங்களை கைப்பற்றியது. ரி.யு.எல்.எப் பொதுச் செயலாளர் அப்பாபிள்ளை அமிர்தலிங்கம் எதிர்க்கட்சித் தலைவரானார்.

ரி.யு.எல்.எப் மற்றும் எல்.ரீ.ரீ.ஈ என்பனவற்றின் இலக்குகள் காகிதத்தில் ஒரே மாதிரியானவைகளாகவே இருந்தன. நடைமுறையில் மிதவாதமானதாக இருந்த ரி.யு.எல்.எப் விட்டுக் கொடுப்பதற்கு இணக்கம் தெரிவித்து இறுதியாக மாவட்ட அபிவிருத்தி சபைகளை தமிழ் ஈழத்துக்கு ஒரு மாற்றீடாக கருதி ஏற்றுக் கொண்டது. பெடியன்கள் என குறிப்பிடப்படும் போர்க்குணம் கொண்ட இளைஞர்கள் இதை ஏற்றுக் கொள்ளாமல் தொடர்ந்தும் தங்கள் இலக்கான தமிழ் ஈழத்தை அடைவதை வன்முறை வழிகளுடாக தொடர முடிவு செய்தார்கள். தமிழர்களுக்கு எதிரான ஜூலை 1983 கலவரம் மிதவாத மற்றும் போராளி தமிழர்களை தற்காலிகமாக இணைப்புக்கு கொண்டுவரும் ஒரு வாய்க்காலாக மாறியது. இதற்கிடையில் எல்.ரீ.ரீ.ஈ இரண்டாகப் பிளவுபட்டது. பெருமளவிலான அங்கத்தவர்கள் உமாமகேஸ்வரன் தலைமையில் பிரிந்து சென்று தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்) எனும் அமைப்பை உருவாக்கினார்கள். நாகராஜா, ஐயர் போன்ற சிலர் தங்கள் சொந்த வழியில் சென்றார்கள். அசல் எல்.ரீ.ரீ.ஈ அங்கத்தவர்களில் ஒரு கையளவு தொகையினரே பிரபாகரனுக்கு விசுவாசமாக இருந்தனர். விரக்தியுற்ற பிரபாகரன் இந்தியாவுக்குச் சென்று அங்கு சிலகாலம் தங்கியிருந்தார். அவர் இல்லாத நேரத்தில் சீலன்,மாத்தையா மற்றும் ரகு ஆகிய மூவர் குழு ஸ்ரீலங்காவில் எல்.ரீ.ரீ.ஈயினை பராமரித்து வந்தது.

தங்கத்துரை – குட்டிமணி

ஒரு கட்டத்தில் எல்.ரீ.ரீ.ஈ அதன் பலம் குறைந்த அணியினருடன் இணைந்து தங்கத்துரை மற்றும் குட்டிமணி தலைமையின் கீழ் இயங்கும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்துடன்(ரெலோ) ஒன்றிணைந்து பணியாற்ற ஆரம்பித்திருந்தது. பிரபாகரன் தனக்கு கீழ் இருந்த எல்.ரீ.ரீ.ஈ யின் எச்சங்களை ரெலோவுடன் இணைத்து புதிதாக ஒரு அமைப்பை உருவாக்க ஒரு காலத்தில் விரும்பினார். எனினும் இது நடைபெறவில்லை. ரெலோ தலைவர்களான தங்கத்துரை,குட்டிமணி மற்றும் ஜெகன் ஆகியோர் 1981ல் கடற்படையினரால் கைது செய்யப்பட்டது எல்.ரீ.ரீ.ஈ – ரெலோ கூட்டுறவுக்கு முடிவு கட்டியது.

இப்போது எல்.ரீ.ரீ.ஈ பிரபாகரனின் கீழ் சுதந்திரமாக இயங்கத் தொடங்கியது, அவர் அதன் தலைவர் மற்றும் இராணுவ தளபதி ஆகிய இரண்டு பொறுப்புகளையும் வகித்து வந்தார். பின்னர் சாள்ஸ் அன்ரனி எனும் சீலன் இராணுவப் பிரிவுக்கு தலைமையேற்றார். ஜூலை 1983ம் ஆண்டளவில் எல்.ரீ.ரீ.ஈ அங்கத்தவர்களின் எண்ணிக்கை 30 ஆக இருந்தது. அதில் 23 முழுநேர அங்கத்தவர்களும் மற்றும் ஏழு பகுதி நேர அங்கத்தவர்களும் இடம்பெற்றிருந்தார்கள். வாழ்வின் பல மட்டங்களையும் மற்றும் பல வயதையும் சோந்த பல உதவியாளர்களும் இருந்தார்கள்.

1983, ஜூலை 23ல் திருநெல்வேலியில் கண்ணிவெடி மூலமாக எல்.ரீ.ரீ.ஈ, 13 படை வீரர்களைக் கொன்றது. இதன் விளைவாக 1983 தமிழர் விரோத வன்முறைகள் தோன்றின. தமிழ் இளைஞர்கள் போராளி இயக்கங்களில் இணைந்து தமிழீழத்துக்காகப் போராடுவதற்கு தன்னிச்சையாகவே இணையும் ஒரு வேகம் உருவானது. இந்தியா இயக்கங்களுக்கு பயிற்சி மற்றும் ஆயுதங்கள் வழங்க ஆரம்பித்தது. தமிழீழத்துக்கான போராட்டம் பல விநோதமான திருப்பங்களுக்கும் மற்றும் விசித்திரமான மாற்றங்களுக்கும் உள்ளானது. இயக்கங்களிடையே பரஸ்பர நாசம் விளைவிக்கும் மோதல்கள் உருவாயின. எல்.ரீ.ரீ.ஈ மேலாதிக்கமுள்ள தமிழ் குழுவாக மாறியது.

1987,ஜூலை 27ல் கையெழுத்தான இந்திய – இலங்கை ஒப்பந்தம் தமிழ் அரசியலில் கடல் போன்ற பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. எல்.ரீ.ரீ.ஈ தவிர ஏனைய அனைத்து தமிழ் கட்சிகள் மற்றும் அமைப்புகள் என்பன அதை ஏற்றுக்கொண்டன மற்றும் தமிழீழத்துக்கான போராட்டத்தை கைவிட்டு அரசியலமைப்பின் 13வது திருத்தத்தின்படி வழங்கப்படும் அதிகாரப் பரவலாக்கத்தை ஏற்றுக்கொள்வதை தெரிவு செய்தன. ஆரம்பத்தில் எல்.ரீ.ரீ.ஈயும் அதற்கு சம்மதித்து சில ஆயுதங்களை கையளித்தது மற்றும் ஆரம்பகட்டத்தில் ஒரு ஊக்கத் தொகையாக புது தில்லியிடமிருந்து ஒரு மாதாந்த கொடுப்பனவை பெற்றுக்கொள்ளவும் அது இணங்கியிருந்தது. எனினும் புலிகள் விரைவிலேயே தங்கள் பாதையை மாற்றிக்கொண்டு விரோத போக்கை பின்பற்றி; துணிவுடன் இந்திய இராணுவத்தையே எதிர்க்கத் தொடங்கினார்கள்.

தொடர்ந்து வந்த வருடங்களில் எல்.ரீ.ரீ.ஈக்கும் மற்றும் கொழும்பில் இருந்த பல்வேறு அரசாங்கங்களுக்கும் இடையில் பல சுற்று சமாதானப் பேச்சுக்கள் நடந்தேறியதைக் காண முடிந்தது. அவை எதுவும் வெற்றியளிக்கவில்லை மற்றும் நாடு முடிவற்ற போர்கள் மற்றும் இடையிடையே தற்காலிகமாக போரற்ற மயக்கநிலை என்பனவற்றால் பாதிக்கப் பட்டது.

இந்த இடைக்காலத்தில் எல்.ரீ.ரீ.ஈ சில குறிப்பிட்ட சம்பவங்களில் அபரிமித வளர்ச்சியைப் பெற்றிருந்தது. 1983ல் இருந்த இரட்டை இலக்க அங்கத்துவ எண்ணிக்கை ஐந்து இலக்க எண்ணிக்கையை எட்டியது. எல்.ரீ.ரீ.ஈ ஒரு நாடு கடந்த அமைப்பாக மாறியது தமிழ் புலம் பெயர்ந்தவர்கள் பரந்திருந்த இடமெல்லாம் அதன் முன்னணிஃகிளை அமைப்புகள் உருவாயின. 1990 முதல் வடக்கு மற்றும் கிழக்கில் கணிசமான சில பகுதிகளை எல்.ரீ.ரீ.ஈ தனது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருப்பதில் வெற்றி கண்டது. மேற்குறிப்பிட்ட நிலப்பகுதி மே 2009ல் யுத்தம் முடிவுக்கு வரும் வரை படிப்படியாக மாற்றம் பெற்று வந்தது. புலிகளின் யுத்த நிலையின் தன்மைக்கு ஏற்றபடி கூடியும் மற்றும் குறைந்து வந்தது. இருந்தும் பல வருடங்களாக எல்.ரீ.ரீ.ஈயின் கட்டுப்பாட்டுப் பகுதி மாறத்தக்க ஒரு கோளமாக இருந்து வந்தது. இந்த எல்.ரீ.ரீ.ஈ கட்டுப்பாட்டு பகுதிக்குள் புலிகள் காவல் நிலையங்கள், நீதிமன்றங்கள், இறைவரி அலுவலகங்கள், தொலைக்காட்சி, வானொலி, திரைப்பட பிரிவுகள், பத்திரிகைகள், வங்கிகள், குடிவரவு குடியகல்வு அலுவலகங்கள் வியாபார நிலையங்கள் பண்ணைகள் போன்ற பலவிதமான கட்டுமானங்களையும் நிறுவியிருந்தார்கள். அவர்கள் தங்கள் சொந்த சட்டங்களைக்கூட வரைவு செய்திருந்தார்கள்.

எல்.ரீ.ரீ.ஈயினது இராணுவமும் வளர்ச்சியடைந்தது. புலிகள், காலாட் படையணி, பெண்கள் படையணி, கமாண்டோ பிரிவுகள் மற்றும் கண்ணிவெடிகளை புதைப்பதற்கு, பீரங்கிகள் மற்றும் மோட்டார்களை இயக்குவதற்கு, தாங்கிகள் மற்றும் கவசவாகனங்களை எதிர்ப்பதற்கு என பல்வேறு விசேட பிரிவுகளையும் ஏற்படுத்தியிருந்தார்கள். கடற்புலிகள் என்கிற கடற்படைப் பிரிவையும் மற்றும் வான்புலிகள் என்கிற வளர்ந்துவரும் ஒரு விமானப்படையையும் எல்.ரீ.ரீ.ஈ உருவாக்கி இருந்தது. எல்.ரீ.ரீ.ஈயிடம் பல கடல்வழி கப்பல்கள் மற்றும் சில குறிப்பிட்ட எண்ணிக்கையிலான சிறிய ரக விமானங்களும் இருந்தன.

வெளிநாட்டு வலையமைப்பு

எல்.ரீ.ரீ.ஈயினர் தமிழ் புலம் பெயர்ந்தவர்களை தளமாகக் கொண்டு ஒரு விரிவான வெளிநாட்டு வலையமைப்பையும் அமைத்திருந்தார்கள். பிரச்சாரம் மேற்கொள்வதற்காக பல்வேறு ஊடக அமைப்புகளும் மற்றும் நிதி சேகரிப்பதற்காக எண்ணற்ற ஆhவலர்களையும் அது ஈடுபடுத்தி வந்தது. பல மேற்கத்தைய நாடுகளில் குறுகிய கால அவகாசத்தில் மாபெரும் வெகுஜன ஆர்ப்பாட்டங்களை ஓழங்கு செய்யும் திறன் புலிகளிடம் இருந்தது. பல கிழக்கு மற்றும் மேற்கு நாடுகளில் எல்.ரீ.ரீ.ஈ பல வர்த்தக நிறுவனங்களையும் நடத்தி வந்தது. மேலும் அவர்கள் வெளிநாடுகளில் இருந்து கொள்வனவு செய்யப்பட்ட ஆயுதங்களை ஸ்ரீலங்காவின் வடக்கிற்கு கொண்டு வருவதற்காக அவர்கள் ஒரு கப்பல் தொகுதியையும் நடத்தி வந்தார்கள். சுருங்கச் சொல்வதானால் 83க்கு பின்னான வருடங்களில் எல்.ரீ.ரீ.ஈயின் வளர்ச்சி தனித்துவமானதாக இருந்தது. ஒருவேளை அது ஸ்ரீலங்கா தமிழ்மக்களுக்காக வேண்டி அவர்களால் நடத்தப்படும் ஒரு நிறவனமாக இருந்தபடியால்தான் ஜூலை 83க்குப் பிறகு அதன் வெற்றியின் அளவு இந்தளவுக்கு பதிவாகியிருக்கலாம்.

இந்த வெற்றிகரமான வளர்ச்சிக்கு வேண்டி ஸ்ரீலங்கா வாழ் தமிழர்கள் மிகப் பெரிய விலை கொடுக்க வேண்டியிருந்தது. எல்.ரீ.ரீ.ஈ செங்குத்தாக மேல் நோக்கி வளர்ச்சி பெற்றது ஆனால் ஸ்ரீலங்கா தமிழர்கள் கிடையாக கீழ்நோக்கிப் போனார்கள். எல்.ரீ.ரீ.ஈ மற்றும் அதன் கைக்கூலிகள் எப்போதும் மறுத்து வருவதும் கடந்த காலத்தில் அதைப்பற்றிச் சொன்னபோது கேட்க விரும்பாததுமான சங்கடமானதும் விரும்பத் தகாததுமான உண்மை இது.

முதலாம் உலகப்போர் 1914 முதல் 1918 வரையான நான்கு வருடங்களே நடைபெற்றது. இரண்டாம் உலகப்போர் 1939 முதல் 1945 வரையான ஆறு வருடங்களே நடந்தது. இந்த தமிழீழ யுத்தம் தசாப்தம் தசாப்தமாக தீவிரத்தோடும் கொடுமையொடும் நடைபெற்றது, அது தமிழ் மக்களை பாரிய அளவில் வலுவிழக்கச் செய்தது. தமிழர்கள் பெரும்பான்மையாக உள்ள நிலப் பகுpகள் பல்வேறு அரசாங்கங்காளாலும் கட்டம் கட்டமாக தந்திரபூர்வமாக பொசுக்கி அழிக்கும் நிலைக்கு ஆளானது. மரணம்,காயம், அழிவு, இடப்பெயர்வு போன்றவை அந்த மக்களின் நாளாந்த வாழ்க்கையானது.

மீன்பிடி சுருங்கியது. விவசாயம் குறைந்தது. கைத்தொழில்கள் கிட்டத்தட்ட இயங்காத நிலைக்கு தள்ளப்பட்டன. பொருளாதாரம் சிதைந்தது மற்றும் வேலையின்மை மலிந்தது. ஒற்றை பெற்றோர் குடும்பங்கள்,விதவைகள் அனாதைகள் என பலப்பல அழிவுகள் பரவலாக நிகழ்ந்தேறியது. தமிழர்களின் பிரதான இருப்பான கல்வி, கணிசமானளவு பாதிப்புக்கு உள்ளானது. பல பாடசாலைகள் நடைபெறாமல் நிறுத்தப்பட்டது. மருத்துவமனைகள் குறைவடைந்தன. பாதுகாப்பு வலயங்களை அமைப்பது என்கிற போர்வையின் கீழ் மக்கள் அவர்களது வீடுகளை விட்டு வெளியேற்றப் பட்டார்கள். வாழ்க்கைத் தரம் குறைவடைந்தது. குழந்தைகள் இறப்பு விகிதம், போஷாக்கின்மை, வளர்ச்சிக் குறைவு போன்றவைகளால் வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள தமிழர்கள் பிரதேசங்களிலுள்ள மக்கள் வேறு எந்த இடத்தில் உள்ளவர்களைக் காட்டிலும் அதிகமாக பாதிக்கப்பட்டார்கள். தமிழ் சமூகத்தின் சமூக இழையெனும் துணி மோசமாகக் கிழிந்து துண்டு துண்டானது, கலாச்சார வாழ்வு சுருங்கியது, கலாச்சார மதிப்புகள் மிருகத்தனமாகின, மற்றும் ஒழுக்க நெறிமுறைகள் தடம்புரள ஆரம்பித்தன. இவைகள்தான் நீண்டகால யுத்தம் காரணமாக சிறிய மற்றும் சக்தியற்ற மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள். மிகவும் மோசமான தாக்கம் குடிசனப் பரம்பலில் ஏற்பட்டுள்ளது. பெரும் எண்ணிக்கையிலான தமிழர்கள் நாட்டை விட்டு வெளியேறினார்கள். அதற்கு சமமாக பெரும் எண்ணிக்கையிலானவர்கள் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளை விட்டு வேறு இடங்களுக்கு நகர்ந்தார்கள். தீவிலுள்ள ஸ்ரீலங்கா தமிழர்களில் 48 விகிதமானவாகளே இப்போது வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் வாழ்வதாகச் சொல்லப்படுகிறது. எண்ணிக்கையில் பெரிதான சிங்கள மக்களின் மேலாதிக்க அரசாங்கத்துக்கு எதிராக ஆயுதம் ஏந்திய விடயத்தை தமிழர்கள் நிரூபித்திருக்கிறார்கள். ஆனால் இறுதியில் குடிசனப் பரம்பல் கூட தமிழர்களைத் தோற்கடித்து விட்டது.

பல தசாப்தங்களாக நடைபெற்ற போர் தமிழ்மக்களை பலவீனமாக்கி குறைவடையச் செய்துள்ளது, தமிழ் மக்கள் இழந்த உரிமைகளை திரும்ப வெற்றி கொள்வதில் எல்.ரீ.ரீ.ஈயினால் உறுதியான எந்த ஆதாயத்தையும் அடைய முடியவில்லை. மரணம் இடப்பெயர்வு மற்றும் அழிவு என்பனதான் பல வருடங்களாக தமிழ் பிரதேசங்களை மூடியுள்ளது. மாறாக இந்த பாதிப்புகள் மற்றும் துயரங்கள் ஆகிய அனைத்தையும் தமிழ் மக்களே எதிர்கொண்டார்கள், தமிழீழத்துக்காக பல்லாண்டுகளாக எல்.ரீ.ரீ.ஈ மேற்கொண்ட வற்றாத தேடலில் நிலையான எதையும் அதனால் அடைய முடியவில்லை.

பகுதி – 3

சுவரில் எழுத்து

2007 முதல் இராணுவ நிலைப்பாட்டை கவனித்த எந்த ஒரு அறிவுபூர்வமான அவதானியாலும் சுவரில் எழுதப்பட்ட வார்த்தைகளைப்போல பின்னால் வரப்போவதை நுணுகி அறியத்தக்கதாக இருந்தது. இருந்தும் பிரபாகரன் மற்றும் அவரைப் பின் தொடர்பவர்களும் உண்மையில் இராணுவத்தின் முன்னேற்றத்தைப் பற்றிக்கூட சிறிதும் கவலைப்படாதவர்களாக இருந்தள்ளார்கள். “கிட்ட வரட்டும் திட்டம் இருக்கு” என்பதுதான் எதிரி நெருங்கும்போது உயர்மட்டத் தலைவர்கள் கிளிப்பிள்ளைகளைப் போல திரும்பத் திரும்ப சொன்ன வார்த்தைகள்.வெளிப்படையாக எல்.ரீ.ரீ.ஈ மற்றும் பிரபாகரன் ஆகியோர் சிறிது காலத்துக்கு ஆயுதப் படைகளின் முன்னேற்றம் பற்றி அளவுக்கு மீறி கவலைப்படவில்லை, ஏனெனில் ஒரு குறிப்பிட்ட இடத்துக்கு அப்பால் இராணுவத்தால் முன்னேறி வர இயலாது என புலிகள் உறுதியாக நம்பியிருந்தார்கள்.

முக்கிய திருப்புமுனையாக அமைந்த பரந்தனின் வீழ்ச்சிக்குப் பின்னர் இந்த மதிப்பீடு ஆட்டம் கண்டது. பரந்தனை தொடர்ந்து கிளிநொச்சி மற்றும் அதன்பின் ஆனையிறவும் வீழ்ந்தது. குடாநாட்டில் அகப்பட்டிருந்த அங்கத்தவர்களை வெளியேற்றும் நடவடிக்கை கிட்டத்தட்ட வரப்போகும் தோல்வியை தடுப்பதற்காக மேற்கொள்ளும் ஒரு அவசரமான கடைசி முயற்சியைப் போல நிறைவேற்றியது, உண்மையில் புலிகள் இன்னமும் உறங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்பதையே அடையாளப் படுத்தியது. யாழ்ப்பாணம் – கண்டி வீதியான ஏ – 9 நெடுஞ்சாலை மற்றும் மேற்குப் பக்கமாக அதனை அண்டிய பிரதேசங்களை இழந்த பிறகுகூட, ஏ – 9 நெடுஞ்சாலையின் கிழக்கு பகுதியில் இராணுவத்தை நீண்ட காலத்துக்கு தாக்குப் பிடிக்க முடியும் என எல்.ரீ.ரீ.ஈ நம்பிக்கை கொண்டிருந்தது. இறுதிக்கட்ட தெரிவாக இருந்தது, முல்லைத்தீவு மாவட்டத்தில் கரையோரமாக வழி உள்ள 350 – 450 சதுர கி.மீ பரப்பளவுள்ள பிரதேசத்தை துண்டாடி அதை துணிவுடன் பாதகாப்பது. ஆனால்; இந்தக் கட்டத்தில் இராணுவம் மேற்கொண்ட துரித முன்னேற்றம் எல்.ரீ.ரீ.ஈயினை அதிர்ச்சி அடைய வைத்தது. ஒப்பீட்டளவில் ஒரு விரைவான காலப்பகுதிக்குள் பல்வேறு இராணுவ பிரிவுகள் மற்றும் பணிப் படைகள் புலிகளின் பிரதேசத்துக்குள் கடுமையான முன்னேற்றத்தை மேற்கொண்டன. அதன் விளைவாக எல்.ரீ.ரீ.ஈயும் நூறாயிரக்கணக்கான பொதுமக்களும் ஒரு சிறிய துண்டுப் பகுதிக்குள் அடைபட்டு விட்டனர், இராணுவம் முன்னேற ஆரம்பித்ததும் அந்தப் பிரதேசமும் சுருங்க ஆரம்பித்தது.

அப்போதுதான் எச்சரிக்கை மணி ஒலிக்கத் தொடங்கியது. ஆயுதப்;படைகளின் தீவிரமான செயற்பாடு காரணமாக அதிகளவான மக்கள் மேலும் மேலும் சிறிதாகி வரும் இடத்துக்குள் அடைபட்டுக் கொண்டதால், பொதுமக்களின் இறப்பும் அதிகரிக்கத் தொடங்கியது. இப்போது புலிகள் சார்பான தமிழ் புலம் பெயர்ந்தவர்கள் நடவடிக்கையில் இறங்கினார்கள். தமிழர்கள் உலகளாவிய ரீதியில் பாரிய ஏதிர்ப்புகளிலும் மற்றும் ஆர்ப்பாட்டங்களிலும் ஈடுபடத் தொடங்கினார்கள். அதில் ஒரு சக்திவாய்ந்த தீவிரம் இருந்தது. தமிழ்நாடும் கூட கொதித்தெழ ஆரம்பித்தது. புது தில்லி அழுத்தத்துக்கு ஆளானது.

இந்த இடத்தில்தான் பிரபாகரன் நான்கு மிக மோசமான தவறான கணக்குகூட்டல்களை மேற்கொண்டார். இரண்டு குறைத்து மதிப்பிடலும் இரண்டு மிகை மதிப்பீடுகளும். மேற்கில் புலம் பெயர்ந்தவர்களினதும் மற்றும் தமிழ்நாட்டில் உள்ள புலி சார்பான பரப்புரையாளர்களினது செல்வாக்கு மற்றும் தாக்கம் பற்றி அவர் மிகையாக மதிப்பீடு செய்திருந்தார். கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும் பொதுமக்களின் பேரழிவு அவரின் துருப்புச் சீட்டாக இருந்தது. மேற்குலக நாடுகள் கொழும்பின் மீது அளவுக்குமீறிய அழுத்தங்களை பிரயோகித்து அதனை யுத்தத்தை நிறுத்தும்படி செய்வார்கள் என பிரபாகரன் நினைத்தார். அதேபோல தமிழ்நாட்டின் அதீத ஆர்வமுள்ள உணர்ச்சி அலைகள் புது தில்லியை யுத்தத்துக்கு எதிராக திசை திருப்பி விடும் என்றும் அவர் நம்பினார்.

இவைகள் மிகையான கணக்குகூட்டலின் தவறுகள் என்றால், ராஜபக்ஸவின் ஆட்சியையும் மற்றும் ஆயுதப் படைகளையும் பற்றி அவர் குறைவாக எடைபோட்டு விட்டார். ஆயுதப் படைகள் அவர்கள் செய்ததைப் போல அயராது முன்னேறுவார்கள் என்று பிரபாகரன் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. ஆனால் பாரிய இழப்புகளுக்கும் மாறாக இராணுவத் தேர் முன்னோக்கி நகர்ந்து கொண்டேயிருந்தது. மிகவும் முக்கியமாக அவர் எதிர்பார்த்தது ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ சர்வதேச அழுத்தங்களுக்கு மசிந்து அந்த தேரோட்டத்தை நிறுத்தி விடுவார் என்று. ஆனால் மீண்டும் ராஜபக்ஸ கூட அந்த அழுத்தங்களுக்கு இரையாகாமல் இராணுவ நடவடிக்கைகளை முன்னெடுத்துச் சென்றார்.

முட்டாள்களின் சொர்க்கம்

இவையெல்லாவற்றையும் விட மிகப்பெரிய மடத்தனமான பிசகாக இருந்தது, ஒரு கட்டத்தில் எல்.ரீ.ரீ.ஈ போர்க்களத்தில் ஒரு முடக்கத்தக்க பெரிய அடி கொடுத்து பெரிய எண்ணிக்கையான மரணத்தை ஏற்படுத்தும் எனத் தவறாக எண்ணியதுதான். இது இராணுவத்தை நெறி பிறழச் செய்து நடவடிக்கையை தலைகீழாக மாற்ற உதவும், என்று பிரபாகரன் ஊகித்திருப்பார் போலத் தெரிகிறது. அரசியல் – இராணுவ சூழ்நிலை சீரழிந்து போயுள்ளது ஆனால் பிரபாகரன் இராணுவ ஓட்டம் ஒரு கட்டத்தில் நிறுத்தப்படும் என்கிற நிச்சயமான நம்பிக்கையுடன் முட்டாள்களின் சொர்க்கத்தில் வாழ்ந்து கொண்டிருந்தார் போலத் தெரிகிறது. அதனால்தான் அவர் தொடர்ந்தும் அங்கேயே தங்கியிருந்தார். பிரபாகரன் சற்று வளைந்து கொடுத்திருந்தால் அவர் இரகசியமாக வன்னி மற்றும் மணலாறு காடுகளுக்குச் சென்றிருக்க முடியும் அல்லது கடல் வழியாக தென் கிழக்கு ஆசியாவுக்குச் சென்றிருக்க முடியும். ஆனால் அவர் அப்படிச் செய்யவில்லை.

வெளிப்படையாக புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் இராணுவ பாதுகாப்புகளை அழிக்கும் பாரிய எதிர்தாக்குதல் திட்டத்தை அவர் பெரியளவு நம்பியிருந்தார். ஆனால் 2009 ஏப்ரல் 4 மற்றும் 5ல் ஆனந்தபுரத்தில் ஏற்பட்ட இராணுவ தோல்வியின் விளைவாக வட பிராந்திய படைத் தளபதி கேணல். தீபன் உட்பட 623 உறுப்பினர்கள் உயிரிழந்ததினால் இந்த திட்டம் பாழானது. இந்த எழுத்தாளர் அப்போது எழுதிய பத்திகளில் ஆனந்தபுரம் தோல்வியில் இருந்து எல்.ரீ.ரீ.ஈ யினால் மீண்டு வரமுடியாது மற்றும் யுத்தத்தைப் பற்றி வரையறை செய்யும் தருணம் இதுதான் என்று எழுதியிருந்தார். இறுதியாக அந்த அவதானிப்பு சரியானது என்று நிரூபணமாகியது.

ஆனந்தபுரத்திற்கு ஆறு வாரங்களின் பின்னர் இறுதி யுத்தம் மே மாத நடுப்பகுதியில் வந்தது. ஒரு சுற்றிவளைப்புக்கு உட்பட்டிருந்த பிரபாகரன் மற்றும் அவரது மூத்த புலி உறுப்பினர்கள் யோசனைகளை பெறுவதற்காக ஒரு கூட்டுக் குழு அமர்வினை நடத்தினார்கள். ஒரு துணிகர முத்தரப்பு முயற்சி மேற்கொள்வது என முடிவு செய்யப்பட்டது. பிரபாகரன் உட்பட புலிகளின் ஒரு குழுவினர் அடைபட்டுள்ள நிலைகளிலிருந்து வெளியேறி ஏரியை கடந்து ஏ -35 நெடுஞ்சாலை எனப்படும் பரந்தன் முல்லைத்தீவு பாதையை அடைவது. அதன்பின்னர் புலிகள் பரந்த வன்னிக் காடுகளுக்குள் நகர்ந்து அங்கிருந்து செயற்படுவது. சிலர் கிழக்குக்கும் நகர்வது. ஒரு இரண்டாவது குழு புலிகள் இராணுவத்தை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தி சரணடைவது. அதன் பிரதான இலக்கு காயமடைந்துள்ள உறுப்பினர்கள், குடும்ப அங்கத்தவர்கள், பொதுமக்கள் ஆகியோருக்குத் தேவையான அவசர மருத்துவ சிகிச்சைகளைப் பெறுவது ஆகும். மூன்றாவது குழு கடுமையான பின்புற பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவது. புலிகளின் கடைசியாக போரிடும் அவசரபடைப் பிரிவிற்கு தலைமையேற்றவர் வேறு யாருமல்ல பிரபாகரனின் மூத்த மகனான சாள்ஸ் அன்ரனிதான். அவருக்கு கிழக்கின் விசேட தளபதி ரமேஸ் உதவியாக இருந்தார்

மே 17 ஞ}யிறு நள்ளிரவுக்குச் சற்று பின்னர் ஆயுதப் படையினர்மீது எல்.ரீ.ரீ.ஈ கடுமையான தாக்குதலைத் தொடுத்தது. அந்த தாக்குதல் மூன்று பகுதிகளில் இருந்து மேற்கொள்ளப் பட்டது, ஆனால் பிரதானமாக 53ம் படைப்பிரிவு பிடித்திருந்த நந்திக்கடலேரியின் திசையை நோக்கியே மேற்கொள்ளப்பட்டது. பானுவின் தலைமையின் கீழ் மோசமான யுத்தம் நடைபெறுகையில் மூன்று படைப் பிரிவுகளும் உடைத்துக் கொண்டு புறப்பட்டன. ஜெயம் தலைமையில் ஒன்றும், பொட்டு அம்மான் தலைமையில் ஒன்றும் சூசை தலைமையில் மற்றொன்றும். மூன்று படைப் பிரிவுகளிலும் மொத்தமாக 250 – 300 பேர்வரையில் இருந்தார்கள். அநேகமாக அனைத்து இராணுவ தலைவர்களும் வெளியேற முயலும் இந்த மூன்று படைப் பிரிவிலும் இடம்பெற்றிருந்தார்கள், அதேவேளை மொத்தமாக இருந்த அரசியல் பிரிவினர் அனைவரும் சரணடைவதற்காக பின்னால் நின்றிருந்தார்கள்.

இராணுவ சுற்றிவளைப்பு

மிக அதிக எண்ணிக்கையிலான கரும்புலிகள் இந்த தாக்குதலில் இறந்தார்கள், வெடிமருந்தைக் கட்டிய இயைஞர்கள் மற்றும் யுவதிகள் இராணுவ நிலைகளின்மீது பாய்ந்து தங்களை வெடிக்க வைத்துக் கொண்டார்கள். இந்த இடைவெளி புலிகளுக்கு இராணுவ சுற்றிவளைப்பை ஊடுருவ உதவியது. புலிகள் 53வது பிரிவின் பாதுகாப்பை புலிகள் கடந்தபோதிலும் இராணுவத்தினர் தீவிரமான பீரங்கித் தாக்குதலை மேற்கொள்ள ஆரம்பித்தனர், அதில் பலர் இறந்தார்கள். மேலும் இராணுவம் பின்புறத்தில் அதிக ஆட்களைக் கொண்டு பல அடுக்கு பாதுகாப்புகளை அமைத்திருந்தது. சிறிது தூரத்தக்கு உடைத்துக் கொண்டு வெளியேறிய எல்.ரீ.ரீ.ஈயினர் இதற்கு இடையில் சிக்குண்டார்கள். இந்த தாக்குதல் தோல்வியடைந்ததின் விளைவாக அநேக புலிகள் சுற்றி வளைக்கப்பட்டார்கள், பல எல்.ரீ.ரீ.ஈ அங்கத்தவர்கள் சயனைட்டை உட்கொள்ள அரம்பித்தார்கள். இதேபோல சாள்ஸ் அன்ரனி தலைமையில் புறப்பட்ட புலி பாதுகாவலர்களும் தோற்கடிக்கப் பட்டார்கள் அதில் உயிர் பிழைத்தவர்கள் பிடிபடுவதை தவிர்ப்பதற்காக சயனைட்டுகளை விழுங்கினார்கள். பின்னர் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் சாள்ஸ் அன்ரனி இறந்து கிடந்தது கண்டு பிடிக்கப்பட்டது.

சூசை தலைமையில் வெளியேறிய குழு இராணுவ சுற்றிவளைப்பை உடைப்பதில் ஆரம்பத்தில் வெற்றியீட்டியது. பிரபாகரன் இந்தக் குழுவில் இருந்தார். அவர்கள் நந்திக் கடலேரி புதர்களில் மறைந்திருந்தார்கள். பிரபாகரன் சூசையிடமிருந்து பிரிந்து இரவில் கடலேரியை கடந்து மே 18 அதிகாலையில் காடுகளைப் பாதுகாப்பாக அடைவதற்கான ஒரு ஆபத்தான பணியை மேற்கொண்டார். ஒரு காலத்தில் மெய்பாதுகாவலர்களாக நூற்றுக்கணக்கான அங்கத்தவர்கள் சூழ்ந்து இருந்த பிரபாகரனுக்கு முள்ளிவாய்க்காலின் இறுதிக் கட்டத்தில் உயரடுக்கு போராளிகள் 18 பேர் மட்டுமே துணையாகச் சென்றார்கள். அதில் மேலும் சொல்லப்படுவது ஒரு மெய்ப்பாதுகாலர் தனது கையில் ஒரு பெற்றோல் தகரத்தையும் கூடவே கொண்டு சென்றாராம் ஏனென்றால் எப்போதாவது அவர் கொல்லப்பட்டாலோ அல்லது தற்கொலை செய்து கொண்டாலோ அவரது உடலை எரிப்பதற்காக. இது எதிரிகள் அவரது உடலைக் கைப்பற்றுவதை தடுப்பதற்காக.

ஆனால் இந்த எதிர்பார்ப்புகள் யாவும் அந்த துரதிருஸ்டமான நாளில் பொய்யாகிப் போய்விட்டது. பிரபாகரனின் உடல் செவ்வாய் அதிகாலை பொழுது விடிவதற்கு முன்னரே கண்டு பிடிக்கப்பட்டது. 54 வயதான எல்.ரீ.ரீ.ஈ உயர்மட்ட தலைவரின் உடல், மே 19, செவ்வாய் அன்று நந்திக்கடல் என அழைக்கப்படும் முல்லைத்தீவு கடலேரிக்கு அருகில் கண்டெடுக்கப்பட்டது. அவரது தலையிலும் மற்றும் நெற்றியிலும் துப்பாக்கிச்சூட்டு காயங்கள் காணப்பட்டன. லெப். கேணல் ரோகித்த அலுவிகார தலைமையிலான 4வது விஜயபாகு காலாட்படை பிரிவைச் சேர்ந்த வீரர்கள் அதைக் கண்டுபிடித்ததுக்கு உரிமை கோரினார்கள். ஒருகாலத்தில் எல்.ரீ.ரீ.ஈயின் அரசியல் மூலோபவியலாளரான அன்ரன் ஸ்ரனிஸ்லாஸ் பாலசிங்கத்தினால் தமிழ் ஈழத்தின் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகிய இரண்டும் இவரே என வருணிக்கப்பட்ட மனிதரின் வாழ்வு இப்படியாக முடிவடைந்தது. இராணுவ தளபதி சரத் பொன்சேகா 19ந் திகதி பி.ப 12.15 மணியளவில் உத்தியோகபூர்வமாக அந்த மரணத்தை அறிவித்தார்.

குறுகிய காலத்துக்கு மட்டும் நிலைத்திருக்கும் அதிகாரத்தின் இயல்பினை பிரபாகரன் மரணம் தெளிவாக எடுத்துக் காட்டியது, ஒருவேளை உலகத்திலேயே அதிக பலம் பொருந்திய கருதப்படும் கெரில்லா அமைப்பினை அவர் தனது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருந்தார், மற்றும் சூரியதேவன் எனும் தெய்வீக அந்தஸ்தை அவருக்கு முகஸ்துதிபாடும் அவரது பின் தொடர்பாளர்கள் அவருக்கு வழங்கியிருந்தார்கள். அவரது மரணத்துக்கான சூழ்நிலை வாழ்க்கையில் சாதாரணமாக சர்ச்சையினை தோற்றுவித்துள்ளது.

தனது போராளிப் பாத்திரத்தை வெறும் ஒரு ஒற்றைக் கைத்துப்பாக்கியுடன் ஆரம்பித்த பிரபாகரன், காலப்போக்கில் எல்.ரீ.ரீ.ஈயினை ஒரு சக்திவாய்ந்த இயக்கமாக கட்டியெழுப்பியதுடன் ஒரு நிழல் அரசாங்கத்தை நடத்தியது மாத்திரமன்றி தமிழ் தேசியத் தலைவர் என்கிற அந்தஸ்தையும் பெற்றார். இருந்தும் விட்டுக்கொடுப்புக்கான விருப்பமின்மையால் அல்லது இயலாமையின் விளைவினால் பிரபாகரன் தனது இயக்கம், குடும்பம் மற்றும் எல்லாவற்றுக்கும் மேலாக அவரது வாழ்க்கை முழவதையுமே ஒரு பரிதாபகரமான முறையில் இழந்துள்ளார்.

கைக்கு எட்டாத இலக்கு

ஒரு கட்டாய சூதாட்டக்காரனைப் போல, பிரபாகரன் தமிழீழம் என்கிற கைக்கு எட்டாத இலக்கினுக்காக ஸ்ரீலங்காவின் துடிப்பான இனமான தமிழ் மக்களின் முழு இருப்பையுமே ஆபத்துக்குள்ளாக்கினார். கிடைத்தால் எல்லாம் இல்லையேல் ஒன்றுமில்லை என்பதைப் போன்ற சூதாட்டம் அவருடையது. படையெடுத்து வந்த ஒரு இராணுவ ஜெனரல் தனது வீரர்களுக்கு வெற்றிக்காக போராடுவது அல்லது மரணத்தை எதிர்கொள்வது என்பதைத் தவிர வேறு தெரிவு இருக்கக்கூடாது என்பதற்காக தனது படகுகள் அனைத்தையும் எரித்தாராம், பிரபாகரனும் அதே நிலையில் இருந்தார். திரும்பிச் செல்வதில்லை. வீரர்கள் யுத்தத்தில் வெற்றி பெற்றால் ஜெனரலின் உறுதியான தீர்மானத்துக்காக அவர் பாராட்டுப் பெறுவார். அவர்கள் தோற்றால் அந்தக் கதையை வெளியே சொல்வதற்கு யாரும் இருக்க மாட்டார்கள்.

இறுதியாக அதுதான் நடந்தது. பிரபாகரன் மற்றும் எல்.ரீ.ரீ.ஈ இப்போது இல்லை, ஆனால் தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட திருப்பிச் செலுத்த முடியாத தீங்கு “அவர்களுக்கப் பின்னும் வாழுகிறது”

ஆங்கிலத்தில் டி.பி.எஸ்.ஜெயராஜ் இனால் எழுதப்பட்ட “May 2009 Military Debacle at Mullivaaikkaal Results in Defeat of LTTE and Death of Tiger Leader Prabhakaran” கட்டுரையியின் தமிழாக்கம்: தேனீ மொழிபெயர்ப்பு: எஸ்.குமார்

நன்றி: தேனீ

Share on FacebookTweet about this on TwitterShare on LinkedInShare on Google+Print this page