15 வருடங்களுக்கு முன்பு சுற்றி வளைத்து தளர்வடையச் செய்யும் போர் உத்தி மூலம் எப்படி எல்.ரீ.ரீ.ஈ ஆனையிறவைக் கைப்பற்றியது

– டி.பி.எஸ்.ஜெயராஜ்

“எல்லோரும் இளவரசனை பாராட்டினார்கள்
அவர்தான் இந்த பெரிய யுத்தத்தை வெற்றி கண்டவர்”
“ஆனால் இறுதியில் அதனால் என்ன நன்மை ஏற்பட்டது?”
என்று சொன்னார் சிறியவரான பீற்றர்கின்
“ஏன் நான் அதைச் சொல்ல முடியாது” என்று அவர் கேட்டார்
“ஆனால் அது பிரசித்தமான ஒரு வெற்றி” -றொபேட் சவுத்தி – “பிளென்ஹெயிம் யுத்தம்”

15 வருடங்களுக்கு முன்பு 22 ஏப்ரல்,2000 ல் மூலோபாயமிக்க ஆனையிறவு முகாம் ஒரு தீர்க்கமான போரில் இராணுவத்தின் நீடித்த எதிர்ப்பின் பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகளால் (எல்.ரீ.ரீ.ஈ) கைப்பற்றப்பட்டது. வன்னி பெருநிலப் பரப்பை யாழ்ப்பாணக் குடாநாட்டுடன் இணைக்கும் மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த நிலப் பகுதியான பூசந்திதான் ஆனையிறவு. யாழ்ப்பாணம் – கண்டி வீதி அல்லது ஏ – 9 நெடுஞ்சாலை மற்றும் யாழ்ப்பாண தொடரூந்து பாதை ஆகிய இரண்டுமே ஆனையிறவின் ஊடாகத்தான் செல்கிறது, மற்றும் இந்த குறுகிய நாடா போன்ற நிலப்பகுதியை ஒரு அர்த்தத்தில் யாழ்ப்பாணத்திற்கான நுழைவாயில் என்றும் கூறலாம். ஆனையிறவின் வீழ்ச்சி, அதாவது அந்தப் பிரதேசம் எல்.ரீ.ரீ.ஈ யின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது நீண்ட தமிழ் ஈழப் போரில் ஒரு வரலாற்று அடையாளமாக கருதப்படுகிறது.

ஆனையிறவுக்கு பகுதியில் எடுக்கப்பட்ட படம்-படப்படிப்பு: இந்தி சமரஜீவ-ஜனவரி-14, 2010

ஆனையிறவுக்கு பகுதியில் எடுக்கப்பட்ட படம்-படப்படிப்பு: இந்தி சமரஜீவ-ஜனவரி-14, 2010

டச்சுக் காலனித்துவத்தின் போது 1776ல் முதலில் ஒரு சிறு கோட்டை ஒன்று கட்டப்பட்டது, நவீன காலத்தில் இது உல்லாசப் பயணிகளுக்கான ஒரு தங்கும் விடுதியாக மாற்றப்பட்டது. சுதந்திரமடைந்ததின் பின்னர் சட்ட விரோத குடியேற்றம், கள்ளக்கடத்தல்,மற்றும் சட்ட விரோத மரக்கடத்தல் என்பனவற்றைக் கண்காணிப்பதற்காக அங்கு நிரந்தரமாக ஒரு காவற்படைத் தளம் அமைக்கப்பட்டது. இனமோதலின் தீவிரம் அதிகரித்ததினால் ஆனையிறவின் முக்கியத்துவமும் அதிகரித்தது. அந்த சிறிய முகாம் படிப்படியாக பரந்து விரிந்த ஒரு வளாகமாக விரிவாக்கப் பட்டது. ஒரு சமயத்தில் ஆனையிறவு தளம் மற்றும் அதன் துணை முகாம்கள் என்பன 23 கி.மீ நீளம் மற்றும் 8 – 10 கி.மீ அகலமுள்ள நிலப்பரப்பை ஆக்கிரமித்திருந்தன.

ஆனையிறவை கைப்பற்றியதை கொண்டாடுவதற்காக எல்.ரீ.ரீ.ஈ 23,ஏப்ரல் 2000, ஞாயிறு, காலை 9.00 மணியளவில் ஒரு கொடியேற்ற நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது. புலிகளின் ஊடக வெளியீடுகள் தெரிவித்ததின்படி, நூற்றுக் கணக்கான எல்.ரீ.ரீ.ஈ அங்கத்தவர்கள் மற்றும் துணைப்படை அங்கத்தவர்களாக சேவையாற்றிய பெரும் எண்ணிக்கையிலான பொதுமக்கள் ஆகியோர் சிவப்பு – மற்றும் – தங்க நிறத்திலான எல்.ரீ.ரீ.ஈ கொடி கேணல் பானுவினால்; ஏற்றப்படுவதை பார்த்தார்கள். 38 வயதான பானு பின்னுக்கு நகர்ந்து கொடிக்கு வணக்கம் தெரிவித்தபோது, எல்.ரீ.ரீ.ஈ போராளிகள் வைபவரீதியாக காற்றில் துப்பாக்கி வேட்டுக்களை வெடிக்க வைத்தார்கள், மற்றும் ஏழு பீரங்களில் ஒவ்வொன்றிலும் தலா மூன்று குண்டுகள் வீதம் 21 குண்டுகள் தீர்க்கப்பட்டன. அதன்பின்னர் அங்கு குழுமியிருந்தவர்களிடையே பானு உரையாற்றினார்.

கேணல் பானு அவரது உரையின்போது, எங்கள் தாயகத்தை விடுவிப்பதற்கான போரில் இது முதல் படி மாத்திரமே, மற்றும் இன்னும் பல போர்கள் வர இருக்கின்றன என்று பானு தெரிவித்தார். எல்.ரீ.ரீ.ஈ போராளிகளின் வீரம் மற்றும் தியாகங்கள் என்பனதான் ஆனையிறவினை அழிக்கும் கனவை சாத்தியம் என்று உணரச் செய்தன என்று அவர் தெரிவித்தார்.; சுமார் 200 வருடங்களுக்கு முன்பு டச்சுக்காரர்களால் உருவாக்கப்பட்ட இந்த முகாம் வேற்று நாட்டவர்களின் ஆதிக்கத்தின் அடையாளமாக நீண்ட காலமாக நின்றதுடன் குடா நாட்டில் உள்ள தமிழர்களை பெருநிலப் பரப்பிலிருந்து பிரித்தும் வைத்திருந்தது என்று சொன்ன பானு மேலும் தெரிவிக்கையில் “இப்போது அது இல்லை. எங்களுக்கு தேவையான யாவற்றையும் இங்கிருந்து அகற்றி அனுப்பிய பின்னர், இந்த அடக்குமுறை சின்னத்தில் எங்களது நினைவுக்காக ஒரு சிறு கட்டமைப்பை மாத்திரம் விட்டுவிட்டு ஏனையவற்றை இடித்து தரைமட்டமாக்கி விடுவோம்… எதிர்காலத்தில் எங்களது எதிரிகள் இந்த இடத்துக்கு திரும்பவும் வந்து அதை ஆக்கிரமிக்க நாங்கள் அனுமதிக்க மாட்டோம்” என்றார்.

இந்தப்போரிலும் இந்தப் பிரச்சாரம் தொடர்பாக இதற்கு முன்னான போராட்டங்களிலும் தங்கள் இன்னுயிரை ஈந்த எங்கள் அனைத்து தோழர்களின் ஞாபகார்த்தமாக அஞ்சலி செலுத்துவதோடு, எங்கள் தேசியத் தலைவரான பிரதான கட்டளைத் தளபதி (வேலுப்பிள்ளை பிரபாகரன்) யினால் வரையப்பட்ட மிகவும் நுட்பமான தாக்குதல் திட்டம், திட்டத்தை லாவகமாக நிறைவேற்றிய அவரது தளபதிகள் மற்றும் அங்கத்தவர்களால் நடத்தப்பட்ட துணிச்சலான போராட்டம் என்பன காரணமாகத்தான்; எல்.ரீ.ரீ.ஈ போராளிகளால் இந்த வெற்றியை பெற முடிந்தது. இந்த வெற்றி இன்னும் வரவிருக்கும் அநேகமானவற்றின் அடையாளம் என்று அவர் பேசி முடித்ததும் இனிப்புகள் விநியோகிக்கப் பட்டன.

அதைத் தொடர்ந்து உடனடியாக நடைபெற்றவை எல்.ரீ.ரீ.ஈக்கு உயர்வான அடையாளம் மற்றும் வரையறுக்கத் தக்க நிகழ்வாக அமைந்தன. பொதுமக்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட குழுக்கள் மற்றும் சீருடை அணிந்த புலி அங்கத்தவர்கள் ஆகியோர், ஆனையிறவு கரையோரமாக வன்னி பெருநிலப் பரப்பு மற்றும் குடாநாடு என்பனவற்றை இணைக்கும் பூசந்தியின் மேலாக நடக்கத் தொடங்கினார்கள். ஒரு குழு பெருநிலப் பரப்பிலிருந்து குடா நாட்டுக்கு வடக்கு நோக்கி நடந்தார்கள் மறு பகுதியினர் குடா நாட்டிலிருந்து பெரு நிலப்பரப்பை நோக்கி தென்புறமாக நடந்தார்கள். இந்த நடையின் முக்கியத்துவம் என்னவென்றால், நினைவு தெரிந்த நாளிலிருந்து முதல் முறையாக குடாநாட்டுக்கு வருபவர்களையும் அங்கிருந்து வெளியேறுபவர்களையும் நிறுத்துவதற்கு காவலரண்களோ அல்லது காக்கி அணிந்த நபர்களோ இல்லை என்பதை வலியுறுத்துவதாக அமைந்திருந்தது. தமிழ் பொதுமக்களைப் பொறுத்தவரை அடக்குமுறையாக பின்பற்றப்பட்டு வந்த ஒரு அடையாளம் அழிக்கப்பட்டு விட்டது.

பானு இதற்கு ஒரு தசாப்தத்துக்கு முன்பு இதேபோன்றதொரு சந்தர்ப்பத்தில்கூட வெற்றியின் புளங்காகிதத்தில் திளைத்திருந்தார். 1990 செப்ரம்பர் 26ல், யாழ்ப்பாண நகரத்தின் மத்தியில் இருந்த 350 வருட பழமையான கோட்டை எல்.ரீ.ரீ.ஈயிடம் வீழ்ந்தது, வெற்றி வீரர்களான புலி அங்கத்தவர்கள் பானுவின் தலைமையில் எல்.ரீ.ரீ.ஈ கொடியினை கோட்டையில் ஏற்றினார்கள். அரியாலையில் பிறந்த பானு, யாழ்ப்பாண மாவட்ட தளபதியாக இருந்தார். முன்னர் அவர் மன்னார் தளபதியாக கடமையாற்றியிருந்தார். எனினும் அவரது தலைமையின் கீழ் தச்சன் காடு இராணுவ புறக்காவல் நிலையத்தின்மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் பல எல்.ரீ.ரீ.ஈ அங்கத்தவர்களை பலி கொண்டதோடு தோல்வியில் முடிவடைந்தது, அதனால் பிரபாகரன் அவரை பதவியிறக்கம் செய்திருந்தார். சிறிது காலம் பானு வன்னிப் பகுதிக்கு அனுப்பப் பட்டார், ஆனால் சில வருடங்களின் பின்னர் அவரது பதவி திரும்பக் கிடைத்ததுடன் ஒரு முக்கியமான பணியும் அவரிடம் ஒப்படைக்கப் பட்டது.

எல்.ரீ.ரீ.ஈக்கு ஒரு பீரங்கிப் படைப் பிரிவை உருவாக்கும்படி பானுவுக்கு கட்டளையிடப் பட்டிருந்ததுடன் அவர் அதை திறமையாகவும் செய்து முடித்திருந்தார். ஆரம்பத்தில் எல்.ரீ.ரீ.ஈ வெற்றிகரமான தாக்குதல்களின்போது இராணுவத்திடம் இருந்து கைப்பற்றப்படும் பீரங்கிகளிலேயே தங்கியிருந்தது, பின்னர் கள்ளச் சந்தைகளில் எல்.ரீ.ரீ.ஈ பீரங்கிகளை கொள்வனவு செய்து கடல் வழியாக அவைகளை வன்னிக்கு அனுப்பிவந்தது. பீரங்கி பாவனையிலுள்ள நுணுக்கங்களை கற்பிப்பதற்காக வெளிநாட்டிலுள்ள கூலிப்படையினரை எல்.ரீ.ரீ.ஈ ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்திருந்ததாக கூறப்படுகிறது. பின்னர் எல்.ரீ.ரீ.ஈயின் பீரங்கிப் படைக்கு முன்னாள் யாழ்ப்பாணத் தளபதி கிட்டுவின் பெயர் சூட்டப்பட்டது, மற்றும் பானு அதற்கு தலைமையேற்றார்.

பானுவின் வேலைகளில் மகிழ்ச்சியடைந்த பிரபாகரன் ஒரு கவச பிரிவினை நிறுவும்படி அவருக்கு கட்டளை பிறப்பித்தார். திரும்பவும் ஆயுதப் படைகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஒரு சில கவச வண்டிகள் மற்றும் தாங்கிகளை மட்டும்தான் ஆரம்பத்தில் எல்.ரீ.ரீ.ஈயினால் பயன்படுத்தக் கூடியதாக இருந்தது. துரோகியான ஒரு சிங்கள இராணுவ அதிகாரிதான் கவச வாகனங்களைப் பயன்படுத்துவதிலுள்ள சில அடிப்படைப் பயிற்சிகளை புலிகளுக்கு புகட்டினார் என்று ஒரு வதந்தியும் உண்டு. பின்னர் கவச வாகனங்கள் சர்வதேச ஆயுதச் சந்தையில் கொள்வனவு செய்யப்பட்டு வன்னிக்கு கப்பல்களில் அனுப்பப் பட்டன. இந்த கவசப் பிரிவுக்கு முன்னாள் மன்னார் தளபதி விக்டரின் பெயர் சூட்டப்பட்டதுடன் பானுவே 2000ல் அதற்கும் தலைமையேற்றார்.

பீரங்கி மற்றும் கவசப் பிரிவுகள்

பீரங்கி மற்றும் கவசப் பிரிவுகள் வன்னிப் பகுதிப் போராட்டங்களில் முக்கியமான பங்கினை வகித்தன. ஆயுதப் படைகளின் முன்னேற்றங்களை கண்காணிப்பதற்கு அவை பொறுப்பானவைகளாக இருந்தன. எல்.ரீ.ரீ.ஈயின் நிலையான யுத்தமுறை சூழ்நிலைகளில் போராடும் பாணியில் ஒரு வியத்தகு மாற்றம் பெற்றது. அவர்கள் பீரங்கிப் பலம் மற்றும் கவச வாகனங்களை பெற்றதின் மூலமாக, குறைவான இழப்புகளுடன் இராணுவத்தை வெகு தூரத்தக்கு அப்பால் நிறுத்துவதற்கு புலிகளால் இயலுமாக இருந்தது. ஆயுதங்களின் நம்பிக்கை, மற்றும் விட்டுக் கொடுப்பற்ற நிலை காரணமாக போரின் தன்மை மரபு ரீதியாக மாறுவது அதிகரித்து வந்தது.

ஆனையிறவை சுற்றி நடந்த போரில் எல்.ரீ.ரீ.ஈயின் பீரங்கி மற்றும் கவசப் பிரிவுகள் மீண்டும் முக்கியமான பங்கினை வகித்ததுடன் குறுகிய காலத்துக்குள்ளேயே சிறிய இழப்புகளுடன் எல்.ரீ.ரீ.ஈ யினால் ஆனையிறவின் கட்டுப்பாட்டை கைப்பற்ற முடிந்தது. விக்டர் மற்றும் கிட்டு படைப் பிரிவுகளின் முக்கிய பங்களிப்பு காரணமாக பானுவுக்கு கொடியேற்றும் மரியாதை வழங்கப்பட்டது. சுவராஸ்யமான ஒரு விடயமாக அந்த நாட்களில் ஒரு போர் வெற்றியின் பின்னர் எல்.ரீ.ரீ.ஈயின் காணொளி கருவிகளின் முன்னால் பிரபாகரன் கொடியேற்றுவதோ அல்லது காட்சி தருவதோ கிடையாது. யுத்த களத்தில் போராடிய தனது துணைத் தலைவர்களுக்கே இந்த பெருமையை பெறும் தகுதியை அவர் விட்டுக் கொடுத்திருந்தார். எனினும் பெரிய இராணுவ நடவடிக்கைகளை பிரபாகரன்தான் திட்டமிட்டு ஒருங்கிணைப்பு செய்தார் எனும் பிரச்சாரத்தை அலுத்துப் போகுமளவிற்கு புலிகள் மேற்கொண்டு வந்தார்கள்.

ஆனையிறவில் எல்.ரீ.ரீ.ஈ பெற்ற வெற்றி பிரபாகரனால் வரையப்பட்ட விரிவான ஆனால் ஒரு எளிய உத்தியினால் கிடைத்தது என்று சொல்லப்படுகிறது. வழக்கமாக பிரபாகரன் எல்.ரீ.ரீ.ஈயின் இராணுவ தோல்விகளை, தவறுகளை கண்டறியவும் மற்றும் அவற்றிலிருந்து பாடங்களை கற்று அடுத்து வரும் போராட்டங்களில் பயன்படுத்துவதற்கும் வேண்டி அவற்றை ஆய்வு செய்வதுண்டு என்று சொல்லப்படுகிறது. அதன் காரணமாக ஆனையிறவை கைப்பற்றவதற்காக ஜூலை – ஆகஸ்ட் 1991ல் நடத்தப்பட்ட ஒரு தோல்வியடைந்த போராட்டம் பல படிப்பினைகளை வழங்கியிருந்தது. தோல்வியடைந்த அந்த நடவடிக்கையின் குறியீட்டுப் பெயர் “தரை, கடல், ஆகாயம்” என்பதாகும் மற்றம் அது 53 நாட்கள் நீடித்தது. எல்.ரீ.ரீ.ஈ தானாகவே ஏற்றுக் கொண்டதின்படி அந்த நடவடிக்கையில் 573 அங்கத்தவர்களை இழந்ததாகவும் மற்றும் 1,500 க்கும் மேற்பட்ட ஏனையவர்கள் காயமடைந்ததாகவும் குறிப்பிட்டிருந்தது. மனித வலு மற்றும் மன உறுதி என்பனவற்றினை பொறுத்தமட்டில் இவை தடையேற்படுத்தும் இழப்புகள் ஆகும்.

இரண்டு காரணிகள் காரணமாக ஸ்ரீலங்கா ஆயுதப் படைகளுக்கு எல்.ரீ.ரீ.ஈயினை திருப்பியடிப்பது இயலுமாக இருந்தது. முதலாவது காரணம் திறமையான அதிகாரியான சரத் பொன்சேகாவின் (முன்னாள் இராணுவ தலைவரான பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா) தலைமையின் கீழிருந்த முற்றுகையிடும் துருப்புகளின் தகமை மற்றும் அதிகரித்து வரும் முரண்பாடுகளுக்கு மாறாக அவர்கள் கொண்டிருந்த மன உறுதி. இரண்டாவது காலஞ்சென்ற ஜெனரல் டென்சில் கொப்பேகடுவ மற்றம் விஜய விமலரத்ன தலைமையிலான ஒப்பிறேசன் பலவேகய. அவர்கள் கிழக்கு கடலோரத்தில் உள்ள வெற்றிலைக்கேணியில் ஒரு கடற்கரை தலைமையகத்தை நிறுவி பின்னர் ஆனையிறவு முகாமுக்குள் அடைபட்டுக்கிடந்த இராணுவத்தினருடன் தங்கள் வழியில் போரிட்டார்கள். அதன்பின் முகாமானது உப்பளம்,பாடசாலைகள் உட்பட, அநேகமாக அந்த சூழலில் உள்ள அனைத்து முகாம்களையும் உள்ளடக்கி ஒரு பெரிய தளமாக மாற்றப்பட்டது. வெற்றிலைக்கேணி,கட்டைக்காடு, மற்றும் புல்லாவெளி போன்ற இடங்களில் துணை முகாம்களும் நிறுவப்பட்டன. இதன்படி பாதுகாப்பான விநியோகப் பாதை கடல் மற்றும் தரை மார்க்கமாக உறுதிப்படுத்தப் பட்டது. 1996ல் ஒப்பறேசன் சத்ஜெயவுக்குப் பின்னர் பிரதான நிலப்பரப்பில் ஆனையிறவுக்கு தெற்காகவுள்ள பரந்தன் மற்றும் கிளிநொச்சி என்பனவும் ஆனையிறவுடன் இணைக்கப்பட்டன. கிளிநொச்சி – ஆனையிறவு – வெற்றிலைக்கேணி தளம் முழு பிரிவுகளையும் அடக்கக்கூடிய விரிவான வளாகமாக மாறியது மற்றும் வெல்லமுடியாத பலம் பொருந்தியதாகவும் கருதப்பட்டது.

சுற்றி வளைப்பு மற்றும் தளர்வடையச் செய்தல்

அத்தகைய சூழ்நிலையில் பிரபாகரன் ஆனையிறவினை படிப்படியாக சுற்றி வளைத்து தளாவடையச் செய்து உள்ளேயிருக்கும் துருப்புகளுக்கான விநியோகத்தை தடை செய்து தளத்தை நிலைகுலைய வைக்கும் ஒரு உத்தியை கையிலெடுத்தார். ஆயுதப் படையினர் எண்ணிக்கையிலும் ஆயுத பலத்திலும் உயர் நிலையில் இருந்தபடியால்,அந்த திட்டம் பல உயிர்களை காவு கொள்ளச் செய்யும் நேரடி தாக்குதலை தடுப்பதாக இருந்தது.

எல்.ரீ.ரீ.ஈயின் இரண்டாவது கட்ட செயல்பாடான 1998 ல் நடத்திய ஓயாத அலைகள் நடவடிக்கையினால் எல்.ரீ.ரீ.ஈயின் உத்தி இலகுவாக்கப் பட்டது, அதில் கிளிநொச்சி கைப்பற்றப் பட்டது. அதன் பின்னர் எல்.ரீ.ரீ.ஈ பெருநிலப் பரப்பின் தென்பகுதியில் உள்ள பரந்தனுக்குள் ஊர்ந்து செல்ல ஆரம்பித்தது. தொடர்ச்சியான குறுகிய துரித தாக்குதல்கள் கொழும்பு ஊடகங்களால் அறிவிக்கப்படாமலே போயின, கரடிப்போக்கு, பரந்தன் சந்தி, பரந்தன் இரசாயனக் கூட்டுத்தாபனம் மற்றும் இறுதியில் பரந்தனுக்கும் மற்றும் ஆனையிறவுக்கும் இடையில் உள்ள உமையாள்புரமும் எடுக்கப்பட்டது. உமையாள்புரம் மற்றும் இயக்கச்சி ஆகிய இரண்டு இடங்களில் இருந்துதான் துருப்புக்கள் குடிநீரைப் பெறமுடியும். (ஆனையிறவு தளத்தில் உள்ள நீர் பாவனைக்கு பயன்படுத்த முடியாதபடி உப்பாக இருந்தது.)

குடாநாட்டை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் எல்.ரீ.ரீ.ஈயின் முதல் கட்ட நடவடிக்கை டிசம்பர் 11, 1999ல் இடம்பெற்றது. கிழக்கு கரையில் உள்ள வெற்றிலைக்கேணி மற்றும் கட்டைக்காடு பகுதியில் உள்ள முகாம்கள் மற்றும் ஆனையிறவுக்கு வடக்காக உள்ள புல்லாவெளி முகாம் என்பன தரை – கடல் கூட்டு நடவடிக்கை மூலம் எடுக்கப்பட்டது. வெற்றிகரமற்ற தாக்குதல் ஒன்று மேற்குப் பக்கமான இயக்கச்சியில் நடத்தப்பட்டது, ஆனால் ஆனையிறவின் பிரதான தளத்துக்கு நேரடித் தாக்குதல் எதுவும் நடத்தப்படவில்லை. இயக்கச்சி முகாம் ஆனையிறவுக்கு வட மேற்காக 5 கிமீ தொலைவில் உள்ளது, அது ஏ – 9 நெடுஞ்சாலையின் ஒரு வளைவில் அமைந்துள்ளது.

வெற்றிலைக்கேணி, கட்டைக்காடு மற்றும் புல்லாவெளி என்பனவற்றின் வீழ்ச்சியுடன் ஆனையிறவுக்கான தரை – கடல் வழி விநியோகப் பாதை தடைப்பட்டது, மற்றும் உள்ள ஒரே பாதையாக சாவகச்சேரியில் இருந்து வரும் ஏ – 9 நெடுஞ்சாலை ஊடாக வரும் பாதை மட்டுமே இருந்தது. இயக்கச்சிமீது அழுத்தங்களை ஏற்படுத்தும் வண்ணம், எந்த ஒரு பலனையும் கருதாது சில மட்டுப்படுத்தப்பட்ட நடவடிக்கைகளை எல்.ரீ.ரீ.ஈ மேற்கொண்டது.

இதற்கிடையில் ஸ்ரீலங்கா இராணுவத்தின் 53வது படைப் பிரிவு, ஆனையிறவு பகுதியில் ஈடுபடுத்தப் பட்டிருந்த 54வது படைப் பிரிவின் அழுத்தத்தை குறைக்கும் வகையில் கொண்டு வரப்பட்டது, அது பச்சிலைப்பள்ளி மற்றும் வடமராட்சி கிழக்கு பிரதேசசபை பகுதி முகாம்களில் நிலை கொண்டிருந்தது. 53வது படைப் பரிவு ஒரு உயர்தர படையாகும், அதற்கு அமெரிக்கா மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகளில் பயிற்சி வழங்கப் பட்டிருந்தது.

எல்.ரீ.ரீ.ஈயினது இரண்டாம் கட்டப் போராட்டம் ஒரு பன்முகத் தாக்குதலாக 26, மார்ச்,2000ல் கட்டவிழ்த்து விடப்பட்டது. சாள்ஸ் அன்ரனி காலாட் படை பிரிவின் தலைவரான வசந்தன் மற்றும் கடற்புலிகளின் வீரேந்திரன் ஆகியோரின் தலைமையிலாலன ஒரு கூட்டுச் செயற்பாடாக அது இருந்தது, இவர்கள் 3வது செயற்பாட்டு தலைமையகம் நிலை கொண்டிருந்த வடமராட்சி கிழக்கு கரையோர செம்பியன்பற்று – மருதங்கேணி – தாளையடி வளாகத்தை தமது கட்டுப்பாட்டின்கீழ் எடுத்துக் கொண்டனர். அவை வங்காள விரிகுடா மற்றும் யாழ்ப்பாண கடலேரி என்பனவற்றுக்கு இடையே அமைந்துள்ள நிலத் துண்டில் அமைந்துள்ளது. அதனால் இராணுவம் மண்முனை மற்றும் அம்பான் ஆகிய இடங்களிலுள்ள முகாம்களை விட்டு வெளியேறியது, வீரர்கள் கடலேரியின் மேற்குப் பகுதியில் உள்ள நிலைகளில் குடியேறினர்.

அதேநேரத்தில் எல்.ரீ.ரீ.ஈயின் ஒரு கமாண்டோ படைப் பிரிவான சிறுத்தை பிரிவு, ஏ – 9 நெடுஞ்சாலையில் இயக்கச்சிக்கு வடக்கே உள்ள பெரிய சந்தியான பளையின் மீது ஒரு அதிரடி சோதனை நடத்தி, குறைந்தது இராணுவத்தின் 11 பீரங்கிகளையாவது பின்வாங்கச் செய்தது.

பிரிகேடியர் பால்ராஜ்

எல்.ரீ.ரீ.ஈயின் துணை இராணுவ தலைவர் பால்ராஜ் தலைமையிலான ஒரு இராணுவ படைப் பிரிவு, யாழ்ப்பாணம் – கண்டி வீதியில் பளை மற்றும் எழுதுமட்டுவாள் இடையேயான நீண்ட பிரதேசத்தை இறுக்கமாக பிடித்துக் கொண்டது. இதில் அரசங்கேணியை சுற்றியுள்ள பகுதிகள், இத்தாவில், இந்திரபுரம், முகமாலை மற்றும் கோவில்காடு ஆகிய பகுதிகள் உட்படும். இத்துடன் ஆனையிறவு – இயக்கச்சி முகாம்கள் மற்றும் யாழ்ப்பாணம் என்பனவற்றுக்கு இடையே இருந்த பிரதான பாதை இணைப்பு திறமையாக வெட்டப்பட்டது. பிரிகேடியர் பால்ராஜினது பல இராணுவ சாதனைகளில் சிகரம் போல திகழ்வது, 2000 ம் ஆண்டில் ஏ – 9 நெடுஞ்சாலையில் உள்ள இத்தாவில்லில் அவர் நடத்திய போர்தான், அது ஆனையிறவு கோட்டை அரண் மற்றும் கிளாலி – எழுதுமட்டுவாள் – நாகர்கோவில் விநியோகப் பாதை என்பனவற்றுக்கு இடையேயான போக்குவரத்து வழியினை தொடர்ச்சியாக 24 நாட்கள் தடுத்து நிறுத்தி வைத்திருந்தது. இந்த தந்திர உத்தியின் பங்களிப்பின் விளைவாகத்தான்; 22 ஏப்ரல்,2000 ல் முக்கியமாக ஆனையிறவு வீழ்ந்தது.

பிரிகேடியர் பால்ராஜ்

பிரிகேடியர் பால்ராஜ்

எனினும் ஏப்ரல் 10ல்;; படைகள் பாதையின் பெரும்பகுதியை திரும்பக் கைப்பற்றின, ஆனாலும் புலிகளை முற்றாக அகற்றுவதில் தோற்றுப் போயின. எனினும் ஒரு சுற்றுப் பாதை வீதியுடன் இணைப்பை பேண உதவியது. பளையில் ஏ – 9 நெடுஞ்சாலையில் இருந்து மேற்கு நோக்கி ஒரு கிளை வீதி கிளாலி வழியாக புலோப்பளை சென்று, பின்னர் வடக்கு பக்கமாக கச்சேரி மற்றும் அல்லிப்பளை ஊடாகச் செல்கிறது, அங்கிருந்து அது கிழக்கு நோக்கி கொடிகாமத்துக்கு ஊடாகச் செல்கிறது, அந்த இடத்தில் வாகனங்கள் திரும்பவும் யாழ்ப்பாணம் – கண்டி வீதியை அடைய முடியும். எனினும் இந்தப் பாதையில் எல்.ரீ.ரீ.ஈ தீவிர அழுத்தத்துக்கு உள்ளாவதால் எல்.ரீ.ரீ.ஈ பூனரியானில் இருந்து கடலேரிக்கு குறுக்காக கிளாலியை நோக்கி பீரங்கித் தாக்குதல்களை மேற்கொண்டன.

மேலும் மார்ச் 26ல் எல்.ரீ.ரீ.ஈயின் கிளிநொச்சி தளபதி தீபன் தலைமையிலான ஒரு குழுவினர் வற்றிப் போயிருந்த சுண்டிக்குளம் கடலேரி வழியாக குடாநாட்டின் தென்கிழக்கு பகுதியில் முன்னேறி முள்ளியான் மற்றும் வண்ணான்குளம் பிரதேசத்தில் ஒரு நிலையை நிறுவினார்கள். ஆனால் முன்னிலை பாதுகாப்பு நிலைகளுடாக முன்னேறிய குழுவினர் ஆனையிறவை நோக்கி முன்னேறுவது வதிரியான் பிரதேசத்தில் வைத்து தடுத்து நிறத்தப்பட்டது.

மூன்றாவதும் தீர்க்கமானதுமான கட்டத்தில் எல்.ரீ.ரீ.ஈயின் போராட்டம் ஏப்ரல் 18, செவ்வாய்கிழமை மதியம் வரை நடைபெற்றது. ஒரு சிறுத்தை கமாண்டோ திடீர் தாக்குதல் மூலம் மருதங்கேணி கரையோரத்தை எல்.ரீ.ரீ.ஈ தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்ததை காணமுடிந்தது, அதன் மூலமாக மேற்குப் பக்கம் நோக்கி மருதங்கேணி – புதுக்குடா சந்தி வீதி வழியாக முன்னேற முடிந்தது, அது கிழக்கு கரையோரத்தையும் மற்றும் ஏ – 9 நெடுஞ்சாலையையும் இணைக்கிறது. புதுக்குடா சந்தியானது இயக்கச்சி மற்றும் பளை இடையில் உள்ளது. எல்.ரீ.ரீ.ஈ, பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக இராணுவத்தால் அமைக்கப்பட்டிருந்த 40 அடி நீளமான வரப்பை இடித்து நிர்மூலமாக்கியதன் பின்னர் தெற்குப் பகுதி பிரதேசங்களான முகவில், சோரன்பற்று, மற்றும் மாசார் ஆகிய இடங்களுடாக முன்னேறியது. புலிகள் ஏ – 9 நெடுஞ்சாலையூடாக தெற்குப் பக்கமாக முன்னேறி இயக்கச்சி முகாமின் தெற்குப் பகுதியை அடைந்தார்கள். இதன் விளைவாக ஆனையிறவு மற்றும் இயக்கச்சி என்பன ஆபத்தில் சிக்கிக் கொண்டன.

அதன்பின்னர் எல்.ரீ.ரீ.ஈ இயக்கச்சி முகாம்மீது கோவில் வயல் மற்றும் சங்கத்தார் வயல் ஆகிய இடங்களில் இருந்து கடுமையான தாக்குதலை மேற்கொண்டது. பானுவின் தலைமையின் கீழ் இருந்த கவச மற்றும் பீரங்கி பிரிவுகள் குண்டுமாரி பொழிந்த வண்ணம் தளத்தை நோக்கி மிக மெதுவாக முன்னேறியது. ஆனையிறவு தளத்தில் இருந்த தொலைத் தொடர்பு கோபுரம் தகர்க்கப் பட்டதால் வடக்கிற்கான அனைத்து தொலைபேசி இணைப்புகளும் துண்டிக்கப்பட்டன.

இத்தகைய நெருக்கடியான கட்டத்தில் பால்ராஜ் தலைமையிலான மொத்த எல்.ரீ.ரீ.ஈ அங்கத்தவர்களும் ஏ – 9 நெடுஞ்சாலையை கைவிட்டு இயக்கச்சியை சுற்றி நடைபெற்ற போரில் இணைந்து கொண்டார்கள், அதற்கு முன் இராணுவத்தின் முன்னேற்றத்தைத் தடை செய்யும் விதமாக பளை வடக்கு மற்றும் எழுதுமட்டுவாள் தெற்கு ஆகிய இரண்டு இடங்களிலும் இரண்டு தடுப்பு காவலரண்களை நிறுவினார்கள். ஏப்ரல் 20,2000 ல் இயக்கச்சியை சுற்றியும் அதன் உள்ளேயும் பலத்த போராட்டம் ஆரம்பமானது. புலிகள் முகாமுக்கு தென் பகுதியில் தங்களை நிலை நிறுத்தி ஆனையிறவிலிருந்து அதை துண்டித்தார்கள்.

இயக்கச்சியின் வீழ்ச்சி

21 ஏப்ரல், 2000ல் இயக்கச்சி வீழ்ந்தது. எல்.ரீ.ரீ.ஈ முகாமுக்குள் நுழைந்து ஆயுதக் கிடங்குகளையும் மற்றும் கட்டிடங்களையும் நிர்மூலமாக்கியது. அதன் பின் யுத்த அரங்கானது ஆனையிறவை நோக்கி நகர்த்தப்பட்டது. எல்.ரீ.ரீ.ஈ ஆனையிறவை நோக்கி வடக்கு, வடகிழக்கு மற்றும் தென்கிழக்கு பகுதிகளுடாக முன்னேறியது. அந்த நீண்ட இரவு முழுவதும் பலமான கனரக சூட்டுப் பரிமாற்றம் இடம்பெற்றது, மற்றும் போராட்டம் நடந்து கொண்டிருக்கும் போதே இராணுவம் வெளியே நகரத் தொடங்கியது. எப்ரல் 22, 11.30 மணியளவில் ஆனையிறவில் இருந்த மிகப்பெரிய கோட்டை அரணை அவர்கள் கைவிட்டுச் சென்றார்கள். அதே நாள் பிற்பகல் 2.30 மணியளவில் எல்.ரீ.ரீ.ஈ அதை நோக்கி அணிவகுத்துச் சென்றது. ஏப்ரல் 23, 2000ல் அங்கு கொடியேற்றப்பட்டது.

ஆனையிறவுக்கு எதிரான எல்.ரீ.ரீ.ஈ யின் கட்டங் கட்டமான முன்னேற்றம் உருவாக்கப் பட்டதின் பின் ஏற்பட்ட பாதுகாப்பு படைகளின் இந்த திடீர் சரணாகதி ஒரு எதிர் உச்சக்கட்டமாக அமைந்துவிட்டது. எனினும் ஆர்வத்தை தூண்டும் வகையில் இந்த போராட்டத்தின் வெற்றிகரமான ஒவ்வொரு படியையும் பற்றி செய்திகளை வெளிப்படுத்தி வந்த எல்.ரீ.ரீ.ஈ, எப்ரல் 21ல் இயக்கச்சி வீழ்ச்சியடைந்தது பற்றிய செய்தியை மட்டும் வெளிப்படுத்தவில்லை, அந்தச் செய்தியை ஆனையிறவு முகாமின் வீழ்ச்சி பற்றிய செய்தியை வெளியிடும்போதுதான் வெளியிட்டார்கள். இது ஒருவேளை வெளிப்படுத்துவது, இயக்கச்சியின் கட்டுப்பாட்டை ஏற்றெடுத்த பின்னர், ஆனையிறவு விரைவிலேயே வீழ்ந்துவிடும் என்று எல்.ரீ.ரீ.ஈ உச்சமான நம்பிக்கையில் இருந்திருக்க வேண்டும், அல்லது அங்குள்ள துருப்புகள் இயக்கச்சியின் தோல்வியின் சில மணிக்கூறுகளுக்கு உள்ளேயே பின்வாங்கிச் சென்றுவிடுவார்கள் என்கிற முன்கூட்டிய அறிவு அவர்களுக்கு இருந்திருக்க வேண்டும்.

பாதுகாப்பு படைகள் ஆனையிறவை கைவிட்டுச் சென்றது, அது தொடர்பான கட்டளை பாதுகாப்பு நிறுவனத்திடம் இருந்து அவர்களுக்கு கிடைத்த பின் மாத்திரமே. இராணுவ தளபதி ஸ்ரீலால் வீரசூரிய தலைமை அதிகாரி லயனல் பலகலவுக்கு கட்டளை வழங்கும்படி உத்தரவு பிறப்பித்தார், அது தனிப்பட்ட கூரியர் மூலம் ஆனையிறவுக்கு அனுப்பப் பட்டது. கட்டளை அதிகாரியான பிரிகேடியர் எகொடவெலவுக்கு ஏப்ரல் 21,2000 இரவு 10 மணிக்கு அது கிடைத்தது.

பின்வாங்கிச் செல்லும் துருப்புகள் ஆரம்பத்தில் ஏ – 9 நெடுஞ்சாலையில் 14 கி.மீ தொலைவில் உள்ள பளையை நோக்கி நகர்ந்தார்கள், ஆனால் எல்.ரீ.ரீ.ஈ அவர்களை விரட்டியடித்ததும், அவர்கள் பாவனையில் இல்லாத தொடரூந்து பாதை மற்றம் அதற்கு மேற்கில் உள்ள மணல்பாதை என்பனவற்றை பயன்படுத்தினார்கள். பளையில் இருந்து படை வீரர்கள் பாதுகாப்புக்காக மேற்குப் புறமாக கிளாலியை நோக்கி நகர்ந்தார்கள். ஆனால் இந்தப் பாதையை நோக்கி புலிகள் பீரங்கித் தாக்குதல் மேற்கொண்டதும் இராணுவம் மற்றொரு சுற்றுப்பாதையான – ஆனையிறவிலிருந்து வட மேற்கு நோக்கி கிளாலிக்கு – குறிஞ்சாதீவு, ஊர்வானிக்கான்பற்று, மற்றும் தன்மான்கேணி ஊடாகச் செல்லும் கரடு முரடான பாதையை பயன்படுத்தினார்கள். எனினும் இந்த நீண்ட பாதையூடாகச் செல்லும் போது எல்.ரீ.ரீ.ஈயின் இடைவிடாத குண்டுத் தாக்குதலுக்கு அப்பால் பல வீரர்கள் வெப்பம் மற்றும் தாகத்தால் ஏற்படும் நீரிழப்பு காரணமாக பலியானார்கள்.

இருந்த போதிலும் ஒரு நல்ல எண்ணிக்கையான துருப்புகள் ஆனையிறவை விட்டு வெளியேறினார்கள், பெரும்பாலும் கால்நடையாகவே சென்றார்கள். அங்கிருந்து வெளியேறும் முன்னர் அவர்கள் சில பீரங்களை வலுவிழக்கும்படி செய்து விட்டுச் சென்றார்கள், அனாலும் கூட எல்.ரீ.ரீ.ஈ பிற ஆயுதங்கள் மற்றும் தளபாடங்களுக்கு அப்பால், 152 மி.மீ ஆட்டிலரிகள், சில எண்ணிக்கையிலான தாங்கிகள் மற்றும் கவச வாகனங்கள் உட்பட சில சக்திவாய்ந்த துப்பாக்கிகளை கைப்பற்றியது. எல்.ரீ.ரீ.ஈயினால் வெளியிடப்பட்ட பூர்வாங்க பட்டியல் மலைக்க வைக்கும் அளவுக்கு ஆயுதக் குவியல் இருப்பதை வெளிப்படுத்தியது. பல வழிகளிலும் ஆனையிறவு கொழும்புக்கு அப்போது ஒரு இராணுவ வீழ்ச்சியாகவே இருந்தது.

குடிநீர்

ஆனையிறவு தளத்தில் 15,000 க்கும் மேற்பட்ட துருப்புகள் இருந்த போதிலும் குடாநாட்டில் 5,000 க்கும் குறைவான எல்.ரீ.ரீ.ஈ அங்கத்தவர்களே இருந்தார்கள், இராணுவம் தோற்கடிக்கப் பட்டது எதனாலென்றால் அந்த நேரத்தில் அது ஒரு சோர்வடைந்த படையாக இருந்தது. எனினும் படைகளை ஆனையிறவை விட்டு வெளியேறும்படி பாதுகாப்பு நிறுவனம் முடிவெடுத்தது காரணமாக, முதலாவதாக குடிநீர் பற்றாக்குறையைச சந்திக்கும் நிலைக்கு அது தள்ளப்பட்டது. முகாமில் தண்ணீர் சுத்திகரிப்பு இயந்திரம் பொருத்தப்பட்டிருந்தது, ஆனால் பழுதடைந்து திருத்தப் படாத நிலையில் இருந்தது.

உமையாள்புரம் மற்றும் இயக்கச்சியில் இருந்து கொண்டு வரப்படும் நீர் கிடைத்து வந்தது இதைப்பற்றி புகார் தெரிவிக்காமல் ஒருவேளை படையினரை மெத்தனமாக தூங்க வைத்திருக்கலாம். எனினும் இயக்கச்சி முற்றுகைக்கு உள்ளானதும் அளவுக்கு அதிகம் ஆட்கள் நிரம்பிய முகாமில் தண்ணீர் நெருக்கடி சமாளிக்க முடியாததாக இருந்தது. முரண்பாடாக ஆனையிறவு முகாமில் ஏராளமான அளவில் தகரத்தில் அடைக்கப்பட்ட உணவுகள் மற்றும் உலர் உணவுப் பங்கீட்டுப் பொருட்கள் இருந்தன, முகாமைக் கைப்பற்றியதன் பின்னர் எல்.ரீ.ரீ.ஈ இவைகளை வன்னிப் பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு விநியோகித்தது.

11 டிசம்பர் 1999 முதல் நடைபெற்ற மூன்று கட்டப் போரிலும் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட எல்.ரீ.ரீ.ஈ உறுப்பினர்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என்று பாதுகாப்பு அமைச்சு வட்டாரங்கள் மதிப்பிட்டிருந்தன. இந்த போராட்டத்தில், ஆனையிறவு இறுதிப் போரில் இறந்த 35 பேர்கள் உட்பட தனது அங்கத்தவர்களான 303 பேர் மட்டுமே இறந்ததாக எல்.ரீ.ரீ.ஈ கோரியிருந்தது. இராணுவ தரப்பில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்கள் கொல்லப் பட்டிருக்கலாம் என புலிகள் அறிவித்திருந்த போதிலும், இராணுவம் தனது தரப்பில் 80 பேர் மட்டுமே கொல்லப் பட்டதாகவும் 100க்கும் மேற்பட்டவர்கள் இந்த நடவடிக்கையில் காணாமற் போயுள்ளதாகவும் அறிவித்திருந்தது. புலிகள் செஞ்சிலுவை சங்கத்தினூடாக 126 வீரர்களின் உடல்களைக் கையளித்திருந்தது, அவர்களில் 28 பேர் அடையாளம் காணப்பட்டார்கள்.

கொல்லப்பட்டவர்களில் உயர்தர இராணுவ உத்தியோகத்தர்களான, பிரிகேடியர். பேர்சி பெர்ணாண்டோ, கேணல். பாட்டியா ஜயதிலக, கேணல். நீல் அக்மீமன மற்றும் கேணல் ஹேவகே ஹேவவாசம் ஆகியோர் அடங்குவர். அவர்கள் அனைவரும் இறப்புக்கு பின் பதவி உயர்த்தப் பட்டார்கள். புலிகளின் பக்கத்தில் பெண்கள் படையணி தலைவி லெப்.கேணல் லக்சியா கொல்லப்பட்டதாக அறிவிக்கப் பட்டது.

ஆனையிறவு தோல்வி நாடு முழுவதிலுமுள்ள மக்களை அதிர்ச்சியடைய வைத்தது. எனினும் முன்னாள் ஸ்ரீலங்கா பிரதி பாதுகாப்பு அமைச்சர் அனுருத்த ரத்வத்தை தங்கள் தோல்விக்கு ஒரு தைரியமான முகத்தை வெளிக்காட்ட முயன்றார். ஒரு அமைச்சரவை விழாவில் உரையாற்றும்போது, ஆனையிறவில் எற்பட்ட பின்னடைவை இந்த மாதிரியான யுத்தங்களில் ஏற்படும் ஒரு இயல்பான நிகழ்வாகவே நாம் காணவேண்டும். வெற்றிகளையும் மற்றும் பின்னடைவுகளையும் நாங்கள் ஒரே மாதிரியாகவே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று அவர் தெரிவித்தார். அப்போதைய ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தொலைக்காட்சியில் நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்தும்போது, தனது அரசாங்கம் “ நீடித்த இராணுவ நடவடிக்கைகளை அயராது தொடருவது என்று தெளிவாக முடிவெடுத்துள்ளது” என்று தெரிவித்தார்.

எல்.ரீ.ரீ.ஈயின் ஆனையிறவு வெற்றியானது, அந்த நேரத்தில் போராட்டத்தில் ஒரு திருப்பு முனை எனப் புகழப்பட்ட போதிலும், காலப்போக்கில் நிலமை படிப்படியாக மாறியது. எல்.ரீ.ரீ.ஈயின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த பிரதேசங்கள் யாவும் கட்டம் கட்டமாக ஸ்ரீலங்கா இராணுவ படைகளால் 2006 – 2009 காலகட்டத்தில் திரும்பவும் கைப்பற்றப்பட்டன. ஆனையிறவு கூட 2009 ஜனவரி முதல் வாரத்தில் திரும்பவும் இராணுவத்தால் கைப்பற்றப்பட்டது. முள்ளிவாய்க்காலில் எல்.ரீ.ரீ.ஈக்கு ஏற்பட்ட தோல்வியுடன் மே 2009ல் போரே முடிவுக்கு வந்தது.

இதன்படி எல்.ரீ.ரீ.ஈக்கு ஆனையிறவு மற்றும் அதன் சுற்றுப்புறங்களின் வெற்றியினால் கிடைத்த பரவச நிலை இறுதியில் அற்ப ஆயுளைக் கொண்டது என நிரூபணமாகியது.

(இந்தக் கட்டுரை இந்திய செய்திப் பத்திரிகையான “புரொட்லைன்” 2000 மே, 13 – 26 திகதிய வெளியீட்டுக்காக எழுதப்பட்டதின் திருத்திய பதிப்பாகும் மற்றும் ஆனையிறவு இராணுவ முகாம் ஏப்ரல் 22, 2000ல் எல்.ரீ.ரீ.ஈயிடம் வீழ்ந்ததின் 15வது வருட நிறைவை அடையாளப் படுத்தும் வகையில் பிரசுரிக்கப் பட்டுள்ளது)

ஆங்கிலத்தில் டி.பி.எஸ்.ஜெயராஜ் இனால் எழுதப்பட்ட “How the LTTE Captured Elephant Pass Army Camp 15 Years ago Through an “Encircle and Enfeeble” war Strategy” கட்டுரையியின் தமிழாக்கம்: தேனீ மொழிபெயர்ப்பு: எஸ்.குமார்

நன்றி: தேனீ

Share on FacebookTweet about this on TwitterShare on LinkedInShare on Google+Print this page