நவராத்திரி மகத்துவம் பற்றி மகாகவி பாரதியார் எழுதிய சிறு கட்டுரை

நவராத்திரி விரதம் இன்று செப்டம்பர் 28, 2011 முதல் ஆரம்பமாகிறது:

A brief essay about Navarathri, by Subramaniya Bharathiyaar

ன்பதிரவு பராசக்தியைப் பூஜை செய்கிறோம். லக்ஷ்மி என்றும், சரஸ்வதி என்றும், பார்வதி என்றும் மூன்று மூர்த்தியாக நிற்பது பராசக்தி. இவ்வுலகத்தை ஆக்கல், அழித்தல், காத்தல் என மூன்று தொழில் நடத்துவது.

திருப்பதி கோயிலிருந்து ~ நன்றி: விஜய் அமரசிங்கம்

ஹிமாசலம் தொடங்கி குமரி முனை வரை வேதத்தை நம்பும் கூட்டத்தார் எல்லாம் இந்தப் பூஜை செய்கிறோம். ஏழைகளாக இருப்போர் பராசக்திக்கு மலரையும், நீரையும், உள்ளத்தையும் கொடுத்து வலிமை பெறுகிறார்கள். செல்வமுடையோர் விருந்துகளும், விழாக்களும் செய்கின்றனர்.

மஹாளய அமாவாசை கழிந்தது.

இருளும், ஒளியும் மாறிவருவது இவ்வுலக இயற்கை. பகலிலே பெரும்பாலும் ஒளியுண்டு, மேகங்கள் வந்து சூரியனை மறைத்தாலொழிய. சில சமயங்களில் கிரகணம் பிடிக்கும். அதையும் தவிர்த்து விட்டால், இரவிலே தான் ஒளியின் வேறுபாடுகளும் மறைவுகளும் அதிகப்படுகின்றன. பகல் தெளிந்த அறிவு. இரவென்பது மயக்கம். பகலாவது விழிப்பு. இரவு என்பது தூக்கம். பகலாவது நல்லுயிர் கொண்டு வாழ்தல். இரவு லயம்.

mp3: ஓம் சக்தி ஓம், பராசக்தி ஓம் சக்தி ஓம் ~ வழங்குபவர்: மகாநதி ஷோபனா

சக்தி. நல்ல வல்லெழுத்துச் சேர்ந்த மொழி. விக்ரமாதித்யனும், காளிதாஸனும் வணங்கிய தெய்வம். உலகத்தார் இந்தப் பராசக்தியை நல்ல மழையருள் புரியும் சரத்காலத்தின் முதல் ஒன்பதிரவும் வணங்கி பூஜைகள் செய்யவேண்டும் என்பது பூர்வீகர் ஏற்பாடு. மிகப் பயனுடைய காரியம். மேலான வழி.

ஆக்கல், அழித்தல், காத்தல் என்ற முத்தொழிலும் எப்போதும் நடக்கின்றன. லோக சம்ரக்ஷணை எப்போதும் செய்யப் படுகிறது. எப்போதுமே ஆராதனை செய்யவேண்டும். சரத்காலத் தொடக்கத்திலே பேரருளைக் கண்டு விசேஷ விழா நடத்துகிறோம். தவம், கல்வி, தெய்வத்தைச் சரண்புகுதல் இம்மூன்றும் கர்மயோகம் என்று பதஞ்சலி முனிவர் சொல்லுகின்றார். லௌகீகக் கவலைகளிலே இம்மூன்று தொழிலையும் எப்போதும் செய்துகொண்டிருக்க முடியாமல் தடுக்கப் படும் சாமான்ய ஜனங்கள் நவராத்திரி ஒன்பது நாள் இரவும் பகலும் மேற்கூறிய மூவகை நெறியில் நிலை பெறும் வண்ணமான விதிகள் ஆகமங்களிலே கூறப்பட்டன. ஒன்பது நாளும் தியானம், தவம், கல்வி இவற்றிலே செலவிடத் திறமையில்லாதோர் கடைசி ஒன்பதாம் நாள் மாத்திரமேனும் விரதம் காக்கவேண்டும். இந்தப் பூஜையின் பொருள் மிகவும் தெளிந்தது.

சக்தியால் உலகம் வாழ்கிறது.
நாம் வாழ்வை விரும்புகிறோம்.
ஆதலால் நாம் சக்தியை வேண்டுகிறோம்.

(நன்றி: பாரதியார் சிந்தனைச் செல்வம் (தொகுப்பு: கங்கா ராமமூர்த்தி, பாரதி காவலர் கே ராமமூர்த்தி), ஸ்ரீராம் டிரஸ்ட் வெளியீடு, 1988.